யானையை வர்ணிக்க முயன்ற சுண்டெலி

நகரின் உட்புறச்சாலையோர சாக்கடைப் பொந்திலிருந்து வெளிப்பட்டது சின்னதாய் ஒரு சுண்டெலி. வெளியைக் கண்டால் பயமதற்கு. மிரண்டு போய் அந்தப் பக்கம் பார்க்க, எதிரே நடைபாதையைத் தாண்டி இன்னொரு இருட்டுப்பொந்து ஈர்த்தது மனதை. எலிமனமாயிற்றே!. ஆனால் பெரிய சாலையைக் குறுக்காகக் கடக்க வேண்டுமே. ஒரே ஓட்டமாக ஓடிவிடவேண்டியதுதான் அந்தப் பக்கத்துக்கு. அதற்குள் ஏதோ சத்தம் கேட்க, தன் எண்ணெய்க்கண்ணை இடுக்கிப் பக்கவாட்டில் பார்த்தது. கருப்பாக பெரியமலையொன்று சாலையின் நடுவிலே அசைகிறதே. யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. ‘என்ன ஒரு ஜீவனிது. எத்தனை பெரிசு.. இருந்தும் எத்தனை மெதுவாக நடக்கிறது’ என மனதுக்குள் கிண்டலடித்தது சுண்டெலி. தன் சிற்றறிவைக் கூராக்கி மேலும் ஆராய்ந்தது:

உருவமோ கருப்பு
முகமோ ஐயோ..வெறுப்பு
மலைபோலிருந்தும் என்ன ஒரு மசமசப்பு
தூணைப்போலக் கால்கள்..துவண்டுபோன நடை
சாலையில் இது நடக்க யாரும் போடலையோ தடை
சாலையென ஒன்றிருந்தால்
சரக்கெனப் பாய்ந்து கடக்கவேண்டும்
சாய்ந்து சாய்ந்து நடப்பதென்பது
மனிதர்கள் மட்டுமே செய்யும்
மரபுகளின் மீதான அத்துமீறல் ..

யானை சென்றுவிட்டது. தன் சிறுமண்டைக்குள் சிக்கிக்கொண்ட பெரும் யானையை இன்னும் எப்படியெல்லாம் தாக்கவேண்டும் என விமரிசன வரிகளை அசைபோட்டுக்கொண்டே, சாலையின் குறுக்கே சரக்கென்று ஓடியது சுண்டெலி. இன்னுமொரு பொந்துக்குள் சுகமாய் நுழைந்துகொண்டது.
ஏதோ ஒரு சாதாரண ஜீவன் என நினைத்துவிடாதீர். சுண்டெலி சமூகத்தில் விருதுபல வாங்கிய பெருங்கவிஞன் இது என சேதி ஒன்று காதுக்கு எட்டியிருக்கிறது.

**

Advertisement

14 thoughts on “யானையை வர்ணிக்க முயன்ற சுண்டெலி

 1. யானையைப் பற்றி சுண்டெலி மனதுக்குள் பாடிய கவி வரிகளை ரசித்தபோது யானை சுண்டெலி ஜோக்ஸ் ஓரிரண்டு நினைவுக்கு வந்தது!

  //சுண்டெலி சமூகத்தில் விருதுபல வாங்கிய பெருங்கவிஞன் இது என சேதி ஒன்று காதுக்கு எட்டியிருக்கிறது.//

  ஆஹா….!

  Liked by 1 person

 2. ஹாஹ்ஹா 🙂 யானையை சுண்டெலி வர்ணித்ததை விட சுண்டெலியை நீங்கள் வர்ணித்ததை வெகுவாக ரசித்தேன் 🙂
  எலி மனம் ..எண்ணெய்க்கண் ஹையோ சூப்பர் ! எலிக்குட்டியின் கண்கள் அப்படிதான் மினுங்கும் 🙂

  Liked by 2 people

  1. @ ஏஞ்சலின்: எலியைக் கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள் நீங்களும்! இது சமீபத்திய சர்ச்சை சம்பந்தப்பட்டது எனப் புரிந்ததா?

   Like

 3. தன் சிறுமண்டைக்குள் சிக்கிக்கொண்ட பெரும் யானையை இன்னும் எப்படியெல்லாம் தாக்கவேண்டும்//
  ரசித்த வரிகள்…
  //ஏதோ ஒரு சாதாரண ஜீவன் என நினைத்துவிடாதீர். சுண்டெலி சமூகத்தில் விருதுபல வாங்கிய பெருங்கவிஞன் இது என சேதி ஒன்று காதுக்கு எட்டியிருக்கிறது.//
  ஓ!!! மாபெரும் கவிஞர் சுண்டெலியின் கவிதையையும் ரசித்தோம் என்று அந்தச் சுண்டெலியின் காதில் சொல்லிவிடுங்கள்! பொந்தில் இருக்கும் சுண்டெலி வெளியில் வராமலாபோய்விடும்..!!!!

  கீதா

  Liked by 1 person

  1. @கீதா:
   சுண்டெலிக்கு சேதி சொல்லியாயிற்று! உற்சாகத்தில் யானையைப்பற்றி இன்னும் பெரிசா ஏதாவது எழுதிவிடப்போகிறது.. பாராட்டு, ரசனையெல்லாம் கவிஞனுக்கு டானிக் ஆயிற்றே!

   Like

   1. கண்டிப்பாக!! பாராட்டு ரசனை எல்லாம் ரொம்பப் பெரிய டானிக் கவிஞனுக்கும் எல்லா கலைஞருக்கும் ஏன் எல்லாருக்குமே என்றும் கூடச் சொல்லலாமோ….சமையல் செய்து ஒரு டிஷ் பரிமாறும் போது அதை ரசித்துச் சுவைத்துப் பாராட்டி சாப்பிடுவது என்பதும்..

    ஆ!! இங்கும் திங்க வந்துருச்சா என்று ஏகாந்தன் சகோ மைன்ட் வாய்ஸ் சொல்லுகிறது!!! ஹா ஹா ஹா

    கீதா

    Liked by 1 person

 4. ஹா ஹா ஹா சுண்டெலி என்றதும்தான் ஓடோடி வந்தேன்ன்.. சே..சே.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:))

  Liked by 1 person

  1. @அதிரா: சுண்டெலி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என இப்போது தெரிந்திருக்கும்!

   Liked by 1 person

 5. சொல்ல வந்ததை சுருக்கமா, தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.
  ‘சுண்டெலியின் எண்ணெய்க் கண்’ – நல்ல வரிகள். ‘விருது பல கொடுக்கப்பட்ட’ என்று சொல்லாமல் ‘விருதுகள் வாங்கிய’ என்ற வார்த்தைகளையும் கவனித்துக்கொண்டேன்.

  Liked by 1 person

  1. @ நெல்லைத்தமிழன்:
   சரியாகத்தான் கவனித்திருக்கிறீர்கள்!

   Like

 6. துளசி: எப்படி எல்லாம் கவிதைகள் அதுவும் வர்ணனையுடன் வருகின்றன! அருமை! சுண்டெலிக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

  கீதா: ஹை! சுண்டெலி நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறது !!!!! பாராட்டுகளையும் சொல்லி மேடையேற்றி விடுவோம்!!! விருது லிஸ்டைச் சொன்னால் நாங்களும் சந்தோஷப்படுவோம்!! யானையும் அழகு! சுண்டெலியும் அழகுதான்!!! வர்ணனை சூப்பர்! (அன்று போட்டு கமென்ட் போகாமல் இன்று வேர்டில் அப்படியே இருந்ததை எடுத்து இங்குப் போட்டாச்சு!!! இப்பல்லாம் கமென்ட்களை வேர்டில் சேர்த்து வைத்து விடுகிறேன். பல பதிவுகளுக்குக் கமென்ட் போவது தாமதம் அல்லது போவதில்லை…எனவே..பெண்டிங்க் என்று சேர்த்து வைத்துவிட்டு அப்புறம் வரும் போது போடுவதும் வழக்கமாகி வருகிறது!!!)

  Liked by 1 person

  1. @துளசி: வாங்க சார்! என்ன செய்வது? மனிதர்களே விருது வாங்கிக்கொண்டிருந்தால் போதுமா? சுண்டெலியும் தன் திறமையைக்காண்பிக்கவேண்டாமா?

   @கீதா: பாராட்டு எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்தான். விதவிதமாய் சமைத்துப்போடும் அம்மாக்களையும், மனைவிகளையும், மற்ற உறவுப்பெண்களையும்புகழாது, ஏதோ கடமைபோல் வயிற்றை மற்றும் ரொப்பிக்கொண்டு காலட்சேபம் செய்யும் ஆண்கள் அதிகம் -அடியேனுடைய பெயரும் இந்த ப்ளாக்- லிஸ்ட்டில் இருப்பதைக் கவனிக்கிறேன்! இனியாவது திருந்தவேண்டும். மெச்சத்தகுந்த காரியங்களை, செய்தவர்களை தாமதிக்காது இரண்டு சொல் சொல்லியாவது பாராட்டிவிடவேண்டும்.
   புகழ்ச்சி – குறிப்பாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற கலைஞர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தி உசுப்பேற்றிவிடுகிறது. ரசனையும் கைதட்டலும்தானே ஒரு கலைஞனுக்கு உண்மையான விருது?

   Like

 7. //சுண்டெலி சமூகத்தில் விருதுபல வாங்கிய பெருங்கவிஞன் இது என சேதி ஒன்று காதுக்கு எட்டியிருக்கிறது.// ஆஹா! :))))) பொந்தை விட்டு வெளியே வந்து தானே ஆகணும்!

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s