மனிதர்களின் கதை

இரண்டு மூன்று நாட்கள் முன்பு ஒரு காலை. வாக் போய்விட்டு திரும்புகையில், மனைவி சொன்னது தற்செயலாக நினைவில் தட்டியது. வரும்போது கொத்தமல்லி பெரியகட்டா ஒன்னு வாங்கிண்டு வரமுடியுமா. அது நினைவில் வருகையில் சம்பந்தா சம்பந்தமில்லா சாலையில் என் இஷ்டத்துக்கு நகரின் காலைவாழ்க்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். கொத்தமல்லிக்கு எந்தப்பக்கம் போகணும் என சற்றே குழம்பி, கொஞ்சம் முன்னே சென்று இடதுபுறச்சாலையில் திரும்பி நடந்தேன். இந்த பிரதான சாலையில் இருநூறு மீட்டருக்கு ஒரு காய்கறிக்கடை அல்லது காய்கறி வண்டி இருக்கும். கொஞ்சதூரம் நடந்ததுமே வலதுபுறம் ஒரு பெரிய காய்கறிக்கடை தென்பட, காலைச்சாலையின் போக்குவரத்தை இடது வலமெனப் பரபரப்பாய்ப் பார்த்தேன். ஏதாவது சிந்தனையில் எப்போதுமிருக்குமாறு சபிக்கப்பட்டிருப்பதால், தாறுமாறான ட்ராஃபிக் எரிச்சலூட்டும் சாலையை சரிவரக் கடப்பது ப்ரும்மப்பிரயத்தனம் எனக்கு. ஒரு வழியாகக் கடந்தேன். கடையை நெருங்கிக்கொண்டிருந்தேன்.

தனிவீடு அது. இரண்டுமாடிக் கட்டிடம். காய்கறிக்கடையை நெருங்குமுன் அது வந்ததால், அதன் முன் நான் வர நேர்ந்தது. அப்போது எதிர்ப்பட்டார் அவர். அறுபத்தைந்து இருக்கலாம் என்றது சுருக்காகக் கணக்குப்போட்ட மனது. மனதுக்கென்ன, எதையாவது கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, கேட்டாலும் கேட்காவிட்டாலும் இடையே புகுந்து ஏதாவது சொல்லவேண்டியது. ம்…அது பிறந்தவேளை அப்படி. அவருடைய முகத்திலிருந்து கண்களை காய்கறிக்கடைப்பக்கம் திருப்ப முனைகையில் நெருங்கிவிட்டார். ஹலோ என்றார் எதிர்பாராதவிதமாக. அதிர்ந்தவனாய், இருந்தும் அதனைக் காண்பிக்காது, கூச்சச் சிரிப்புடன் மெல்ல ஹாய் என்றேன். யாரிவர்? என்னை வேறு யாராவது என நினைத்துவிட்டாரோ? நின்றேன்.

எப்படி இருக்கிறீங்க.. என்று ஆர்வத்துடன் என் முகம் பார்த்து ஆரம்பித்தார். ம்.. ஃபைன்.. என்றேன் லேசாகத் தடுமாறி. ’யாருப்பா இவரு? நீ ஒரு மந்தம்..என்ன ஏதுன்னு தெரியாம பதில் சொல்றே..’ என மனம் தந்தி அடிக்கையில், அவர் மிக இயல்பாகத் தொடர்ந்தார். இதற்கு முன்னே ஒங்கள வேறெங்கோ பார்த்திருக்கிறேன்னு தோணுது. எங்கே.. ஞாபகம் வரமாட்டேங்கறது என்று லேசாக சிரித்தவர், எங்கே இருந்தீங்க முன்னாடி? – என்றார். அவரைப்பற்றி எந்த ஞாபகமும் எனக்கில்லை. ஆனால்,ஒரு சகமனிதரிடம் அப்படி முகத்தில் அடிக்கிற மாதிரி சொல்வது மரியாதை இல்லை எனத் தோன்றியது. ஒங்கள இதுக்குமுன் .. எனக்கும் குழப்பமா இருக்கு.. என்றேன் பலவீனமாக. மேலும், அந்நியோன்னியமாய் அவர் ஆரம்பித்து ஏதோ சொல்ல விரும்புகையில் தட்ட முடியவில்லை. யாரும் – அவர் எவ்வளவு சாதாரணமாகத் தோன்றினாலும், என்னிடம் தானாக வந்து பேசுகையில் அவரை அலட்சியம் செய்வதோ, சிலரைப்போல் அப்படியே அவரை அம்போ என விட்டுவிட்டு, பெரியமனுஷத்தனமாய் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நகல்வதோ என் அகராதியில் இருந்ததில்லை. அதனால் அவர் சொல்லமுயற்சிப்பதைக் கேட்க ஆரம்பித்தேன். அவர் எங்கேயாவது நிறுத்துகையில், ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விடலாம் என எதிர்பார்த்தேன். அவர் கேட்ட கேள்விக்கு, ஆமாம். முன்னெல்லாம் வேறொரு இடத்திலதான் இருந்தேன். ஹொரமாவு.. என்றேன். வாய் உண்மையைச் சொன்னதும், மனது உள்ளுக்குள்ளிருந்து குட்டியது. ’யாரோ எவரோ, ஒன்னுந்தெரியல. ஏதோ கேட்கறாரு. ரொம்ப அவசியமாக்கும். இவருகிட்டபோய் உண்மையை சொல்றது.. ஹொரமாவு.. தோசமாவுன்னு ! ’ அதன் லாஜிக் அப்படி. மனதின் கேலியை அலட்சியம் செய்தேன். அவரைத் தவிர்க்கமுடியாதவனாய், அவர் முகத்தை, தோற்றத்தை ஆராய்ந்தேன். மிடில்க்ளாஸ். வேஷ்டி சட்டையோடு, ஏதோ காரியமாக வெளியே புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார். குடும்பத்தோடு போஸ்ட்-ரிடையர்மெண்ட் வாழ்க்கை போலும் என நினைக்கையில் தொடர்ந்து பேசிச் சென்றார்.

நானும் ஆரம்பத்தில குடும்பத்தோட கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில இருந்தேன். ரொம்ப வருஷம் அங்கேதான். ஒரே கஷ்டம் சார்.. அதை ஏன் கேக்கிறீங்க.. என்றார் (நான் எங்கே கேட்டேன்?) பாவமாக இருந்தது முகம். வாழ்ந்து களைத்த முகம். அவர் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தவிதமோ, முகபாவமோ ஏதோ ஒன்று – என்னை மேலும் பொறுமையாகக் கேட்கவைத்தது. ஓ ..ரொம்பவும் கஷ்டப்படும்படியாயிடுத்து, இல்லயா? வாழ்க்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருவிதமாப் படுத்துது. சிலசமயத்துல அது தாங்கமுடியாத அளவுக்குப் போயிடுது என்றேன் அவருக்கு இதமாக இருக்கட்டுமென. (உண்மையும் அதுதானே. ஒவ்வொருத்தனும் உதைபட்டு, மிதிபட்டுத்தானே கொஞ்சம் முன்னேறியிருக்கோம், அல்லது மேல வந்திருக்கோம்?) இப்படிச் சொல்கையில் எனக்கே அவருடன் சிலகாலம் பழகிய உணர்வு வந்திருப்பதை உணர்ந்தேன். ஆமா சார்.. நான் ரொம்ப அடிபட்டுட்டேன். சின்ன வயசுல அம்மா போயிட்டா. அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரு. சித்தி.. மேலே தடுமாறினார். மாற்றாந்தாய் சார். எங்களத் தெருவுல நிக்கவச்சிட்டா.. சின்ன வயசுக் கொடுமைகள் நினைவைத் தாக்க, ஒரு பதற்றம் அவர் குரலை அழுத்தியது. அந்த வீட்டுக்காக கோர்ட் ஏறி ஏறி இறங்கித்து எங்க குடும்பம். எங்க வக்கீல் நாகேந்திர ராவ் சார்.. பெரிய கில்லாடி.. கேள்விப்பட்டிருப்பீங்க..ஒரு சிட்டிங்குக்கு இருபதாயிரம் வாங்குவாரு அப்பவே. தெணறிப்போனோம். அதயும் இதயும் வித்து எப்படியோ கேஸ் நடத்துனோம். ஆனா கடைசில ஜெயிச்சிட்டோம் என்றார் திருப்தியுடன்.

வீடு இப்போ ஒங்ககிட்டதானெ இருக்கு? கேட்டேன் அவரைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்த. ஆமா சார். பூர்வீக வீடு ஏகப்பட்ட போராட்டத்துக்குப் பிறகு எங்ககிட்ட ஒருவழியாத் திரும்ப வந்துடுத்து. வாடகைக்கு விட்டிருக்கோம் என்றார். ஓ, இப்போ குடும்பத்தோடு இந்தப்பக்கமா வந்துட்டீங்களா என்றேன் யூகித்தவாறு. எங்கே வேல பாத்தீங்க நீங்க? – எனக் கேட்டதற்கு அரசாங்கத்தில் ஏதோ ஒரு டெபார்ட்மெண்ட் பேர் சொன்னார். ஸ்டேட் கவர்ன்மெண்ட் வேலயாக இருக்கலாம். சரியாகப் புரியவில்லை. நான் விஆர்எஸ் வாங்கிண்டு வந்துட்டேன் சார். இப்போது இங்கேதான் இருக்கேன் என்று பின்பக்கத்தைக் காட்ட, அந்த பச்சை நிற வீடு – ஓ, அதை பங்களா எனவே சொல்லாம் – கம்பீரமாக உயர்ந்து, பக்கத்துக் காய்கறிக்கடையை சித்திரக்குள்ளனாய் காட்டி நின்றிருந்தது. சொந்தவீடுதானே இது? மெல்லக் கேட்டேன் ஆச்சரியம் மேலிட அதைப் பார்த்தவாறே. ’பெரிய வீடா கட்டிருக்காரு பாரு..ஒன்ன மாதிரியா சின்ன ஃப்ளாட்டுக்குள்ள தலய விட்டுண்டு..’ என ஆரம்பித்த மனசை, சித்த சும்மா இருக்கியா என அடக்கினேன். ஆமா சார் என்றார். முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள் லேசாகத் தலைகாட்டி மறைந்தன. அப்பறம் என்ன கவலை உங்களுக்கு, ஆண்டவன் ஆயிரந்தான் சோதிச்சாலும், கடைசியா ஒரு வழியக் காட்டி, வசதியா ஒக்காரவச்சிட்டான்ல! – என்றேன். ஆமாம் என்பதுபோலத் தலையாட்டினார். அவன் சோதிச்சான்னு சொல்றதைவிட நம்ம கர்மா நம்ம படுத்தியிருக்கு, இப்போ கழிஞ்சிருச்சுன்னு புரிஞ்சுக்கணும் இல்லயா? மனிதனுக்கு ஏதோ ஒரு தருணத்தில் திருப்தின்னு ஒன்னு மனசுல வரணும். இல்லாட்டி வாழ்ந்தோம்னு சொல்லிக்கிறதுல என்ன அர்த்தம் என மனதில் தோன்றியதை சொன்னேன். ஆமா சார். நீங்க சொல்றது சரிதான். இது போதும் சார். இதுக்குமேல கேக்கப்படாது என்றார் மனிதர் உணர்ச்சி வசப்பட்டு.

மனம்விட்டுப் பேசியதில் அவருக்கு ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கவேண்டும். முகம் இப்போது அமைதியாகக் காணப்பட்டது. சரி சார்..பாக்கலாம் என்று முடித்தவராய் கையை நீட்டினார். பிடித்துக் குலுக்கினேன். பாக்கலாம். பை..! அவர் தலையாட்டியவாறு மெல்ல நடந்து செல்வதைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு நிற்கையில், என் மனைவியின் முகத்தை மனது சட்டென்று போட்டுக்காட்டியது. காய்கறிக்கடைப் பக்கம் வேகமாகத் திரும்பினேன்.

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

15 Responses to மனிதர்களின் கதை

 1. Geetha says:

  பதிவை ரசித்தேன்! ஏன்னா வரிகள் சில டிட்டோ செய்யலாம் அதான்..ஹா ஹா ..டிட்டோ செய்யப்படுபவை…இதோ..

  // ஏதாவது சிந்தனையில் எப்போதுமிருக்குமாறு சபிக்கப்பட்டிருப்பதால், தாறுமாறான ட்ராஃபிக் எரிச்சலூட்டும் சாலையை சரிவரக் கடப்பது ப்ரும்மப்பிரயத்தனம் எனக்கு.//

  //என்னிடம் தானாக வந்து பேசுகையில் அவரை அலட்சியம் செய்வதோ, சிலரைப்போல் அப்படியே அவரை அம்போ என விட்டுவிட்டு, பெரியமனுஷத்தனமாய் வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நகல்வதோ என் அகராதியில் இருந்ததில்லை. //

  இப்படி நிறையப் பேர் என்னிடம் கதை சொல்வார்கள்…நான் என்னை அடிக்கடிச் சொல்லிக் கொள்வது…நான் ஒரு டயரி என்று…அது தலைப்பும் ஆகி ..சரி விடுங்க அதை அப்புறம் தட்டி விடலாம்..நீங்களும் ஒரு டயரி தான் போல அன்று ஆட்டோக்காரர் கதை சொன்னார்…உங்களிடம்…ரிக்ஷாக்காரர்…தொடரட்டும்..எழுதுவதற்கும் கிடைக்கும்…..இந்தப் பதிவை நீங்கள் கதையாகவே ஆக்கியிருக்கலாமோ…அண்ணா?! அவரிடம் பேச யாரும் இல்லை போலும்…நீங்கள் முன் ஜென்மத்தில் அவருக்கு ஏதோ சொந்தம் போலும்..பெரியவரைப் போன்ரு …இப்படி எண்ணற்றோர் உள்ளனர்..

  கீதா

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @கீதா:

   இதை எழுதியபின் இரண்டு நாட்கள் சும்மா போட்டுவைத்திருந்தேன். ஒரு அந்நியனாக, இதனை ஒரு வாசகனாகப் படித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். எழுதிய உடனே பதிவுபோட்டுவிடுபவன் இல்லை நான். டிக்காக்ஷன் திக்காக இறங்கியிருக்கிறதா என்று பார்க்கும் வழக்கம். ஒரு சமயம், இது கதையாக வடிவெடுக்குமோ எனத் தோன்றியதும் உண்மை (உங்களுக்கும் எப்படித் தோன்றியது அப்படி!). பிறகு, இந்த வடிவிலேயே போகட்டும் என விட்டுவிட்டேன்.

   //அவரிடம் பேச யாரும் இல்லை போலும்..//
   இருக்கலாம். சிலருக்கு மனதில் இருப்பதைக் கொட்ட ஒரு நபர் கிடைப்பதில்லை. குடும்பத்து இளசுகள் ( தலைச்சாயம் பூசி இளசுபோலக் காட்டிக்கொள்ளும் மிடில்-ஏஜ் மண்டைகளும் இதிலடக்கம்) தங்களின் பெற்றோர், தாத்தாபாட்டிகள் போன்றோரிடமிருந்து குறிப்பிட்ட தூரம் வைத்துக்கொள்வதில்தான் நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். குடும்பம் -வெளியிலிருந்து பார்ப்பதற்கு. ஆனால் உண்மையில் குடும்பமில்லை என்கிற நிலையில் நம் so-called families.

   Like

 2. அவருக்கு ஒரு வெய்லிங் வால் நீங்கள் எப்படி ஆனால் என்ன ஒரு பதிவு தேறி விட்டதே

  Liked by 1 person

 3. அதிர்ச்சியான இனிய சந்திப்பு…!

  Liked by 1 person

 4. சந்திப்பு நனவிற்கும் கனவிற்கும் இடைநிலையில் நிகழ்ந்ததோ!

  Liked by 1 person

 5. பகிர்வதற்கு ஆட்கள் இல்லாதபோது எதிர்ப்படும் யாரும் நட்பாகிப் போகிறார்கள் போலும். இப்படி குடும்பம் இல்லாத ஒருவன் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தான். அப்போதெல்லாம் எனக்கு இந்த வரிகள் நினைவுக்கு வந்து அவன் எரிச்சலூட்டும் கணங்களையும் பொறுத்துக்க கொண்டிருந்தேன்.

  “கவிதை போல் உள்ள குடும்பத்தில்
  நானும் ஒரு வார்த்தை
  ஆகலாமா?”

  ஒருநாள் அவன் என் பொறுமையின் எல்லையைத் தாண்டியபோது நட்பு விட்டுப்போனது. அது ஒரு துரோக சரித்திரம்! அவனும் அதே எண்ணத்தில் இருக்கக் கூடும்!

  Like

 6. யாரென்று தெரியாமல் அந்தப் பெரியவர் வார்த்தைகளை உங்களுடன் மகிழ்பகிர்வு செய்ததை படிக்கும்போது நான் முன்பு எழுதிய “கவிதை” நினைவுக்கு வருகிறது. வியாழனில் பகிராமல் இங்கேயே பகிர்கிறேன்!!!

  தேக்கி வைத்த
  அணைக்கட்டு
  உடைந்தது.
  பேச்சு வெள்ளம்.

  முதியோர் இல்லம்.

  Liked by 1 person

 7. Aekaanthan says:

  @ ஸ்ரீராம்:
  கவிதைக்குள் அன்னிய வார்த்தை புகமுடியாது! புகுந்தால், கவிதை கவிதையாக இருக்காது.

  அந்த நபருடன் உங்கள் அனுபவம் அதிர்ச்சி தருகிறது. இப்போது நினைக்கையில், ஒருகாலகட்டத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒருவர் – முழுதும் அந்நியர்- என்னிடம் நெருங்கப் பார்த்து குழப்பம் ஏற்படுத்த முயன்றதும் நினைவுக்கு வந்து ஒரு சோர்வைத்தருகிறது. விசித்திர மனிதர்கள் – not necessarily pleasant characters..

  தேக்கிவைத்த அணைக்கட்டு..கவிதை ரசம். இப்போதுமென்ன, வியாழக்கிழமை சொருகிவிடுங்கள்! சுவாரஸ்யம் பின்னூட்டமாய் வரும்..

  Like

 8. chollukireen says:

  கமர்ஷியல் ஸ்டீரிட்லே சின்ன வீட்லே கஷ்டப்பட்டிருப்பார். இப்போ இருக்கிற இடம் ஸொந்த வீடு. ஏதோ உங்களைப் பார்த்தவுடன் எப்போதோ பார்த்துப் பழகியவர், என்ற உணர்ச்சி. பட்ட கஷ்டங்களையும், நன்றாக இருக்கும் தற்போதைய மனநிலையையும் யாரிடமாவது கொடட வேண்டுமென்ற ஆதங்கம் எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பேச வைத்து விட்டது. கதை சொல்வதுபோல கேட்கவும் ஆள் வேண்டும். குடும்பத்தில் கதை கேட்க யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.நல்லபடிதான் இருக்கிரார்.. ஐயோபாவம். இப்படியும் மனிதர்கள். அன்புடன்

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ chollukireen :
   மனிதர்களுக்கு மனதில் தேங்கிக்கிடப்பதைக் கொட்ட ஒரு இடம் தேவைப்படுகிறது அவ்வப்போது.
   இப்போதெல்லாம் இளைஞர்கள் வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றிவரும்போதும் எப்போதும் மொபைல் ஸ்க்ரீனையே பார்த்துக்கொண்டு அலைகையில், இவரைப்போன்றோர் யாரிடம்தான் மனதில் படுவதை சொல்வது? மனதிற்கும் ஒரு வடிகால் வேண்டுமே?

   Like

 9. athiramiya says:

  ஒரு கட்டுக் கொத்தமல்லி வாங்கப்போய் ஒரு போஸ்ட் போடும் நிலைமைக்கு ஆளாகிட்டாரே ஏகாந்தன் அண்ணன்:)..

  சிலரின் மனதைத்தேற்ற, நம் நேரத்தில் கொஞ்சத்தை செலவிட்டுக் காது குடுத்துக் கேட்பதற்கும் நல்ல மனமும் பொறுமையும் வேண்டும்.. அது உங்களிடம் இருந்திருக்கு..

  இருப்பினும் உங்கட மனதைக் கொஞ்சம் கொன்றோல்ல வச்சிருங்கோ:) அது உங்களை விட ஓவராக் கதை சொல்லுது அப்பப்ப:)) ஹா ஹா ஹா:)..

  Liked by 1 person

  • Aekaanthan says:

   @ athiramiya : உங்கட மனதைக் கொஞ்சம் கொன்றோல்ல வச்சிருங்கோ:)//

   அதுதானே எப்படின்னு தெரியமாட்டேங்குது. அதுமட்டும் தெரிஞ்சுட்டா..!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s