. . புரிந்தும் புரியாமலும்

காலையில் ஒரு இருபது-நிமிட நடைக்குப்பின் சாலையோரமாக அந்த ரெஸ்ட்டாரண்ட் தலைதூக்கும். நடைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க நினைத்து, அதற்குள்போய் ஒரு கிளாஸ் காஃபி குடிப்பது வழக்கம். கிளாஸ் என்றால் பெங்களூரின் ஷார்ட் கிளாஸ். வேகமாகக் குடித்தால் நொடியில் காலியாகிவிடும். சூடாக வாங்கி, நிதானமாக அனுபவித்துக் குடிப்பதே உசிதம். காலைக் குளிருக்கும் இதம். காஃபியை வாங்கிக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து வெளியே பார்க்க இடம் தேடுகையில், வாசலோரத்தின் ஒவ்வொரு டேபிளிலும் ஒவ்வொருவர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சரி என மூலையில் பார்த்தபோது, ஒரு இருக்கை ’அட, வா இந்தப்பக்கம்’என்றது. போய் உட்கார்ந்துகொண்டேன்.

வெளியே சாம்பல்போர்வையாய் வானம். லேசான காற்றில் ஒரு ஜிலுஜிலுப்பு. காஃபி நன்றாக இருந்தது. ஏதோ சிந்தனையில் மனமிருக்க, கண்கள் வானத்தில் நிலைத்திருக்கையில், திடீரென மேகப்போர்வைக் கொஞ்சம் விலகியது. உள்ளிருந்து நிலவைப்போல் மங்கலாக மாயாஜாலங்காட்டி வெளிப்பட்டது சூரியன். அவ்வப்போது காலை அல்லது மாலைப்பொழுதினில், அதை நானே பார்த்துவிடுகிறேன். மேகமூட்ட நாட்களில்தான் காட்சி கிடைப்பதில்லை. சிலசமயம் அதுவே, ’நா இங்கேதான் இருக்கேன் பாரு !’ – எனத் தன்னைத் திரைவிலக்கிக் காட்டிவிட்டு மூடிக்கொண்டுவிடுகிறது. சிந்தனையினூடே மனம் பாடல் ஒன்றை தன் ஆழடுக்கிலிருந்து எடுத்து விசிறியது :

எங்கிருந்தபோதும் உனை மறக்கமுடியுமா
என்னைவிட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

என்று மனம் ஓட்டுகையில், சூரியன் ஒளிந்துவிட்டிருந்தது.
தொடர்ந்து மேலெழுந்து ரீங்கரித்தது சுசீலாவின் குரல் :

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வரும்வரை.. நிம்மதி.. இல்லையே…

இந்த வரிகள் மனதிலே மீண்டும் ரீ-ப்ளேயானபோது அந்தக்கால காட்சிகள் மனக்கண்ணில், கற்பனைத் திரையில் ஓடின. இப்படியெல்லாம் பெண்கள் ஒரு முப்பது-நாற்பது வருடம் முன் உருகியிருக்கிறார்கள் மனங்கவர்ந்தவனை நினைத்து. காதல் என்பது எப்பேர்ப்பட்ட மென் உணர்வாய் மனதில் அழகாய் இறங்கியிருந்திருக்கவேண்டும். மன ஆழத்தில் இதமாக அனுபவிக்கப்பட்டிருக்கவேண்டும். இப்படி இவர்கள் உருகும்படி அல்லவா அந்த ஆண்களும் இருந்திருப்பார்கள். அது ஒரு காலகட்டத்தின் அழகிய கதாபாத்திரங்கள். இளம் மனங்களின் நாசூக்கான உணர்வு வெளிப்பாடு. அது தரும் ஆழ்ந்த சுகம்.. மாறாத சோகம்.

இப்படி சிந்தனை ஓடுகையில், இப்போது நமது யுவர்கள், குறிப்பாக சல்வார்-கமீஸ்களிலும், பேண்ட்-ஷர்ட், சூட் என பிஸினஸ் உலகத்திற்கேற்ப பரபரப்பாய் உலாவருபவர்கள் – பதவி, பணம், அந்தஸ்து என இலக்குகளை நோக்கி பாய்ந்துகொண்டிருக்கும் இளமனுஷிகள் –இவர்களில், இந்த இயந்திர வெளியில், இத்தகைய மென் உணர்வுகள் உண்மையில் தோன்றுமா? காதில் இயர்-ஃபோனும் கையில் நித்திய மொபைலுமாய், அல்லது ப்ளூடூத் புண்ணியத்தில் தனக்குத்தானே சிரித்துக்கொண்டு, பேசிக்கொண்டு எந்தக் கவலையையும், பொறுப்பையும் சந்திக்காது, அருகில் மோப்பமிடும் ஆபத்துக்களைக்கூட உணராது, உலாவரும் நகரத்தின் இளசுகளைக் கவலையோடு பார்க்கிறேன். இவர்கள் காதில் தப்பித்தவறி… ’பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை..
’ என்று விழுந்துவைத்தால் என்ன நினைப்பார்கள்? ’நீயில்லாட்டி நான் ஏன் சிங்காரமாய் இருக்கக்கூடாது? இது என்ன பேத்தல்?’ என்றா? இந்த வரி: ‘வரும்வரை நிம்மதி இல்லையே..’ கேட்டால் என்ன சொல்வார்கள்? ‘’ Cool dude..cool ! ஷிவ் வெளிநாட்லேர்ந்து திரும்ப ரெண்டுவருஷம் ஆகுமா? ஸோ வாட்! ஷங்கர் இருக்கான்ல..சீண்டுவோம்.. போக்குவோம் பொழுதை..கமான் டீ! எதுக்கு இப்படி அநியாயத்துக்கும் யோசிக்கிறே ?’’ என்பார்களோ? பெரும்பாலான ஆண்களின் நிலையைத் துருவினால், அது இதைவிட அபத்தமாக இருக்கும்.

இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை என்றும் சிலசமயம் தோன்றுகிறது. காதல் எனும் ஆழ்மனம் சார்ந்த மென் உணர்வு, அழகியல் ரீதியாக, தற்செயலாகக்கூட இவர்களில் நிகழ்ந்துவிடக்கூடாது எனத் திட்டமிட்டு நாசப்படுத்துவதுபோலல்லவா நிகழ்த்தப்படுகின்றன காட்சிகள் இப்போதெல்லாம் – நமது சினிமாக்களிலும், சீரியல்களிலும், பொதுவெளிகளிலும் ? திரையிசைக்கு எழுதப்படும் பாடல்களும், சினிமா வசனங்களும் எவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கின்றன நாளுக்குநாள்? எவனாவது கவலைப்படுகிறானா? நவீனம் என்கிற பெயரில் இன்னும் ஏதேதோ அபத்தங்கள் சமூக வாழ்வில் மண்டிக்கிடக்கின்றனவே.

சமூக, பொருளாதார இடைமறித்தல்களையெல்லாம் மிஞ்சி, இளம்வயதினரில் இயற்கை அவ்வப்போது மென்மையாக உணர்வுகளை நிகழ்த்தும்தான். அதனை இவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்களோ, எப்படி வெளிப்படுத்துவார்களோ! ஏதோ சொல்ல நினைத்து, ஏதோ சொல்லி, விதவிதமான சமூகசூழலில் எப்படி எப்படியோ அசைவார்கள். ஏதேதோ பாடுவார்கள். அதற்கேற்ப சிலர் ஆடுவார்கள். பின்னே சிலர் ஓடுவார்கள். காட்சிகள் தினந்தினம் மாறும். விதவிதமான செய்திகளைக் கூறும்.

சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறுசிலர், ‘அந்தகன் வரும்போது.. அவனியில் யார் துணை ?’ என்று மனதுக்குள் பாடிக்கொண்டே மெல்ல நடந்துகொண்டிருப்பர். சிரித்துக்கொண்டே கடந்து செல்லும் காலம்.

**

14 thoughts on “. . புரிந்தும் புரியாமலும்

 1. ஆவ்வ்வ்வ்வ்வ் மீயேதான்ன்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)) நில்லுங்கோ படிச்சிட்டு வாறேன்:)..

  Liked by 1 person

 2. ஆஹா அழகாக இருக்கிறது உங்கள் காலைப்பொழுது…

  இதில் பல விசயங்கள் உண்மைதான், இக்காலத்தில் பெண்களின் மென்மை குறைந்து கொண்டே வருகிறது.. அந்த நாணம்.. வெய்க்கம்:) எல்லாமே இப்போ நிறையவே குறைந்து விட்டது.. அதுக்குக் காரணம்.. பெண்களும் சரிசமானாக வெளியே வந்து எல்லா வேலைகளும் செய்வதனால்கூட இருக்கலாம். ஆனா ஆண்கள் எதிர்பார்ப்பதென்னமோ அக்காலத்து மென்மையையும் நாணத்தையும் தான்:)..

  காதல் என்பதும் நிறையவே மாறி விட்டது இப்போ .. ரேக் இட் ஈசி என்றாகி விட்டது… ஆனா ஒரு விதத்தில் இதுதான் சரி என்றே நான் நினைக்கிறேன்.. ஏனெனில் அக்காலத்தில்.. ஒருவரைக் காதலித்து அது நிறைவேறவில்லை எனில் பைத்தியமாதல்.. அப்படியே மணம் முடிக்காமல் அவரையே நினைத்திருத்தல்.. எனத்தானே இருந்திருக்கிறது.. அதை சரி எனச் சொல்ல முடியாதே… காத்திருப்பது வேறு, கதையே முடிந்து விட்ட பின்ன்பும் அப்படியே இருப்பது வேறல்லோ..

  இக்காலத்தில், கவலைப்பட்டு விட்டு, மீண்டு விடுகிறார்கள், அதனால அவரைச் சாந்தோரும் சந்தோசமடைந்து விடுகிறார்கள், இல்லை எனில் குடும்பமே குடி முழுகி விடுமே…

  Liked by 1 person

  1. டேக் ஈஸியை ரெண்டு விதமா பார்க்கலாம். இப்போது ஆணும் சரி பெண்ணும் சரி ரொம்பவே சிந்திக்கிறாங்க இல்லையா..உலகம் நன்றாகவே தெரிகிறதே எல்லோருக்கும். அப்போ வீட்டுல ஏத்துப்பாங்களா இல்லையானும் தெரிஞ்சுருமே…நடக்காதுனு தெரிந்தா ஒன்னு போராடி வெற்றி பெறணும்….இல்லையா முதலிலேயே இந்த உணர்வு வேண்டாம்…நட்புடம் கடந்துடுவோம்னு தீர்மானம் எடுக்கலாமே…காதலிக்கத் தெரிஞ்சவங்களுக்குப் போராடவும் துணிச்சல் வேணும்…எதிர்பாராத சூழ்நிலைகளால் காதல் பிரிவு என்று ஏற்பட்டால் சோகத்தைக் (உண்மையான காதல் என்றால்) கடந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்…..இது கிராமத்துக் காதலுக்கும் பொருந்தும்..கௌரவக் கொலைகள்…

   வாட்சப்பில் அழகான ஒரு வீடியோ வந்தது. புல்லரித்த ஒன்று. இளம் வயதில் காதலித்துப் பிரியும் ஜோடி தங்கள் காதலை நினைத்து மணம் புரியாமல் இருந்து வயதாகிட, ஒரு வாலிபருக்கு ஒரு பர்ஸ் கிடைக்க அதில் ஒரு பழைய கடிதம் இருக்க…அதை வைத்து அவர் ட்ரேஸ் செய்யும் போது,
   இருவருமே ஒரே ஓல்ட் ஏஜ் ஹோமில் வேறு வேறு அறைகளில் இருப்பது தெரியவர..அவர் அவர்கள் இருவரையும் பார்த்து இதைச் சொல்லிட… வயது முதிர்ந்த நிலையில் சேர்ந்து பரவசப்பட்டுக் கல்யாணம் செய்து கொள்வது போல.அந்த வீடியோ…..ரசித்தேன் நான் அதை….இது வெளிநாட்டில் உண்மையான சம்பவம் என்று சொல்லி வீடியோ வாட்சப்பில் வந்தது…

   கீதா

   Liked by 1 person

 3. அந்தக் காலத்தின் அன்பு உணர்வுகள் இந்தக் காலத்தின் விடுதலை உணர்வால் மாற்றி புரிந்து கொள்ளப்படுகின்றன என்கிறீர்கள். உண்மை. இப்போது இதுபோல மனதில் உணவுகள் தோன்றினால் என்ன ஆகும்? தோன்றுமா? என்கிற கேள்விகளுக்கு ஆம், இப்போது அப்படித் தோன்றுவதுண்டு. சிலர் சமாளித்துக் கொள்கிறார்கள். பலர் புரியாத உணர்வினால் தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். அதேபோல பாவமன்னிப்பு போன்ற படங்கள் இந்தக் காலத்தில் எளிதாக வெளியிடப்பட முடியுமா?

  Liked by 2 people

  1. //// உணவுகள்///

   ஆவ்வ்வ்வ் அதிரா கண்ணுக்கு எல்லாமே தெரியுமாக்கும்:))

   Like

  2. ஆம்! சமாளிப்பவர்களும் இருக்கிறார்கள்…ஸ்ரீராம்…சரிதான் உணர்வுகள் தோன்றுகின்றனதான்…ஆனால் சமாளித்துச் செல்பவர்களும் இருக்கிறார்கள்..

   கீதா

   Liked by 1 person

 4. ஏகாந்தன் சகோ ரொம்ப ரசித்து ஆழ்ந்து வாசித்தேன். நேற்று எடுத்து வைத்துவிட்டு அப்புறம் தூங்கியே விட்டேன்!!!
  இரண்டாவது வரியை முதலில் வாசிக்கவும்..ஹா ஹா ஹா இல்லைனா நீங்க கேப்பீங்க, “அப்ப என் பதிவை வாசிக்கும் போது தூக்கம் வந்துவிட்டதா…அப்புறம் என்ன ரசித்து ஆழ்ந்துனு வார்த்தைகள்” அப்படினு ஹா ஹா ஹா ஹா…

  வாசித்ததும் நிறைய சொல்லத் தோன்றுவதால் முதல் வரி டக்கென்று வந்துவிட்டது. அப்புறம் தான் நேற்றே வாசிக்காம தூங்கிட்டோமேனு…அந்த வரி…

  இதில் இரண்டையும் அதாவது அந்தக் காலக் காதல் இந்தக் காலக் காதல் இரண்டையும் நாம் நேர்மறையாகவே பார்க்கலாம்….எதிர்மறையாகவும் பார்க்கலாம். அந்தக் காலக் காதலை காதலில் தோல்வியுற்றவர்கள் மனம் நொந்து அந்த நினைவுகளிலேயே வாழ்ந்ததைக் கூட நான் அறிவேன் உண்மைச் சம்பவமாக. நான் அதைப் போற்றுவேன். ஆனால் சிலர் குறிப்பாக என்ன செய்ய அதற்காக அதையே நினைத்து அப்படியே இருக்க முடியுமா நடப்பதெல்லாம் நல்லதே என்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளணும் என்று சொல்வார்கள். அந்தக் காலப் பெண்களைப் பொருத்தவரை அவர்கள் ஆழமாகக் காதலித்தாலும் சூழல்கள் காரணமாக பெற்றோரை எதிர்க்கவோ அல்லது அவர்களிடம் சொல்லவோ முடியாமல் அவர்கள் பார்க்கும் பையன்களை மணம் புரிய வேண்டியக் கட்டாயம் வரலாம். ஆனால் மனதில் அந்தக் காதலும் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும். அதைத் துடைத்து எறிவது முடியாது. ஆண்களில் சிலர் சோகம் பாடி தாடி வளர்த்து என்று அப்புறம் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
  ..
  ஆனால் இப்போது அப்படியில்லை. பெண்கள் நிறையவே சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். பெண் முன்னேற்றம். விடுதலை. கல்வி. பெரிய வேலை என்று. காதலும் ஆழமற்றுப் போய்விட்டது. இப்போதைய காதல்கள் பல டெம்பரரி…டைம் பாஸ்….அதில் நிலைத்து மணம் புரிபவர்கள் சிலரே.

  தங்கள் காதல் நிறைவேறாது என்று நடைமுறை தெரிந்தும் காதலித்து அப்புறம் வேறு வேறு மணம்புரிதல்..அது காதலா? ஜஸ்ட் இன்ஃபேச்சுவேஷன். முந்தையக் காலகட்டத்தைவிட இப்போது அத்தனை கடினமா வீட்டில் சொல்லி மணம் புரிதல் என்பது? தெரியவில்லை. என் மகனின் நண்பர்களில் சிலர் கல்லூரியில் இருந்த வரை எங்கள் விட்டிற்கு வரும் போதெல்லாம்….எல்லோரும் அவர்கள் இணைவார்கள் என்று நினைத்த ஜோடிகள் வேறு வேறு கல்யாணம் புரிந்து கொண்டார்கள். குறிப்பாக ஒர் உதாரணம். இருவருமே அப்போது ஆந்திரா..இப்போதைய படி ஒருவர் ஆந்திரா மற்றொருவர் தெலுங்கானா…

  இருவரது பெற்றோரும் அறிந்தவர்கள் நண்பர்கள். அப்போ நாங்கள் நினைத்தோம் சேர்ந்துவிடுவார்கள் என்று. அப்பெண் வீட்டிற்கு வரும் போதெல்லாம் நான் கேட்ட போது உங்கள் பெற்றோர் நண்பர்கள் சரி…வீட்டிற்குத் தெரியுமா நீங்கள் இருவரும் விரும்புவது என்று…
  இது பெரிதாகிவிட்டதால் அடுத்து போடுகிறேன்…..வேர்ட் ப்ரெஸ் ஏற்காது அப்புறம்

  கீதா

  Liked by 1 person

 5. அப்பெண்ணிடம் கேட்ட போது “இல்லை இருவரின் ஜாதி வேறு வேறு….எங்க ஊர்ல எல்லாம் ரொம்ப ஜாதி பார்ப்பாங்க” என்று சொன்னாள். அப்போ நான் கேட்டேன் நேரடியாகவே…சரி நடக்காதுனு பயம் இருக்கு இல்லையா அப்போ ஏன் இப்படி மாஞ்சு மாஞ்சு அவன் வரலைனா அழற? மூட் அவுட் ஆற…அவன் பேசலைனா நீ டல் ஆற? அப்போ இந்தக் காதல் சும்மாவா? ஜஸ்ட் டைம் பாஸ்?

  நீங்க பாத்தீங்கனா ரெண்டு பேரும் எப்பவும் சேர்ந்தேதான் இருப்பாங்க…என் மகன் நண்பர்கள் மத்தியிலும் ரொம்ப ப்ராபலியம். படிப்பு முடியும் போதே..ரெண்டு பேருக்குமே ஆந்திரா/தெலுங்கானா அரசு வேலையும் கிடைச்சுருச்சு…உடனே கல்யாண ம் பற்றிய அறிவிப்பு….என் பையன் சொன்னான் அம்மா ரெண்டு பேர் வீட்டுலயும் ஒத்துக்கலை ஸோ பையனுக்கு வேற பொண்ணு…பொண்ணுக்கு வேற பையன்…இப்ப குழந்தை குட்டியோட சௌக்கியமா இருக்காங்க…

  நான் அப்ப வாயடைச்சு போனேன் எப்படி…அந்தக் காலம்னா ஓகே…அப்பல்லாம் காலகட்டம் அப்படி…இப்பவுமா? அப்போ இவங்க காதல்ன்றது என்ன? ரெண்டு பேருக்கும் வேலை…அதுவும் அரசு வேலை…ஏன் ரெண்டு பேருக்கும் வீட்டுல பேச முடியலை?

  இன்னொன்றும் அப்படியே…நார்த், வெஸ்ட். நார்த் ஹிந்து…வெஸ்ட் கிறிஸ்டியன்.ஆங்கிலோ இண்டியன். ரென்டும் உருகி உருகி காதல்…சுற்றல்….ஜோடியாக அலைவது என்று…என் பையன் அந்தப் பையனுடன் ஸ்விம்மிங்க் போவான். அப்போ அந்தப் பையன் சொல்லிருக்கான் மதம் வேற ஸோ எங்க வீட்டுல ஒத்துப்பாங்களானு தெரியலை…

  என் கேள்வி வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க அப்புறம் ஏன் இப்படி சுத்தனும்? டைம் பாஸ்? வயது ஈர்ப்பு? காதலே இல்லை….

  போராடி ஜெயிக்க முடியாமல் போனால் வேறு வேறு வாழ்க்கை என்றால் ஓகே…மனம் வீட்டுச் சூழலை எல்லாம் எங்கே பார்க்கிறது…அதற்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் லவ்வி விடுது…!!!! இன்னும் இளைஞர்கள் ஆழ்ந்து சிந்திக்கலாமோ என்றும் தோன்றும்..

  அதே சமயம் மகனின் இரு நெருங்கிய நண்பர்களும் கல்லூரியிலிருந்தே விரும்பி வரும் பெண்களைத்தான் இதோ கல்யாணம் செய்து கொள்ளப் போறாங்க..வேறு வேறு சாதி, ஒரு ஜோடி…மற்றொரு ஜோடி தமிழ்நாடு, கேரளா…

  ஆனா ஒன்னு உங்க தலைப்பு ரொம்ப சரி…எனக்கும் அதே!!!

  கீதா

  Liked by 1 person

 6. இன்னொன்றும் இப்படி வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் வீட்டிற்குப் ப்யந்து ரொம்பவும் பெற்றொர் சொல்லைக் கேட்கும் பிள்ளைகள் ஏன் இப்படிச் சுற்றி, பேசலைனா மனது வருந்தி, மூட் அவுட் ஆகி அழகான இளம் பருவத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்…சந்தோஷமாக நட்புடன் இருக்க வேண்டிய வயது…படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயது…இதில் பார்த்தீர்கள் என்றால் ஆண்கள் அரியர்ஸுடன் அலைவார்கள். பெண்கள் பெரும்பான்மையோர் கெட்டி. நல்ல புத்திசாலிகள். அதாவது அரியர்ஸில்லாமல் போய்விடுவார்கள்….

  என்னவோ போங்க ஒன்னும் புரியலை…நாம இப்படிச் சொன்னா பத்தாம்பசலிகள்…ஓல்ட்னு சொல்லிடுவாங்க..ஏதோ நமக்குக் காதலைப் பற்றி, அன்பைப் பற்றி, மெல்லிய உணர்வுகளைப் பற்றி ஒன்றுமே தெரியதாது போல…ஹா ஹா ஹா…

  ஆனா ஒன்னு தெரியுந்து முந்தி மாதிரி இப்போதைய இளைஞர்கள் இந்த மாதிரி காதலை வெகு எளிதாகக் கடந்து சென்று விடுகிறார்கள். (அது காதலானு எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது!!!! ஹிஹிஹிஹி) இவள்/இவன் இல்லைனா வேறு அப்படினு….இதன் எக்ஸ்டென்ஷன் தான்
  மோசமான …பரவிவரும் கல்சரான…. லிவ்விங்க் டு கெதர்…அதுவும் ரொம்பவே நடக்குதே…

  ஏதோ புரியுது ஆனா ஒன்னும் புரியலை போங்க…

  கீதா

  Liked by 1 person

 7. இப்போதைய இளைய சமுதாயம் குறித்துக் கவலைகள் தோன்றினாலும் தங்களுக்கு என்ன வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாய்த் தெரிகிறது. ஆகவே அவங்க காதல்+திருமண வாழ்க்கையைத் தங்கள் விருப்பப்படியே நிர்ணயித்துக் கொள்கின்றனர். கலப்பு மணங்கள் அதிலும் மாநிலம் விட்டு மாநிலம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழ்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை! இருவரில் ஒருவருக்காவது இருக்கணும். இருவருக்குமே இருந்தால் அவங்க வாழ்க்கை சொர்க்கம் தான்!

  Liked by 1 person

 8. பெங்களூர், சென்னை என்று பயணம். இப்போது டெல்லி! இனிதான் உட்கார்ந்து எழுதவேண்டும்..

  Like

 9. @ஸ்ரீராம், கீதா, அதிரா, கில்லர்ஜி, கீதா சாம்பசிவம்:

  பதிலில் தாமதத்துக்கு வருந்துகிறேன். பயணங்கள் ப்ளஸ் என் சோம்பேறித்தனமே காரணம்.

  உங்களின் ஷார்ப்பான, விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s