ஆஹா. . மெல்ல நட மெல்ல நட . .

நகரின் அழகான பூங்காவினில் காலையில் அவசர அவசரமாக நுழைபவர்கள் இயந்திரகதியில் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அடிக்கடி மணியைவேறு பார்த்துக்கொள்கிறார்கள். வேகநடை பயில்கிறார்களாம். 8 ரவுண்டு, 10 ரவுண்டு என ஓடுகிறார்களாம். உடம்பு அப்போதுதான் ஸ்லிம்மாக, தொந்தி தொப்பையைக் காட்டாமல், நீண்ட நாள் நீடித்திருக்குமாம். ஹெல்த் ஃபிட்னெஸ் நிபுணர்களின் அறிவுசார்ந்த உரை; ஆசீர்வாதம். நடக்கிறேன் என்று நல்லது நடந்தால் நல்லதே. எங்கோ ஒரு டஞ்சன் ரூமில் டிவி-க்கு முன் முடங்கிக்கிடப்பதற்கு இது எவ்வளவோ தேவலை.

சுற்றிச் சுற்றி நடப்பவர்கள், ஓடுபவர்கள், மூலையில் நின்றுகொண்டு கைகால்களை வளைப்பவர்கள், தலையை இடது வலதாகத் திருப்பிக் கழுத்தின் பலத்தை சோதித்துப் பார்ப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் இருபதுகளின் வாலிபர்கள். இளங்கன்னிகள். (காலை 8 ½ மணியளவில் நிதானமாக சுற்றிவருகிறார்களே இவர்களில் சிலர் – காலேஜ், ஆஃபீஸ் போன்ற தொல்லை தரும் விஷயங்களோடு சம்பந்தப்படாதவர்களோ?) பார்க் சுற்றிகளில் வயதானவர்களும் அதிகமாகி வருகிறார்கள் என்பது பெங்களூர் ஃபிட்னெஸ் கான்ஷியஸ்-சிட்டி ஆகியிருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. உடல்நலம் பேணுதல் சாலச்சிறந்ததே இருபாலாருக்கும்.

இவர்களில் பலர், ஓடுகையில் அல்லது நடக்கையில் சுற்றுமுற்றும் பார்ப்பதில்லை. சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கடனே என்று அழுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஒருவேளை அந்த நிபுணர் இப்படி காலைநடையின்போது, பூங்காவிலுள்ள செடிகொடிகளிலோ, மரங்களின்மீதோ உங்கள் கண் தப்பித் தவறிக்கூடப் பட்டுவிடக்கூடாதென்றாரா? கவனம் போய்விடக்கூடாதென எச்சரித்துள்ளாரா? இந்தக்கால நிபுணர்களின் மேதாவித்தனத்தை யாரே அறிவார்? கன்சல்ட் செய்யுங்கள்; காசு கொடுங்கள். ஓடுங்கள். ஓடிக்கொண்டே இருங்கள்.

வழக்கமான காலைநடையில் ஈடுபட்டிருக்கையில் போகிறவழியிலே, ஒருநாள் சாலையோரப் பச்சைப்பசேல் பார்க் ஒன்று தென்பட்டது. சிறிய பார்க்தான் எனினும் நன்றாக பராமரிக்கப்பட்டுவருவதாய்த் தோன்றியது. சம்பந்தப்பட்ட புண்ணியவான்களுக்கு நன்றி. இந்தப் பச்சைத்திட்டைக் கடந்தா தினம் நடக்கிறேன். நுழைந்தேன். செவ்வக நடைபாதைச்சுற்றில் நானும் பாதத்தைப் பதித்து நடக்க ஆரம்பித்தேன். வேகமாக நடப்பவர்கள், ஓடுபவர்கள், கைகளைப் பக்கவாட்டில் வீசிக் காற்றை அளப்பவர்கள், ஏதேதோ ஓசைகளை எழுப்பிச் செல்பவர்கள் என விதவிதமான ஜீவன்களுக்கு வழிவிட்டு ஓரமாக இயல்பிற்கேற்ப நடந்தேன்.பொதுவாகவே ஓரமாகச் செல்வது உடம்புக்கு நல்லது என நுண்ணறிவு கூறும்.

நடந்து தொடர்கையில் ஒரு முதியவரைக் கவனிக்கிறேன்; கொஞ்சம் ஓடிவிட்டு பார்க்-பெஞ்சில் சம்மணமிட்டு உட்கார்ந்து தியானிக்கிறார். பூங்காவின் திறந்தவெளிமூலையில் ஒரு பெரியவர் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு தன் உடலுக்கு வேறுவிதமான பயிற்சிதர முயல்கிறார். மெல்லச்சுற்றி வந்துகொண்டிருந்தபோது எங்கிருந்தோ தெளிவாகக் கேட்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம். இந்த மகாவிஷ்ணு நம்மை எங்கும் தனியே செல்ல விடுவதில்லை எனத் தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்தேன். முன்னால், சற்றுத் தள்ளி சிவப்பு ஸ்வெட்டர், தொப்பி சகிதமாக வலம்வரும் அந்தப் பெரியவரிடமிருந்தா இந்தச் சத்தம்? புரிகிறது. தன் மொபைலில் போட்டு விஷ்ணுவின் திருநாமங்களை நினைவுபடுத்திக்கொண்டு நடைபயில்கிறார். நிச்சயம் ஹெல்த் நிபுணர்களை சந்தித்துவிட்டுப் பார்க்குக்குள் நுழைந்தவரல்ல இவர். ஒரிஜினல் மனிதர். உடம்போடு மனதின் ஃபிட்னெஸ் குறித்தும் ஏதோ யோசித்து வைத்துள்ளார். இளைஞர்கள், இளைஞிகளில் சிலரும் காதுக்குள் இயர்ஃபோனை விட்டுக்கொண்டு சுற்றிவருகிறார்கள். அவர்கள் அதில் என்ன பாடல் கேட்கிறார்களோ? ஒரு நாள் யாரோ..என்ன பாடல் சொல்லித்தந்தாரோ..? ஏகாம்பரநாதா, ஏழுமலையானே உனக்கே வெளிச்சம். ஏனெனில் நீயே இங்கு ஒரே வெளிச்சம்..

பார்க்கிலே ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்ச் போட்டிருக்கிறார்களே – அவை வயதானவர்களுக்கு மட்டும் என சிலர் நினைப்பதாகத் தெரிகிறது ’பெஞ்சிலபோய் உக்காந்துட்டா நம்ப யூத்தப்பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க’ – இப்படி சிந்திக்கிறார்களோ என்னவோ. வேர்க்க விறுவிறுக்க சுற்றிச் சுற்றி..எப்போது நிறுத்துவது என்றுகூடத் தெரியாமல் சிலர்.. அடப்பாவமே! முடிஞ்சுதுல்ல ஒங்க ஃபிட்னெஸ் ரெஜிமென்? தினப்படி ரவுண்டு? வாங்கப்பா, இப்படி உட்கார்ந்து, சுத்தி வளர்ந்திருக்கிற இந்த மரம் செடி கொடிகளையும் கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்க. இதல்லாம் ஃபிட்னெஸ் ஆசாமிகள் சொல்லித் தரமாட்டானுங்க. அவன்களுக்கே ஒரு மண்ணும் தெரியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உடம்போடு சூட்சும நிலையில் சேர்ந்து மனதென்றும் ஒன்று இருக்கிறதே அதன் நலத்திற்கு, நாம் நடமாடும் இந்த பூமியோடு, மேலே நீல ஆகாயம் பார்த்தலும் முக்கியம். மரம், செடி கொடிகளில், மலர்களில், பறவைகளில் ஈடுபடுதலும் மனதிற்கு இதம் தரும். நீங்கள் இதையெல்லாம் எப்போது அறிவீர்களோ தெரியவில்லையே..

தினம் தினம் வருகிறீர்களே பூங்காவிற்கு.. குறிப்பாக மழையிரவுகளுக்குப்பின்னான இளங்காலைகளில், சூரியனின் கிரணங்கள் பூங்காவின் புத்தம்புது இலைகளில் பட்டு மின்னுவதைக் கவனித்ததுண்டா? செடிகளின் மேலே தட்டான்களின் விர்-விர்.. கண்ணில்பட்டிருக்கிறதா? காகத்தின் கரைதலும், தேன்சிட்டுக்களின் கீச்சுமூச்சுக்களும் காதில் எப்போதாவது விழுந்திருக்கிறதா? (அதற்கு முதலில் உங்கள் இயர்ஃபோன் காதிலிருந்து வெளியே வந்துவிழவேண்டும்.) பூங்காவின் நடுவிலே ஒரு அடர்ந்த இளம் மரம் செந்நிற ஆரஞ்சுப்பூக்களோடு செழித்தாடுகிறதே காலைக்காற்றில்.. அந்த ஓரத்தில் ஒரு மரம் தன் தலையெல்லாம் மஞ்சள் பூக்களைச்சூடி சிலிர்த்திருக்கிறதே..இந்தப் பக்கம், குத்துக்குத்தாக உயர்ந்த இரண்டு, மூன்று ஈச்சைவகை மரங்கள் –அகோரி சாதுக்களின் ஜடாமுடியைப்போல் அதிலிருந்து அடர்ந்து தொங்கும் ஈச்சங்காய்ச் சரங்கள்.. செவ்விலைகளாய், கிளிப்பச்சைத்தழைகளாய் எழுந்து நிற்கும் செடிகள், வேலி ஓரத்து ஜாதிமல்லிக் கொடி பரப்பும் மென்சுகந்தம் – இவையெல்லாம் உங்கள் உணர்வினிலே ஒருபோதும் தட்டியதே இல்லையா? வெறும் இயந்திரகதி ஓட்டமும், ஏனோதானோ நடையும்தானா? பிறகு ஐம்புலன்கள் எதற்கு உங்களுக்கெல்லாம்? நகரத்தில், குடியிருப்பு வளாகங்களுக்கு நடுவில் பூங்காதான் எதற்கு? ஆம்லெட்டும் மோமோஸுமாய் முழுங்கிவிட்டு ஆஃபீஸ் வளாகத்துக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கலாமே – உபரி நேரத்தில் ?

**

16 thoughts on “ஆஹா. . மெல்ல நட மெல்ல நட . .

  1. தானாக எத்தனை பேர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்களென்று கணக்கு எடுக்கவேண்டும்! நான் கூட என் TGL 550 ஐத் தாண்டியபோது ஒரு முறையும், ஈ ஸி ஜி மெஷின் நடுநடுங்கி கோடுகள் போட்டு என் ரிப்போர்ட் கொடுத்த போதும் ஒரு முறையும் மருத்துவர் அறிவுரைப்படி நடைப்பயிற்சி மேற்கொண்டேன். மூன்று மாதங்களைத் தாண்டவில்லை! நிறுத்தி விட்டேன். நடைப்பயிற்சிக்கு புதுசு பாரு பாருங்க… நடக்கும் நினைவுகள்னு எங்கள் பிளாக்ல பதிவு எழுதினேன்!

    Liked by 1 person

  2. பாட்டு கேட்டுக்கொண்டே எந்த செயலைச் செய்தாலும் சிரமம் தெரியாது செய்வோமென்று சமீபத்தில் கூட கீதா ரெங்கனா, யாரோ சொன்ன நினைவு! “ஆஹா மெல்ல மெல்ல மெல்ல நட மேனி என்ன ஆகும்?”என்று பாடவேண்டியதுதான்! (ஆஹா…மற்றப்பதிவுகளில் பாடல்கள் சொல்லி பின்னூட்டம் போடுபவர் பதிவிலேயே நானும் பாடிவிட்டேன்!)

    நான் எழுதிய பதிவில் இயற்கையை எல்லாம் ரசித்து எழுதி இருக்கேனாக்கும்!

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:
      நானும் க்யூபாவின் கார்டியாலஜிஸ்ட் சொல்லிட்டாரேன்னு நடந்தேன் சில மாதம்.. ஹவானா நடப்பதற்கு அருமையான ஒரு நகரம். பெரிய கூட்டமில்லா நடைபாதைகள். க்யூப அனுபவங்கள்பற்றி சொல்வனத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

      பாடிக்கொண்டே சில காரியங்களைச் செய்தால் எளிதாக இருக்கும். சிறுவயதில் கிராம வெளிகளில் நடக்கையில் பிடித்தமான சினிமா பாடல்களை சத்தமாகப் பாடிப்பார்த்ததுண்டு. யார் கேட்கப்போகிறார்கள் என்கிற தைரியந்தான்!

      Like

    2. நானும் இக்கருத்தைப் படு பயங்கரமாக ஆமோதிக்கிறேன், இருவராக நடந்தால் காதுக்குள் வயர்:) தேவையில்லை.. பேசிக்கொண்டே நடந்திடலாம், தனியே நடக்கும்போது வடிவேல் அங்கிளின் கொமெடி கேட்டு நாமாகவே மெய்மறந்து சிரித்தபடி நடக்கும்போது.. திரும்பிப்பார்க்கையில் நடந்தது தெரியாமலே ஒரு மைல் நடந்திருப்போம்:)

      Like

  3. கடந்த பல ஆண்டுகளாக ஜாக்கீங் நடை எல்லாம் செய்து வருகிறேன் மன்னிக்கவும் செய்து வந்தேன் இந்தக்காட்சிகள் எல்லாம் எனக்கும் அத்துப்படி நானும் பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் ஓரிரு வார காலமாக நடைப்பயிற்சி இல்லை இல்லை என்று சொல்வதை விட முடியவில்லை என்பதே சரி பதிவுக்கு விஷயம் கிடைக்காதபோது ஏன் என்று எழுதலாம் என்றிருக்கிறேன்

    Liked by 1 person

  4. @ ஜி.எம்.பாலசுப்பிரமணியம்:

    பல ஆண்டுகள் ஜாக்கிங் எல்லாம் செய்த சீனியர் நீங்கள்! பொதுவாகவே நீங்கள் ஃபிட்-ஆகத் தென்படுபவர்தான். இப்போது நடப்பதில் சிரமமா? நடக்கும் தூரத்தை, நேர அளவைக் குறைத்துக்கொள்ளலாமே?

    Like

  5. நடக்கும் போது நீங்கள் சொல்வதுபோல் எதிரில் வருவபரை பார்த்து சிரிக்கிறேன்.
    மலர், ஆதவன், பறவைகள் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்.
    காமிரா, அலைபேசியில் படங்களும் எடுக்கிறேன்.

    பேசாமல் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். பேசிக் கொண்டு நடப்பது நல்லதில்லை, ஆனால் சுற்றுப்புறத்தை ரசிக்கலாம்.

    Liked by 1 person

    1. @கோமதி அரசு: நடையோ, ஓட்டமோ கூடவே சுற்றுப்புற இயற்கையை மனதில் நிறுத்துவது மனதிற்கான பயிற்சியுமல்லவா? அதைத்தான் குறிப்பிட வந்தேன்!

      Like

  6. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். தனியாக. மனதிற்கு நிறைவாக உள்ளது.

    Liked by 1 person

    1. @Dr B Jambulingam :

      அந்தக்காலத்தில் நடக்கிறோம் என்கிற பிரக்ஞையின்றி நிறைய நடந்துகொண்டிருந்தார்கள், வெளிக்காற்றை, சூழலை அனுபவித்துவந்தார்கள் நமது பெற்றோர், மூதாதையர். இப்போது அடிப்படைகளைப் புரியவைக்க நிபுணர்கள் தேவைப்படுகிறது; அவர்களுக்குக் கொடுக்க காசும் !

      Like

  7. @ Geetha Sambasivam :

    எங்கள் ப்ளாகிலும், ஜி+ -லும் உங்கள் கமெண்ட் பார்த்து பதில்போட்டு இந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால் உள்ளே வந்திருக்கிறீர்கள். வருக, வருக!

    Like

  8. ஏகாந்தன் அண்ணன்ன் நீங்க புயுப் போஸ்ட்:) போட்டது தெரியாமல் பழைய லிங்கையே வச்சுப் புரட்டிக் கொண்டிருந்திருக்கிறேன்:) என் அறிவு பார்த்து மீ வியக்கேன்:)..

    ஓ நீங்க பெங்களூரிலயோ இருக்கிறீங்க.. அழகான இடம் என அறிந்திருக்கிறேன். அழகாக சொல்லிட்டீங்க ஒவ்வொருவரும் பார்க்கில் நடக்கும் அழகை ஹா ஹா ஹா… ஏதோ வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து நடக்கிறார்களே அந்த வகையில் சந்தோசமே…

    நடைப்பயிற்சி உடம்புக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஆரோக்யம்தானே.. ஆனா நீங்க சொன்னதுபோல, காலை நேரம் நடக்கும்போது இயற்கையை ரசித்துக் கொண்டும் பறவைச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டும் நடப்பதுதான் சொர்க்கமாக இருக்கும்…

    அது சரி நீங்க எத்தனை மயில்:).. வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்.. எத்தனை மைல் நடப்பீங்க டெய்ய்ய்ய்ய்ய்ய்லி?:).

    Liked by 1 person

  9. //வெறும் இயந்திரகதி ஓட்டமும், ஏனோதானோ நடையும்தானா? பிறகு ஐம்புலன்கள் எதற்கு உங்களுக்கெல்லாம்? நகரத்தில், குடியிருப்பு வளாகங்களுக்கு நடுவில் பூங்காதான் எதற்கு? ஆம்லெட்டும் மோமோஸுமாய் முழுங்கிவிட்டு ஆஃபீஸ் வளாகத்துக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கலாமே – உபரி நேரத்தில் ?///

    ஹா ஹா ஹா நடு பஜாரில வச்சு நாக்கைப் பிடுங்கிறமாதிரி நாலு கேள்வி கேடு.. என் அறிவுக் கண்ணைத்திறந்திட்டீங்க உண்மைதான்… இக்காலத்தில் காதில் வெள்ளை வயர் தொங்கவில்லை எனில் ஸ்டைல் இல்லை என்பது போலவும் பட்டிக்காடு என்பது போலவும் வயசாகிட்டுது என்பது போலவும் பலர் நினைக்கினம்…. அதனாலதான் அது ஒரு தொற்று நோய் ஆகிட்டுது….. இங்கும் அப்படித்தான் .. சில நேரங்களில் பார்க்க எரிச்சலாகவும் இருக்கும்..

    ஓவரா அலட்டிட்டேனோ?:) ஹா ஹா ஹா மீ ஓடிடுறேன்:).

    Liked by 1 person

  10. @ அதிரா:

    மெல்ல நடந்து வந்து சேந்துட்டீங்க இந்த போஸ்ட்டுக்கும்! Good.

    நான் பெரிய ஃபிட்னெஸ் சிங்கமல்ல! காலைக் காப்பி குடிச்சுட்டு சும்மா ஒரு 1 1/2 கி.மீ. போனாப்போறதுன்னு நடக்குறது வழக்கம்.

    எதுக்கெடுத்தாலும் இயர்ஃபோனை காதுக்குள்ள விட்டுகிட்டு அலஞ்சா பெரிய இசை ரசனைக்காரன் அல்லது காரி என்று அர்த்தமல்ல. சும்மா ஒரு அல்டாப்பு, சவடால்தான்..வேறென்ன. ஆனா இதுல ஒரு அட்வாண்ட்டேஜ்.. ஒக்காந்துகிட்டே தூங்குற ஆட்களுக்கு காதுக்குள்ள பூச்சிகீச்சி நொழஞ்சிராம இது தடுக்கும்..

    Like

Leave a comment