மீண்டும் இந்த நாய்

என்னுடைய முந்தைய டெல்லி வருகைகளின்போது இந்த நாயைக் கவனித்திருக்கிறேன். மென்பழுப்பு நிறம். எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழ் தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். நிழலில் எப்போதாவது படுத்துக்கொண்டிருக்கும். எங்கள் காம்ப்ளெக்சில் வசிக்கும் பெரும்பாலானவர்களை இது கண்டுகொள்வதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன். செலக்டிவ்-ஆகத்தான் வாலாட்டும் அல்லது பின்னே வரும். அதிகம் குலைக்காது. ஆனால் விசிட்டர்களில் சிலரைப் பார்த்ததும் ஏதோ புரிந்துகொள்கிறது. அவர்களை குரைத்து விரட்டிவிடப்பார்க்கும். குறைந்தபட்சம் அவர்கள் காரேறி, பைக்கேறி வெளியேறியபின்தான் நிம்மதியாகத் தன் இருப்பிடத்துக்குத் திரும்பும். எதனாலேயோ அவர்களில் ஓரிருவரை இது ப்ளாக்-லிஸ்ட் செய்துவைத்திருக்கிறது. பாஷை தெரியாததால் இதனை இண்டர்வியூ எடுக்கமுடிவதில்லை எனும் வருத்தமுண்டு. நாய்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவிலோ, பகலிலோ மற்ற தெருநாய்களின் கூச்சல், குழப்பங்களை இது சட்டை செய்வதில்லை. சேர்ந்து குரைப்பதில்லை. அதிகாலையில் ஊளையிடுவதில்லை. நாய்களின் சத்தமான பகல் பஞ்சாயத்துகளில் மூக்கை நுழைப்பதேயில்லை. தூரத்திலிருந்து பார்க்கும். சிந்தனை வயப்படும். அவ்வளவுதான். நாய் சமூகத்தின் அறிவுஜீவியோ என்னவோ, யார் கண்டது?

இதற்கு ஏதாவது திங்கக் கொடுக்கலாம் என்று அவ்வபோது தோன்றும். ஆனால் அதுவும் அவ்வளவு எளிதல்ல. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் – கொஞ்சம் தனித்துவமானது இது. பத்தோடு பதினொன்னு என்று நினைத்துவிடமுடியாது. சாப்பாட்டிலும் அப்படித்தான். யார் எதைப்போட்டாலும் சாப்பிட்டுவிடாது. அருவருத்த சாப்பாட்டிற்கு விறுவிறுத்த பட்டினிமேல் எனும் சித்தாந்தம் கொண்டது. கீழ்வீட்டுக்காரி (ஹிமாச்சல் ப்ரதேஷி) ஒருத்தி, ஒரு குளிர்காலக் காலையில், முந்தைய நாளின் மிஞ்சிப்போன ப்ரெட்-ஸ்லைஸை இதன் பக்கத்தில் வீசிவிட்டுப் போவதைப் பார்த்தேன். நாய்தானே.. தின்னுடும் என்கிற மனித மேட்டிமைவாத எண்ணம். ஆனால், நம்ப ஆளென்ன – ஐ மீன் – நாயென்ன, லேசுப்பட்டதா? கீழே கிடந்த ப்ரெட்டைப் பார்த்தது. அவள் உள்ளே போவதையும் நோட்டம்விட்டது. நகன்றுவிட்டது அந்த இடத்திலிருந்து. எனக்கும் வயசு பத்தாகப்போகுது. ஒன்னப்போல எத்தனப்பேரப் பாத்திருப்பேன் என்று நினைத்திருக்குமோ?

கீழ் தளத்திலே இன்னொரு வீட்டில் ஒரு பஞ்சாபிக் குடும்பம். வீட்டுக்காரர் பொதுவாக நாய்களின்மீது ப்ரியமுள்ளவர் என்று தோன்றுகிறது. இரவில் சாப்பாடுபோடுவதோடு (என்ன போடுகிறாரோ), குளிரில் இது நடுங்குமே என்பதற்காக ரப்பர்-மேட்டை, படுப்பதற்காக வாசலில் போட்டுவைப்பார். அதில் சுருண்டு படுத்துக்கொள்ளும். என்னுடைய நேரெதிர் வீட்டில் ஒரு உத்தராகண்ட் உத்தமி. எப்போதாவதுதான் கதவைத் திறந்துகொண்டு அவள் வாசலுக்கு வந்து நிற்பாள். சொல்லிவைத்தாற்போல், அந்தச்சமயம் பார்த்து இது அங்கே நின்றுகொண்டிருக்கும். அவள் அந்தப்பக்கம், இந்தப்பக்கமென வேடிக்கைப் பார்த்திருக்கையில், மெல்ல முன்னேறி வீட்டுக்குள் தலை நீட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இதன் நடவடிக்கையைக் கவனித்தவுடன் அவள் படபடத்து, ‘ச்சல்! ச்சல்! ஜா இதர்ஸே!’ (போ! போ! போய்த்தொலை இங்கிருந்து) என்று வெடிப்பாள். இதனை வெளியே தள்…ளி, வாசலை மறைத்து நின்றுகொள்வாள். இதற்கும் அவளைச் சீண்டுவதில் ஆனந்தமோ? ஒருநாள், நான் இந்த டிராமாவை பார்த்துவிட்டதைக் கவனித்தவள், ‘ஜாத்தாஹி நஹி ஹை Bhaahar.. அந்தர் ஆநா ச்சாத்தா ஹை! (வெளியே போகமாட்டெங்கிறது (சனியன்)..உள்ளே வரணுமாம்!) என்றாள். ‘இதற்கு ஏதாவது சாப்பிடக்குடுத்திருக்கீங்களா? என்னதான் சாப்பிடும் இது?’ என அவளைத் துருவப் பார்த்தேன். ’குச் நஹி!’ என்றாள். ஒன்றுமே சாப்பிடாதா என்றேன் ஆச்சரியமாக. ’கபீ, கபீ.. பிஸ்க்கூட் காத்தா ஹை. Bachchonwaali பிஸ்க்கூட். மேரி-கோல்ட்!’ {சிலசமயம் பிஸ்க்கெட் சாப்பிடும். குழந்தைகளுக்கான பிஸ்க்கெட். மேரி-கோல்ட்(Marie Gold)} என்றுமென்சிரிப்போடு சொன்னவள், கதவை அழுத்திச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.(இவனோடு ஜாஸ்தியாகப் பேசுகிறோமோ என்று நினைத்திருக்கலாம். பெண்மனதில் எப்போது, என்ன தோன்றுமோ, யாருக்குத் தெரியும்?)

இரண்டாவது தளத்தில் இன்னுமொரு உத்தராகண்ட். (டெல்லிக்குள் இப்போதெல்லாம் நிறையப் புகுந்துவிட்டது உத்தராகண்ட்). அந்த வீட்டில் இரண்டு கன்னிகைகள். அவர்களில் மூத்தவள் கருணை தேவதை – நாய் விஷயத்தில். நம்ப நாயைப் பார்த்ததும் மெல்லச் சிரித்துக்கொண்டே தலையில் தட்டுவாள், தடவிக்கொடுப்பாள். இது சிலிர்த்துக்கொண்டு நெளியும்.வளையும். ரெண்டுகால்களில் நின்று முன்னங்கால்களை உயர்த்தும். பிஸ்கட்டை உடைத்துப்போடுவாள். இப்படி சில கைங்கரியங்கள். சின்னவள்? பார்த்துக்கொண்டிருப்பாள். இருவரும் காலையில் கீழிறங்கிச் செல்கையில் அவர்கள் பின்னே செல்லும் நம்ப தோஸ்த். அவர்கள் தங்களின் பழைய மாருதி ஜென்னின் கதைத் திறந்து உள்ளே போவதைப் பார்த்து நிற்கும். கதவைச் சரியாகச் சாத்திக்கொண்டார்களா என்று உன்னிப்பாகக் கவனிக்கும். கார் கிளம்பி மறைந்ததும் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிடும்.

சமீபத்தில் டெல்லிக்கு மீண்டும் வந்தபின் ஒரு பிற்பகலில், பக்கத்துக்கடையில் கொஞ்சம் சாமான் வாங்கிக்கொண்டு படியேறினேன், அடுக்குமாடிக்குடியிருப்பின் முதல் தளத்திலிருக்கும் ஃப்ளாட்டை நோக்கி. கீழ்வீட்டு வாசலில் படுத்திருந்த இது மெல்ல எழுந்தது. மெல்ல? ஆம், கொஞ்சம் குண்டு, வயதும் ஆகிறதல்லவா? என்னைத் தொடர்ந்து படியேறி மேலே வந்தது. இரும்புக்கதவு, உள்கதவெனத் திறந்து உள்ளே போகையில், இதுவும் தலையை உள்ளே நுழைத்துக்கொண்டு, தலை உள்ளே, உடம்பு வெளியே என அகமும் புறமுமாக நின்றது. உள்ளே வர ஆசையா? கதவை சாத்தாதே – நான்தான் நிற்கிறேனே காவலுக்கு என்கிறதா? திங்க ஏதாவது வேண்டுமா? அதன் தலையை லேசாகத்தட்டிவிட்டு, மெதுவாக வெளியே தள்ளி இரும்புக்கதவை சாத்தினேன். ஓட்டை வழியே வெளியே பார்க்கையில், கதவைப் பார்த்து நிற்பது தெரிந்தது. சில நொடிகளில் அங்கேயே படுத்துக்கொண்டுவிட்டது. என்னடா இது, காலை வேளையில் தர்னா?

இதற்குப் போடுவதற்காக அவள் சொன்னமாதிரி, குழந்தைகள் பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்கி வந்திருக்கலாம். ஞாபகத்தில் இல்லை. கடைக்காரனோடு கேஜ்ரிவாலைப்பற்றிக் கதைத்துவிட்டு சாமானை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். (கேஜ்ரிவாலை நினைத்த மனதில் அப்போது, நாயைப்போன்ற அப்பாவி ஜீவன் வருவதற்கான சாத்தியம் குறைவுதான்). ஏதாவது இதற்குத் தின்பதற்குப் போட்டால் நல்லது. கிட்ச்சனைத் திறந்து ஆராய்ந்தேன். சப்ஜி கதகதப்பாக இருந்தது. ப்ரயோஜனமில்லை. பக்கத்தில் ஒரு பாத்திரத்தில், ரெஸ்ட்டாரண்ட்டிலிருந்து வாங்கிவந்திருந்த ஃபுல்க்கா ரொட்டி. அதனைக் கொஞ்சம் விண்டு (இதனை நம்பி முழுசாகப்போட்டால், சாப்பிடாது; எறியவும் மனசு வராது. தர்மம் தோய்ந்த சங்கடம்!) வாசலைத் திறந்து அதன் முகமருகே ரொட்டித்துண்டைக் காட்டிவிட்டு (ஏதோ கடவுளுக்குக் காட்டுவதுபோல்), பக்கத்தில் வைத்தேன். குனிந்து பார்த்தது. போனால்போகிறதென்று என்னையும் பார்த்தது. தலையைத் திருப்பிப் பக்கத்துப் பார்க்கைப் பார்க்க ஆரம்பித்தது. வேண்டாமாம். பிடிக்கவில்லையா? பசியில்லையா? பிஸ்க்கெட்டிற்காக இப்போது நான் கடைக்குப்போகப்போவதில்லை.

உள்ளே நுழைந்து நான் சாப்பிடுவதற்காக, ஃபுல்க்காவில் நெய்தடவி, மைக்ரோவேவுக்குள் தள்ளி, முப்பது செகண்ட் கொடுத்தேன். ஃபுல்க்கா சூடாகி, நெய்யால் மினுமினுத்தது. ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு, சப்ஜிக்குப்போகையில், மீண்டும் மனதில் வாசலில் படுத்திருக்கும் நாய். ஒருவேளை, நெய்தடவிய, கதகதப்பான ’ஃபுல்க்கா-வர்ஷன் 2’-ஐ இதற்குப் பிடிக்குமோ? கொஞ்சம் அதிலிருந்து விண்டு எடுத்துக்கொண்டேன். வாசல்கதவைத் திறந்து, அதன்முன்னே வைத்தேன். முகர்ந்தது. ஆராய்ந்தது. வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தது. அட! நெய் தேவைப்படுதா இந்தக் கழுதைக்கு? சே, இந்த நாய்க்கு? உள்ளே சென்று மிச்சமுள்ள விள்ளலை எடுத்துவந்து போட்டேன் ஒரு முழு ஃபுல்க்காவை சண்டித்தனம் செய்யாமல் சாப்பிட்டது. அதற்குமேல் உள்ளே போகாது. தெரியும்.

இப்போது நம்பநாய், நெய்ரொட்டி சாப்பிட்ட கதையைச் சொல்லிவிடவேண்டுமென்று ஆசை. எதிர்த்தவீட்டு எழில், எப்போது திறப்பாளோ கதவை ?

**

17 thoughts on “மீண்டும் இந்த நாய்

 1. நீங்கள் சாப்பிடும் மாதிரியே வயணமாக வேண்டுமென்கிறதோ? கிடைக்குமிடத்தில் சாப்பிட்டு வாலையாட்டி நன்றி சொல்லுமஅறிவு ஜீவிதான். அழகான கட்டுரை. அன்புடன்

  Liked by 1 person

  1. வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி, காமாக்ஷி மாமி. நீங்களும் மயூர்விஹாரில் தான் இருக்கிறீர்களோ?.

   Like

   1. இல்லை. நான் மயூர்விஹாரில் பதினைந்து வருஷம் இருந்திருக்கிறேன். பிள்ளையுடன். பிறகு ஜெனிவா வாஸம். தற்போது மும்பைவாஸம்.. வயதானகாலத்தில் மாறி மாறி பிள்ளைகளுடன். டில்லி பிள்ளை தற்போது ஸப்தர்ஜங் எக்ஸ்டென்ஷனில் வாஸம். நவம்பரில் பொல்யூஷனில் அவ்விடமிருக்க முடியாமல் மும்பை வந்து விட்டேன். வயதான நோய்வாய்ப்பட்ட கணவர். எழுத எண்ணமிருந்தாலும் முடிவதில்லை என்னால். நீண்டபதில். சினேகம் காண்பித்தால் கொட்டிவிடும் மனது. நன்றி. அன்புடன்

    Liked by 1 person

 2. சில வாகனங்களில் வருபவர்களை (சில) நாய்களுக்குப் பிடிக்காது. அதற்குக்காரணம் என்று ஒன்று சொல்வார் கே ஜி எஸ். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், அந்த வாகனங்களில் பெட்ரோல் பம்ப் லீக் ஆகிக்கொண்டிருக்கும். அந்த வாசனை அவைகளுக்குப் பிடிக்காது என்பார்.

  Liked by 1 person

 3. // தூரத்திலிருந்து பார்க்கும். சிந்தனை வயப்படும். //

  ஹா…. ஹா…. ஹா… அது தூக்கக் கலக்கம் அல்லது அரை மயக்கமாயிருக்கும்!!

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம்:

   பெட்ரோல் லீக்கினால் நாய்கள் குலைக்குமா ? இப்படி ஒரு தியரியா? சரி!

   தூக்கக்கலக்கமா ? எங்க ஹீரோவை நீங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள்!

   எழில் – என்றதும் அனுஷ்கா வந்துவிட்டாரா நினைவில்! இவள் கொஞ்சம் காத்ரீனா கைஃப் டைப் !

   Like

   1. // எழில் – என்றதும் அனுஷ்கா வந்துவிட்டாரா நினைவில்! இவள் கொஞ்சம் காத்ரீனா கைஃப் டைப் ! //

    நான் மறந்தால் கூட நீங்கள் எல்லாம் விடமாடீங்க போலவே! அது வடநாடு இல்லையா? இங்கே தென் நாடு என்றால் அனுஷ்! !! காத்ரீனா கொஞ்சம் தமன்னாவை நினைவு படுத்துவார்.

    Liked by 1 person

 4. @ஸ்ரீராம்: ஹிந்தியில் தென்படும் பெண்முகங்களில் காத்ரீனா, ப்ரியங்கா பரவாயில்லை. அலியா டீன் -ஏஜிஷ்..ஆனால் நடிப்புத்திறனுண்டு.
  இந்த கரீனாவை எப்போது கழட்டிவிடுவார்களோ தெரியவில்லை.

  Like

 5. @ காமாக்ஷி:

  விரிவான பதிலுக்கு நன்றி. மனதைக்கொட்டும்போதுதான் மனம் லேசாகிறது. இப்படி மனம் திறப்பவர்களோ உலகில் அரிது. உடல்நலம் காக்கவும் . முடிந்தவரை நிறைய எழுதுங்கள்.

  நான் ஜெனிவாவில் 1992-லிருந்து 1995 -ஆரம்பம் வரை இந்திய தூதரகத்தில் பணியாற்றியிருக்கிறேன். ஜெனிவா, டோக்யோ எல்லாம் எனக்கு ஹோம்டவுன் மாதிரி. அதனால் ஜெனிவா என்றதும் திடீர்க் கனெக்‌ஷன்!. இப்போது மயூர்விஹார்-3 ல். அடுத்தமாதம் பெங்களூர் என சுற்றுகிறேன். பெண் அங்கிருப்பதால்.

  Like

 6. கீதா சாம்பசிவம் (மின்னஞ்சல் மூலமாகப் பின்னூட்டம் ):

  உங்கள் செல்லம் ஃபுல்கா ரொட்டியில் நெய் தடவியதும் சாப்பிட்டதைப் போலத் தான் எங்கள் மோதியும் பண்ணுவான். நெய்யில்லா ரொட்டியைப் போட்டால் முகர்ந்து பார்த்துவிட்டு வாலாட்டிக் கொண்டு நகர்ந்து உட்கார்ந்து கொண்டு நம் முகத்தையே பார்ப்பான். நெய் தடவிய ரொட்டியைப் போட்டால் ஒரு வாய்தான். கவ்விக் கொண்டு விடுவான்.

  Liked by 1 person

  1. @கீதா சாம்பசிவம்:

   ஓ, இதற்கு ஒரு ஃபோட்டோகாப்பி உங்களிடமும் இருந்திருக்கிறதா! இரண்டைப் படைத்து தெற்குக்கு ஒன்னு, வடக்குக்கு ஒன்னுன்னு அனுப்பியிருப்பானோ அவன்?

   Like

 7. ஏகாந்தன் அண்ணா அந்த எழிலுக்கு உங்க கதையைச் சொல்லி அந்த எழிலின் முகம் எப்படி அஷ்ட எழிலானது நு ஒரு பதிவு விரைவில் எதிர்பார்க்கிறோம்….ஏனென்றால் உங்கள் நடையில் நீங்கள் சொல்லும் போது அந்த எழில் கண்டிப்பா சிரிச்சே ஆகணும் இல்லைனா கண்டிப்பா அவள் எழில் அல்ல!!! அல்ல அல்ல!!

  சரி அடுத்து….பைரவ சைக்காலஜினு ஒன்னு இருக்காக்கும்….அவர்கள் சில வண்டிகளில் வருபவர்களைப் பார்த்து குரைத்தல் என்பதெல்லாம் அந்த வண்டி டயரில் ஏதேனும் பங்காளி பைரவர் அல்லது பைரவி அடிச்சுருக்கும் உச்சா வாசனையால்…..அப்புறம் வரும் மனிதர்களின் ஏரியா வாசனையால்…சில ஏரியாக்கள் இவர்களுக்கு அலர்ஜி அந்த ஏரியாவில் இவர்களுக்கு வேண்டாத வாசனியுள்ள பைரவ பைரவிகள் இருக்கலாம்

  பை த பை உங்கள் அறிவுச் செல்லம் பைரவரா பைரவியா….

  இதோ அடுத்த சைக்காலஜிக்கு வரேன்…போளி தட்டணும் …ஆ!! நெய் வாசனை உங்க அறிவு செல்லத்துக்கு வாசனை எட்டிடாம இருக்கனுமே!!!

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா: ..இல்லைனா கண்டிப்பா அவள் எழில் அல்ல!!! அல்ல அல்ல!!//
   ஆண்டவா! இதையெல்லாம்வேறு நான் சோதிக்கவேண்டுமா?

   //..ஏதேனும் பங்காளி பைரவர் அல்லது பைரவி அடிச்சுருக்கும் உச்சா வாசனையால்….

   க்ருஷ்ணா! வாசனைமேல் வாசனை…போதுமடா சாமி !
   வைரவர் சைக்காலஜி அமோகமாய்ப் பெருகிவருகிறதே. ஸ்ரீராம் ஒன்று சொல்ல, நீங்கள் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இப்படியே போனால், புத்தகம் வந்துவிடும்.

   எங்களது ..வைரவர்.

   போளிக்கு நெய் தாராளமாகக் காண்பியுங்கள். சிக்கனம் வேண்டாம். நான் ஒரு ’Pro-நெய் Activist’ !

   Like

 8. நீங்கள் கூடப் பார்த்திருப்பீர்கள்.பைரவர்கள் கார் டயர், வண்டி டயர் சைக்கிள் டயர் என்று பார்த்து பார்த்து உச்சா அடிப்பதை…அதில் அவர்களுக்கு என்னதான் அப்படி ஒரு ஈர்ப்போ…அது போல அந்த ஏறியா மனிதர்கள் சிலரிடமும் எப்படியோ பைரவ வாசனை ஒட்டிக் கொள்ளும் போலும்,….இல்லை என்றால் வரும் மனிதரிகளின் உடை மணம், இப்படி உண்டு. என்வீட்டு கண்ணழகிச் செல்லம் பக்கத்து வீட்டுக்கு வரும் அவர்களது உதவியாளரைப் பார்த்து தினமும் குரைப்பாள். இத்தனைக்கும் அப்பெண் அருகில் வந்து இவளைத் தடவிக் கொடுக்கவும் செய்வாள். தடவிக் கொடுக்கும் வரை குரைத்தல் ஒலி வேறு…தடவிக் கொடுத்ததும் குரல் ஒலி கேட்கணுமே …ஹையோ என்னவோ ரொம்ப நல்ல பொண்ணு போல குழைதலா இருக்கும் கண்ணழகியின் குரல்….வித்தைக்காரி..

  அடுத்து சென்ட்/பௌடர் மணம்….சில பிடிக்கிறாது சில பிடிப்பதில்லை அவர்களுக்கு…

  வயதாகிவிட்டால் அவர்களுக்குச் சில சமயம் சில உணவு பிடிப்பதில்லை….காய்ந்தவை பிடிக்காது. மென்மையாக இருந்தால் சாப்பிடுவார்கள். பல் வீக்காகி விடுவதால்….அவர்களுக்குச் சொல்லவா தெரியும்….”எனக்கு சப்பாதி ப்ரெட் காஞ்சா கடிக்க முடியலை கொஞ்சம் நெய்யில வாட்டிக் கொடேன்னு” பொதுவாகவே நெய் மணம் அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கு….பேக்கரி ஐட்டமும்…….. சாக்கலேட் தவிர மத்ததெல்லாம் ரொம்பப் பிடிக்கும்…சாக்கலேட் அவர்களுகு நல்லதல்ல..பாய்ஸன்…சில அம்மாஞ்சிகள் அதையும் குப்பையில் தின்றுவிட்டு மெதுவாக இறந்துவிடும். எங்க வீட்டுல நான் சப்பாத்திக்குப் பிசைவது முதல் இதோ இன்று போளிக்குக் கலப்பது வரை இதுங்களுக்கு எங்கதான் மூக்குல சென்சார் இருக்குமோ தூங்கிட்டுருந்த கண்ணழகி வீறு கொண்டு எழுந்து வந்துவிட்டாள்…டான்ச் ஆடி சப்பாத்தி வேண்டும் என்று…நெய்யில்லா சப்பாத்தியும் இவள் திம்பாள்….அதே போல தயிர் பாத்திரம், மோர்ப்பாத்திரம் எடுப்பது எப்படித்தான் தெரியுமோ .அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்..மோர் தயிர் எல்லாம்……இவளுக்குத் தெரியாமல் வீட்டில் எதுவும் நான் செய்ய முடியாது..சரியான ஸ்காட்லாந்த் யார்ட்,…….எஃப்பிஐ…..!!! மூக்குல வேர்த்துரும்..

  அதி பணக்காரர் ஒருவர் (தூஊஊஊஊஊஊஊஊஊஉரத்துச் சொந்தம்…) தன் செல்லத்திற்காகவே வெளிநாட்டில் இந்தச் செல்லங்களுக்காகச் செய்யப்படும் சாக்கலேட்டை வரவழைத்துக் கொடுப்பதைத் தண்டோரா போட்டுச் சொல்லுவது வழக்கம்…….

  ரொம்ப க்யூட் செல்லமா இருக்கே!!! உங்கள் விவரணம் ரொம்ப ரசித்தேன்…சிரிக்கவும் செஞ்சேன்னு சொல்லத் தேவையில்லைனு நினைக்கிறேன்…ஹா ஹா ஹா

  கீதா

  Liked by 1 person

 9. அடுத்த வாட்டி கடைக்குப் போகும் போது அவளுக்கு மேரி கோல்ட் அப்புறம் நல்ல ஸாஃப்ட் சப்பாத்தி வாங்கிப் போடணும் சொல்லிப்புட்டேன் ….ஹா ஹா ஹா

  கீதா

  Liked by 1 person

  1. @ கீதா:
   வைரவாலஜியில் பிஹெச்.டி வாங்கியவர்கள் நிறைய இருக்கிறீர்கள்! நான் மேற்கொண்டு என்னசொல்வது..

   எதிர்த்தவீட்டு எழிலும் இதைத்தான் சொன்னாள்: மேரி கோல்ட் வாங்கிப்போடு என்று!
   Further development:நான் பெங்களூருக்குப் புறப்படுமுன் ஒரு நாள், டெல்லியில் இருந்த Hot Chips தமிழ்க்கடையில் 1/4 கிலோ ஆனியன் பக்கோடா வாங்கிவந்து படியேறினேன். வாசனை பிடித்துவிட்டதோ. வைரவர் படியேறிவந்து வாசலில் நின்றார். கொஞ்சம் தூளாக எடுத்துவந்து போட்டேன். தயக்கத்தோடு முகர்ந்து பார்த்தார் . பின்னர் லேசாக எடுத்து சாப்பிட்டார். பிடித்துவிட்டது. இரண்டாவது முறையும் ஒரு கை போட்டேன். ஒரு தூள் விடாமல் நக்கி சாப்பிட்டுவிட்டார் .
   அடுத்தநாள் நான் பக்கோடாத் தூள் போட அது சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், எழில் வந்து நின்றாள் எதிர்பாராமல் . (பக்கோடா வாசனைதான் காரணமா). ‘தேக்கா! (Dhekkaa பார்த்தாயா?) என்று லேசாகச் சீண்டினேன். அது சாப்பிடுவதை சில நொடிகள் முறைத்துப் பார்த்தாள்! ஐசீ சீஸ் காத்தா ஹை ! (இந்தமாதிரி சங்கதிகளைத்தான் தின்கிறது) என்று அதைப்பார்த்தவாறே சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்துகதவைத் தாளிட்டுக்கொண்டாள். ஹாட்சிப்ஸ் கடைக்காரன் வாழ்க!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s