கு. அழகிரிசாமி – எழுத்தே வாழ்க்கை

தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான கு.அழகிரிசாமியின் சிறுகதையைப் பார்ப்பதற்கு முன்னால், அவரைப்பற்றிக் கொஞ்சம் அறிவோம்.

இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதிய ஆளுமையாகக் கருதப்படும் அவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகே இடைசெவல் எனும் கிராமத்தில் பிறந்தவர். எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன் போன்றோரின் சமகாலத்தவர். அழகிரிசாமியின் வீட்டில் தெலுங்கு பேசினார்கள். ஆனால் தமிழில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு படிக்கலானார் அவர். கஷ்டப்பட்டு பள்ளி இறுதிவரைதான் படிக்கமுடிந்தது. 1943-ல், இருபதாவது வயதில் அவரது முதல் சிறுகதை ’உறக்கம் கொள்ளுமா’, ஆனந்தபோதினி என்கிற இதழில் வெளிவந்தது. அவரது முதல் சிறுகதைத் தொகுதி 1952-ல் கல்கியின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டு, அழகிரிசாமியை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

தான் பார்த்துவந்த அரசாங்க உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு முழுநேர எழுத்துவாழ்க்கையில் மனம் செலுத்தினார் அழகிரிசாமி. ஆரம்பத்தில் பிரசண்ட விகடன், பின்னர் தமிழ்மணி, சக்தி ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்துகொண்டு, தன் புனைவுகளை வரைய ஆரம்பித்தார். புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன் போன்ற எழுத்தாளர்கள் இவரது கதைகளைப் படித்துவிட்டு சிலாகித்துப் பேசினார்கள். 1953-57 காலகட்டத்தில் மலேஷியாவில் ’தமிழ்நேசன்’ நாளிதழில் பணியாற்றியபோது அருமையான சிறுகதைகளை எழுதினார் அழகிரிசாமி. தன் பணியில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த தலையீடுகளைக் காரணம் காட்டி இந்தியா திரும்பியவருக்கு ’நவசக்தி’ நாளிதழில் 1965 வரை பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

நண்பர்களுக்கு நீண்ட, செறிவான கடிதங்கள் எழுதுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார் அழகிரிசாமி. எழுத்தாளர்கள் சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோருடன் கடிதத்தொடர்பில் இருந்தார். எழுத்தாளர் வட்டத்தில் ரசிக்கப்பட்ட இவரது கடிதங்களைத் தொகுத்து ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ எனும் புத்தகமாக கி.ராஜநாராயணன் (கி.ரா.) வெளியிட்டுள்ளார். உலக இலக்கியங்களை ஆர்வமுடன் வாசித்தவர் அழகிரிசாமி. ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் (Maxim Gorky) எழுத்து இவரை மிகவும் கவர்ந்தது. மாக்ஸிம் கார்க்கியை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்தவர் கு.அழகிரிசாமிதான்.

1970-ல் சோவியத் சோஷலிசக் குடியரசு என அப்போது அழைக்கப்பட்ட ரஷ்ய தூதரகத்தின் கலாச்சாரப்பிரிவு வெளியிட்டுவந்த தமிழ் மாதாந்திரியான ’சோவியத் நாடு’ இதழில் பணியில் சேர்ந்தார். ஆனால் வெகுகாலம் நீடிக்கமுடியவில்லை. உடல் நலக்குறைவு காரணமாகத் தன் 47-ஆவது வயதில், 1970-ஆம் வருடம் காலமானார் அழகிரிசாமி. 1940-70 எனும் முப்பதாண்டு காலத்தில் அவருடைய சுமார் 101 சிறுகதைகள் பிரசுரிக்கப்பட்டன. அவருடைய ‘ராஜா வந்திருக்கிறார்’ எனும் சிறுகதை ரஷ்ய மொழி உட்பட்ட பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அவருடைய காலத்தில் எழுதிய எழுத்தாளர்களைப்போலல்லாமல், கு.அழகிரிசாமியின் கதைகள் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், அனுபவங்கள் போன்றவற்றைக் கருவாகக் கொண்டு எளிய மொழிநடையில் அமைக்கப்பட்டவை. கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனத் தீவிரமாக வாழ்வில் இயங்கியவர் அவர். குழந்தைகளின் அகஉலகை அழகிரிசாமி அவதானித்திருப்பது அவரது சில குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள் மூலமாக வெளிப்படுகிறது. (தெய்வம் பிறந்தது, ராஜா வந்திருக்கிறார், குமாரபுரம் ஸ்டேஷன், அன்பளிப்பு, தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு போன்றவை.) குழந்தைகள் உலகத்தின் ஆசைகள், ஏக்கங்கள் போன்ற உணர்வுகளை நுட்பமாக எழுத்தில் வெளிக்கொணர்ந்தவர் அவர். ’அன்பளிப்பு’ என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக சாஹித்ய அகாடமி கு.அழகிரிசாமிக்கு 1970-ல், அவரது மறைவுக்குப்பின், விருது வழங்கி கௌரவித்தது. கு.அழகிரிசாமியின் படைப்புகள் சில:

நாவல்கள்: டாக்டர் அனுராதா, தீராத விளையாட்டு, ’புதுவீடு புது உலகம்’, வாழ்க்கைப் பாதை

சிறுகதைத் தொகுப்புகள்: அன்பளிப்பு, சிரிக்கவில்லை, கவியும் காதலும், செவிசாய்க்க ஒருவன், துறவு போன்றவை.

நாடகங்கள்: வஞ்சமகள், கவிச்சக்ரவர்த்தி

கட்டுரை நூல்கள்: தமிழ் தந்த கவியின்பம், இலக்கியத் தேன்.

மொழிபெயர்ப்பு நூல்கள்: மாக்சிம் கார்க்கியின் நூல்கள், லெனினுடன் சில நாட்கள், அமெரிக்காவிலே, யுத்தம் வேண்டும் .

சிறுவர் நூல்கள்: மூன்று பிள்ளைகள், காளி வரம்.

அடுத்த பதிவாக கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ சிறுகதையைப் பார்க்கலாம்.

**

6 thoughts on “கு. அழகிரிசாமி – எழுத்தே வாழ்க்கை

    1. @ஸ்ரீராம்:

      நானும் சமீபத்தில் தான் இவரைப் படித்தேன்- ரொம்பநாட்களாகக் கேள்விப்பட்டிருந்தும்.

      Like

  1. இடைசெவல் கி ராஜநாராயணன் ஊருமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில்பட்டிக்கு அருகில் உள்ளவூர். தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த ஊர்.

    P Vinayagam

    Liked by 1 person

  2. @P Vinayagam :

    இடைசெவல் என்றாலே கி.ரா.தான் நினைவுக்கு வரும். அவரைப்பற்றிப் படிக்கையில்தான் இந்தக் கிராமத்தின் பெயரை அறிந்தேன். நான் பார்த்தகுறிப்புகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் இடைசெவல் என இருந்தது. 1985-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் இது வந்திருக்கிறது. திருத்திவிட்டேன். மேல்விபரத்திற்கும் நன்றி.

    Like

  3. அழகிரிசாமி வாசித்ததில்லை எங்கொ பெயர் கேள்விப்பட்டது போல் உள்ளது ஆனால் இப்பதிவின் மூலம் தான் அறிகிறேன். விபரங்களை. இடைச்சேவல் முன்பு திருனெல்வேலியில்தான் இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் என்றானபிறகு அதில் எல்லைக்குள் வந்துவிட்டது. 86 ல் தான் தூத்துக்குடி பிரிக்கப்பட்டது.

    நல்ல அறிமுகம். கதைகள் வாசிக்க வேண்டும். என் கணினி ஒத்துழைக்க வேண்டும். கொஞ்சம் மெதுவாகத்தான் எல்லாம் வாசிக்க முடிகிறது…..

    கீதா

    Liked by 1 person

  4. @ கீதா:
    இணையம் இருக்கிறது-அதனால் இலக்கிய வாசகர்கள் பிழைத்தோம்.
    நல்ல எழுத்தாளர்களைத் தேடி, வாங்கிப் படிப்பது எப்போதுமே ஆகக்கூடிய விஷயமல்ல. கிடைத்தவரைப் படித்து மகிழ்வோம்.

    Like

Leave a comment