முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான கந்தர்வனின் கதை ஒன்றைப் பார்க்குமுன், படைப்பாளிபற்றி சிறு குறிப்பு.
கந்தர்வன் (படம்: இணையம். நன்றி)
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரின் இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் உயர்பதவியில் இருந்ததோடு, தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றெல்லாம் இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன் படைப்புத்திறனை சிதைத்துவிடாமல் பார்த்துக்கொண்டவர் கந்தர்வன். அழகான கலைப்படைப்புகள் மூலம் தன்னைத் தமிழின் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஒருவர் என நிலைநாட்டிக்கொண்டவர் என்பதே நாம் நாடுவது . ’மைதானத்து மரங்கள்’ எனும் இவரது உருக்கமான சிறுகதை ஜெயகாந்தனால் ‘இலக்கிய சிந்தனை’ விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது எனில், இவரது எழுத்தின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.
கண்ணதாசனால் நடத்தப்பட்ட இலக்கிய இதழான ‘கண்ணதாச’னில் இலக்கிய விமரிசனம் எழுதியதன்மூலம் தமிழ் இலக்கிய உலகில் மெல்லப் பிரவேசித்தவர். பின்னர், சிறுகதைகள், கவிதைகள் எனத் தன் படைப்பாற்றலைப் பரவலாக்கி வெளிப்படுத்திய ஆளுமை. சுபமங்களா, தாமரை போன்ற சிற்றிதழ்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் கலைநுட்பமானவை. மனித உணர்வுகளை ஆழத்தில் சென்று தரிசிப்பவை. 1999-ல் குமுதத்தில் வந்திருந்த கந்தர்வனின் ஒரு சிறுகதையை பஸ்ஸுக்காகக் காத்திருந்த தருணத்தில் படித்த அனுபவத்தை, ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார் :’’நான் ஊருக்கு வந்ததுமே குமுதத்துக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதி, அக்கதை ஒரு சாதனை என்று சொன்னேன். என் நண்பரும் வாசகருமான ஒருவருக்கு எழுதிக் குமுதத்திலும் விகடனிலும் கந்தர்வன் எழுதிய எல்லாக் கதைகளையும் எடுத்துத் தரச் சொன்னேன். பல கதைகளில் தமிழின் பெரும் கதைசொல்லி ஒருவரைக் கண்டுகொண்டேன்.’’ மேலும் சொல்கிறார் ஜெயமோகன்: ‘’கந்தர்வனின் கடைசிக்காலம் என்பது உச்சகட்ட படைப்பூக்கம் வெளிப்பட்ட தருணம். அத்தகைய ஒரு மலர்ச்சியை வாழ்நாளின் இறுதியில் அடைந்த கலைஞர்கள் தமிழில் குறைவே.’’ புதுக்கோட்டை மாவட்டத்தின், காலப்போக்கில் வரட்சிகண்ட நிலப்பரப்பும், விவசாயம் செய்யமுடியாமல் தடுமாறும் விவசாயிகளின் துன்பமிகு வாழ்வும் அவரது கடைசிக் கதைகளின் களமாக அமைந்திருக்கின்றது.
கந்தர்வன் ஒரு கவிஞரும் கூட. திறமையான மேடைப்பேச்சாளருமாகவும் செயல்பட்டிருக்கிறார். மக்களோடு தன் நேரடி உரையாடலுக்குக் கவிதையைப் பயன்படுத்தியவர். கந்தர்வனின் சிறுகதைகளில் காணப்பட்ட கலானுபவம், கவிதைகளில் இல்லையே எனும் விமரிசனம் வந்தபோது , அதை ஒத்துக்கொண்டு இப்படிக் கூறியிருக்கிறார் கந்தர்வன்: “எனக்கு அது வேற, இது வேற. கவிதை நேரடியா களத்துல, ஜனங்களோட பேசுறதுக்கு. கோவிலுக்குப் போனா சிங்காரிச்சிட்டு போகலாம். சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்கமுடியுமா?’’
புழங்குமொழியில், நேரடி சொல்லாடலில் கவிதை சொன்ன கந்தர்வன், கேட்கும் சராசரி மனிதர்களைச் சிந்திக்கவைத்தார்; சீண்டியிருக்கிறார்; சிரிக்கவும்வைத்திருக்கிறார் என்பது கீழ்க்காணும் கவிதை வரிகளில் தெரிகிறது:
சமூகத்தில் சாதாரணப் பெண்களின் வாழ்வு நெருக்கடிகள்கொண்டது; ஓய்வில்லாதது என்பதை
நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை
-என சொல்லிச் சென்றார்.
**
தமிழ்ச்சமூகத்தைப் பார்த்து எக்கச்சக்கமாக ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்:
விதவிதமாய் மீசை வைத்தாய் – உன்
வீரத்தை எங்கே தொலைத்துவிட்டாய் ?
**
அரசியலில் புரையோடிப்போய்விட்ட ஊழலை, அந்தக் காலத்திலேயே கிண்டல் செய்தார் கந்தர்வன் :
எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார்.
எம்.பி.சட்டையில் பல பை வைத்தார்.
மந்திரி, பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார்
**
தன் வாழ்நாளில் சாரமான ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டார் கந்தர்வன். ஆனால், அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில் உடல்நலம் குன்றியிருந்தார். நாவல் ஆசை நிறைவேறாமல், 2004 ஆம் வருடம் தன் அறுபதாவது வயதில், சென்னையில் மகள் வீட்டில் மறைந்தார். வெளியாகியிருக்கும் கந்தர்வனின் படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
சாசனம், பூவுக்குக் கீழே, அப்பாவும் மகனும், கொம்பன், ’ஒவ்வொரு கல்லாய்’ மற்றும் ’கந்தர்வன் சிறுகதைகள்’ எனும் நூல்(வம்சி புக்ஸ் வெளியீடு)
கவிதை நூல்கள் :
மீசைகள், சிறைகள், கிழிசல்கள், ’கந்தர்வன் கவிதைகள்’ (அன்னம் வெளியீடு)
**
பெயர் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இவர் எழுத்து வாசித்ததில்லை. இவர் பற்றிய விவரங்கள் இன்று இங்கு உங்கள் தளம் மூலமே அறிந்து கொள்கிறேன். கவிதையின் எள்ளல் மனதில் நுழைந்தது.
LikeLiked by 1 person
@ ஸ்ரீராம்:
இணையத்தில்தான் நானும் படித்தேன், முன்பே கேள்விப்பட்டிருந்தும் .
இடதுசாரி இயக்கமும், அலுவலகமும் இவரது நேரத்தை உறிஞ்சிவிட்டதுபோலும். இல்லையேல் இன்னும் நிறைய
படைப்புகள் இவரிடமிருந்து வந்திருக்கும்.
LikeLike
புதுக்கோட்டை இலக்கிய கூட்டங்களில் கந்தர்வனின் பெயர் அடிக்கடி சொல்லப்படும். ஆனால், நான் கந்தர்வன் எழுத்துகள் எதுவும் வாசித்ததில்லை. எனவே அவரைப் பற்றிய பதிவு என்றதும், அவரைப் பற்றி அறிந்து கொள்ள, இப்பதிவை முழுவதும் பொறுமையாக படித்தேன். அவரைப் பற்றிய உங்கள் பார்வை, அவரது எழுத்துகளை வாசிக்கச் சொல்கிறது. நன்றி.
LikeLiked by 1 person
@தமிழ் இளங்கோ:
வருகைக்கு நன்றி. இலக்கிய வாசகர்கள் பாராட்டும் அருமையான சிறுகதைகள் எழுதியவர் கந்தர்வன். அடுத்த பதிவில் ஒரு கதைபற்றி எழுதுகிறேன்
LikeLike
கந்தர்வன் அவர்களின் பிறந்த ஊர் சிக்கல் என்பதை இன்றே அறிந்தேன். எனது தாத்தாவின் ஊரிலிருந்து 5 கி.மீ. சிக்கல்
LikeLiked by 1 person
கந்தர்வனைப் பற்றி அறிந்திருந்தபோதிலும் தங்கள் பதிவு மூலமாக நிறைய செய்திகளை அறிந்தேன்.
LikeLiked by 1 person
நாகைக்கு அருகே உள்ள சிக்கில், இங்கே சிக்கலா? கந்தர்வன் குறித்து அறிந்திருக்கிறேன். ஆனால் அதிகம் படித்ததில்லை. அரசு அதிகாரியாக இருந்து கொண்டு அவரால் எப்படி இடதுசாரியாகவும், எழுத்தாளராகவும் இருக்க முடிந்தது என்பதும் வியப்பே!
LikeLiked by 1 person
@Geetha Sambasivam :
சிக்கல் என்றுதான் கில்லர்ஜியும் மேலே குறிப்பிட்டிருக்கிறாரே. கந்தர்வன் ஒரு நல்ல கதை சொல்லி. பார்ப்போம் அடுத்த பதிவில்.
LikeLike
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! புத்தாண்டில் உங்கள் வழியாக இன்னும் பல அறிமுகங்களிந் படைப்புகளை வாசிக்க ஆவலுடன் இருப்பதால் அறிமுகப்படலம் தொடர்ந்திடட்டும்! வாழ்த்துகள் !!!
கந்தர்வன் எனும் பெயர் பரிச்சயமாகத் தெரிகிறது ஆனால் இவரது படைப்புகளை வாசித்ததுமில்லை….இவரைப் பற்றி வேறு எதுவும் அறிந்ததுமில்லை. இப்போது உங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொண்டோம்..
நல்ல அறிமுகம் இதோ மைதானத்து மரங்கள் சுட்டி எடுத்துவிட்டென்…வாசித்துவிட்டு வருகிறேன்…
கீதா
LikeLiked by 1 person
@ கீதா:
இலக்கியரீதியாக, குறிப்பிடத்தகுந்த படைப்பாளியாகத் தேர்ந்துதான் ஒவ்வொன்றாகப் பதிவிடுகிறேன். கூடவே சில படைப்புகளை நானும் படித்துவிடுகிறேன். மேலும் வரும் .
LikeLike
வாசித்துவிட்டேன். மைதானத்து மரங்களை…..அருமை…மரங்கள் எத்தனை எழுத்தாளருக்குத் துணை போயிருக்கின்றன இல்லையா…எழுதுவதற்கு..அதுவும் அவற்றோடு கலந்த உணர்வுகளோடு…
.நானும் வெட்டுப்படப் போகும் ஒரு மரம் தன் கீழ் தான் பார்க்கும் தன்னோடு உறவாடும் மக்களைப் பற்றிக் கதைப்பதாக, அங்கு பேசப்படும் வம்பு உட்பட எழுதி முடிக்காமல்..வைத்திருக்கிறேன்..முடிவு காப்பாற்றப்பட்டதா இல்லையா என்பதை இரு விதமாகவும் யோசித்து வைத்திருந்தேன்…அப்புறம் அந்த ஃப்ளோ போனதால் விட்டு வைத்திருந்தேன்… .அரசமரம் என்று தான் எழுதியிருந்தேன்..குளத்தங்கரை அரசமரம் பார்த்ததும் மாற்றணும் என்று நினைத்தேன்….அப்புறம் சுந்தரம் ராமசாமியின் முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை இன்னும் முழுவதும் வாசிக்கவில்லை ஆனால் அதன் சினாப்ஸிஸ் பார்த்ததும் என் கதையை ட்ராஃப்ட் ஃபோல்டருக்குள் போட்டாச்சு ஹா ஹா ஹா ஹா…
மிக்க நன்றி சகோ நல்ல நல்ல கதைகளை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு…
கீதா
LikeLiked by 1 person
@கீதா:
நான் எழுதுவதற்கு முன்னேயே போய் படித்துவிட்டீர்கள் கதையை. நல்லது.
உங்களிடமும் மரங்களின் கதை உட்கார்ந்திருக்கிறது. எப்போது எப்படி வரும் எனப்பார்க்கலாம்!
மரங்கள் நம்மை வாழ்க்கை முழுதும் பார்த்தவாறே இருக்கின்றன எனத் தோன்றும். நாம்தான் வழக்கம்போல் , கால்கள் எங்கோ நடக்க, கண்கள் எங்கோ பார்க்க, மனம் வேறெங்கோ சஞ்சரிக்க – ஒருவிதமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!
LikeLike