வாசிப்பின்பம்

ஆரம்பத்தில் சிறுவயதுப் பிள்ளைகளைத் தூங்கவைக்க பாட்டி, தாத்தா சொன்ன ராஜா-ராணி கதைகள். பிறகு வந்தன நீதிக்கதைகள் – பிஞ்சு மனதிற்கு அந்தக்கால ஆரம்பப் பள்ளிக்கூடங்களின் அரும்பங்களிப்பு. பிறகு மொழி பிடிபட ஆரம்பித்தபின், தானே ரசித்துப் படித்தல் துவங்கியது. அப்போது உள்ளே புகுந்தன வணிகப்பத்திரிக்கைகளின் வாயிலாக சராசரி எழுத்தாளர்களின் குடும்பக்கதைகள். பலர் இப்படி ஆரம்பித்திருந்தாலும் மேலும் வாசிப்பில் தேர்ந்து கல்கி, நா.பா. அகிலன், சாண்டில்யன், சிவசங்கரி, வாஸந்தி என ஹைஸ்கூல் படித்து முடித்தனர். சிலர் அதனையும் தாண்டி, ஜெயகாந்தன், லாசரா, சுஜாதா, சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், ஆதவன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் என பட்டப்படிப்பும் அதற்கு மேலும் செல்லலாயினர். அவரவர்க்கு வாய்த்த மொழியின்பம்!

முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றைப் படித்த அனுபவம்பற்றி அவ்வப்போது கொஞ்சம் எழுதலாம் என்கிறது மனம். முன்னோடி எழுத்தாளர்கள் என்று நான் குறிப்பிடுவது ஆதவன், தி ஜானகிராமன், நீல.பத்மனாபன், எம்.வி.வெங்கட்ராம்,மௌனி, அசோகமித்திரன், கந்தர்வன், லாசரா, ஆர்.சூடாமணி போன்றவர்களை. இவர்களில் பலரின் எழுத்துக்கள் தமிழின் புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகியவற்றில் அனேகமாக வெளிவராதவை. அல்லது எப்போதாவது ஒரு வாரப்பத்திரிக்கையில் அல்லது தீபாவளிமலரில் போனால்போகிறதென்று ஒரு கதையைப் பிரசுரித்திருப்பார்கள். இலக்கியத்தரம் வாய்ந்த இத்தகைய படைப்புகள் பெரும்பாலும் சிறுபத்திரிக்கைகள் என அழைக்கப்பட்ட, மிகக்குறைவான பேர்மட்டும் வாங்கிப் படித்த இலக்கியப் பத்திரிக்கைகளில்தான் வெளிவந்தன. சரஸ்வதி, எழுத்து, கணையாழி, தீபம், ஞானரதம், கசடதபற, கனவு, சுபமங்களா போன்ற இலக்கியப் பத்திரிக்கைகள் இயங்கிய காலமது.

தமிழின் புதிய எழுத்தாளர்கள் அப்போது வித்தியாசமான, தரமான படைப்புகளைத் தர ஆரம்பித்திருந்தார்கள். தமிழ் உரைநடையில் புதுப்புது உத்திகளைப் புகுத்த முனைந்தார்கள். எழுத்து நடை, கதையின் கரு, சொல்லாடல் என ஜனரஞ்சக எழுத்திலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது இவர்களின் எழுத்து. இத்தகைய எழுத்தைப் பொதுவெளியில் அறிமுகம் செய்தால்தானே சராசரி வாசகரில் சிலராவது இந்தப்பக்கம் திரும்புவார்கள்? நல்ல எழுத்தை நாடுவார்கள்? ம்ஹூம்.. தமிழ்நாட்டில் இதற்கெல்லாம் சான்ஸே இல்லை. ’நம்ப வாசகர்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா!’ என்று வணிகப்பத்திரிக்கைகள் இவர்களை அண்டவிடாது அலட்சியம் செய்தன. பத்திரிக்கை முதலாளிகள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் காசு சம்பாதிப்பதுதானே முக்கியம்? இலக்கியத்தை இங்கே யார் கேட்டது?

இத்தகைய இலக்கிய எழுத்தாளர்களில் சிலர், தங்கள் கதைகளில் ஒன்றாவது, நிறையப்பேர் வாசிக்கும் வார இதழ்களில் பிரசுரமாகவேண்டும் என விரும்பி, அதை அப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைப்பர். ஆனால் அவை பிரபல இதழ்களால் பெரும்பாலும் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. கதைகள் திரும்பி வந்தன. அல்லது ஒரு பதிலும் இல்லாமல், கிடப்பில் போடப்பட்டன. யோசித்துப் பாருங்கள். அந்தக்காலத்தில் லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், பென்-ட்ரைவ்,பிரிண்டிங், காப்பி எடுத்து வைத்துக்கொள்ளும் வசதி எதுவும் கிடையாது. சொந்தமாகப் பேப்பர், நோட்புக் வாங்கிவைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக ராப்பலாக உட்கார்ந்து பேனாவினால் எழுதினார்கள் நமது எழுத்தாளர்கள். அதுவும் ஒரே ஒரு காப்பி; அதனை வணிகப்பத்திரிக்கைக்கு என்று அனுப்பி, அவர்கள் அதனைப் பிரசுரிக்காததோடு, திருப்பியும் அனுப்பாதுபோய்விட்டால், மாய்ந்து மாய்ந்து எழுதிய படைப்பாளியின் கதி? அவரது எழுத்தை அவரேகூட திரும்பிப் பார்க்கமுடியாதே? எழுத்தாளரின் மன உளைச்சலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருமுறை அசோகமித்திரன், தன் சிறுகதை ஒன்றை ஒரு பிரபல வார இதழிற்கு அனுப்பிவைத்திருக்கிறார். அது பிரசுரிக்க தேர்வு செய்யப்படாததோடு, போதிய ஸ்டாம்பு வைத்து அனுப்பியிருந்தும், அவருக்குத் திருப்பி அனுப்பப்படவுமில்லை. தன்னுடைய கதையை மீட்டு எடுத்துவர, தானே அந்த அலுவலகத்திற்கே சென்று தேடினாராம் அசோகமித்திரன். நிராகரிக்கப்பட்ட எத்தனையோ கதைகள் கிடந்தன அங்கே, மூலையில் குப்பைக் குவியலாக. அவர் எழுதிய கதை எங்கே? அவர் அப்போது தியாகராஜன் என்கிற தன் இயற்பெயரில் எழுதி அனுப்பியிருந்தார். அவர் தேடத்தேட, காகிதக் குப்பைகளிலிருந்து கிடைத்தவை- வேறெவரோ தியாகராஜன் என்கிற பெயரில் அனுப்பி நிராகரிக்கப்பட்ட கதைகள்! அசோகமித்திரனின் சிறுகதை, அதன் ஒரிஜினல் காப்பி அவரிடம் சிக்கவேயில்லை. போனது போனதுதான். இப்படி ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் எத்தனை எத்தனை துன்பங்களோ? ஏழை எழுத்தாளனின் சோகத்தை யாரறிவார்?

இயலாமையிலும், வறுமையிலும் கிடந்து உழன்றுதான் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளால் தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார்கள். ஆனால், தமிழுக்காக நாங்கள் இதைச்செய்தோம், அதைச் செய்தோம் என்றெல்லாம் அரசியல்வாதிகளைப்போல் அவர்கள் ஒருபோதும் பிதற்றியதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என எழுதிப்போயினர் தமிழ் முன்னோர். இவர்களின் உன்னத எழுத்துக்கள் சேகரம் செய்யப்பட்டு பிற்பாடு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும்ம் வாசிக்க சில கிடைக்கின்றன என்பது நாமும், வரப்போகிற இளைய தலைமுறையினரும் செய்த பாக்யம் என்றே சொல்லலாம். வாருங்கள், வாய்ப்பு, அவகாசம் கிடைக்கும்போதெல்லாம், தமிழின் சிறப்பான எழுத்துப்படைப்புகளைப் படித்து மகிழ்வோம். Pleasure of text என்கிறார்களே, அந்த வாசிப்பின்பத்தை அவ்வப்போது அனுபவிப்போம்.

**

12 thoughts on “வாசிப்பின்பம்

  1. அசோகமித்திரன் அனுபவம் நான் அறியாதது.கீதாக்காவுக்குத் தெரிந்திருக்கலாம். அவரோட சித்தப்பா ஆச்சே…

    லாசரா எழுதும் வரிகள் ஆழமானவை, சிக்கலானவை. அதிகம் முயற்சித்தது இல்லை. ஆனாலும் அவர் சிறுகதைத் தொகுதி இரண்டு வைத்திருக்கிறேன்.வாசிக்கத்தான் நேரம் வரவில்லை!!

    Liked by 1 person

  2. அசோகமித்திரன்பற்றி அவர் மறைவுக்குப்பின் இம்மாதிரி செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் காணக்கிடைக்கின்றன.

    லாசரா-வை நானும் அதிகம் படித்ததில்லை. சௌந்தர்ய உபாசகன் என்று தன்னை சொல்லிக்கொண்டவர்! அழகின் ஆழத்தில் ஜாக்ரதையாகத்தான் பயணிக்கவேண்டும்!

    Like

  3. நேர்த்தியின் நியதிகள்
    லா.ச.ராமாமிருதம்

    ” ஆசைகள், லக்ஷிய மலர்கள், மலர்களின் நளினங்கள் அத்தனையும் நீர்த்துப்போன நக்ஷத்ரங்களாயிருக்கலாம். ஆயினும் இவையெல்லாம் ஒரு காலத்தில் நக்ஷத்ரங்கள். எனக்கு மட்டுமல்ல. எல்லோருடைய நஷத்ரங்கள். எல்லோருக்கும் வான் ஒன்று.”..

    இப்போதுதான் லா.ச.ராமாமிருதம் படித்தேன்.
    உங்கள் பதிவில் பழைய எழுத்தார்களைப் பற்றி படித்தது மகிழ்ச்சி.

    நிறைய கதைகள் அவரோட கதைகள் படித்து இருக்கிறேன். நினைவுகளில் கொஞ்சம் ஓடுகிறது, பவளமல்லி, அபிதா எல்லாம் படித்து இருக்கிறேன்.

    Liked by 1 person

    1. @ கோமதி அரசு:

      லாசரா-வை நிறையப் படித்திருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. மேலும் நல்ல எழுத்தாகத் தேடிப் படியுங்கள். நானும் அவ்வப்போது சில எழுத்தாளர்களின் குறிப்பிட்ட சிறுகதைபற்றி எழுத முயற்சிக்கிறேன். அதற்காகவும் மேலும் படிப்பேன்.

      Like

    1. @ முனைவர் ஜம்புலிங்கம்:

      சரிதான். புஸ்தக உலகத்தில் கொஞ்சம் பயணித்தவருக்கே அது புரியும். நுனிப்புல் மேயும் ஆசாமிகளுக்கு ஒரு மண்ணும் தெரியவாய்ப்பில்லை!

      Like

  4. ///இயலாமையிலும், வறுமையிலும் கிடந்து உழன்றுதான் பெரும்பாலான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளால் தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார்கள். ஆனால், தமிழுக்காக நாங்கள் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்றெல்லாம் அரசியல்வாதிகளைப்போல் அவர்கள் ஒருபோதும் பிதற்றியதில்லை. தன் கடன் பணி செய்து கிடப்பதே என எழுதிப்போயினர்///

    மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே நிதர்சனமான உண்மை.
    தமிழை சுவாசிப்போம் வாசிப்போம்

    Liked by 1 person

    1. @ கில்லர்ஜி தேவகோட்டை:
      நன்று. அவ்வப்போது நல்ல புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டால் போதும்.

      Like

  5. @ Balasubramaniam G.M :

    நிறைய அவஸ்தைகளுக்குப்பின் தான் சிலர் வெளிச்சத்துக்கே வந்திருக்கிறார்கள். எத்தனையோ எழுதி வெளி உலகுக்குத் தெரியாமலே காணாமல் போனவர்களும் இருப்பர் . அவர்கள் எழுத்தையே நம்பி இருந்து , வேறு வேலை பார்க்காது வாழ்ந்து இருப்பின் சோகத்துக்கு அளவில்லை . வீட்டிலேயும் நல்லபேர் வாங்கியிருக்க வாய்ப்பில்லை.

    Like

  6. துளசி: வாசிப்பின்பம் என்பது எனக்கு பள்ளி, கல்லூரியோடு முடிந்து போனது. இடையில் கதைகள் எழுதி குமுதம் போன்றவற்றிகு அனுப்பி அது திரும்பி வந்து திரும்பி வராமல் பிரதி எதுவும் எடுத்து வைக்காமல் போய்விட்டது. அப்படியான சமயம் ஏதேனும் வாசித்தால் அதன் தாக்கம் நாம் எழுதுவதில் வந்துவிடுமோ என்று விட்டு… அதன் பின் எப்படியோ போய் இப்போது செய்தித் தாள் தவிர வேறு எதுவும் வாசிப்பது இல்லை என்றாகிவிட்டது…

    கீதா: அசோகமித்திரன் போன்றவர்களது கதையே நிராகரிக்கப்பட்ட போது நாமெல்லாம் எங்கே…எழுத்தாளர்கள் பாவம். அக்காலத்தில் ஒரே ஒரு பிரதி அதுவும் இல்லை என்றால் நீங்கள் சொல்லியிருப்பது போல் எவ்வளவு வேதனை அவர்களை வாட்டியிருக்கும்!! மனக்கஷ்டம்..

    லாசாரா வாசிக்க கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் முக்கியமோ என்று தோன்றியதுண்டு.. வரிகள் ரொம்ப கனமா இருக்கும். என் மாமனார் முன்பு இதழ்களில் வந்த கதைகள் பலவும் எடுத்து பைன்ட் செய்து வைத்திருந்ததை (அவர் இப்போது இல்லாததால்) நான் கொஞ்சம் எடுத்து வந்தேன். அதில் ஆஷ் கொலை வழக்கு – ரகமி எழுதிய தொடரின் பைண்டிங்க் இருக்கிறது. அதை புரட்டிய போது அதில் லாசரா வின் ஒரு கதை முடிவு மட்டும் இல்லாமல் இருந்தது. சுழிப்புக்கள் என்ற கதை. மகனும் தந்தையும் உரையாடும் கதை. தந்தைக்கு சாவை எதிர்கொள்வதில் இன்னும் மனம் சமாதானம் ஏற்படாமல், இருக்கவும் பிடிக்காமல், போகவும் பிடிக்காமல் ஆன அவஸ்தை உள்ள அப்பா. அவரை மகன் வெளியில் அழைத்துச் செல்கிறான் அப்போது மகன் சொல்லுவனான் “அப்பா இது மகாத்மாகாந்தி ரோடு”
    என்ன பேரா இருந்தா என்ன எல்லா ரோடுகளும் சொர்கத்துக்குச் செல்லும் வரை..
    இந்து அக்னிஸ்னானம் என்று மரணத்தைச் சொல்ல அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். கதை ரொம்ப நல்லாருந்துச்சு ஆனால் முடிவு தெரியலை.

    இந்த பைண்டிங்களில் நிறைய ஸ்வாரஸ்யமான டிட் பிட்ஸ், சில ஃபேமஸ் மனிதர்களின் அனுபவங்கள், அவர்களைப் பற்றி என்று இருக்கிறது. முன்பு ஓரிரு பதிவுகள் இப்படி எழுதியதுண்டு. இனியும் தொடங்கலாமோ என்று எண்ணம் இருக்கு. பார்ப்போம்.

    Liked by 1 person

  7. @ துளசிதரன்: வாசிப்பு – பள்ளி, கல்லூரி சமயத்திலேயே முடிந்துவிட்டதா? ஓ! பெரும்பாலானோரின் கதையும் இதுதான் என நினைக்கிறேன்.

    நியூஸ்பேப்பர் வாசித்தல் அவசியம்தான். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும் தேவை. நம் மனசிற்கு அது தேவையாயிருக்கவேண்டும். வாசிப்பை உங்களுக்காக நீங்கள் மீட்டெடுத்தால் நல்லது.அப்படி ஒரு ஆர்வம் உங்களில் நிகழ்ந்தால் நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்கள் உங்களை வந்து சேரும். படிப்பும், சங்கீதம் கேட்பதும் (லைட் மியூஸிக்காக இருந்தாலும்) மனதுக்கு சுகமானதல்லவா?.மனம் நிலையற்றுக் குதிக்கும் தருணங்களில் இவை சமநிலைப்படுத்த உதவுமே..

    @ கீதா : லாசரா-வின் ஓரிரண்டு கதைகள்தான் நானும் படித்திருக்கிறேன். ஆழமாக இழுத்துச்செல்பவர். மொழிநடையும் அந்தக்காலத்தியது. அவரின் சொல்லாடல் பழக்கமில்லாதவர்க்குக் கடினமானது. ஆனால் படிக்கவேண்டிய எழுத்தாளர். மௌனியின் எழுத்தும் ஆழமும் செறிவும் நிறைந்தது. மனதுக்குள்ளேயே பயணிப்பவர்.. ஆதவன் இந்த வகையில் நிபுணர். ஆண்-பெண் மனங்களைத் துல்லியமாக அளவெடுக்க முனைவார் ! (நான் 20 வயதில் டெல்லியில் தற்செயலாய் சந்தித்த முதல் எழுத்தாளர்.) அப்போது அவரது அருமை தெரிந்திருக்கவில்லை. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணி.

    நீங்கள் சொல்வது போன்ற பழைய பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்களில் கதை தவிர்த்து, வேறேதாவது மிர்ச்- மசாலா அகப்பட்டுவிடும். விஷயமும் இருக்கும், சுவாரஸ்யமும் குறுகுறுக்கும். போடுங்கள் ஒரு பதிவு!

    :

    Like

Leave a reply to Aekaanthan Cancel reply