ஐபிஎல் – CSK & RR : மீண்ட சொர்கம் ?

இன்று (7-4-18) மும்பையில் கோலாகலமாகத் தொடங்குகிறது இந்த வருடத்தின் க்ரிக்கெட் விழா – ஐபிஎல். முதல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதக் காத்திருக்கின்றன.

சூதாட்டவெளியில் சிக்கியதால் தடை செய்யப்பட்டு, இரண்டு வருடங்களாக வெளியில் உட்கார்ந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்(RR), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த வருடம் மைதானத்துக்குள் நுழைகின்றன. போட்டிகள் அதகளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஏலத்தின்போது, சீட்டுக்கட்டுகளைக் கலைத்து ஆளாளுக்குப் புதிதாகப் பகிர்வதுபோல, போனவருடத்து அணிகளின் வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்டார்கள் (சில சீனியர் வீரர்களைத் தவிர்த்து). ஐபிஎல்-இன் எட்டு அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை எடுத்து, புதிய கட்டமைப்புடன் தங்கள் அணியை வைத்திருக்கின்றன.

பெரும்பாலான அணிகள், இந்தவருட ஏலத்தின்போது, குறிப்பாகத் தனக்கு வேண்டிய பௌலர்களை தேர்ந்தெடுப்பதில் நேரம் மற்றும் பணம் செலவழித்ததைக் காணமுடிந்தது. சரியான ஸ்பின் பௌலர்களைத் தங்கள் அணிக்கு வாங்குவதில், ஒவ்வொரு அணியின் பிரதிநிதிகளும் பேப்பரில் கூட்டல் கழித்தல் போட்டுக்கொண்டு ஏலமெடுத்தனர். இந்த வருடத்திய ஐபிஎல் ஏலத்தில் ரூ.11 கோடி, 12 கோடி எனப் பெற்ற கே.எல்.ராஹுல், மனிஷ் பாண்டே, ஜெயதேவ் உனாத்கட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) போன்ற வீரர்கள் உண்டு. ஏகப்பட்ட பணத்தை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருக்கும் இந்த வீரர்கள், போட்டிகளில் உயர உயரப் பறப்பார்களா அல்லது காற்றுப்போன பலூனைப்போல கீழே சுருண்டு விழுவார்களா என்பதை வரவிருக்கும் நாட்கள் தெளிவாகச் சொல்லிவிடும்.

வனவாசத்திலிருந்து மீண்டு ஐபிஎல்-லுக்கு வந்திருக்கும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் சாதித்துக்காட்டவேண்டும் எனத் துடித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை அணிக்கு வழக்கம்போல மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானுக்கு ஆஸ்திரேலியரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியில் பந்து சிதைப்பு சர்ச்சையில் மாட்டி ஆஸ்திரேலிய அணியிலிருந்தே நீக்கப்பட, ராஜஸ்தான் தலைமைப்பதவியும் கூடவே பறிபோனது. ராஜஸ்தான் அணிக்கு இப்போது இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான அஜின்க்யா ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸும் எத்தகைய வெற்றி தோல்விகளைப்பெறும் என்பதனை அந்தந்த அணிகள் ஒவ்வொரு மேட்ச்சிலும் இறக்கவிருக்கும் வீரர்களின் காம்பினேஷன் மற்றும் களவியூகம் முடிவுசெய்யும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படி அமைந்திருக்கிறது? இந்த அணியின் பௌலிங் வலிமையானதாகத் தெரிவதால், முக்கிய போட்டிகளில் கேப்டன் ரஹானேயின் தலைபாரம் பாதியாகக் குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. வேகப்பந்துவீச்சாளர்களாக ஜெயதேவ் உனாத்கட், தவல் குல்கர்னி, பென் ஸ்டோக்ஸ், துஷ்மந்தா சமீரா முன்னிலைப்படுத்தப்படலாம். இந்த அணிக்கு வாய்த்திருக்கும் ஸ்பின் பௌலிங் காம்பினேஷன்தான் ரஹானேக்கு மிகவும் கைகொடுக்கும் எனத் தோன்றுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேர்ப்பு ஆஃப்கானிஸ்தானின் ஜஹீர் கான். 18 வயதான லெக்-ப்ரேக் பௌலர். இவரிடம் எதிரி விக்கெட்டுகள் வேகமாக சரியலாம். ப்ரஷாந்த் சோப்ரா, ஷ்ரேயஸ் கோபால், கே.கௌதம் போன்ற ஸ்பின்னர்களின் பலமும் கூடவே உண்டு.
இங்கிலாந்தின் இரண்டு குறிப்பிடத்தகுந்த ஆல்ரவுண்டர்கள் ராஜஸ்தானுக்கு விளையாடுகிறார்கள். ஒருவர் பென் ஸ்டோக்ஸ், நல்ல மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனும் கூட. இன்னொருவர் இன்னும் இங்கிலாந்து அணிக்கே ஆடாதவர்! என்னையும் எப்படி ஏலத்தில் கேட்டார்கள் என எனக்கே புரியவில்லை எனும் 22-வயதான ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer). இங்கிலாந்தின் சிறப்புத் திறமையாக விமரிசகர்களால் கருதப்படும் இவரை, ராஜஸ்தான் ஆர்வமாய் வாங்கிப்போட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ஆர்ச்சர் ?

விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்ஸன், ராஹுல் த்ரிபாட்டி அல்லது ஜதின் சக்ஸேனாவோடு ராஜஸ்தானின் ஆட்டத்தைத் துவக்கலாம். ஸ்மித்திற்குப்பதிலாக சேர்க்கப்பட்டிருக்கும் ஹெண்ட்ரிக் க்ளாஸன் (Henrich Klassen) அணியின் இன்னொரு விக்கெட் கீப்பருமாவார். சாம்ஸனுடன் துவக்கத்தில் இறக்கப்படுவதற்கான வாய்ப்பு இவருக்கும் கிட்டலாம். மிடில் ஆர்டரில் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் வலுசேர்ப்பார்கள். லோயர் ஆர்டரில் ஜோஃப்ரா ஆர்ச்சரை வேகமாக அறிமுகப்படுத்துவார்கள் எனத் தோன்றுகிறது. இவருக்குப்பின் ஷ்ரேயஸ் கோபால் அல்லது கே.கௌதம் வருவார்கள் எனத் தோன்றுகிறது. சிறந்த பௌலர்கள் அணியில் இருப்பினும், அணியின் கேப்டனாக ரஹானேயின் களவியூகம் எப்படி ராஜஸ்தானின் வெற்றிக்கு ஒத்துப்போகும் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கடந்த வருடங்களில் காணப்பட்டதுபோல வலிமையானதுதானா என்பது பெரும் கேள்வி. துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்ஸன் அல்லது தூ ப்ளஸீ (Faf du Plessis) இறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. ஸ்டார் இடதுகை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா 3-ஆம் இடத்திலும், அம்பத்தி ராயுடு அல்லது கேப்டன் தோனி 4-ஆவது, 5-ஆவது இடத்திலும் இறங்க வாய்ப்புள்ளது. 6-ஆவது 7-ஆவது இடங்களில் வருபவர்களுக்கு விளையாட இரண்டு மூன்று ஓவர்களே கிடைக்கும். ஆதலால் அவர்கள் பந்துகளை வீணாக்காது, வேகமாக அடித்து ஆடும் திறனுள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்த இடங்களில் இடம்பெறும் வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டர் டுவேன் ப்ராவோ(Dwayne Bravo), ரவீந்திர ஜடேஜா அல்லது கேதார் ஜாதவ் இருக்கக்கூடும். வேகப்பந்துவீச்சுக்கு யார், யாரை நம்புவார் தோனி? இங்கிலாந்தின் மார்க் உட், டுவேன் ப்ராவோ மற்றும் ஷர்துல் டாக்குர் இந்த வேலையைச் செய்யலாம். மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் சென்னையிடம் ஸ்பின்னர்கள் குறைவு. ரவீந்திர ஜடேஜா, மற்றும் தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோரின் திறனையே தோனி முக்கிய கட்டங்களில் நம்பவேண்டியிருக்கும். இவர்கள் அடிவாங்கினால், சென்னையும் வாங்கும்! போன வருடம் மும்பைக்கு விளையாடிய பழைய புலியான, ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் அணியில் உண்டு. அஷ்வினை ஏலத்தில் எடுக்கமுடியாத சென்னை அணி, ஹர்பஜனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கும். அவரை அடிக்கடி இறக்க முயற்சிக்கும். அது குறிப்பிடத்தகுந்த பலனைத் தருமா என்பதை ஏப்ரல், மே மாதங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்.

சென்னையின் முதல் சவால் இன்றே மும்பையில் காத்திருக்கிறது. லோக்கல் ஹீரோக்களான மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னையின் மஞ்சள் ஜெர்ஸிகளுக்குக் கடும் சோதனையைக் கொடுக்கும். ரோஹித் ஷர்மா, கரன் போலார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, பென் கட்டிங் (Ben Cutting) ஆகியோர் அணியின் பேட்டிங் பலம். பௌலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் (Pat Cummins), மெக்லெனெகன் (McClenagan), முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வேகப்பந்துவீச்சையும், க்ருனால் பாண்ட்யா, ஸ்ரீலங்காவின் அகிலா தனஞ்சயா, தென்னாப்பிரிக்காவின் ஜே.பி. டுமினி (JP Duminy) ஸ்பின்னையும் கவனித்துக்கொள்வார்கள். சென்னையைவிட மும்பை அணி குறிப்பாக பௌலிங்கில் வலிமையானதாய்த் தோன்றுகிறது. ஆனால் நடக்கப்போவது டி-20 மேட்ச். சில ஷாட்டுகளில், சில கேட்ச்சுகள், திடீர் விக்கெட்டுகளில் மேட்ச்சின் கதையே மாறிவிடும். ரோஹித்தா, தோனியா? நீலமா, மஞ்சளா ? இன்றைய இரவு சொல்லிவிடும் புதுக்கதையை.

**

8 thoughts on “ஐபிஎல் – CSK & RR : மீண்ட சொர்கம் ?

  1. எல்லா வீரர்களையும் கலைத்துப் போட்டு எடுப்பதில்லை என்று நினைக்கிறேன். சிலர் மாறாமல் அந்தந்த அணிகளில் இருக்கிறார்கள்!

    நன்றாக அலசி இருக்கிறீர்கள். சென்னை, மும்பை பற்றிச் சொல்வதை புரிந்து கொள்ளலாம். பதிவில் ராஜஸ்தான் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காரணம் ஸ்மித் விவகாரம் காரணமாகவா?

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம் :
      எல்லா வீரர்களையும் கலைத்துப் போட்டு எடுப்பதில்லை என்று… சிலர் மாறாமல் அந்தந்த அணிகளில் இருக்கிறார்கள்!//

      ஆமாம் . Marquee players (தோனி, கோஹ்லி, ரோஹித் போன்ற பெரிய தலைகள்)-ஐ ஏலத்தில் விடாமல் தக்கவைத்துக்கொள்கிறது ஒவ்வொரு டீமும் -கொஞ்சம் கூடக் காசப்போட்டு. தெரியும். பதிவு நீண்டு விட்டது-ஏலம் பற்றி எல்லாம் விபரம் கொடுத்ததால். படிப்பவர் சலிக்கக்கூடுமென நினைத்து வெட்டி எறிந்ததில், ’சிலரைத் தவிர’ என்கிற வார்த்தைகளும் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டது! எடிட் செய்துவிடுகிறேன்.

      ஆர்.ஆர்.-ஐத் தலைப்பில் எழுதக்காரணம், அதுவும் சி.எஸ்.கே.-யைப்போல மீண்டு வந்த டீம் ஆயிற்றே என்பதால்தான்.

      Like

  2. துளசிதரன்: நன்றாக கூர்ந்து நோக்கி எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆனால், நான் கிரிக்கெட் ஆட்டம் பார்ப்ப்லதில் சிறு வயது முதலே விருப்பமில்லாமல் போய்விட்டது.

    கீதா: ஏகாந்தன் அண்ணா இப்போ கிரிக்கெட்டில் பதிவு ரன் எத்தனை எடுக்க வேண்டும் என்று கணித்துக் கொண்டிருப்பது தெரிகிறது! ஹா ஹா ஹா ஹா..

    Liked by 1 person

    1. @துளசிதரன்:
      க்ரிக்கெட்டை நான் அப்படித்தான் கவனித்துவருகிறேன் -பதின்ம வயதிலிருந்து (ரேடியோ காமெண்ட்ரி காலம்!). ஆர்வம் துளியும் குன்றியதில்லை. கடைசியாக இங்கிருந்து புறப்படவேண்டிய நேரத்திலும், அன்று மேட்ச் ஓடிக்கொண்டிருந்தால், ’என்னப்பா ஸ்கோரு? விக்கெட் விழுந்ததா இல்லையா’ -என்று தெரிந்துகொண்டுதான் நகல்வேன். ’அங்கே’ லைவ் டெலிகாஸ்ட், ரேடியோ ஸ்கோர் இல்லாமலிருக்கலாம். ‘கீழே’யிருந்து வர்றியே..இதக்கூடவாத் தெரிஞ்சுண்டு வரப்படாது?’ என்று அவன் கோபித்துகொள்ளக்கூடுமல்லவா!

      @கீதா:
      கடந்த ஒருவருஷமாகத்தான் பதிவில் அதிகமாக க்ரிக்கெட் வரவில்லை. ஐபிஎல், இந்தியாவின் டெஸ்ட், ஒன் -டே, டி-20 தொடரென நிறைய எழுதியிருக்கிறேன். சொல்வனத்தில் என்னை ‘க்ரிக்கெட்பற்றி எழுதத்தான் முதலில் அழைத்தார்கள். அங்கும்
      என் முதல் 4,5 கட்டுரைகள் க்ரிக்கெட்பற்றித்தான். அதற்குப்பின்தான் என் ஆல்ரவுண்டர் வேலையைக் காண்பித்தேன். நம் கதை..தனிக்கதை! ஞாயிறும் அதுவுமா சுயப்ரதாபம் வேண்டாம்; நிறுத்திக்கொள்கிறேன்!

      Like

  3. கிரிக்கட் பிடிக்கும் இருந்தாலும் நம் அணி என்று ஏதுமில்லாதபோதுஇண்டெரெஸ்ட் சிறிது குறைகிறது

    Liked by 1 person

  4. @Balasubramaniam G.M :

    தேசிய அணியோடு ஒரு franchise-ஐ ஒப்பிடுவதற்கில்லை. அதுவேற.. இதுவேற!

    Like

Leave a reply to முத்துசாமி இரா Cancel reply