சில நேரங்களில் சில பதற்றங்கள் !

இன்றைய நியூஸ் என்ன என்ற நினைப்போடு மீடியாவின் பக்கங்களைப் பதற்றத்துடன்தான் திறக்கவேண்டியுள்ளது தினமும். பார்க்காமலும் இருக்கமுடிகிறதா என்றால், அதுதான் இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் அளவிலா குறுகுறுப்போ, தேசபக்தியோ ஏதோ ஒன்று – ஆளை விடமாட்டேன் என்கிறது. நம்ப மீடியா ஆசாமிகள் இருக்கிறார்களே – அது நியூஸ்பேப்பரா இருக்கட்டும் அல்லது டிவி சேனலா இருக்கட்டும் – என்ன சொல்வார்களோ, எதைப்பற்றிச் சொல்வார்களோ, குசுகுசுச் செய்தியோ, குண்டுவீச்சோ யாருக்குத் தெரியும்? மனசைத் தேற்றிக்கொண்டு கொஞ்சம் பார்த்ததிலே இதெல்லாம் கண்ணில் பட்டது. முதல் செய்தியிலேயே டென்ஷன் எகிறியது..

ஏர் இந்தியா விமானத்தின் மீது ட்ராக்டர் மோதல்

டிராக்டர் ஆகாசத்தில் பறந்து ஏர் இந்தியாவை வழிமறித்து முட்டித்தள்ளியதா? அப்படி நடந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதுவும் நடக்கும் காலந்தானே இது? இப்படியெல்லாம் சந்தேகப்பட்டீர்களானால் டிராக்டர் பறப்பதையும் ஏர் இந்தியா விமானத்தை முட்டி நசுக்குவதையும் வீடியோ போட்டுக் காண்பித்துவிடுவார்கள். அதையும் நூறு இருநூறு பேர் வாட்ஸப்பில் உடனே ஃபார்வர்ட் செய்து, ரிசீவ் செய்பவர்களின் ரத்த அழுத்தத்தை ஏற்றிவிட்டுவிடுவார்கள். படியுங்கள், கடந்து செல்லுங்கள். செல்லுகையில் டிராக்டர் எதிர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆண்டவன் அருளட்டும் உங்களுக்கு.

தமிழ்த்தாயின் சொந்தமகன் நான்தான்! –பாரதிராஜா.

சரியாகத்தான் படித்தோமா என்று திருப்பியும் படிக்க நேரிட்டது. ஏனென்றால் ஜெயலலிதா மறைந்தபின் இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகச் சொல்கிறார்கள். அம்மாவின் ஆட்சிதான் இது என்று அடுத்து வந்தவர்கள் குழப்புவது ஒருபக்கம். ஜெ-யின் பூர்வீக வீட்டை நினைவாலயமாக்கக் கூடாது என்று அவருடைய அண்ணன் மகள் அலறுவது இன்னொரு பக்கம். போதாக்குறைக்கு, ’அவருடைய சொந்த மகன் நான் தான்’ என்று கொஞ்ச நாட்களுக்கு முன் ஒருத்தன் கிளம்ப, ’வாய மூடுறியா இல்ல, புடிச்சு உள்ளாரப் போட்றட்டுமா’ன்னு கோர்ட்டே இடைமறித்து எச்சரிக்கக்கூடிய லெவலுக்கு வந்துதே. அந்த நினைவை மனசு நேரங்காலந்தெரியாமல் கிளறிப்போட்டது. இருங்கள், இப்போது நாம் எங்கே இருக்கிறோம் – பாரதிராஜா நான் தான் தமிழ்த்தாயின் சொந்த மகன் என்கிறாரா.. அவர் கொஞ்சம் தெளிவான ஆளுதான். அப்படியெல்லாம் அபாண்டம் அவருக்கு பழக்கமில்லை. பின்னே ஏன் இப்படி திடீர் என அவரிடமிருந்து அறிவிப்பு? அரசியலுக்குள் குதிக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் கமல் ஹாசனும், ரஜினி காந்தும் அப்படியில்லையாம். வளர்ப்பு மகன்கள்தானாம். ஆண்டவா, எத்தனையோ மாநிலங்கள் இந்தியாவில் இருக்க, தமிழ்நாட்டின் காலரை மட்டும் அடிக்கடிப் பிடித்து ஏன் உலுக்குகிறாய்? சிவனே, பரமே, பரந்தாமா, பார்த்தசாரதி – நாங்கள் உன்னை என் செய்தோம்? அப்படியே ஏதாவது தப்பு செய்திருந்தாலும் நீதான் கருணாநிதியாயிற்றே – ஐ மீன் – கருணைக்கடலாயிற்றே, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளக்கூடாதா?

இன்னொரு செய்தி: உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!

காலங்காலமா இருக்கிற இடந்தெரியாம இருக்கிற அப்பாவியாச்சே! அவரையும் இவனுங்க விடலையா? சிவபெருமான் பாவம் – உடம்புல பூரா சாம்பலப் பூசிக்கிட்டு, சோறுதண்ணி இல்லாம கண்ணைமூடிக்கிட்டு ஏதாவது கல்லுமேலே ஏறி உட்கார்ந்துகிட்டு இருந்திருப்பாரு சிவனேன்னு… (ஓ, அவரேதான் சிவனோ?) அவரை ஏம்பா சீண்டுறீங்க, இருக்கிற பிரச்சின போறாதுன்னுட்டா ?

மிரளவைத்த செய்தி: ’சிவன் சொன்னான்; பிச்சையெடுக்கறேன்..!’

மறுபடியும் சிவனா? இதச் சொன்னது யாரு? யாராவது ஆதீனமா? கிராமத்துப் பண்டாரமா? தமிழ் நாட்டுக்காரர் இல்லை என்பதுமட்டுமல்ல, இந்தியரே இல்லை இந்த ஆசாமி. என்னது? ஆம். எவ்ஜெனி பர்ட்னிகோவ் (Evgenii Berdnikov) ரஷ்ய நாட்டுக்காரர். முதலில் காஞ்சீபுரம் கோவில் வாசலில், தலையிலிருந்த தொப்பியைக் கழற்றிக்காட்டி பிச்சை கேட்டிருக்கிறார். நம்ப ஜனங்களுக்கு ஆச்சரியம். கூடவே கனிவு. ஒரு வெள்ளக்காரன் நம்பட்ட கேக்கறான்பாரு பிச்ச!- என்று ஒரு த்ரில். போலீஸ் பார்த்து பர்ட்னிகோவை விஜாரித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். வீஸாவைச் செக் செய்ததில் நவம்பர் 22 வரை அவருக்கு இந்திய டூரிஸ்ட் வீஸா இருக்கிறது. அது பிரச்னை இல்லை. ’ரஷியன் ’கான்ஸ்லேட்டை தொடர்பு கொள்ளுங்க. உங்க நாட்டுக்கு நீங்க திரும்ப உதவுவாங்க’ என்றிருக்கின்றனர் தமிழ்நாடு காவல்துறை. பர்ட்னிகோவ் எடுத்த பிச்சைபற்றிக் கேள்விப்பட்ட இந்திய வெளி உறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ‘அட, நீங்கள் எங்கள் நட்பு நாடான ரஷ்யாவின் ப்ரஜை ஆயிற்றே! உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள். எங்கள் அதிகாரிகள் கவனித்துக்கொள்வார்கள்’ என்று ட்வீட்டரில் செய்தி கொடுத்துள்ளார். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டிருக்கிறார் அந்த ரஷ்ய டூரிஸ்ட். கூடவே கமெண்ட் வேறு அடித்துள்ளார்: ’உங்கள் மந்திரி என் பெயரை சரியாகச் சொல்லவில்லை. என் பெயர் எவாஞ்சலின் (தமிழ் பத்திரிக்கைகள் குறிப்பிட்டபடி) அல்ல. நான் எவ்ஜெனி பர்ட்னிகோவ்!’ என்றிருக்கிறார். ‘அது சரிப்பா! நீ உன் நாட்டுக்குத் திரும்பணுமே! பண உதவி வேணுமா!’ என்று கேட்டதற்கு ‘ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் ஒரு டூரிஸ்ட்டா 50 யூரோ, 8 டாலர் எடுத்துக்கிட்டு இந்தியா வந்தேன். பணம் தீந்துபோச்சு. இருந்தாலும் என்னோட ஸெல்ஃபீ எடுத்துண்டு பணம் கொடுக்கறாங்க! பிச்ச கேட்டா போட்றாங்க. எனக்கு உங்க நாடு பிடிச்சிருக்கு!’ என்று பதில் சொன்னாராம் சென்னை டி.நகர்க் கோவில் ஒன்றின் வாசலில் உட்கார்ந்துகொண்டு. ’ஆனா இப்பிடி பிச்சை எடுக்குறீங்களே..ன்னு ஆரம்பிச்சா, ‘சிவன் சொன்னாரு! நான் பிச்சை எடுக்கத்தான் செய்வேன்’ என்று அடம்பிடிக்கிறாராம் பர்டினிகோவ்.

என்னன்னு விளக்க? ஒன்னும் புரியமாட்டேங்கறதே.. இதைத்தான் நமது மூதாதையர்கள் நாசூக்காகச் சொன்னார்கள்: எல்லாம் சிவன் செயல் !

கடைசியாக ஒரு செய்தி:

இந்த நிமிடம்வரை ’மெர்சல்’ படத்துக்கு சான்று வழங்கப்படவில்லை – சென்ஸார் போர்டு புதுகுண்டு!

– அதானே பார்த்தேன். இன்னும் குண்டுவிழாமலிருந்தால் நாள் நல்லபடியாப் போகாதே..!

**

11 thoughts on “சில நேரங்களில் சில பதற்றங்கள் !

 1. செய்திகள் பலவிதம். இப்படி நகைச்சுவைகள் நிறையவே கிடைத்தன நான் பாஸிட்டிவ் செய்திகள் தேடும்போது.

  இந்தியா ஆஸ்திரேலியாவிடம் T 20 யில் தோற்ற மறுநாள் ராகுல் அறிக்கை “தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!”

  கொசு மருந்தில் ஊழல் – ஸ்டாலின் (கொசுவே இவரிடம் சொல்லி இருக்குமோ!)

  இந்தியர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்க அந்த ரஷ்யர் பாருங்கள் இந்தியாவில் ஒரு வேலைவாய்ப்பைத் தேடிக்கண்டு பிடித்திருக்கிறார்!

  Liked by 1 person

 2. @ஸ்ரீராம்:

  சுஜாதா சொன்னதுபோல கண்ணையும் காதையும் திறந்துவைத்திருந்தால் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் தினமும். நாம் சோர்ந்துவிடாதிருக்க ஆண்டவனின் திருவிளையாடலோ என்னவோ!

  Like

  1. யெஸ் யெஸ் தலைவர் – சுஜாதா இப்படிச் சொல்லியிருந்ததை நானும் வாசிச்சுருக்கேன்….

   கீதா

   Liked by 1 person

   1. @ கீதா:

    சுஜாதாவில் இன்னும் தோண்டவேண்டியது நிறைய இருக்கிறது!

    Like

 3. ஹாஹாஹாஹா சிரிச்சுட்டேன் சகோ…வாசித்த செய்திகளைக் கூட செம சுவாரஸ்யமா….நகைச்சுவை இழையோட தறீங்க…சூப்பர்.//.செல்லுகையில் டிராக்டர் எதிர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆண்டவன் அருளட்டும் உங்களுக்கு.// ஹாஹாஹாஹா
  //நீதான் கருணாநிதியாயிற்றே – ஐ மீன் – கருணைக்கடலாயிற்றே, // ஹாஹாஹா செம..
  நான் ஒரு பதிவு கொஞ்சம் தொடங்கி எழுதி வைச்சுருக்கேன் மும்மூர்த்திகளும் ஒரு மீட்டின் போடுறாங்களாம்…தமிழ்நாட்டுல எந்தக் கட்சியுமே உருப்படியா இல்லையேனு ஒரு கவலை..அதனால ஒரு கட்சி தொடங்கலாமானு…இப்படித் தொடங்கி..போதுது அது இன்னும் முடிக்கலை…இப்ப சிவன் பிச்சை எடுக்கச் சொன்னதா சொன்னத நினைச்சு…என் பதிவுல அவரே பாவம்..அவரும் மகனோடு சேர்ந்து ஆண்டியாகி திருவோடு ஏந்தும் நிலைக்கு…தமிழ்நாடு அப்படி இருக்குனு…இப்படிப் போகுது என் பதிவு…

  மெர்கலுக்குக் குண்டுனு சொல்லி இப்படி நம்மள மெர்சலாக்கிட்டாங்களேப்பா…!!!

  ரொம்ப ரொம்ப ரசித்தேன்..சகோ…

  கீதா
  காலையிலேயே இந்த கமென்ட் போட்டு பப்ளிஷ் பண்ணினா போஸ்ட் இல்லைனு பதிவையே காணலை. மீண்டும் மீண்டும் வந்து பார்த்தா பதிவே இல்லை…அப்புறம் இப்ப ப்ளாகர் ரீடிங்க் லிஸ்ட்ல இருந்துச்சு..நல்லா கால்ம் கமென்டை சேவ் பண்ணி வைச்சுருந்தேன்

  Liked by 1 person

 4. @கீதா:

  கருத்திற்கு நன்றி.

  பதிவைத் தேடும்படி செய்துவிட்டேனா! சாரி ;
  பதிவு இடையிலே மறைந்ததற்கு நான் தான் காரணம்! -அதாவது தமிழ்மணம் submission-க்கு அப்புறமும் என் பதிவைத்தன் பக்கத்தில் காட்டாத எரிச்சலில், பதிவை trash செய்து, மீண்டும் லேசாகத் தலைப்பை மாற்றி blog-ல் re-post செய்தேன். பின் தமிழ்மணத்தில் submit செய்துபார்த்தேன். என் பதிவு தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் காட்டப்படவில்லை. ’நகைச்சுவை’, ‘அனுபவம்’ ஆகிய குறிச்சொற்களின் கீழே காட்டப்பட்டது. எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. கிடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். நமக்கும் தமிழ்மணத்தை விட்டால் வேறொரு சரியான திரட்டி இல்லை. என் செய்வது.

  Like

 5. @ கீதா:

  // .. பதிவுல அவரே பாவம்..அவரும் மகனோடு சேர்ந்து ஆண்டியாகி ..//

  அட, சுவாரஸ்யமா இருக்கும்போலிருக்கே, போட்றவேண்டியதுதானே ஒரு பதிவா..!

  Like

 6. @ முனைவர் ஜம்புலிங்கம்:

  நம்ப மீடியா லட்சணம் அப்படி. கெட்ட செய்திகளைத் தேடித் தேடி இளைத்தவர்கள்!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s