ஆர். சூடாமணி – அகவய எழுத்து

 

ஆர். சூடாமணி,
எழுத்தாளர்

தமிழ் மொழியின் சமகால இலக்கியவரலாற்றில் பெண்ணெழுத்தின் பங்களிப்புபற்றி தனியாக எழுதப்பட்டால், ஆர்.சூடாமணியின் பெயர் அங்கு பிரதானமாகப் பேசப்படும். சூடாமணியைத் தவிர்த்து, பெண்ணெழுத்துபற்றி யாரும் சிறப்பாக எழுதிவிடமுடியாது. அவருடைய கதாபாத்திரங்கள் மனிதரின் அகஉலகை, குறிப்பாகப் பெண்களின் அகவெளியின் உணர்வுநுட்பங்களைப் பேசுகின்றன. குண மாறுதல்களைக் காண்பிக்கின்றன.

குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு எனக் கவலைப்படும் பெற்றோர் குழந்தைகளின் உலகத்தைப் பார்த்ததே இல்லையே எனக் கவலைப்படுகிறார் சூடாமணி. இவரது சிறுகதைகளில் சில, குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகிற்குள் தலைநீட்டிப் பார்க்கின்றன. சூடாமணியின் ஒரு கதைப் பாத்திரமான யமுனா என்கிற சிறுமி நோய்வாய்ப்பட்டிருந்த தன் சினேகிதனைக் காப்பாற்றிய கடவுளின்மேல் நன்றியும், பிரியமும் கொள்கிறாள். பெருமாளை அன்போடு கேட்கிறாள்: ’உனக்குப் பாண்டி ஆடத் தெரியுமா? தெரிந்தால் வாயேன்.. உன்னை முதலில் ஆட விடுகிறேன் !’

பிரிட்டிஷ் காலத்து ஐ.சி.எஸ். அதிகாரியான டி.என்.எஸ்.ராகவனின் மகள் சூடாமணி. அவருடைய தாய்வழிப்பாட்டி ரெங்கநாயகி ஒரு எழுத்தாளர். ஆனால் அவரின் காலத்தில் அவருடைய கதை ஏதும் அச்சேறவில்லை. பாட்டியின் வேண்டுகோளுக்கிணங்க அவரது ‘சந்தியா’ என்கிற நாவலை பிரசுரம் செய்தார் சூடாமணி. எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி சூடாமணியின் சகோதரி. இவரது இன்னொரு சகோதரியான பத்மாஸனி ஒரு மொழிபெயர்ப்பாளர். சிறுவயதில் பெரியஅம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்ததே அதிசயம் என்கிற நிலையில் இருந்தார் சூடாமணி. பள்ளிக்கல்வியோடு படிப்பு நின்றது. தனக்கு அமைந்த வாழ்க்கையின் போதாமையை, குறைபாடுகளை இயல்பாக மனதில் வாங்கிக்கொள்ள சிறுவயதிலேயே கற்றார். தனியாக நிறையப் படித்தார். மகரம் என்கிற பெண் எழுத்தாளர்தான் சூடாமணிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தது. ஆங்கிலத்தையும் ஆசையோடு கற்றார். அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கார்ல் மார்க்ஸிலிருந்து கலைஉலகம்பற்றிய புத்தகங்கள் வரை அவர் நிறையப்படித்திருந்தார். வாசித்த புத்தகங்கள்பற்றி, தன் கருத்தைப் பென்சில் குறிப்புகளாக தனி குறிப்பேடுகளில் பதிதல் இவரது பழக்கம். சூடாமணியின் தன்னம்பிக்கை மற்றும் எழுத்து வளர்ச்சியில் அவரது தாயார் கனகவல்லிக்குப் பெரும்பங்கு உண்டு.

மென்மையான குணநலன்கள் உடைய மனுஷி சூடாமணி. கல்யாணம் செய்துகொள்ளவில்லை. பங்களாவில் தான் உண்டு, தனது அகமுண்டு எனத் தனியாக வாழ்ந்தார். அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நெருங்கிய சிலரைத் தவிர அவரது வீட்டிற்கு வேறு விசிட்டர்கள் பெரும்பாலும் இல்லை. சூடாமணியைப் பொறுத்தவரை ’ஆர்.சூடாமணி’ என்பது அவரது எழுத்து மட்டும்தான். சூடாமணி என்கிற பெண்ணில்லை. ஒரு முக்கிய எழுத்தாளராக அறியப்பட்ட நிலையிலும், இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது, நேர்காணல்கள் கொடுப்பது, டிவி-யில் வருவது போன்ற செயல்களை அறவே தவிர்த்தார். ஃபோட்டோக்களை அவர் அனுமதித்ததில்லை. தன் அகஉலகில் ஆழ்ந்திருந்தார். அதிலேயே அமைதியும், உன்னதமும் கண்டவர். மனித மனத்தின் பிரக்ஞைபூர்வமான எழுத்து அவருடையது.

சூடாமணியிடம் ஒரு பழக்கம். கண்தெரியாத மனிதர்களுக்கு என நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தவர். அவர்களை உட்காரவைத்துக் கனிவோடு பேசிக்கொண்டிருப்பார். அவர்களால் படிக்கமுடியாதே என விசனப்பட்டு தான் படித்த நல்ல கதைகளை அவர்களுக்குப் பொறுமையாகப் படித்துக் காட்டுவாராம்.

2010-ல் தன் 79-ஆவது வயதில் சூடாமணி, கோடிக்கணக்கான மதிப்புள்ள தனது பங்களா மற்றும் சொத்துக்களை ஏழை மருத்துவமாணவர்களின் உயர்கல்வி, நோயாளிகளின் மருத்துவ உதவி என அறச்செயல்களுக்காக வழங்கிவிட்டு மறைந்தார். இறக்கும் தருவாயில் தர்ம காரியத்துக்காக தன் சொத்து முழுவதையும், முறையாக உயிலெழுதி அளித்துவிட்டு மறைந்த ஒரே எழுத்தாளர் நாட்டில் அனேகமாக இவராகத்தான் இருக்கும்.

1957-லிருந்து அரைநூற்றாண்டு காலகட்டத்தில் சூடாமணி ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தீபம், கணையாழி, கல்கி, அமுதசுரபி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் இவரது கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் ‘100 சிறந்த சிறுகதைகள்’ தொகுப்பில் சூடாமணியின் ‘அந்நியர்கள்’ சிறுகதை இடம்பெற்றுள்ளது. சூடாமணி ஆங்கிலத்திலும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது ரொம்பப்பேருக்குத் தெரியாது. முறையாக ஓவியம் பயின்ற ஓவியரும் கூட இவர். இவரது நீர்வண்ண ஓவியங்களைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இவரது ஓவியங்கள் இவரது மறைவுக்குப்பின் 2011-ல் சென்னையில் காட்சிக்கு வந்தன. ஆர்.சூடாமணியின் வாழ்வியல், அவரது 50 வருடகாலமாக வாழ்ந்த பிரிட்டிஷ் காலத்து சென்னை வீடு, எழுத்து, ஓவியம், படித்த புத்தகங்கள் எனக் கோடிட்டுக்காட்டும் ‘அழகின் எளிமை’ என்கிற 27-நிமிட குறும்படம் ஒன்றை ஓவியர் மோனிக்கா என்பவர் இயக்கியிருக்கிறார். எழுத்தாளரின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட படம் இது.

இந்த வருட ஆரம்பத்தில், ஒரு இலக்கிய இதழுக்கான பேட்டியின்போது ’பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்?’ என்கிற கேள்விக்கு அசோகமித்திரன் ஆர்.சூடாமணியின் பெயரைத்தான் முதலில் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் பிரபஞ்சன் ’அவரைப் போன்ற சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் தனித்திருப்பது அரிது. ஆனால் சூடாமணி அன்பில் களித்தார். அறிவிலும் ஞானத்திலும் உள்ளொளிப் பெருக்கிக்கொண்டார்’ என்கிறார். தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திலீப்குமார் ’மிகுந்த உளவியல் கூறுகளுடன் தம் படைப்புகளை வெளிப்படுத்தியவர் சூடாமணி. அவருடைய கதைகளின் பிரதான அம்சம் வற்றாத ஈரமும், எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான்’ என்கிறார். எழுத்தாளர் பா.ராகவன் ’கல்கி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியபோது ஆர்.சூடாமணியின் கதைகள் பிரசுரத்திற்காக வந்திருக்கின்றன. சூடாமணியின் எழுத்தை நெருக்கமாய் அவதானித்ததால் சொல்கிறார்: ‘சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம் அவரிடம் வெகு இயல்பாகக் கூடியிருந்தது. சற்றுப் பழமையான மொழிநடைதான். ஆனாலும் நாலு வரிக்குள் கதை நம்மை உள்ளே இழுத்துவிடும். செயற்கையான உச்சக்கட்டங்கள் இல்லாத, இயல்பான படைப்பாக நெஞ்சில் நிறையும், விரியும். அவரது பணிவு, அகங்காரமின்மை, எழுத்தில் அவர் கடைப்பிடித்த நம்பமுடியாத உயர் ஒழுக்கநெறிகள் ஆகியவற்றை வேறு யாரிடமும் காண முடியாது.’ சூடாமணியை ஒருமுறை சந்தித்த எழுத்தாளர் திலகவதி கூறுகிறார்: ’அவர் வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்’.

சிறுகதைகள்: ’ஆர்.சூடாமணி கதைகள்’ (கிழக்குப் பதிப்பகம்)
‘தனிமைத் தளிர்’ சிறுகதைத் தொகுப்பு (காலச்சுவடு/கிழக்கு பதிப்பகம்)

குறுநாவல்கள்: பிஞ்சுமுகம், மகளின் கைகள், இரவுச்சுடர்

நாவல்கள்: மனதுக்கினியவள், உள்ளக்கடல், புன்னகை பூங்கொத்து

நாடகம்: இருவர் கண்டனர் (பலமுறை அரங்கேற்றப்பட்ட புகழ்பெற்ற நாடகம்)

ஆங்கிலத்தில் இவரது சிறுகதைகள்: ‘Seeing in the Dark’ by R. Chudamani (Amazon, Snapdeal)

விருதுகள் : 1966-ல் தமிழக அரசின் விருது பெற்றவர். ’இலக்கிய சிந்தனை விருது’ ‘நான்காவது ஆசிரமம்’ சிறுகதைக்காக இவருக்கு வழங்கப்பட்டது. ‘மனதுக்கினியவள்’ நாவல் ’கலைமகள் விருதை’ப் பெற்றது.

இவருடைய ‘இணைப் பறவை’ சிறுகதைபற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)
**

24 thoughts on “ஆர். சூடாமணி – அகவய எழுத்து

  1. திலகவதியும் எழுத்தாளர் கே பாரதியும் தோழிகள். கே பாரதி நீதிபதி சந்துரு அவர்களின் மனைவி. என் அப்பாவின் உடன் பணி புரிந்தவரின் மகள். அந்த வகையில் இந்த இருவருடனும் அறிமுகம் உண்டு. திலகவதி மேடம் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் – அப்பாவைப் பார்க்கவும், எங்கள் கலெக்ஷனிலிருந்து சில நூல்கள் படிப்பதற்கு எடுத்துச் செல்லவும்! அந்த பாரதி அவர்கள்தான் சூடாமணி அறக்கட்டளையை நிர்வகிப்பவர். ராமச்சந்திராவில் ஆர் சூடாமணியின் இறுதிக் காலங்கள் பற்றி படித்திருக்கிறேன்.நீங்கள் சொல்லி இருக்கும் அவரின் ஓவியத்திறமை போல சில விவரங்கள் எனக்கு புதிது.

    Liked by 1 person

  2. @ ஸ்ரீராம்::
    திலகவதி/பாரதி பற்றி சொன்னதற்கு நன்றி. கே.பாரதியின் ஒரு கட்டுரையைப்படித்தேன். பாரதி ஒரு புத்தகம் சூடாமணியைப்பற்றி எழுதியுள்ளார். அதைத்தவிர பாரதி ஒரு எழுத்தாளரா என எனக்குத் தெரியவில்லை. ஓவியர் மோனிக்காவை அந்த குறும்படம் எடுக்க அழைத்தவர் பாரதிதான் என அறிந்துகொண்டேன்.

    Like

  3. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
    சூடாமணி அவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.
    அவரின் கொடை தன்மை அவரின் உயர்நத குணத்தை காட்டுகிறது.
    சூடாமணி அவர்களுக்கு வணக்கம்.

    Liked by 1 person

  4. எழுத்தாளர் சூடாமணி என ஒருவர் இருந்தார் என்பதே இப்போதுதான் அறிகிறேன்.. அவருடைய பணிகள் , செயல்கள் மிகவும் உன்னதமானவை எனத் தெரிந்து கொண்டேன்.

    Liked by 1 person

    1. @ அதிரா:

      ரொம்பப்பேருக்கு பெண் எழுத்தாளர்கள் என்றால், சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, ரமணிசந்திரன் போன்றோரை மட்டுமே தெரியும். பரவாயில்லை. ஆனால் சூடாமணி, அம்பை, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன், உமா மகேஸ்வரி போன்ற வித்தியாசமானவர்களையும் மனதில் வாங்கிக்கொள்வது விஸ்தாரமான, ஆழமான வாசிப்புக்கு வழிவகுக்கும்.

      Like

      1. பின்னர் கூறப்பட்ட பெயர்ப் பட்டியலில் உள்ளவர்களை “வித்தியாசமானவர்கள்” என்று வகைப்படுத்துவதுதான் வேடிக்கையாகவும் “வித்தியாசமாகவும்” இருக்கிறது. முன்னர் சொல்லப்படும் பட்டியலில் உள்ளவர்கள் வணிக / ஜனரஞ்சகப் படைப்பாளிகள்; பிந்தைய பட்டியலில் உள்ளவர்கள் இலக்கியவாதிகள். இதுதான் அவர்களைப் பற்றி சரியாகக் குறிபிட வேண்டிய பகுப்பு முறை. மாறாக, அவர்கள் வித்தியாசமானவர்கள் என்றால் அதில் தக்க பொருள் ஏதும் வருவதில்லை.

        Liked by 1 person

  5. சூடாமணி பற்றி படித்துள்ளேன். இன்று கூடுதலாக பல செய்திகள் அறிந்தேன். உண்மையில் அவர் ஒரு தனி உலகம்.

    Liked by 1 person

  6. @ Dr B Jambulingam :

    படித்துவிட்டுச் சொல்லுங்கள் அவருடைய சிறுகதை ‘இணைப் பறவை’

    Like

  7. பேரெழுத்தாளி ஆர். சூடாமணியை அவர் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு 1960 இல் கிடைத்தது. அப்போது எங்களுக்குள் கடிதத் தொடர்பு இருந்தது. நான் மொம்பை பாபா அணுவியல் ஆய்வு மையத்தில் ஓர் எஞ்சினியராகப் பணி செய்து கொண்டிருந்தேன். அவரது “மனத்துக்கு இனியவள்”, “விடிவை நோக்கி” நாவல்களைப் படித்து, ரசித்து அவரைக் காண ஆவலாய்ச் சென்றேன். அவரது அன்பு சகோதரி ருக்மணி பார்த்தசாரதியும் இருந்தார். அவரது படைப்புகளைப் பற்றி உரையாடி னோம். காபி அருந்தினேன். விடை பெற்றேன். எங்கள் கடிதத் தொடர்பு நீடித்தது.

    1962 இல் நடந்த என் திருமணத்துக்கு “மனத்துக்கு இனியவள்”, “விடிவை நோக்கி” ஆகிய அவரது இரண்டு நூல்களை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். ஓர் உன்னதப் படைப்பாளி நட்புக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    சி. ஜெயபாரதன்,

    கின்கார்டின், அண்டாரியோ.
    கனடா.
    https://jayabarathan.wordpress.com/

    Liked by 1 person

    1. @ சி. ஜெயபாரதன் :

      வருகைக்கு நன்றி ஜெயபாரதன் அவர்களே. உங்களது பெயர் ‘திண்ணை’ இதழ்மூலம் எனக்குப் பரிச்சயமானது.

      நீங்கள் அத்தனை இளம் வயதில் தமிழ் இலக்கிய ஆவல்கொண்டு படித்திருக்கிறீர்கள். ஆர்.சூடாமணி போன்ற எழுத்தாளரை சென்னையில் போய் பார்த்துப் பேசியதோடு, (அதுவும் 1960-லேயே), கடிதத்தொடர்பிலும் இருந்திருக்கிறீர்கள். What a pleasant surprise ! பொதுவாகவே நல்ல மனங்களை சந்திப்பது மகிழ்ச்சி தருகிறது. அதுவும் இவரைப்போன்ற எழுத்தாளரைச் சந்தித்துப்பேச வாய்த்தது என்பது நீங்கள் செய்த பாக்யம்.

      வருகைக்கு நன்றி. தொடர்பிலிருப்போம்.

      Like

      1. பாருங்கள் என் கணினியும் வேர்ட் ப்ரெஸ்ஸும் முட்டி மோதியதில் கமென்டுகள் எல்லாம் ரிப்பீட்டு நு வந்துருக்கு….போராடினேன் தெரியுமா….ஹா ஹா ஹா….சூடாமணி அவர்களைப் பற்றியும் அந்த நூலகத்தில் வாசித்தேன்…கொஞ்சம் கூடுதல் தகவல்கள் ஸ்ரீராம் மற்றும் ஜெயபாரதன் அவர்களிடமிருந்து அறிய முடிந்தது…..இந்த கமென்ட் வருதானு பார்ப்போம்…

        கீதா

        Liked by 1 person

  8. ஏகாந்தன் சகோ நேற்றே வாசித்து விட்டோம் ஆனால் பதில் கொடுக்க முடியவில்லை. என் வீட்டருகில் நடக்கும் தூரத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இருக்கிறது அங்கு தமிழ் எழுத்தாளர்கள் அதுவும் பழைய எழுத்தாளர்கள் கண்காட்சி ஒன்று வைத்திருந்தார்கள். ராயசெல்லப்பா ஸார் என்னை அழைத்து அங்கு சென்று வருமாரு சொல்ல புதிய அனுபவம் கிடைத்தது பதிவாகவும் எழுதியிருந்தேன். எத்தனை இதழ்கள் புத்தகங்கள் இருந்திருக்கின்றன அந்தக் காலத்தில்!!! அதுவும் ஆங்கிலேய ஆட்சியின் போதே. அதைப் பார்த்த பிறகு எனக்கென்னவோ அப்போது எழுத்துலகம் நன்றாக இருந்தது போல் தோன்றுகிறது. நல்ல எழுத்துகள்! எழுத்தாளர்கள்! குறிப்பாகப் பெண்எழுத்தாளர்கள் அப்போதைய காலக்கட்டத்தில் பல தடைகளையும் மீறி அதுவும் கலாச்சார ரீதியாக ஆச்சாரமான குடும்பங்களில் இருந்து கூடப் பெண்கள் எழுதி வந்தது வியப்பை அளித்தது. அப்போது சூடாமணி அவர்களைப் பற்றியும் அங்கு இருந்தது. நீங்கள் முறிப்பிட்டிருப்பதில் பெரும்பான்மையை அங்கும் வாசித்தேன்…தனியாக வீட்டில் இருந்தது பற்றி எல்லாம் வாசித்தது நினைவில்லை…

    தொடர்கிறேன் கமென்டை

    கீதா

    Like

  9. அப்புறம் என்னை மிக மிக வியப்படைய வைத்தவர் வை மு கோதைநாயகி அம்மாள் 1960 வரை அப்படிப் பார்க்கும் போது இன்னும் பழைய எழுத்தாளர்!!! துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர். நான் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்த நூலகம் சென்று பார்க்க வேண்டும் இருக்கிறதா என்று. அன்று கேட்ட போது பின்னர் வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டனர். இனிதான் போய் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். இல்லை என்றால் அண்ணா நூற்றாண்டு நூலகம் அதுவும் வீட்டருகில் தானே!!

    கோதை நாயகி பெண்ணாக இருந்து புது நலச் சேவை, மேடைப் பேச்சு, விடுதலைப் போராட்டம் என்று கலக்கியிருக்கிறார்!!! க்வீன் ஆஃப் ஃபிக்ஷன்ஸ் என்றும் போற்றப்பட்டிருக்கிறார்.

    ஆனால் நம் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரை சரியாக அடையாளப்படுத்தவில்லை என்றும் அறிய முடிந்தது.115 நாவல்கள் எழுதியிருக்கார். ஹப்பா….59 வயது வரைதான் வாழ்க்கை. அதில் 35 வருடம் எழுத்துலகமே என்று இருந்திருக்கிறார். இவரது நூல்கள் பார்க்க வேண்டும். பால்ய திருமணமாம்.. வை மு என்பது கூடப் புகுந்த வீட்டு அடையாளமாம். அவரது வரலாறு என்னை மிக மிக ஆச்சரியத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது!! பரவாயில்லை இந்தக் காலத்தை விட அந்தக் காலத்து ஒரு சில கணவன்மார்கள் நல்ல சப்போர்ட்டிவாகவே இருந்திருக்கிறார்கள். இவரது கணவரும் மிகவும் சப்போர்ட்டிவாக இருந்திருக்கிறார்!! ..

    கீதா

    Liked by 1 person

  10. இவரது நூல்கள் கிடைத்தால் வலையில் …நானும் பகிர்கிறேன். நீங்களும் உங்களுக்குக் கிடைத்தால் பகிருங்கள் சகோ… கமென்ட் இடுவது ரொம்பக் கஷ்டமாக இருக்கு சில சமயங்களில். போட்டு விட்டுப் பார்த்தால் கமென்ட் வரவே இல்லை. அப்புறம் சொல்லுது ட்யூப்ளிக்கேட் கமென்ட் நு..ஸோ இப்ப இதுவும் அடிஷன்…பார்க்கிறேன் போகுதானு.. மீண்டும் இந்த கமென்டை போட முடியாது என்று சொல்லுகிறது. ஒரு வேளை பெரிதாக இருப்பதாலோ…சரி பிரித்துப் போடுகிறேன்…

    கீதா

    Liked by 1 person

  11. அப்புறம் என்னை மிக மிக வியப்படைய வைத்தவர் வை மு கோதைநாயகி அம்மாள் 1960 வரை அப்படிப் பார்க்கும் போது இன்னும் பழைய எழுத்தாளர்!!! துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர். நான் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்த நூலகம் சென்று பார்க்க வேண்டும் இருக்கிறதா என்று. அன்று கேட்ட போது பின்னர் வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டனர். இனிதான் போய் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். இல்லை என்றால் அண்ணா நூற்றாண்டு நூலகம் அதுவும் வீட்டருகில் தானே!!

    கோதை நாயகி பெண்ணாக இருந்து புது நலச் சேவை, மேடைப் பேச்சு, விடுதலைப் போராட்டம் என்று கலக்கியிருக்கிறார்!!! க்வீன் ஆஃப் ஃபிக்ஷன்ஸ் என்றும் போற்றப்பட்டிருக்கிறார்.

    ஆனால் நம் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரை சரியாக அடையாளப்படுத்தவில்லை என்றும் அறிய முடிந்தது.115 நாவல்கள் எழுதியிருக்கார். ஹப்பா….59 வயது வரைதான் வாழ்க்கை. அதில் 35 வருடம் எழுத்துலகமே என்று இருந்திருக்கிறார். இவரது நூல்கள் பார்க்க வேண்டும். பால்ய திருமணமாம்.. வை மு என்பது கூடப் புகுந்த வீட்டு அடையாளமாம். அவரது வரலாறு என்னை மிக மிக ஆச்சரியத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது!! பரவாயில்லை இந்தக் காலத்தை விட அந்தக் காலத்து ஒரு சில கணவன்மார்கள் நல்ல சப்போர்ட்டிவாகவே இருந்திருக்கிறார்கள். இவரது கணவரும் மிகவும் சப்போர்ட்டிவாக இருந்திருக்கிறார்!! ..மீண்டும் கமென்ட் மாடரேஷன் என்று வருது..அழுவாச்சியா வருது…ஹாஹாஹா…

    கீதா

    Like

  12. இவரது நூல்கள் கிடைத்தால் வலையில் …நானும் பகிர்கிறேன். நீங்களும் உங்களுக்குக் கிடைத்தால் பகிருங்கள் சகோ… கமென்ட் இடுவது ரொம்பக் கஷ்டமாக இருக்கு சில சமயங்களில். போட்டு விட்டுப் பார்த்தால் கமென்ட் வரவே இல்லை. அப்புறம் சொல்லுது ட்யூப்ளிக்கேட் கமென்ட் நு..ஸோ இப்ப இதுவும் அடிஷன்…பார்க்கிறேன் போகுதானு.. மீண்டும் இந்த கமென்டை போட முடியாது என்று சொல்லுகிறது. ஒரு வேளை பெரிதாக இருப்பதாலோ…சரி பிரித்துப் போடுகிறேன்…
    மிக்க நன்றி சகோ ஆர் சூடாமணியின் எழுத்தைப் பகிர்ந்தமைக்கு
    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:

      ரெண்டு கமெண்ட் போடுவதாக திட்டமிட்டு, வர்ட்ப்ரெஸ்ஸைக் குழப்பி நாலு கமெண்ட் வரச்செய்துவிட்டீர்கள்! அபாரம்.

      உங்கள் வீட்டிற்கருகிலேயே பெரிய பெரிய நூலகங்கள். இனி உங்களைப் பிடிப்பது கஷ்டமாயிற்றே. என்னதான் கணிணியில் வந்து அடிக்கடி முட்டிக்கொண்டாலும் கையில் புஸ்தகம் வைத்துக்கொண்டு இஷ்டம்போல எங்கேயாவது உட்கார்ந்துகொண்டு படிப்பதின் சுகம்வராது. நல்ல எழுத்து நம் கண்ணில்பட, கையில் வரவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
      என்னுடைய இந்தப்பதிவைபடித்தபின் கனடாவின் ஜெயபாரதன் (திண்ணையில் அடிக்கடி எழுதுபவர்) , மேலே எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் தான் எழுத்தாளர் சூடாமணியை 1960- சந்தித்ததைப்பற்றி எழுதி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்.

      குழு அரசியல் மிகுந்த தமிழ்நாட்டில், ஆர்.சூடாமணி தனியே நின்று, வருஷக்கணக்கில் அமைதியாக எழுத்துலகில் இயங்கி தன்னை நிறுவிக்கொண்டவர். பொதுவாகவே பெண் எழுத்தாளர்களைப்பற்றி புகழ்ந்து எழுதப் பேனா வராத நமது ஆண் எழுத்தாளர்கள்(!), சூடாமணி விஷயத்தில் மௌனம் சாதித்ததில் ஆச்சரியம் இல்லை எனக்கு.

      வைமுகோ -பற்றி நீங்கள் எழுதியிருந்ததும் சுவாரஸ்யமானது.

      Like

  13. @ கீதா:

    //..இந்த கமென்ட் வருதானு பார்ப்போம்…

    வந்தாச்சு! சுடச்சுட வருதே எல்லாம்!
    படைப்பாளிகள்பற்றி நாம் அறிந்ததைப் பகிர்ந்துகொள்வோம்

    Like

  14. ஆர்.சூடாமணியின் மனதுக்கு இனியவளும், புன்னகைப் பூங்கொத்தும் ரொம்பப் பிடித்த நாவல்கள். அதிலும் புன்னகைப் பூங்கொத்து ஆனந்த விகடனில் வெளி வந்தது. ஓவியர் ஸிம்ஹா! ஒவ்வொரு வாரமும் ஆவலைத் தூண்டி அடுத்த வாரம் எப்போ வரும்னு காத்திருப்பேன். சித்தப்பா சூடாமணியைச் சந்தித்திருக்கிறார் என நினைக்கிறேன். அதே போல் ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா ஆகியோரும் பிடித்த எழுத்தாளர்கள். லக்ஷ்மி எல்லாம் அப்புறம் தான் வருகிறார். சிவசங்கரி, ரமணி சந்திரன் எல்லாம் படிச்சாலும் என்னோட பட்டியலில் அவங்க எல்லாம் இல்லை. :)))))) வாசந்தி கொஞ்சம் பிடிக்கும். அம்பையும் பிடிக்கும்.

    Liked by 1 person

    1. @ கீதா சாம்பசிவம் :
      ஓ, ஆனந்தவிகடனிலேயே ஆர்.சூடாமணியைப் பிடித்திருக்கிறீர்கள். நான் இணையத்தில் தான் வாசித்தேன். இன்னும் வாசிக்க நினைக்கிறது மனம். சிவசங்கரி, ரமணிசந்திரனிடம் நான் செல்வதில்லை. வாஸந்தி, லக்ஷ்மி கொஞ்சம் படித்திருக்கிறேன்.

      விஸ்தாரமான கருத்துக்கு நன்றி.

      Like

  15. வைமுகோ, குமுதினி, பிரேமா நந்தகுமார் ஆகியோரின் எழுத்தும் படிச்சிருக்கேன். குமுதினியை அந்தக் காலங்களில் ஆண் எழுத்தாளர்கள் கேலி செய்வார்கள் எனப் படிச்சிருக்கேன். பிரேமா நந்தகுமாரின் மாமியார் தான் குமுதினி என்றும் கேள்வி. பிரேமா நந்தகுமார் ஸ்ரீரங்கத்தின் பிரபலமான தாத்தாசாரியார் குடும்பத்தைச் சேர்ந்தவராம். இப்போதும் வெள்ளியன்று ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் சந்திப்பு நடத்தி வருவதாயும் சொல்கின்றனர்.

    Liked by 1 person

    1. @கீதா சாம்பசிவம் :

      குமுதினி, பிரேமா நந்தகுமார் பற்றி சுவாரஸ்யத் தகவலுக்கு நன்றி.

      Like

  16. @ ஷாராஜ்:

    அந்த பதிலில் நான், பின்னால் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களை ‘இலக்கிய எழுத்தாளர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கவேண்டும் என்கிறீர்கள். இலக்கியத்தைப்பற்றித்தான் இங்கே பேச்சே! இலக்கியத் தரமின்றி, வெறும் ஜனரஞ்சக, பொழுதுபோக்கு எழுத்துக்களைத் தந்தவர்கள்பற்றி நான் எழுதுவதில்லை.

    அதிரா எனும் வாசகருக்குப் புரியவேண்டுமே என்பதற்காக முன்னவர்களைக் காட்டிலும், நான் பின்னால் குறிப்பிட்டவர்களை- ’போன்ற வித்தியாசமானவர்களையும்’ (வேறுபட்ட என்ற அர்த்தத்தில்) வாசிக்கவேண்டும் என்றேன். நான் ஒரு குறிப்பிட்ட வாசகருக்குப் புரியவேண்டுமே என்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறேன் என்பதாக அறியவும்.

    Like

Leave a comment