அது இல்லாத நாள்

காலைக் காப்பியே கசக்குமாறு
கதையை ஆரம்பித்துவைத்தான் பையன்
அப்பா! போயிடுத்து.. ஃபோன் பண்ணு!
ஃபோன் போட்டால்மட்டும்
புறப்பட்டு வந்துவிடுமா ?
இட்லி சட்னி மிளகாய்ப்பொடி
இதமேதும் தரவில்லை வாய்க்கு
பேப்பர்க்காரனும் இன்னும் வரவில்லை
ஞாயிறில்கூட என்னய்யா அவசரம்
பேப்பர் போடறவனுக்கும்தானே ஞாயிறு
படிக்கிறவனுக்குத்தான் எல்லா சுகமுமா
உழைப்பாளி வர்க்கத்தின் தூரத்துக் குரல்
உடம்பில் சூட்டைப் பரப்புகிறது
ஒன்றும் சொல்வதற்கில்லை
உண்பதற்குத் தவிர வேறெதற்கும்
வாய் திறவாதிருப்பது சாலச்சிறந்தது
காலையிலேயே இப்படி ஆகிப்போச்சே
கலங்கித் தவிக்கிறது போக்கற்ற மனம்
வெளியிலே ஒரு ரவுண்டு
வாக் போய்வரலாமென்றால்
வந்துபார் வெளியில் என்றே
வேஷ்டியை வரிந்துகட்டி
முஷ்டியை உயர்த்தும் வெயில்
இதுக்குல்லாம் பயந்தால் முடியுமா
எதுக்கும் துணிந்தவனைப்போல்
இறங்கிவிடலாம் என்றால் நகரின்
குண்டுகுழிச் சாலைகளோ
நண்டு புகுந்தோடத்தான் லாயக்கு
மதிய உணவு கழிந்தபின்னும் மிக
மந்தமாக நகருதே பொழுது
கிரிக்கெட் இருக்கிறது ஆனால்
இருபது ஓவர் மேட்ச் என்றால்
இரவில்தானே காட்டுவார்கள்
செய்வதறியாக் கையறுநிலையில் – மேலும்
பெய்யும் மழை சென்னையில் என்றார்
ஐராவதம்–அடுத்த ப்ளாக் அழகியின் அப்பா
பகலைக் கடக்கமுடியாப் பதற்றத்தில்
வார இதழ்களையாவது
வாசித்துவைப்போமென்றால்
வாயெல்லாம் பல்லாய்
வதைக்கும் மூஞ்சிகள்
அலுத்துப்போன அரசியல்வாதிகள்
உலுத்துப்போன சித்தாந்தங்கள்
போகமாட்டேன் என்கிறதே பொழுது
போன சனியன் எப்போதுதான் வரும்
இண்டர்நெட் இல்லாத நாளும் ஒரு நாளா

**

10 thoughts on “அது இல்லாத நாள்

  1. இணையற்ற இடத்தைப் பிடித்திருக்கிறது இணையம்! கைகள் நடுங்கத்தான் தொடங்கிவிடுகின்றன!! காணி நிலத்தில் பத்துப் பதினாறு தென்னை மரம் வேண்டும்.. அங்கு தடையற்ற இணையம் வேண்டும்!

    அது போகட்டும். நேற்றிரவு T 20 மேட்ச் பார்த்திருப்பீர்களே… ரசித்தீர்களா? நேற்று புதிதாய் ‘ஆஷிஷ் நெஹ்ராவை மிஸ் செய்தார்கள்’!

    Liked by 1 person

  2. @ ஸ்ரீராம்:

    நல்லகாலம் கேபிள் போகவில்லை நேற்று. சீரியல் பார்க்கும் மனைவியோடு க்ரிக்கெட்டுக்காகப் போராடவேண்டியிருந்தது-அவ்வளவுதான்!

    ஆஷிஷ் நேஹ்ராவை ‘மிஸ்’ செய்தவர்கள் வீரேந்தர் சேஹ்வாகிற்கு என்ன செய்தார்கள்? சேஹ்வாகைவிடவா ஒரு பெரிய ஹீரோ டெல்லி க்ரிக்கெட்டிற்கு? பிசிசிஐ தனியாக ஒரு மேட்ச் வைத்திருக்க வேண்டும் அவருக்கு. அட்லீஸ்ட் ஏதோ மனதில் பட்டுவிட்டதுபோலும் – ஒரு ’சேஹ்வாக் கேட்’ வைத்தார்கள் டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் -better late than never!

    நேஹ்ராவின்மீது இந்த திடீர்ப்பாசம் என்னை ஆச்சரியத்தில்தான் ஆழ்த்தியது! 17 tests – 44 wkts ! 120 ODIs – 157 wkts! இதில் என்ன சாகஸம் என ஒன்றும் புரியவில்லை.

    Like

  3. இண்டர்னெட்டே உலகம் என்றிருப்பவருக்கு அதில்லை என்றால் கையும் ஓடாது, காலும் ஓடாது – உலகமே வெறுத்துவிடும் நொடியில்!

    Like

  4. துளசிதரன்: இணையம் அந்த அளவிற்கு வாழ்வில் இடம் பிடித்துள்ளது குறிப்பாக நகரத்தாரை எனலாமோ? நான் இணையம் இல்லாமல்தான் …மொபைலில் கூட அவ்வப்போது போய்விடும். ஆனால் மொபைல் யூஸேஜும் வெகு வெகு குறைவுதான். இது பணி புரியும் இடத்தில் என்றால் வீட்டில் இதுவும் சுத்தம். வீட்டிலும் இணையம் இல்லை.

    கீதா: ஹாஹாஹாஹா…இண்டெர்னெட் போனதுக்கா இத்தனை புலம்பல்!!! நான் முதலில் “போயிடுத்து” என்றதை வாசித்ததும் ஏதோ புறாவோ இல்லை நாலுகால் ஜீவனோனு நினைச்சேன்….மிளகாய்ப்பொடி சட்னி கூட இதமா இல்லைனா அதுவாத்தானே இருக்கும்னு….கூடவே ப்ரௌனியின் நினைவும் வந்துவிட்டது

    ரசித்தேன் வரிகளை. உண்மைதான் நெட்தான் உலகம்னு இருப்பவர்களுக்கு அது இல்லைனா ஒன்றுமே இல்லை என்பது போல் ஆகிடும் தான்.

    Liked by 1 person

  5. @ துளசிதரன், கீதா :

    @ துளசிதரன்: நெட் போனா உலகமே கட் ஆகிவிடுகிறதே நம்மிடமிருந்து! டிவி இருக்கிறதுதான். க்ரிக்கெட், உலக, தேசிய செய்திகள் என எப்போவாவதுதான் அங்கே எட்டிப்பார்ப்பது வழக்கம்.

    நீங்கள் ஆசிரியராயிற்றே. மொபைல் அதிகம் உபயோகமாகாவிட்டால் சரி. இணையத்தைத் தவிர்க்கமுடியாதே.. வீட்டில் அவசியம் இணையத்தை இணைத்துவிடுங்கள். நீங்களும் நிறையப்படிக்கலாம். ரெஃபரென்ஸ், ரசனை என ஏதாவது துருவலாம்! நல்ல பலன்/ உபயோகமிருக்கும்.

    @ கீதா:
    அன்று பூராவும் குட்டிபோட்ட பூனைபோல அங்குமிங்குமாய் அலைந்துகொண்டிருந்தேன்.. இதுவரை வாசிக்காத புத்தகங்களைக் குடைய ஆரம்பித்தேன். நவீன விருட்சம் இலக்கிய இதழில் சில கவிதைகள், சிறுகதை வாசித்தேன். ஆனந்தவிகடனில் ஜோக்குகள், படங்கள் எனப் பார்க்க முயன்றேன் – ஆனால் ஒன்றும் ருசிக்கவில்லை. கருப்புக் காஃபி குடித்து ஆத்திரத்தைக் குறைக்கமுயன்றேன். இப்படிப் பல சாதனாக்கள் இண்டர்நெட் இல்லாத நாட்களில் செய்யவேண்டியிருந்தது!

    Like

  6. இணையமும் கைபேசியும் இல்லாத நாட்கள் மிக இனிமையானவை. எப்போதும் நண்பர்கள் கூட்டம். நட்பும் உறவும் உயிர்ப்போடு இருந்த நாட்கள் அவை

    Liked by 1 person

  7. @ anbeshivam :

    நீங்கள் சொல்லும் நாட்கள் அழகானவை. நண்பர்களைத் தேடிப்பிடித்துப் பழகிய நாட்கள். அரட்டை அடித்த பொழுதுகள். அவற்றை நாம் ஒருவழியாக இழந்துவிட்டோம். இனி ஏங்கத்தான் செய்யமுடியும்!

    முதல் வருகை, கருத்துக்கு நன்றி

    Like

  8. @ முனைவர் ஜம்புலிங்கம்:

    என்ன செய்வது? அப்படி எந்திரங்கள் நம்மைப் பழக்கிவைத்திருக்கின்றன!

    Like

Leave a comment