தமிழ் எழுத்தாளர்களும், விருதுகளும்

தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் என்பதாக, சொல்லிக்கொள்ளும்படியாக அதிகமில்லை. இந்திய அரசு மொழிவாரியாக, வருஷாவருஷம் வழங்கிவரும் ’சாஹித்ய அகாடமி’ மற்றும் ’ஞானபீட விருது’கள் குறிப்பிடத் தகுந்தவை. அவைதாண்டி தமிழ்நாடு அரசு – தமிழை வளர்ப்போம், காப்போம், தமிழ் செம்மொழி, எம்மொழி என்றெல்லாம் மார்தட்டி, மொழி அரசியலால் காலங்காலமாய்ப் பிழைக்கும், செழிக்கும் அரசியல்வாதிகள் – அதாவது தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளும் பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை தமிழின் சமகால எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கென. ’கலைமாமணி விருது’ இருக்கிறதே என முணுமுணுக்கவேண்டாம். கலைமாமணி விருதுகளுக்காக தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம், தகுதிகளைத் தாண்டி சிலசமயம் அவை யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளன என்றெல்லாம் ஆராய்ந்தால் அது எங்கோ கொண்டுபோய் விட்டுவிடும். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை அதனைப் பகடி செய்தது நினைவுக்கு வருகிறது: ‘இந்த வருடத்திற்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன; லூஸ்மோகனோடு சேர்ந்து நானும் பெற்றுக்கொண்டேன்!’ அந்த விருதின் standard, sanctity என்ன என்பதை இதைவிடத் தெளிவாக விளக்கவேண்டியதில்லை. இவற்றைத் தாண்டி இலக்கிய அமைப்புகள் சில முன்வந்து, எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவிக்கின்றன. வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளால் வழங்கப்படும் ’இயல்’, ‘விளக்கு’ விருதுகள், விஷ்ணுபுரம்’, ‘சுஜாதா’ விருதுகள் போன்றவை. இவற்றிற்கு ஒரு தராதரம் உண்டு; ஆதலால் இலக்கியவாதிகள், விமரிசகர்கள், வாசகர்களால் கவனிக்கப்படுபவை.

2016-க்கான சாகித்ய அகாடமி விருதை வென்றவர் எழுத்தாளரும் கவிஞருமான வண்ணதாசன். ஒரு அரைநூற்றாண்டு காலமாக தமிழ் இலக்கியப்பரப்பில் இயங்க வேண்டியிருந்தது போலும், அவருக்கு இந்த விருது கிடைப்பதற்கு. ஏதோ கொடுத்தார்களே என்றிருக்கிறது சிலசமயத்தில். சமகால முன்னணி எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் பெயர்கள் சாகித்ய அகாடமியில் இதுவரைப் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதே தெரியவில்லை. தமிழ் எழுத்தாளர்களுக்கு – அதாவது தகுதி வாய்ந்த படைப்பாளிகளுக்கு – உரிய காலத்தில் விருது கொடுப்பதற்கு சாகித்ய அகாடமி பலவருடங்களாகவே சண்டித்தனம் செய்துவருகிறது. ஒரு 40-50 வருடம் எழுதட்டுமே என்ன அவசரம்! – என்பதான ஒரு அலட்சிய மனோபவம் சாகித்ய அகாடமி தேர்வுக்குழுவில் அமர்ந்திருக்கும் தெள்ளுமணிகளுக்கு. ஹிந்தி, பஞ்சாபி, கொங்கணி, வங்காளம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளின் கதை இப்படியில்லை. அவற்றில் எழுதுபவர்களுக்கு விரைவில் கிடைத்துவிடுகின்றன விருதுகள்.

இப்படி அபூர்வமாகத்தான் விருதுகள் தமிழ் எழுத்தாளர்களைச் சென்றடைகின்றன. இப்படியான ஒரு சூழலில் ஒரு எழுத்தாளருக்கு தேசிய விருதோ, மற்ற குறிப்பிடத்தகுந்த விருதோ கிடைத்தால், தமிழில் எழுதும் மற்றவர்கள் மனம் திறந்து பாராட்டவேண்டாம்? அதுதான் இல்லை. நமது தமிழ் எழுத்துக்கலாச்சாரமும் அப்படி! தீராநதி இதழொன்றிற்கான நேர்காணலில், சாகித்ய அகாடமி விருது கிடைத்தற்காக, சக எழுத்தாளர்களின் பாராட்டுக்கள் எப்படி? என்று வண்ணதாசனைக் கேட்டிருக்கிறார்கள். அவரது பதில் சமகாலத் தமிழ்ச்சூழலைக் கோடிட்டுக் காட்டுகிறது :

’’இலக்கியவாதிகள் ஒன்னுக்கொன்னு ஒருத்தரைப் பாராட்டுறதுங்கறது ரொம்பவே அபூர்வம். முகத்துக்கு நேராகவே கண்டுகொண்டாலும் விருதைப்பற்றிப் பேசிக்கொள்ளாமல் செல்கிறவர்களுமுண்டு. அதுக்காக ஒருத்தருமே வாழ்த்து சொல்லலேன்னு இல்ல. சொன்னவர்களும், சொல்லாதவர்களும் உண்டு. அதையெல்லாம் நான் பெருசா எடுக்கல. பஸ்ஸ்டாண்டுப் பக்கம் போறப்ப சாதாரணக்கடையில் இருக்கிறவங்க, நடைபாதையில போறவங்க, வாரவங்க, ‘இதா..நம்ம ஊரு ஆளு..இவருக்கு விருது கிடைச்சிருக்கு’ன்னு சொல்லி வாழ்த்துற பொதுஜனமே விருதுக்கான வாழ்த்தை மனசாரக் கொடுக்கறவங்க.. இது போதாதா எனக்கு? இலக்கியவாதிகளையா நான் எழுதிக்கொள்வது. உண்மையான விமரிசகர்களும், வாழ்த்தாளர்களும், நான் எழுதக்கூடிய எளிய மனிதர்களும், வாசகர்களுமே.’’

ஒருவருக்கு விருது கிடைத்தால் இன்னொருவர் – அதே மொழியில் எழுதும் இன்னொரு எழுத்தாளர் – அவரைப் பாராட்டுவதில் என்ன பிரச்சினை? ஏன் தயங்குகிறார்கள்? நேரிடையாக சந்திக்கையிலும் ஏதேதோ பேசிவிட்டு, விருதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்த்தால் அதற்கு என்ன அர்த்தம்? ‘ ம்ஹ்ம்..நானும் நாப்பது வருசமா எழுதிக்கிட்டிருக்கேன். என்னய ஒருபயலும் கவனிக்க மாட்டேங்குறான். இவனுக்கு கெடச்சிருச்சா!’ என்கிற சராசரி மனிதனின் பொறாமையைத்தானே இங்கே நாம் காண்பது? வேறென்ன விசேஷம் இதில்? சக எழுத்தாளனைப் பாராட்டவேண்டும் என்கிற எண்ணம்கூடத் தோன்றாத எழுத்தாளப் பெருந்தகைகளே, நீங்கள் படைப்பாளியாக இருக்கும்போது, கையில் பேனாவை அல்லது லேப்டாப்பை எடுக்கையில், பெரிதாக எழுதித்தான் தள்ளிவிடுகிறீர்கள், மறுக்கவில்லை. ஆனால் ஒரு தனிமனிதனாக (as an individual), மேலே குறிப்பிட்டதுபோல் நீங்கள் காண்பிப்பது ஒரு சாதாரணனின் இயல்பைத்தானே? அல்ப புத்தியைத்தானே? கொஞ்சம் முன்னேறி மேலே வந்தாலென்ன ?

**

12 thoughts on “தமிழ் எழுத்தாளர்களும், விருதுகளும்

  1. எழுத்தாளர்களுக்கான விருது(ம்) அவர்களுக்கு ஒன்றும் பெரிதான அங்கீகாரத்தைக் கொடுத்து விடுவதில்லை என்று தோன்றுகிறது. விருது பெற்ற எழுத்தாளர் எழுதிய புத்தகம் கண்ணில் பட்டால் உடனே ஒரு அடி தள்ளி நின்று அடுத்த புத்தகத்தைப் பார்ப்பவர்கள்தான் அதிகம்!

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:
      //..எழுத்தாளர்களுக்கான விருது(ம்) அவர்களுக்கு ஒன்றும் பெரிதான அங்கீகாரத்தைக் கொடுத்து விடுவதில்லை என்று ..//

      அதற்குக் காரணம் இப்படிக் காலதாமதமாக விருது கொடுக்கப்படுவதுதான். 30-35 வருடங்களாக எழுதியபின்னர்தான் ஒரு எழுத்தாளரது படைப்பு விருதுக்கமிட்டியின் பரிசீலனைக்கே வருகிறது என்று தோன்றுகிறது. இத்தனை வருடங்களாக இயங்கிவரும் படைப்பாளி ஏற்கனவே இலக்கிய உலகில் அறியப்பட்டுத்தானிருப்பார். தேர்ந்த வாசகர்கள் அவரது எழுத்தைப்படித்திருப்பர். எந்த ஒரு விருதும் இவ்வளவு காலங்கடந்து அவரது எழுத்துபற்றி புதிதாக ஏதும் வாசகர்களுக்கு சொல்லிவிடமுடியாது!

      Like

  2. கேரளத்தில் கிடைக்கும் மரியாதை தமிழ்நாட்டில் இல்லை என்றே உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது. இங்கும் சச்சரவுகள், அரசியல், எலலம் உண்டு என்றாலும் தமிழ்நாட்டளவு இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு வேளை கேரளம் மத்தியுடன் தமிழ்நாட்டளவு உரசிக் கொள்வதில்லையாதலால் தமிழ்நாட்டு, மற்றும் மத்திய அரசியலும் இலக்கியத்தில் புகுந்துள்ளது போலும்…என்றாலும் சக எழுத்தாளரைப் பாராட்டாது இருப்பது என்பது மிகவும் மோசமான ஒன்றாகவே தெரிகிறது.

    துளசிதரன்

    Liked by 1 person

    1. @ துளசிதரன்:

      கேரளத்து எழுத்துச்சூழல்பற்றி ஓரளவுக்கு நான் அறிந்திருக்கிறேன். சண்டை, சச்சரவுகள், இடதுசாரி (முற்போக்கு) எழுத்தாளர்கள் , அப்படிச்சாராதவர்கள் என குழு அரசியல் அங்கும் உண்டுதான். ஆனால் பொதுவாக எழுத்தாளர்களுக்கு, கவிஞர்களுக்கு மலையாள மண்ணில் மதிப்புண்டு. தமிழ்நாடு இந்த விஷயத்தில் லாயக்கில்லை.

      தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். மலையாளம் நன்றாகத்தெரியும். மலையாள இலக்கிய உலகில் நிறைய நண்பர்கள் அவருக்குண்டு. கல்பற்றா நாராயணன், சக்காரியா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். சமீபத்தில் கொல்லத்தில் நடந்த, பினராயி விஜயன் தலைமைவகித்த முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் பேசியதுபற்றி அவரது தளத்தில் படித்தேன். சாரு நிவேதிதாவும் மலையாள இலக்கிய சூழல்பற்றி ஸ்லாகித்து எழுதியிருந்ததைப் படித்துள்ளேன். அங்கே என்ன நடக்கிறது என்பதுபற்றிய ஒரு ஐடியா கிடைத்துள்ளது. மலையாள நாடு எழுத்தாளர்களை, கவிஞர்களை, கலைஞர்களை மதிப்பதில், தமிழ்நாட்டைவிட உயர்ந்ததுதான்.

      Like

  3. ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் விருதுகளினால் நம் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது போல் இல்லை. இங்கு எல்லாவற்றிலுமே அரசியல்தானே…ஆனால் எப்படி இப்படி சக எழுத்தாளனைக் கூட மதிக்க முடியாத ஒரு சூழல்…

    அதே சமயம் இன்னொன்றும்…
    காவல்கோட்டம் எனக்கு உறவினர் மூலம் கிடைத்தது. ஆனால் கொஞ்சம் தான் வாசிக்க முடிந்தது…ஏன் என்று தெரியவில்லை….ஒரு வேளை என்க்கு அவ்வளவுதான் இலக்கிய அறிவு என்றும் சொல்லலாம்…

    கீதா

    Liked by 1 person

    1. காவல் கோட்டம் எனக்கும் பதினைந்து மூன்றில் கிடைத்தது! முழுதும் வாசித்தேன். பரவாயில்லை.நன்றாகவே இருந்தது. அதில் வருமாறு சிறு பகுதியை வைத்து ஒரு திரைப்படம் கூட வந்தது. ஆதி, பசுபதி நடித்திருந்தனர். அந்த சமயம் எஸ்ரா அப்புத்தகம் பற்றி மட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

      Liked by 1 person

      1. @ஸ்ரீராம்:

        காவல்கோட்டம்பற்றி எஸ்.ரா. தனது தளத்தில் விமரிசித்திருந்ததை நானும் படித்தேன். காவல்கோட்டம் நாவலை நான் படிக்கவில்லை. சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கையில் பலர் ஆச்சரியப்பட்டார்கள். சிலர் சந்தேகித்தார்கள் – அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் என்று நினைக்கிறேன். விருதுகளில் இத்தகைய குழுக்களின் குறுக்கீடுகளுக்கு சான்ஸ் இருக்கிறது.

        Like

    2. @ கீதா:

      விருது அங்கீகாரம் கொடுக்கலாம் – அது இளம் வயதில் கொடுக்கப்பட்டால். எழுத்துலக அரசியல் தமிழ்நாட்டில் அதிகம். எந்தக் குழுவையும் சாராது எழுதுவது என்பது இங்கு அதிசயம். கிட்டத்தட்ட முடியாத விஷயம். இந்தச் சூழலில் தி.ஜானகிராமன், லாசரா, சுஜாதா, அசோகமித்திரன் போன்றோர் எப்படிப் பொறுமையோடு இத்தனைக் காலம் இயங்கினார்கள் என்பதே ஆச்சரியமாயிருக்கிறது. இதற்காகவே இவர்களுக்கு விருது கொடுக்கலாம்!

      காவல்கோட்டம் நாவல்பற்றி கீழே ஸ்ரீராமும் எழுதியிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசனின் இந்த நாவல் வெறும் ஆவணம் , நாவலல்ல என்பதுபோல் அவர் தளத்தில் விமரிசித்திருந்ததைப் படித்திருக்கிறேன். விருது வாங்கிய நாவலெல்லாம் மனதுக்குப் பிடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. லியோ டால்ஸ்டாயின் War and Peace-ஐ பெரும்பாலானோர் ஆஹா, ஓஹோ என்பார்கள். நான் முயற்சித்துத் தூக்கிப்போட்டுவிட்டேன் முப்பது வருஷமுன்பே. பிடிக்கவில்லை. மற்ற ரஷ்ய எழுத்தாளர்களில் சிலரை (ஆண்டன் செகோவ், யேவ்துஷென்கோ, புஷ்கின் ) பிடிக்கும்.

      Like

    1. @ முனைவர் ஜம்புலிங்கம்:

      இன்னும் எழுதியிருக்கலாம். பதிவு நீண்டுவிடுமே என நிறுத்திக்கொண்டேன். தீபாவளி வாழ்த்துக்கள்

      Like

  4. விருது பெறுபவர்கள் எல்லாம் தகுதி உடையவர்கள்தானா ஒரு எழுத்தாளனின் எழுத்து இன்னொரு எழுத்தாளனால் மதிக்கப்படுவதில்லை விருதுவழங்க அளவு கோல்கள் உண்டா விருது பெறாத எழுத்தாளர்களின் எழுத்துகள் குறைந்து போய் விட்டதா விருதுகள் பெறவும் பரிந்து உரைத்தல் அவசியம் என்று தோன்று கிறது

    Liked by 1 person

  5. @Balasubramaniam G.M :
    கடந்த சில வருடங்களாக சாகித்ய அகாடெமி விருது, தகுதியான தமிழ்ப் படைப்பாளிகளுக்குத்தான் வழங்கப்படுகிறது. முன்பு சில தடவை தகுதியற்றவர்களுக்கு, அல்லது ஒரு சாதாரணப் படைப்பிற்கு அப்படிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஒவ்வொரு மொழிக்கென்று விருது கமிட்டி உள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட வருடத்தில் யார் யார் உட்கார்ந்திருக்கிறார்கள், அவர்கள் பாரபட்சமின்றி நடந்துகொள்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறி !

    Like

Leave a comment