வ.வே.சு. ஐயர் – சுதந்திர வேட்கையும், மொழிப்பற்றும்

தமிழ் இலக்கியவாதியும், சுதந்திரப் போராட்டவீரருமான வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை அதிரடியானது.திருப்பங்கள் பல நிறைந்தது. சிறுகதை வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பார்வையில் முழுமையாக, உரைநடையில் தமிழின் முதல் சிறுகதை எனப் பிற்காலத்தில் கருதப்பட்ட ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் படைப்பினை அளித்த படைப்பாளி இவர். அதற்கு முன்னரெல்லாம்- 19-ஆம் நூற்றாண்டுவரைகூட, தமிழின் எழுத்து மொழியே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.உரைநடை வடிவம் தலையெடுக்க ஆரம்பித்த, ஆனால் ரசிக்கப்படாத, பெரிதாக அங்கீகரிக்கப்படாத காலம்.

இவரின் முழுப்பெயர் வரகநேரி வேங்கட சுப்ரமணிய ஐயர். திருச்சிக்கருகில் உள்ளது வரகநேரி. நல்ல, வசதியான குடும்பத்தில் 2.4.1881-ல் பிறந்தவர். மாணவப்பருவத்தில் படிப்பில் புலி. திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் பாடங்களில் பி.ஏ.பட்டம் பெற்றவர். தன் 16-ஆம் வயதில் பட்டப்படிப்பில் சென்னை மாகாணத்திலேயே முதலாம் இடத்தில் தேர்ச்சிபெற்றார். சட்டவியலில் ஆர்வம்கொண்டு Pleader என்கிற ஜூனியர் வழக்கறிஞர் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துத் தேறினார். பர்மா சென்று சட்டப்பயிற்சி மேற்கொண்டு,. பின் Barrister at Law சட்டமேற்படிப்புக்கென லண்டன் சென்றார் ஐயர். அந்தக் காலத்திலேயே கப்பல்மூலம் இங்கிலாந்து சென்று பார்-அட்-லா படித்துத் தாய்நாடு திரும்பியவர். அந்த வகையிலேயேகூட ஒரு சாதனையாளர்தான் இவர். லண்டனில் சட்டப்படிப்பின்போது, இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த இந்திய விடுதலைப்போராளி வீர சாவர்க்கரை சந்தித்துப் பழகினார். (வீர சாவர்க்கர்தான் ’ஹிந்துத்வா’ என்கிற வார்த்தையை முதன்முதலில் இந்தியர்களுக்கு அளித்தவர். ஹிந்துத்வா என்பது ‘இந்தியம்’ என்கிற அர்த்தத்தில், ஹிந்துஸ்தான் என்கிற மாபெரும் நாட்டை, இந்திய சமூகத்தை முழுதுமாகக் குறிப்பது, ’இந்துமதத்தை அல்ல’ எனத் தெளிவுபடுத்தியிருந்தார் சாவர்க்கர்). வேறுசில இந்திய சுதங்கிரப் போராட்டக்காரர்களும் ’இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கிவந்ததைக் கண்டு அவர்களுடன் ஐயர் சேர்ந்துகொண்டார். இந்திய சுதந்திரம் ஒன்றே லட்சியம் என்கின்ற தீராக்கனல் அவரது இளம் மனதில் பற்றிக்கொண்டது. மகாகவி பாரதியினால் பாண்டிச்சேரியிலிருந்து நடத்தப்பட்ட ‘இந்தியன்’ பத்திரிக்கைக்கு, வாசகர்களிடையே இந்திய சுதந்திர தாகத்தை பீறிட்டெழச்செய்யும் வகையில், ‘லண்டனிலிருந்து கடிதம்’ என்கிற தலைப்பில் நெருப்புக்கட்டுரைகளை அனுப்பிவைத்தார் ஐயர்.

படிப்பையும் விட்டுவிடாது முழுகவனம் செலுத்திய ஐயர், பார்-அட்-லா இறுதித்தேர்வில் வென்றார். ஆனால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு கண்டிஷன் வைத்திருந்தது. இந்தியர் ஒருவர் இங்கிலாந்தில் பட்டம் பெறுமுன்பு, இங்கிலாந்து ராணிக்கு அதாவது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு விசுவாசமாகக் கடைசிவரை இருப்பேன் என உறுதிமொழி மேற்கொள்ளவேண்டும். அதற்குப் பின்தான் வழங்கப்படும் பட்டம். வ.வே.சு ஐயர் பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். பட்டம் கிடையாது உனக்கு என்று உறுமியது பிரிட்டிஷ் அரசாங்கம். அவசியமில்லை என்றார் ஐயர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெகுவாகச் சினந்தது. ராணிக்கு விசுவாச மறுப்பு செய்த இவன் யார் – யாரிந்த V.V.S.ஐயர் என பிரிட்டிஷ் உளவுத்துறை நோட்டம்விட்டது. ஐயரை இங்கிலாந்திலேயே அமுக்கி அழித்துவிடத்திட்டமிட்டு, ரகசிய அரெஸ்ட் வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. இது சாவர்க்கர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்டக்காரர்களின் கவனத்துக்கு வந்ததும் அவர்கள் திடுக்கிட்டார்கள். வ.வே.சு. ஐயர் உடனேயே இங்கிலாந்திலிருந்து தப்பித்து இந்தியாவுக்குப் போய்விடவேண்டும் என முடிவெடுத்தார்கள். ஐயர் ஒரு சீக்கியராக வேடமணிந்து கடல் மார்க்கமாக ஃப்ரான்ஸுக்குத் தப்பிச் சென்றார். அங்கே தேடிய பிரிட்டிஷ் உளவாளிகளிடம் தான் விக்ரம் சிங் என்கிற சர்தார்ஜி எனப் போக்குகாட்டித் தப்பித்து வெளியேறினார். சாகஸங்கள் நிறைந்த கப்பல்பயணத்தில் துருக்கி, சிலோன் வழியாகப் பயணித்து பல மாதங்கள் கழித்து 1910 அக்டோபரில், இந்திய ஃப்ரெஞ்சுப் பிரதேசமான பாண்டிச்சேரியை (தற்போதைய புதுச்சேரி) வந்தடைந்தார் வ.வே.சு. ஐயர்.

பாண்டிச்சேரியில் அவர் மகாகவி சுப்ரமணிய பாரதியையும், ஸ்ரீஅரவிந்தரையும் சந்தித்து அளவளாவினார். மேலும் நீலகண்ட பிரம்மச்சாரி, மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், வ.ரா. போன்ற சுதந்திரப் போராட்டக்காரர்களையும் ஐயர் சந்தித்தார். அவர் மனதில் சுதந்திரக் கனல் கொழுந்துவிட்டு எரிந்தது. தனது நண்பரான பாரதியின் ‘இந்தியன்’ பத்திரிக்கைக்கு தொடர்ந்து, ஆக்ரோஷமான விடுதலை வேட்கைக் கட்டுரைகளை பொரிந்து தள்ளினார் வ.வே.சு ஐயர்.

இந்திய நாட்டின் தர்மம், நல்வாழ்வைக் குலைக்கும் வெள்ளைக்காரர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனத் தீவிரத் திட்டங்களை வைத்திருந்தனர் ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரி-வாழ் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள். இதன் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கெதிராக, இந்தியப் புரட்சியாளர்களை அடையாளம் கண்டு தீவிரமாக அவர்களை ஊக்கப்படுத்தினார் வ.வே.சு ஐயர். சிலம்பம், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் தேர்ந்திருந்த ஐயர், அத்தகைய இளைஞர்களை தர்மாலயம் என்கிற இல்லத்திற்கு வரவழைத்துப் பயிற்சி தந்தார். அப்படி வந்து அவரிடம் சேர்ந்தவர்தான் சுதந்திரப்போராட்டத் தியாகியான வாஞ்சிநாதன் என்கிற இளைஞர் (இயற்பெயர் சங்கர ஐயர்). திருநெல்வேலி ஜில்லாவின் பிரிட்டிஷ் அதிகாரியான கலெக்டர் ராபர்ட் ஆஷ் என்பவரைத் தீர்த்துக்கட்ட வாஞ்சிநாதனுக்குக் கோடுபோட்டுக்கொடுத்தவர் வ.வே.சு.ஐயர். வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளித்ததோடு, ஃப்ரெஞ்ச் துப்பாக்கி ஒன்றையும் ஐயர் அளித்தார். ( இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களின் தீவிரத் திட்டத்தின்படி, பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரியான ராபர்ட் ஆஷை, வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில்சந்திப்பில், நின்றுகொண்டிருந்த ரயிலுக்குள்ளேயே போய் சுட்டுக்கொன்றார். கொன்றபின், பிரிட்டிஷாரிடம் தானும் பிடிபட்டு, தன் சகாக்களும் வலைக்கப்பட்டால் திட்டங்கள் பாழாய்ப்போகுமே என நினைத்து, அதனைத் தவிர்க்க, அவ்விடத்திலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார் வாஞ்சிநாதன்). ஆஷின் கொலைக் கேசில், வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதி ஆகியோர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வலுவான சந்தேகத்திற்குள்ளாகினர். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், ப்ரெஞ்ச் காலனி ஆட்சிப்பகுதியில் வாழ்ந்ததாலும் அவர்களை ஏதும் செய்யமுடியவில்லை. 1914-ல் உலக மகாயுத்தம் ஆரம்பித்தபோது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இலக்குகளை ஜெர்மனி வெறிகொண்டு தாக்கியது. ஜெர்மனியின் போர்க்கப்பலான SMS Emden (எம்டன்), வங்காள விரிகுடாவினில் அதிரடியாக நுழைந்து, பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்த மதராஸ் துறைமுகத்தின்மீது குண்டுமாரி பொழிந்தது. பிரிட்டிஷ்-இந்திய அரசாங்கம் கிடுகிடுத்தது. ஜெர்மனியின் இந்தத் திடீர் தாக்குதலுக்கு, பாண்டிச்சேரியிலிருந்து இயங்கும் இந்திய சதிகாரர்களே உடந்தையாகினர் என்றது பிரிட்டிஷ் அரசாங்கம்!

பிரிட்டிஷ் ஏகாபத்திய அரசு, ப்ரெஞ்சுக் காலனி ஆட்சியாளருக்கு கடிதம் எழுதி, வ.வே.சு. ஐயர் போன்ற நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இந்தியத் தீவிரவாதிகளை அல்ஜீரியா (ஆஃப்ரிக்கா)-வுக்கு உடனே நாடுகடத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. ப்ரெஞ்ச் கவர்னர் அந்தக் கோரிக்கையை ஏற்றால் தான் நாடு கடத்தப்படுவோம் – தன் கதை அந்தோ என்றாகிவிடும் எனச் சந்தேகித்த வ.வே.சு.ஐயர், தன் வாழ்வு அல்பமாக முடியுமுன், தாய்நாட்டிற்காகவும், பெரும்பாரம்பர்யம் மிக்க, தன் மொழியான தமிழுக்காகவும், உருப்படியாக ஏதேனும் செய்துவிட்டே இந்தியாவிலிருந்து அகலவேண்டும் என மனதில் சங்கல்பம் எடுத்துக்கொண்டார். பிரிட்டிஷ் உளவாளிகளால் ஐயருக்கும் அவரது மனைவி பாக்யலக்ஷ்மிக்கும்கூட பாண்டிச்சேரியில் தொல்லை அதிகமாகி வந்தது. நெருக்கடியும், மன உளைச்சலும் மிகுந்த இக்காலகட்டத்தில் இந்திய சுதந்திரம், தமிழ்மொழி என மனதில் தடதடத்துக்கொண்டிருந்த வ.வே.சு ஐயர், திருக்குறளின் சிறப்பினை வெளிஉலகுக்கு உணர்த்தவேண்டி, இரவு பகலாக உழைத்து, குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதினார். நல்லகாலமாக, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர், பிரிட்டிஷ் அர்சாங்கத்தின் நாடுகடத்தல் கோரிக்கையை ஏற்கவில்லை.
தென்னாட்டுக்கு வந்திருந்த மகாத்மா காந்தியை ஐயர் சந்திக்க நேர்ந்தது. உணர்வுமிகு சந்திப்பின்போது காந்தியின் பேச்சில், அஹிம்சாவாதத்தால் ஈர்க்கப்பட்டு மனம் மாறினார் வ.வே.சு. ஐயர். காந்தியிடம் தன் கைத்துப்பாக்கியை சரணளித்துவிட்டு, வன்முறை எண்ணத்தைத் தவிர்த்து அஹிம்சாவாதப் போராட்டக்காரர் ஆனார். கொஞ்சகாலத்தில் முதல் உலக மகாயுத்தமும் முடிவுக்குவர 1920-ஆம் ஆண்டு, பாண்டிச்சேரியில் வாழ்ந்த இந்தியப் புரட்சியாளர்கள் உட்பட பலருக்கு பிரிட்டிஷ் ஏகாபதித்யம் பொது மன்னிப்பு வழங்கியது. வ.வே.சுவும் அதில் ஒருவர். 14 ஆண்டுகள் அஞ்ஞாதவாசத்துக்குப்பின் சொந்த ஊரான திருச்சி-வரகநேரிக்குத் திரும்பினார் ஐயர்.

எந்தவகையிலாவது இந்திய சுதந்திரத்துக்காகப் பணியாற்றியே தீருவது என மனத்திண்மை கொண்டிருந்த ஐயர் அதே ஆண்டில் சென்னையில் ’தேசபக்தன்’ என்கிற பத்திரிக்கைக்கு ஆசிரியரானார். இந்திய இளைஞர்களை, தேசபக்தர்களை சுதந்திரப்போராட்டம், தேசத்திற்கான தியாக வாழ்வு என உத்வேகம் தரும் கட்டுரைகளை வாசகர்களுக்கென எழுதினார். இது பிரிட்டிஷ் அரசாங்கம் கோபத்துக்கு ஐயரை மீண்டும் உள்ளாக்கியது. தேசத்துரோகக் குற்றம் சாட்டி, வ.வே.சு.ஐயரைக் கைது செய்து பெல்லாரி சிறையில் அடைத்தது. ஒன்பது மாதங்கள் சிறைவாசமிருந்தார் ஐயர். ஆயினும் காலத்தை வீணடிக்கவில்லை. இந்த சிறைவாசத்தின்போது, ராமாயண காவியத்தின் புகழை இந்தியாவைத் தாண்டியும் பரப்பவேண்டி, ‘A Study of Kamba Ramayana’ எனும் கம்பராமாயண ஆய்வுநூலை ஆங்கிலத்தில் எழுதினார் அவர். ஆங்கிலத்தோடு, கிரேக்கம், ஃப்ரெஞ்சு, லத்தீன் மொழிகளிலும் தேர்ச்சிபெற்றிருந்த வ.வே.சு. ஐயர், அந்த மொழிகளின் காவியப் பாத்திரங்களோடு, ராமாயண காவியத்தின் பாத்திரங்களை ஒப்பாய்வு செய்து, மிகச்சிறப்பாக வடித்திருந்தார் இந்த நூலை. ஆனால், 1950-ல்தான் அச்சாகி புத்தகமாக வெளிவந்தது ஐயரின் நூல்.

பெல்லாரியிலிருந்து விடுதலையாகி சிலமாதங்கள் கழிந்தபின், 1921-ல் வேறொரு குற்றச்சாட்டில், வ.வே.சு. ஐயரை பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்தது. அப்போது மகாகவி பாரதி, மதராஸின் திருவல்லிக்கேணியில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருப்பதாக செய்தி ஐயரை வந்துசேர்ந்தது. பாரதியைப் பார்க்காமல் ஜெயிலுக்குப் போவதை விரும்பாத ஐயர், பிரிட்டிஷ் அரசின் அனுமதிபெற்று, போலீஸ் பாதுகாப்புடன் செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதியின் இல்லம் சென்றார். அங்கு அவரது உறவினர்கள், யானையினால் தாக்கப்பட்ட பாரதி, உடல்நலம் தேறாமல் கடும் வயிற்றுவலியில் அவதிப்படுவதாகவும், மருந்துண்ண மறுப்பதையும் கூறினர். வ.வே.சு. ஐயர் பாரதியோடு பேசினார். ’மருந்தெடுத்துக்கொள்ள ஏன் மறுக்கிறாய்? மருந்து சாப்பிடு; உடம்பைத் தேர்த்திக்கொள்’ என அறிவுறுத்திவிட்டு, சோகத்துடன் ஜெயில் சென்றார் ஐயர். அடுத்த நாள் அதிகாலையில் பாரதி காலமானார்.
சிலநாட்களுக்குப்பின் விடுதலையான வ.வே.சு.ஐயர், 1922-ல், சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் ஒன்றை நிறுவினார். தமிழ் மாணவர்களுக்கு ஒரேமாதிரியான மொழிப்பயிற்சி, அறிவியல் மற்றும் தொழிற்கல்வியோடு, கலை, இலக்கியங்களும் நன்னெறிகளும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் ஐயர். கூடவே, உடல்வலிமை வளர்க்கும் பயிற்சிகளும் மாணவருக்குத் தினமும் குருகுலத்தில் தரப்பட்டன.
வ.வே.சு.ஐயர் தன் 43-ஆவது வயதில் மறைந்தார். ஆனால் அவருடைய இறப்பு மர்மம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. 1925-ஆம் வருடம் ஜூன் மாதம் 3-ஆம் தேதி, தன் குழந்தைகளுடன் பாபநாசம் அருவிக்கு சுற்றுலா சென்றார் ஐயர். அடுத்த நாள், அருவியில் மூழ்கவிருந்த தன் மகளைக் காப்பாற்றப்போய், அவர் அருவியில் மூழ்கி இறந்துவிட்டதாக பிரிட்டிஷ் அரசால் அறிவிக்கப்பட்டது. குள்ளநரி வேலைகளுக்குப் பேர்போன பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கூலிப்படைக்கு அங்கே என்ன பணி கொடுக்கப்பட்டிருந்ததோ, யார் கண்டது?

தமிழ்ச்சிறுகதையின் தந்தை எனக் கருதப்படுகிறார் வ.வே.சு.ஐயர். கம்பநிலையம் என்கிற பதிப்பகத்தை சொந்த செலவில் தொடங்கி, தான் எழுதிய சில நூல்களைப் பதிப்பித்தார். 1910-ல், தான் எழுதிய ஒன்பது கதைகள் அடங்கிய ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்கிற சிறுகதைத் தொகுப்பொன்றை ஐயர் பதிப்பித்தார். இதுவே தமிழ்மொழியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. தமிழின் முதல் சிறுகதையான ‘குளத்தங்கரை அரசமரம்’ இத்தொகுதியில் காணப்படுகிறது. கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தின் பதப்பிரிப்பு நூலொன்றையும் எழுதினார் ஐயர். நவீன இத்தாலியின் புகழ்பெற்ற ஜெனரலும், தேசியவாதியுமான கியுசெப்பே கரிபால்டி (Giuseppe Garibaldi) பற்றியும், ஃப்ரான்ஸின் நெப்போலியன் பற்றியும் வரலாற்று நூல்களையும் எழுதியதோடு, தன்னம்பிக்கைக் கட்டுரைகள் பலவும் எழுதியிருக்கிறார் ஐயர். மகாகவி பாரதி என்கிற மாபெரும் கவிஞனின் ஆளுமையை சிறுவயதிலேயே இனம் கண்டுகொண்டு, பாரதியின் கவிதைகள்/கட்டுரைகள் பற்றிய திறனாய்வு, மற்றும் விளக்கக் குறிப்புகளையும் எழுதி, தன்காலத்திலேயெ பதிவு செய்தவர் வ.வே.சு ஐயர்.

**

15 thoughts on “வ.வே.சு. ஐயர் – சுதந்திர வேட்கையும், மொழிப்பற்றும்

  1. மீதான்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஉ:) வவேசு ஐயர் பற்றிய பல தகவல்கள் பரிமாறியிருக்கிறீங்க… அவர் சிலோன் க்கும் வந்திருக்கிறார்..பழைய சிலோனை நீங்க மறக்கவில்லை:)…

    ஏகாந்தன் அண்ணனைப் பார்த்திட்டோஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

    Liked by 2 people

    1. @ அதிரா: நீங்க சூப்பர் ஃபாஸ்ட்டா வந்து இறங்கியிருக்கீங்க! சிலோன் கனெக்‌ஷன் பல இலக்கியவாதிகளுக்கு இருந்திருக்கிறது. பாட்டு ரசிகர்களுக்கு ரேடியோ சிலோன்!

      ஜிஎம்பி-சார் ஃபோட்டோ ஃபோட்டாவாப் போட்டுக் கலக்கியிருக்கிறதப் பாத்துட்டு வர்றீங்க! நான் எந்த ஃபோட்டோ செஷனிலும் அன்று இல்லை. இருந்தும் என் ஃபோட்டோ தலைகாட்டுது!

      Like

    2. அதிரா நாங்கள் இருந்த வரையிலும் கூட சிலோன் என்றே சொல்லி வந்தோம்…ஸ்ரீலங்கா என்றோ இலங்கை என்றோ சொல்ல வந்ததே இல்லை…அப்புறம் பல வருடங்கள் கழிந்துதான் இலங்கை வானொலி கேட்கத் தொடங்கிய பின்னும் கூட சிலோன் என்றுதான் சொன்னாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை அல்லது ஸ்ரீலங்கா என்று சொல்லத் தொடங்கினோம் எங்கள் வீட்டில்..

      கீதா

      Liked by 1 person

  2. பல போராட்ட வீரர்களின் வாழ்க்கையோடு இந்திய சரித்திரம் கலந்திருக்கிறது அதிரா உங்களை என்பதிவில் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்

    Liked by 1 person

    1. @Balasubramaniam G.M :

      இந்திய சரித்திரம் சாதாரண சரித்திரமா என்ன? இன்னும் எத்தனையோ பெயர் தெரியா வைரங்கள், மணிகள்..

      அதிராவுக்கு உங்கள் ப்ளாகின் எஃபெக்ட் !

      Like

  3. வ.வே.சு ஐயர் அவர்களைப்பற்றி விரிவான செய்திகள் பகிர்வு அருமை.
    இன்னல்களை தாங்கி சுதந்திரத்திற்கு பாடு பட்டு சரித்திரத்தில் இடம்பெற்றவர்.

    Liked by 1 person

    1. @ கோமதி அரசு:

      இப்படி சரியாக அறியப்படாத விடுதலை வீரர்கள், இலக்கியவாதிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களை அறிந்துகொள்ளவேண்டியது தமிழராகிய, இந்தியராகிய நம் கடமை என்று நான் நினைக்கிறேன். வருகைக்கு நன்றி

      Like

  4. வ வே சு அய்யர் பற்றிய தொகுப்பு அருமை. அவரின் குளத்தங்கரை அரசமரம் மட்டுமே (எப்போதோ) படித்துள்ளேன். ஆனான் இப்போது கதை நினைவில் இல்லை. அதே போல பாரதியார் சிறுகதை ஒன்றும் முன்னர் படித்திருக்கிறேன். அதுவும் நினைவில் இல்லை. ‘A Study of Kamba Ramayana’ படிக்க ஆவல் வருகிறது.
    தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் படிக்கலாம். ஒப்பீடுகளை ரசிக்கலாம். எங்கே? சொல்வதுதான்! இப்போது நேரம் இருக்காது!

    Like

  5. @ஸ்ரீராம்:

    உண்மை. நேரமும் மனமும் கூடிவருவது எளிதான விஷயமல்ல! முயற்சியுங்கள். காலச்சந்துபொந்துகளில் புகுந்து படித்துவிட வேண்டியதுதான்.
    ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தை சில நாட்களுக்கு முன் தான் நான் படித்தேன். அடுத்தாற்போல் பதிவிடுகிறேன்.

    Like

  6. வெகு சிறப்பான கட்டுரைத் தொகுப்பு சகோ. வ வே சு ஐயரைக் குறித்துக் கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே வாசித்திருந்தாலும் உங்கள் தொகுப்பு முழுவதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது கதைகளைப் படிக்க வேண்டும் போல் உள்ளது. இப்போது எடுத்து வைத்தவற்றையே வாசித்து முடிக்க முடியலை…நான் வேண்டுவதும் அட்லீஸ்ட் வாசிக்க நினைத்தவைகளையாவது வாசித்தபின் என் வாழ் நாள் அதுவரை வேண்டும் என்று (அப்படினா அது போகும் 90 வரை ஹா ஹா ஹா ) மறதியும் இல்லாமல், வாசிக்கும் திறனும் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வதுண்டு…
    இதற்கு சுட்டி http://azhiyasudargal.blogspot.in/2009/07/blog-post_9627.html கட்டுரையை வாசிக்கும் போதே தேடினேன் வேறொரு டாபில்…வாசிக்கிறேன்….

    மிக்க நன்றி

    கீதா..

    Liked by 1 person

  7. மரம் பேசுகிறது என்று நான் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். அதன் அடியில் உள்ள திண்ணை போன்ற கல்லில் மக்கள் இருந்து வம்பு பேசுவதும்….காதல் சோடிகள் அந்தப் பெரிய மரத்தின் அடியில் காதல் மொழி பேசுவதையும் இந்த மரம் ரசித்து, இரு மாமியார்கள், அவர்களின் மருமகள் ககள் அங்கு சந்தித்து தங்கள் குறைகளை ஷேர் செய்வது போலவும், குழந்தைகள் விளையாடுவதை ரசிப்பது போலவும், வீடுகளில் வேலை செய்யும் பெண்கள் மரத்தின் கிளையில் தூளி கட்டி குழந்தையைத் தூங்க வைப்பதை மரம் ரசித்து அதனுடன் பேசுவது போலவும்..வெயில் காலத்தில் அந்தச் சிறு காலனிக்கே காற்று நிழல் கொடுத்து உதவிய தன்னை மக்கள் வெட்டப் போகிறார்கள் என்று கேட்டதை அந்த மரம் வருந்தி இத்தனையும் சொல்வதாக….எழுதி இருக்கேன்…வ வே சு ஐயரின் கதை பார்த்துவிட்டு வருகிறேன்…

    பாருங்க இபப்டித்தான் நான் எழுதி இப்படி பலதையும் ஏதோ ஒரு ரீதியில் ஃப்ளோ கிடைக்காமல் அதை நல்ல வடீவ்ல் மாற்றும் மூட் கிடைக்காமல் அப்படியே கிடப்பில் போட அப்புறம் யாரேனும் எழுதியிருந்தால் அதை வெளியிடாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறேன்…ஹா ஹா ஹா என் மரம் பெரிய வேம்பும், அதை ஒட்டி ஒரு ஆலும்….(நான் வாக் போகும் இடத்தில் மிகப் பெரிய ஆல மரம் இருக்கு ரொம்ப அழகாக இருக்கும் அப்புறம் பாண்டிச் சேரியில் குடியிருந்த வீட்டில் முன்பில் வேம்பு இருக்க அங்கிருந்தவர்கள் வீட்டின் முன் வேம்பு இருக்கக் கூடாது என்று வெட்ட முனைய…நான் அவர்களிடம் கெஞ்சி நான் வீட்டைக் காலி செய்த பிறகு என்ன வெண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி…. நான் பார்த்த அழகான வேம்பு, இந்த ஆல் இரண்டையும் வைத்து உருவான கதைக் கருதான்…நான் எழுதியிருப்பது…பார்க்கிறேன்…

    கீதா

    Liked by 1 person

  8. ஏகாந்தன் சகோ, கதையை வாசித்துவிட்டேன். அருமையான கதை. அந்தக் காலத்துத் தமிழில். அப்போதெல்லாம் டைவேர்ஸ் பண்ணினால்தான் அடுத்த கல்யாணம் என்பதெல்லாம் இல்லை போலும். அதான் தைரியம்..நாகராஜன் சீக்ரெட் சர்ப்ரைஸ் என்று விளையாட்டாய் செய்ய வினையாகிப் போனது. வாசித்து வரும் போதே ருக்மணி தற்கொலை பண்ணிக்கப் போகிறாள் என்று தெரிந்துவிடுகிறது…நாகராஜன் சொல்லியிருக்கலாம்…மரத்தின் பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அதான் ஆசிரியர்!!!

    கடைசியில் ஆசிரியர் சொல்லுகிறார் பாருங்கள் எந்தப் பெண்ணின் மனதையும் நோகச் செய்யக் கூடாதுகுழந்தைகளே என்று….அருமை…

    கதையை வாசித்து வரும் போதே காமேஸ்வர ஐயர் குப்புசாமி ஐயர் என்று வந்ததும் கொஞ்சம் குழப்பம் வந்து விட்டது. அப்புறம் புரிந்தது டைப் செய்யும் போது நேர்ந்ததாக இருக்கும் என்று …பாவம் இத்தனையும் பொறுமையாக டைப் செய்து போடுகிறாரே அவரை எத்தனை பாராட்டினாலும் அழியாச்சுடர் என்பதற்கு ஏற்ப அழியாசுடராகவே இருந்திட வேண்டும். அழியாச் சுடருக்கும் பல பாராட்டுகள், பொக்கேக்கள்…

    கீதா

    Liked by 1 person

  9. @ கீதா:
    உண்மைதான். எனக்கும் ரொம்பநாளைக்கு சிலோன் என்றுதான் வாயில் வந்தது. இந்த ஸ்ரீலங்கா க்ரிக்கெட் டீமைக் கவனிக்கப்போய் மனம் சிரிலங்கா என்று பழகிக்கொண்டது!

    நீங்கள் நிறைய வாசிக்கவென வாங்கி அடுக்கிவைத்திருக்கிறீர்கள். ஆயுள் ஆண்டவனின் டெபார்ட்மெண்ட்! அவன் பார்த்துக்கொள்வான்.
    கவலைப்படாமல் படித்துத் தள்ளுங்கள்.

    சுந்தரராமசாமியின் புகழ்பெற்ற நாவல் ஒரு புளியமரத்தின் கதை. ஐயரோட குளத்தங்கரை அரசமரத்தைப்படித்தவுடன், ஐயர்தான் ராமசாமியை இன்ஃப்ளூயென்ஸ் செய்திருப்பாரோ எனத் தோன்றியது. நீங்களும் மரத்தைப்பற்றி வண்ணம் தீட்டி வைத்திருக்கிறீர்கள். மரங்கள் மனுஷாளைப் படாதபாடு படுத்துகின்றன. (இன்னொன்றும் நினைவில் இப்போது: கந்தர்வனின் அருமையான சிறுகதை: மைதானத்து மரங்கள்)

    ஐயரின் கதையைப் பாய்ந்துசென்று படித்துவிட்டீர்கள். ருக்மிணியின் பாத்திரம் , அந்த அரசமரம் கோடிட்டுக் காட்டும் ஒரு காலகட்டம், வாழ்வியல் எல்லாமே அருமை. டைப் அடித்து வலைஏற்றுவதில் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. நீங்கள் சொல்வது போல், அழியாச்சுடர்கள் எவ்வளவு ஆசிரியர்களது படைப்புகளை வலையேற்றி சேவை செய்திருக்கிறது. மிகவும் பாராட்டத்தக்க செயல் (நன்றி: ராம் ப்ரசாத்)

    Like

  10. பன்மொழிப்புலமை, விடுதலை வேட்கை, குடும்ப சூழல் என்ற பல நிலைகளுக்கிடையே இவருடைய சாதனைகள் என்பன போற்றத்தகுந்தன ஆகும். இக்காலகட்டத்தில் இவர்களைப் போன்ற பெருமக்களை அறிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். பாராட்டுகள்.

    Liked by 1 person

  11. @Dr B Jambulingam :
    இவரைப்போன்றவர்களை இந்தத் தலைமுறை படித்தறிந்துகொள்வது நல்லது. இந்த மாபெரும் தேசத்தைப்பற்றிய அவர்களது சிந்தனை தெளிவாகும். தியாகச்செம்மல்களான நம் முன்னோரை நாம் மறந்துவிடலாகாது. நீங்கள் சொல்வது உண்மை

    Like

Leave a comment