உங்களுக்குத்தான் தெரியுமே ..

டெல்லியில் குளிர் அகன்று, கோடை கால் பதித்திருக்கும் காலைப்பொழுதொன்றில் கனாட்ப்ளேஸ் ஒரு ரவுண்டு போய்வரலாம் என ஆட்டோவில் ஏறினேன். ரேட் சம்பந்தப்பட்ட வழக்கமான வார்த்தைப் பரிமாற்றத்திற்குப்பின் வண்டியில் உட்கார, ஆட்டோ கிளம்பி ட்ராஃபிக்குக்குள் வித்தைகாட்டி முன்னேறியது. ஓட்டுனர் பேசும் மூடில் இருந்தார். ’மூணுமாசமாச்சு வண்டியைத்தொட்டு. இதுதான் முதல் சவாரி’. வண்டி ரிப்பேரா என்று கேட்டதற்கு ’இல்ல சார். ஒடம்பு சரியில்லாமப் போயிருச்சு..’ என்றார் சோகமாக. அப்போதுதான் கவனித்தேன். ஹோலிப்பண்டிகைக்குப் பின் டெல்லியே ஸ்வெட்டரைக் கழட்டித் தூக்கி எறிந்துவிட்ட நிலையில், இன்னும் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு வண்டியில் உட்கார்ந்திருக்கிறார். ‘வண்டி கிடக்கட்டும் உங்க உடம்பைக் கவனிச்சுக்கவேண்டாமா. அதுதானே முக்கியம்?’ என்றேன். மேலும், ’மகன் கூட இருந்து பாத்துக்கறான்ல ?’ – கேட்டேன். விரக்தியை உருண்டையாய் தொண்டையில் விழுங்கி, ’ஆப்தோ ஜான்த்தே ஹை(ன்)!’ என்றார். சற்றே திடுக்கிட்டேன். நானே ஓரிடத்தில் இல்லாமல் ஊர்சுற்றுபவன். நாடோடி. இவரை அறிந்தவனுமில்லை. ’உங்களுக்குத்தான் தெரியுமே’ என்கிறாரே.. எனக்கென்ன தெரியும் என்று நினைத்துவிட்டார் எனக் குழம்பியவாறு, ’என்ன சொல்கிறீர்?’ என்றேன். பதில் சொன்னார்:

ஆப் சஹி ஹை(ன்)
துனியா பி சஹி ஹை(ன்)
ஃபிர் பி ..
கோயி கிஸிகா நஹி ஹை(ன்)

நீங்கள் சரி
உலகமும் சரிதான்
ஆனால் ..
யாரும் யாருக்காகவும் இல்லை

என்று தத்துவமாய்த் தெறித்தார். ஓ! கவிஞரல்லவா வந்திருக்கிறார் ஓட்டுனராக.
கொஞ்சம் யோசித்து ’உண்மைதான் நீங்க சொல்றது’ என்றேன். சீட்டில் கோணலாக உட்கார்ந்துகொண்டு சிந்தனையில் ஆழ்ந்தவர், ட்ராஃபிக் விலகிக் கொடுக்க, வேகமெடுத்தார். சாதாரண மனிதர்கள், வாழ்வின் ஏற்ற இறக்கங்களில், சுக துக்கங்களில் தினமும் விழுந்துவிழுந்து எழுந்திருப்பவர்கள். அன்றாடப் போராட்டங்களில் அடிக்கப்பட்டு, நிமுக்கப்பட்டுப் புடம்போடப்படுபவர்கள். அனுபவம் தத்துவமொழியாகப் பேசுகிறது அவர்களது வாயிலிருந்து.

டெல்லியின் மெட்ரோவையும், DTC எனப்படும் டெல்லி போக்குவரத்துக்கழக பஸ் சர்வீஸையும் தவிர்த்துப் பார்த்தால், பொதுமக்கள், அதாவது ஸ்கூட்டர், கார்போன்ற வாகனமில்லா அசடுகள் தினமும் முட்டி மோதவேண்டியது ஆட்டோக்காரர்களிடம்தான். மெட்ரோ ஸ்டேஷன்களிலும், மற்ற இடங்களின் குடியிருப்பு மற்றும் சந்தைப் பகுதிகளிலும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. இதுவெல்லாம் போதாதென்று இப்போது எலெக்ட்ரி ரிக்ஷாக்கள் பிரபலமாகியிருக்கின்றன. ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன், டெல்லியின் தீவிர காற்றுமாசுக் குறைப்பு நடவடிக்கைகளின் பலனாகத் துவக்கப்பட்டவை. பாட்டரியில் இயங்குவதால் சத்தமே இல்லாமல் சாலையில் கடந்துவிடுகிறது. காற்று மாசும் இல்லை. ஏற்கனவே இங்கு ஆட்டோக்கள் இயற்கைவாயுவினால்தான் இயக்கப்படுகின்றன. இருந்தும், டெல்லியில்தான் காற்றுமாசு அதிகம் எனப் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். காற்றுமாசிற்குத் தலைநகரின் சுற்றுப்பகுதிகளின் முரட்டுத்தனமான தொழில்மயமாக்கமும் முக்கிய காரணம் என்பதை வசதியாக மறந்துவிட்டு அளந்துகொண்டிருப்பார்கள்.

இந்தமுறை டெல்லி பயணத்தின்போது, நாங்கள் குடியிருக்கும் தலைநகரின் கிழக்குப்பகுதியில் எலெக்ட்ரிக் ரிக்ஷாவில் அடிக்கடி பயணம் செய்துபார்த்தேன். சென்னையின் ஷேர்-ஆட்டோ மாதிரி, பொதுவாக பத்து ரூபாய்- ஒரு சவாரி என்று வாங்கிக்கொள்கிறார்கள்; சுமார் ஒரு கி.மீ. தூரம்வரை. தூரம் அதிகமானால் இருபது, முப்பது எனக் கேட்பதும் உண்டு. சத்தமில்லாமல், புகையில்லாமல் வசதியாக இருக்கிறது. எலெக்ட்ரிக் ரிக்ஷாவின் வருகைக்குப் பின், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர்களின் கதை அதோகதியாகிவிட்டதுபோல் தோன்றுகிறது. மூலைக்கு மூலை சோகத்துடன் காலிவண்டியுடன் நிற்கிறார்கள். சவாரிகள் அவர்களிடம் வரத் தயங்குகிறார்கள்.

ஒரு நாள் மாலை, அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய்வரலாம் என குடியிருப்பு வளாகத்தின் முகப்புவாயிலுக்கு வந்தேன். என் தலையைக் கண்டதும் மெல்லப் போய்க்கொண்டிருந்த எலெக்ட்ரிக் ரிக்ஷா தயங்கி நின்றது. கூடவே வயதான சைக்கிள் ரிக்ஷாக்காரர் ஒருவரும் அருகில் கொண்டுவந்து நிறுத்தி முகத்தைப் பார்த்தார். சரி, சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொள்வோம். மெதுவாகப் போகட்டும் அவசரம் ஒன்றுமில்லை என்று நினைத்து ஏறினேன். பேச்சுக்கொடுத்தேன். என்ன இது, இந்த குறைந்த தூரத்துக்கு இருபது, முப்பது என்கிறீரே. அந்தவண்டிக்காரர் (எலெக்ட்ரிக் ரிக்ஷா) பத்துரூபாய்தானே வாங்குகிறார் என்றேன். அதற்கு அவர், ‘ஓ தோ பேட்டரிவாலா ஹை ஜி! ஹமே தோ ஷரீர் ஸே மெஹ்னத் கர்னா பட்த்தா ஹை’ (அது பேட்டரிவண்டி ஐயா. எங்களுக்கு உடம்பினால் உழைக்கவேண்டியிருக்கிறதே) என்றார் பரிதாபமாக. அவரைப் பார்த்தேன். 65 வயதிருக்கலாம். நலிந்த உடம்பு. இந்த வயசான காலத்தில், பொழுதெல்லாம் மிதி மிதி என்று சைக்கிள்ரிக்ஷாவை மிதித்து உழைத்து சம்பாதிக்கும் மனிதர். மின்சக்தியும், மனித வியர்வையும் ஒன்றா? சரீர உழைப்புச் செய்து சம்பாதிப்பவருக்குப் பணம் சற்றுக்கூடுதலாகக் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது. ’ஆப் கி பாத் சஹி ஹை’ (நீங்க சொல்றது சரிதான்) என்றேன்.

வண்டிபோய்க்கொண்டிருந்தது. ஊர்ல எலெக்ட்ரிக் ரிக்ஷா அதிகமாகியிடுச்சே.. உங்களோட தினப்படி வருமானமெல்லாம் இப்போ எப்படி? என்றேன். அதை ஏன் கேக்குறீங்க. சவாரிக்காக நாங்க மணிக்கணக்காக் காத்திருக்க வேண்டியிருக்கு. ஒங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேருதான் வர்றாங்க. முன்னே கொடுத்த பணத்தில கொறச்சிகிட்டுத்தான் கொடுக்கறாங்க.. நாங்க எப்படித்தான் பொழக்கிறது சொல்லுங்க என்றார். கஷ்டந்தான். நீங்க டெல்லிதானா, எந்த ஊரு? எனக் கேட்டதற்கு பிஹார்ல இருக்கு எங்க கிராமம். அங்கேயிருந்து பொழப்புக்காக டெல்லிவந்து பத்து வருஷமாகுது..ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. என்றார். குடும்பம்? ’பொண்டாட்டி அக்கம்பக்கத்துல வீட்டு வேலக்குப்போயி ரெண்டுகாசு சம்பாதிக்கிறா. பையன் ஸ்கூல்ல கொஞ்சம் படிச்சான். பதினாறு வயசாகுது. வேறொரு சர்க்கார் ஸ்கூல்ல கூட்டிப்பெருக்கிற வேல கெடச்சிருக்கு’. ’பொண் கொழந்த இல்லயே’ என்றேன் கவலையுடன். ’ஒரு பொண்ணு. மூத்தது. கட்டிக்கொடுத்திட்டேன்’ என்றார் திருப்தியுடன். நல்லவேளை, ஒங்களோட பாதிக் கஷ்டத்தை ஆண்டவன் தீத்துட்டான் என்றேன். ’ஹா(ன்) ஜி. காலயில எழுந்து முகம் கழுவியதும், அந்த ’ஊப்பர்வாலா’வத்தான் ரெண்டு நிமிஷம் நெனச்சுக்குறேன். எனக்குத் தெரிஞ்சமாதிரி ஏதோ ஒழச்சுத்தான் சாப்டுறேன். யாரயும் ஏமாத்தல, கெட்டகாரியம் செய்யல’ என்றார் குரல் தழதழக்க.

இந்தியா முழுதும் பெருகிக் கிடக்கின்றனர் ஏழை ஜனங்கள். அதிலும் நகரங்களுக்குப் பிழைப்பு தேடிவரும், ஒரு வேலையையும் முறையாகச் செய்வதறியா கிராமத்து ஏழைகளின் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. முன்பெல்லாம் டெல்லியின் எண்ணற்ற மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் இத்தகைய ஏழைகள் கொத்துக்கொத்தாக உட்கார்ந்திருப்பதை, படுத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் முதியவர்கள், (வடநாட்டு கிராமவழக்கப்படி முக்காடுபோட்டுக்கொண்டு) கற்களை அடுக்கி, விறகுகளைச் செருகி, நசுங்கிய அலுமினியப் பாத்திரங்களில் எதையாவது சமைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்கள், உடம்பில் சரியாகத் துணியில்லாமல் அங்குமிங்குமாக அலையும் குழந்தைகள் என சோகத்தின் விதவிதமான உருவங்கள். பெரும்பாலும் பக்கத்து மாநிலங்களான உத்திரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானாவிலிருந்து நகரில் பிழைப்புதேடிவந்து செய்வதறியாது திகைக்கும் அபலைகள். இந்தமுறை டெல்லி திரும்பியபோது, சிலமாறுதல்களைக் காண்கிறேன். மேம்பாலங்களின் அடிப்பகுதியில் சாலையோரமாக இரும்புக்கிராதிபோட்டு, உள்ளே செடிகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறது முனிசிபல் நிர்வாகம்.

சரி, திக்கற்ற இந்த அபலைகள் எங்கே போனார்கள் ? நகரின் உட்பகுதிகளுக்குள் சிறுகூட்டமாக நகர்ந்து, அவ்வளவு பிரதானமாக இல்லாத சிறு சாலையோரங்களில், பாலித்தீன், தார்ப்பாலின் எனக் கிடைப்பதைக்கொண்டு சிறிய முக்கோண டெண்ட்டுகளைப் போட்டுக்கொண்டு குடியேறியிருக்கிறார்கள். அதே ஏழ்மை, முகத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் துக்கம். தினசரி சோத்துக்கான தொடரும் போராட்டம், வேதனை. அந்தக் குடிசைகள் முன்னும் சில சமயம் எரிகிறது அடுப்பு. கொதிக்கிறது ஏதோ அந்த ஏழைகளின் பாத்திரங்களிலும், அவ்வப்போதாவது.

**

9 thoughts on “உங்களுக்குத்தான் தெரியுமே ..

 1. அந்த ஆட்டோக்காரர் குல்ஸாருக்கு தூரத்து உறவு போலும். அருமை. இந்தியாவின் ஏழை முகத்தைத் தரிசிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஏன் எலெக்ட்ரிக் ரிக் ஷாவுக்கு மாறக்கூடாது? வாங்குமளவு ஹைவேஜ் இருக்காது… வங்கிக்கடன் போல வாங்கலாம். கிராமகளைத் தத்தெடுக்கும் பெரிய மனிதர்கள் இது போன்றவர்களுக்கு சுயதொழிலுக்கு உதவலாம்.

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம்:
   உண்மையில் இப்படி சில குல்ஸார்களைப் பொதுமக்களிடையே வடநாட்டில் அடிக்கடிப்பார்க்கிறேன். ரசமான மனிதர்கள்.

   வாய்கிழியப்பேசும் பிரபலங்கள், இப்படி நகரங்களின் சைக்கிள்ரிக்‌ஷாக்காரர்களுக்கு பண உதவி செய்யலாம். செய்யுங்களா இந்த மூதேவிகள்? மோதியைத் திட்டுவதிலேயே குறியாயிருக்கும் கேஜ்ரிவாலும் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்தான் !
   ஒரு e-rikshaw வின் விலை ரூ.65000 -லிருந்து 1 .2 லட்சம் வரை ஆவதாகச் சொல்கிறார்கள்.( கோயங்கா, ஜெம் போன்ற தரமான கம்பெனிகளின் தயாரிப்புகள் விலை அதிகம்). மஹிந்த்ரா இந்த மார்க்கெட்டுக்குள் புக இருக்கிறது.

   Like

 2. வயதான ரிக்ஷாக்காரருடான உரையாடல் மனதை கனக்க வைத்துவிட்டது.

  Liked by 1 person

  1. @Dr B Jambulingam :

   ஏழை உழைப்பாளிகளின் துயர் என்றும் குறைவதில்லை என்றே தோன்றுகிறது.

   Like

 3. டெல்லியில் தான் எத்தனை போக்குவரத்து வாகனங்கள். சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்திய சைக்கிள் ரிக்ஷா, ஸ்கூட்டர் (நம்ம ஆட்டோதான்), ஃபட்படி, பேட்டரி வண்டி, டாக்சி, கால் டாக்சி என்று பல உண்டு. சைக்கிள் ரிக்ஷா பழைய வாகனம். ஏழைகளின் வாகனம். ஏழைகள் இயக்கும் வாகனம். மற்றவை மேம்சாப்களுக்கு. நல்ல பதிவு.

  Liked by 1 person

  1. @ முத்துசாமி இரா :

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   மேம்சாப்கள்.. ஆமாம்!

   Like

 4. என்னவோ போங்கண்ணா….இந்த மாதிரி ஜனங்களைக் காணும் போது மனம் பரிதவிக்கும்….ஆனா நம்ம கிட்ட என்னருக்கு அப்படிக் கொடுத்தோ இல்லை வழிகாட்டியோ முன்னேத்தறதுக்கு?

  இந்தியா முழுதும் பெருகிக் கிடக்கின்றனர் ஏழை ஜனங்கள். // இத்துடன் அந்தக் கடைசி பாரவையும் சேர்த்தா…

  இப்படியான டென்ட் அடித்து வாழும் வட நாட்டு மக்கள் இப்போது தென்னகம் நோக்கியும் புலம் பெயர்கின்றார்கள்..இவர்கள் தங்களின் பசிக்காக இப்படி ஓடி ஓடி எங்கேனும் தஞ்சம் புக வேண்டியிருந்தால்….மறு பக்கம் …பண முதலைகள் கட்டவேண்டிய பணத்தைக் கட்டாமல் தப்பித்து வெளிநாட்டில் ஒளிந்து கிடக்கிறார்கள்….இந்தப் பாவப்பட்டதுகள் ஒரு வேளை சோத்துக்காக எங்கையேனும் கை வைச்சா அடி உதை கொடுத்து ஜெயிலுக்குள்ள போட்டுடறாங்க…இந்திய சாதாரண மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை சுருட்டி…வெளிநாட்டுல பதுங்கி உல்லாசமா இருக்கற கேடிகளை ஏன் பிடித்து இழுத்து உதைக்க முடியலை ஜெயில்ல தள்ள முடியலை? …

  அந்த ஆட்டோக்காரர்….பிச்சைப்பாத்திரம் ஏந்தினால் தத்துவ முத்துகள் நிறையவெ உதிரும் தான் வாழ்க்கையைப் படிச்சவங்களாயிற்றே….அவர் வரிகள் அருமை…

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா:
   பெரும்பாலான சமயங்களில் நம்மைப்போன்றோர் பெருமூச்சுவிடுவதோடு நிறுத்திக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மென்மையாகப் பேசமுடியும். அதிலேயே மனம் இவர்களுக்கு லேசாகிவிடுவதை நான் சிலசமயங்களில் கண்டிருக்கிறேன். ஆதலால் அது முக்கியம் எனவும் தோன்றுகிறது. காசு பணத்தைத் தாண்டி, ஏழை மனசுக்கு இதமான வார்த்தைகள் அவ்வப்போது தேவைப்படுகின்றன.

   வடநாட்டிலிருந்து (குறிப்பாக பிஹார், உ.பி.) தென்னாடு வரும் தொழிலாளர்களால் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கிற கோணம் உண்டு. அதில் உண்மையும் உண்டு. -எல்லோரையும் நாம் குறைசொல்லலாகாது எனினும்.

   வங்கிகளைக் கொள்ளையடிப்பில் , அப்போதிருந்த அரசும், வங்கி மேலாளர்களும் எப்படிக் கொடுத்தார்கள், எதை வாங்கிக்கொண்டு கொடுத்தார்கள் என்பதை முதலில் தெரிந்துகொண்டாகவேண்டும். மோதி & கோ. வந்து எல்லாவற்றையும் டைட் செய்து , கழுத்தை நெறிக்க ஆரம்பித்தால் தப்பி ஓடிவிடுகிறார்கள். மோதி அரசும் விடாமல் இத்தகையோரின் சொத்துபத்துக்களைக் கோடிக்கணக்கில் முடக்குகிறது. பறிமுதல் செய்திருக்கிறது. (முந்தைய மத்திய காங்கிரஸ் அரசுகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியாது. (கட் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள்). மத்திய அரசின் ஆக்கபூர்வமான செயல்களை , குற்றத்திற்கு ஆனந்தமாகத் துணைபோன காங்கிரஸும் அதன் அடிவருடிகளும் தாக்குகின்றன. மக்கள் நம்புகிறார்கள்- குறிப்பாக நமது தமிழ்மக்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது நமது மக்களின் அறியாமையை நினைத்து?

   வெளிநாட்டுக்கு ஓடிவிட்ட,அந்த நாட்டில் சொத்துபத்து வைத்திருக்கும், ஐடிக்களை உருவாக்கியிருக்கும் பணமுதலைகளை,அவ்வளவு எளிதில் இங்கே கொண்டுவந்துவிடமுடியாது. (அரசு முயற்சித்துக்கொண்டிருக்கிறது) . அதற்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டின் ஒத்துழைப்பு 100 சதவிகிதம் கிடைத்தால்தான் முடியும். பல பொருளாதார, அரசியல் காரணங்களால் வெளிநாட்டு அரசுகள் கதை சொல்லித் தப்பிக்கின்றன. இந்தப்பணமுதலைகளை தங்களின் அணைப்பில் வைத்திருக்கின்றன! நமது மீடியாவுக்கு இதெல்லாம் புரியாது. புரிந்தாலும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏற்கனவே எலும்புத்துண்டுகளை வீசியிருப்பதால் அதனைக் கடித்துக்கொண்டு, மோதிக்கெதிராக ஓசையெழுப்பவேண்டியது நமது மீடியாக்களின், சில்லரைக்கட்சிகளின் வாழ்வாதாரம்..தர்மம் என்றாகிவிட்டபிறகு.. Too much dynamics to unravel.. Not easy !

   ஈஸ்வரா! இதுவே பதிவுபோல் ஆகிவிட்டதே!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s