சுஜாதா – கவிதை மனம் !

மரபுவழிக் கவிதைகளிலும் மனதை இழந்தவர்தான் சுஜாதா. தொல்காப்பியம், சிவவாக்கியர், நேரிசை வெண்பா என்றெல்லாம் தேடித்தேடி வாசித்து மகிழ்ந்தவர். சாதாரணத் தமிழ் படிப்போருக்கும் மரபுக்கவிதைகளின் மகத்துவம், கருத்துவளம் தெரியாமல் போய்விடக்கூடாதே என்பதற்காக, எல்லோருக்கும் புரியும் வகையில் திருக்குறள், புறநானூறு போன்றவற்றிற்கு எளிய தமிழில் உரை எழுதியவர். இதற்காகவும் அவர் விமரிசிக்கப்பட்டதுண்டு. தமிழ்ச் சூழலில் நீங்கள் பேனாவைக் கையிலெடுத்தவுடனேயே, திட்ட ஆரம்பித்துவிடுவார்கள்; அதிலும் நீங்கள் கொஞ்சம் கவனிக்கப்பட்டுவிட்டால், புகழ்பெற்றுவிட்டால், ஐயோ, தாங்கமாட்டார்கள்.

சுஜாதா

சமகாலத்தமிழ்க் கவிதையை, குறிப்பாக அதன் மாறிவரும் வடிவங்களை உன்னிப்பாகக் கவனிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார் சுஜாதா. பல இளம் கவிஞர்களை இனம் கண்டு ஊக்குவித்தவர். மனுஷ்ய புத்திரன், நா.முத்துக்குமார் போன்றவர்கள் சுஜாதாவின் கண்டுபிடிப்புகளே என்றெல்லாம் தெரிந்ததை இங்கு சொல்லி போரடிக்கப்போவதில்லை.

ஆனந்த விகடனில் வெளியாகி வாசகர்களை வெகுவாக ஈர்த்த அவரின் ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத்தொடர் புத்தகமாக விகடனால் பின்பு வெளியிடப்பட்டது. அதன் முதற்பகுதியை சில வருடங்கள் கழித்துப் படித்திருக்கிறேன். அதில் ஆங்காங்கே புதிய கவிஞர்களின் வார்த்தை ஜாலங்களைத் தெளித்துவைத்திருக்கிறார் சுஜாதா. மார்கன், முகுந்த் நாகராஜன், மகுடேஸ்வரன், போன்ற கவியுலகின் அப்போதைய புதுமுகங்களை அங்கேதான் தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கட்டுரைகளுக்கு நடுவிலே ‘எ.பி.க.’ (எனக்குப் பிடித்த கவிதை) எனக் குறியிடப்பட்ட box item வரும். அதில் தன் மனம் கவர்ந்த கவிதைகளைக் காட்டியிருப்பார். ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று..’ எனச் செல்லும் ப்ரமிளின் காலத்தை வென்ற ‘காவியம்’ என்கிற கவிதையும், ஆத்மாநாமின் அருமையான ‘கடவுள்’ கவிதையும் ‘கற்றதும் பெற்றதும்’ புத்தகத்தில்தான் எனக்குத் தரிசனம் தந்தன. அனாயாசமாக எழுதப்பட்ட முகுந்த் நாகராஜனின் சிறுகவிதைகளையும் (குறிப்பாக குழந்தைகள்பற்றி) அதில் படித்து வாசிப்பின்பம் எய்தியிருக்கிறேன். தமிழ் பேசும் ஜனங்கள் கிடைக்கமாட்டார்களா என ஏங்கவைக்கும் ஜப்பானில் உட்கார்ந்துகொண்டிருக்கையில், உங்கள் கையில் சுஜாதா கிடைத்து, அதிலும் அவர் ஹைலைட் செய்த கவிஞர்களும் படிக்கக் கிடைத்தால் எப்படியிருக்கும்? வாழ்க்கையில் இன்பம் என்பது இப்படி சில நிமிஷங்களாய் வந்து, நம்மைப் பார்த்துவிட்டுச் சென்றுவிடும்..

முகந்தெரியா இளம் கவிஞர்களின் கவிதைகளைத் தேடிப் படித்துப்பார்த்ததோடு மட்டுமல்லாமல், இலக்கியமேடைகளில் அவற்றைக் குறிப்பிட்டுப் புகழ்ந்த பெருந்தகை சுஜாதா. தொண்ணூறுகளில் புதியவர்களில் பலர் தங்கள் எழுத்துக்களை அவருக்கு அனுப்பிக் கருத்துக் கேட்டதுண்டு என்று தெரிகிறது. எல்லாவற்றையும் படித்துப்பார்க்க தனக்கு நேரம் இருப்பதில்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறார் மனிதர். நேரிடையாகத் தன்னிடம் காட்டப்பற்றவற்றைப் படித்து அதில் எது கவிதை, எது இல்லை, சாதாரண வரிகளிலிருந்து கடைசிவரியில் கவிதையாக ஒன்று எப்படி மாறியிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவருக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார். எழுதுவதற்கு எளிதானதுபோல் மயக்கும் புதுக்கவிதை உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல என்று எழுதக் கை பரபரக்கும் புதியவர்களுக்கு அறிவுறுத்த முயன்றிருக்கிறார். மனம் சோர்ந்தவர்கள் உண்டு; தெளிந்தவர்களும் உண்டு. கல்யாண்ஜி, கலாப்ரியா, ஆத்மாநாம், ப்ரமிள் போன்றவர்களின் கவிதைகளைப் படிக்காமல், கவிதை எழுத ஆரம்பிக்காதீர்கள் என்றும் அவசரக்குடுக்குகைகளை எச்சரித்துள்ளார் சுஜாதா.

சில நேர்காணல்களில், உரையாடல்களில், தான் கவிதைகள் எழுதியிருப்பதாக அவர் சொல்கிறார். (சுஜாதாவின் கவிதைகள் என்று தனியாகப் புத்தகம் வந்திருப்பதாகத் தெரியவில்லை. யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்.) மரபுவழிப் பாக்களை சுஜாதா முயற்சித்திருக்கிறார் போலிருக்கிறதே! அவர் எழுதிய இரண்டு நேரிசை வெண்பாக்களில், கருத்தோடு அங்கதமும் சேர்ந்துகொள்கிறது :

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் – உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும்போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

அடுத்தது, 1980-ன் இந்திய அரசியல் பின்னணி. எமெர்ஜென்சி போய், மொரார்ஜி தேசாயின் ஆட்சி. படியுங்கள்:

மீசா* மறைந்து எமர்ஜென்ஸிவிட்டுப் போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டெல்லாரும்
…………. குடிக்க வாரும்!

(*இந்திராகாந்தியின் அடக்குமுறை – MISA சட்டம்)

எண்பதுகளில் அவருடைய ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்து ஆச்சரியப்பட்டேன். குமுதத்தில் என்பதாக நினைவு. ஏழைச்சிறுவர்கள் தங்கள் வயிற்றுக்காக நகரங்களில் அல்லாடுவதுபற்றியது; மனதைப் படுத்திய கவிதை. சர்வதேசக்குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள்பற்றி அவரது சிந்தனை ஒரு கவிதையாக அப்படி வெளிப்பட்டிருக்கிறது. ஒருவழியாக அதனை நெட்டில் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். கீழே:

உடன்

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன் நிலைமை உயர்த்துவதுபற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..

**
(குறிப்பு: ‘உடன்’ என்கிற தலைப்பில் தான் எழுதிய கவிதையை, ‘உடல்’ எனப் பிரசுரித்து அதனை உடல் கவிதையாக்கிவிட்டார்கள் என ஒரு இடத்தில் சுஜாதா குறித்திருந்ததைப் படித்த நினைவு.)

‘கவி புனைய முனைவோரே, உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்’ என்பதுபோல் அறைகூவல்விடும் அவருடைய இன்னுமொரு கவிதை ஓடுகிறது இப்படி:

கவிஞர்களே இவ்வருஷம்

கவிஞர்களே ! இவ்வருஷம் குறைத்துக் கொள்வோம்
கவிதைகளில் தேன்தடவல் நிறுத்திக் கொள்வோம்
செவிகளுக்கு இனிமைதரும் செய்யுள் வேண்டாம்
சினிமாவுக்(கு) எழுதிவரும் பொய்கள் வேண்டாம்
உவமைகளைத் துப்புரவாய் நீக்கிப் பார்ப்போம்
உலகத்தைத் திருத்துவதைப் போக்கிப் பார்ப்போம்
சிவபெருமான், சீனிவாசர் முருகன் மீது
சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் …

அரசியலில் மாறுதலைச் சாட வேண்டாம்
ஆளுநர்கள், முதல்வர்களைப் பாட வேண்டாம்
பரிசுதரும் தலைவர்களைத் தேட வேண்டாம்
பட்டிமன்றம் கவிராத்திரி கூட வேண்டாம்
வரிச்சுமைகள், பெண்ணுரிமை, தமிழின் இனிமை
வாரொன்று மென்முலைகள், வளையல் சப்தம்
முரசறைந்த பழந்தமிழர் காதல், வீரம்
முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் …

இத்தனையும் துறந்துவிட்டால் மிச்சம் என்ன
எழுதுவதற்கு என்றென்னைக் கேட்பீர் ஆயின்
நித்தநித்தம் உயிர்வாழும் யத்தனத்தில்
நேர்மைக்கும் கவிதைக்கும் நேரம் இன்றி
செத்தொழியக் காத்திருக்கும் மனுசர் நெஞ்சின்
சிந்தனையைக் கவிதைகளாய்ச் செய்து பார்ப்போம்
முத்தனைய சிலவரிகள் கிடைக்காவிட்டால்
மூன்றுலட்சம் ‘ ராமஜெயம் ‘ எழுதிப் பார்ப்போம் !
**
எப்படிச் சொல்லியிருக்கிறார் கவனித்தீர்களா ?

ஹைக்கூ என்பது கவிதைகளில் ஒரு வகைமை. சின்னஞ்சிறு கவிதைகள். ஜப்பானிய ஆதிமூலம். Cute and short. புதிய தலைமுறைக் கவிஞர்களுக்காக ‘ஹைக்கூ எழுதுவது எப்படி?’ என சில விதிகளை விளக்கி, சிறிய புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் சுஜாதா. அதில் முக்கியமாக அவர் குறிப்பிடுவது:

ஹைக்கூ கவிதை சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் அல்லது பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும்.
அவசரத்துக்கு, குறிப்பிட ஏதுவாக அவரெழுதிய ஹைக்கூ கவிதைகள் கிடைக்கவில்லை. ஆனால் ’ சைஃபிக்கூ’ எனப்படும் வகையில் அவர் எழுதிய ஒன்று மாட்டியது. அதாவது, சையன்ஸ் ஃபிக்‌ஷன் ஹைக்கூ. (Science Fiction Haiku – Scifiku) :

சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப் பூட்டினேனா?

**
அமெரிக்க நவீனயுகக் கவிஞர்களின் (American modern poets) கவிதைகளின் மேல் சுஜாதாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. Robert Frost, Ogden Nash என்றெல்லாம் அடிக்கடிக் குறிப்பிட்டிருக்கிறார். “கவிதையை மொழி பெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது” என்கிற சுஜாதா, Robert Frost-ன் கவிதைகளை எளிய மொழியில், அழகு சிதறாமல் எப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார் பாருங்கள்.

கவனிக்கவேண்டிய பின்னணி:19-ஆம் நூற்றாண்டின் இறுதிபோல் தோன்றுகிறது. அமெரிக்காவின் கிராமத்துவெளி. இளைஞன் ஒருவன், தான் போகுமிடத்துக்குக் காதலியைக் கூடவரக் கெஞ்சுகிறான். ஃப்ராஸ்ட்டின் மனதில்தான் என்ன ஒரு மென்மை..

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன்
சிலவேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.

கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்- அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கி விழுகிறது
அதிக நேரம் ஆகாது. நீயும் வாயேன்.

**
’கணையாழி’ இலக்கிய இதழில் கடைசிபக்கக் கட்டுரை எழுதிவந்த சுஜாதா ஒருமுறை அதில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ’ ’நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல. உலகின் கவிதைக்கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவறவிடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது.’

எத்தனைத் தங்க மனசு இவருக்கு. இவரைப்போல எவரும் தமிழில் இனி வருவரோ ?

**

13 thoughts on “சுஜாதா – கவிதை மனம் !

 1. கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒரு கவிதைத் துணுக்கு வெளியிடுவார் சுஜாதா. இப்போது நீண்ட காலமாக தினமணி ஞாயிறு பதிப்புகளில் வைத்தியநாதன் அந்த வேலையைச் செய்து வருகிறார்!

  //தமிழ் பேசும் ஜனங்கள் கிடைக்கமாட்டார்களா என ஏங்கவைக்கும் ஜப்பானில் உட்கார்ந்துகொண்டிருக்கையில்//

  கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். புரிகிறது. நீங்கள் செல்லாத நாடே இல்லையோ…

  என் தந்தை கூட அவருக்கு தான் எழுதிய புத்தகம் அனுப்பி இருந்தார். அவரிடமிருந்து கற்றதும் பெற்றதும் பகுதியில் அது பற்றி குறிப்பு வருகிறதா என்றும் பார்த்துக்கொண்டிருந்தார்!

  சில எண்ணங்கள் புத்தகத்தில் ஒரு கவிதை பற்றி விழுந்து விழுந்து சிலாகித்திருப்பார். என்னடா இது என்று பார்த்தால் ஆரம்ப கால மனுஷ்யபுத்திரன் புத்தக வெளியீட்டு விழா.

  குழந்தை பற்றிய அவர் கவிதையைப் படித்த உடன் நினைவுக்கு வருவது அவர் எழுதிய ‘விழுந்த நட்சத்திறம் என்கிற சிறுகதை. இரண்டு மெக்கானிக் ஷாப் சிறுவர்கள் மற்றும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமி இடையேயான நட்பு பற்றிய கதை.

  //ஹைக்கூ கவிதை சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் அல்லது பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும்.​/

  சமீபத்தில் ஒரு மீள் வாசிப்பில் இதைப் படித்து விட்டு முக நூலில் சில “ஹைக்கூ கவிதைகள்” ( ! ) எழுதி இருந்தேன்./

  Liked by 1 person

 2. @ ஸ்ரீராம்:

  கவிதை, கவிதை என்று உயிரை விட்டிருக்கிறாரே மனுஷன் என்று நினைத்துத்தான் இதனைத் தனிப்பதிவாக இட்டேன். இன்னும் இவர்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.அப்பேர்ப்பட்ட ஒரு rare, colourful writer !

  உங்கப்பாவுக்கு எழுத்தில் , படிப்பில் மிகுந்த ஈடுபாடுண்டு என்று தோன்றுகிறது. புத்தகமும் எழுதியிருக்கிறாரா? எதைப்பற்றியது?

  என் மனைவி சொல்வாள்: ’சுஜாதா நிறைய கதைகள்
  எழுதியிருக்கிறார். அதெல்லாம் சரி. அவர் எப்போது ஆழ்வார், ப்ரும்ம சூத்திரம் என்று நுழைந்தாரோ ..’போதும். வா’ என்று பெருமாள் கூப்பிட்டுக்கொண்டுவிட்டார்!’ என்று

  Like

  1. என் அப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று அவர் மறைவதற்கு சில மாதங்கள் முன்பு வெளியானது. அது அவர் அந்தக் காலத்தில் குண்டூசி, ராணி, குமுதம், விகடன் இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. அவர் எழுதிய தூறல்கள் என்கிற புத்தகம் ஒன்றை வெளியிட்டுக்கொண்டார்! இந்தப் புத்தகங்கள் பற்றி எங்கள் பிளாக்கில், மூன்றாம் சுழி, ராமலக்ஷ்மியின் பிளாக், கீதாக்காவின் எண்ணங்கள் பதிவிலும் சில பதிவுகள் வந்திருந்தன.

   Like

 3. @ ஸ்ரீராம்: அடடா, ஹைக்கூவில் உங்களுக்கு நாட்டமுண்டா? எழுதியதைப் பகிரலாமே!

  Like

 4. உண்மையில் கவிதையில் பெரியநாட்டமில்லை! ஹைக்கூ மறந்து விட்டது. முக நூலில் தேடிப்பார்த்து கிடைத்தால் பகிர்கிறேன்! தேடியதில் ஹைக்கூ கிடைக்கவில்லை. லிமரிக் தான் முயற்சி செய்திருக்கிறேன்! கொஞ்சம் அசந்தால் ஹைக்கூ என்று எழுத்தாளர் ஒருவர் (எஸ் சங்கர நாராயணன் : “ஹைக்கூ அனுபவமா இருக்கேய்யா…” ) பாராட்டிய கவிதை ஒன்று முதலில்.. பின்னர் வருவது லிமரிக்! ஹைக்கூ இல்லை! மாற்றிச் சொல்லி விட்டேன்!

  வாடியதால்
  வாசம் தொலைத்த
  மலரொன்று
  விழுந்து கிடக்கிறது
  வற்றிய குளத்தில்

  ஏற்கெனவே
  விழுந்து கிடந்த
  மஞ்சள் இலைகள்
  காற்றில் நகர்ந்து
  ஆதுரத்துடன்
  அணைத்து மூடுகின்றன
  மலரை

  ==========================================

  படிக்கையில் தேடிப்போனான் டாஸ்மாக்
  கிடைக்கவில்லை பரீட்சையில் பாஸ்மார்க்
  வாக்குவாத சத்தம்
  போதையில் யுத்தம்
  ஆனது உடம்பெங்கும் ரோஸ் மார்க்.

  ======================================

  கவிதை எழுதத்தேவை முயற்சி
  வேணும் கொஞ்சம் பயிற்சி
  வார்த்தைகள் தேடு
  மடக்கி மடக்கிப் போடு
  எங்கும் வரக்கூடாது அயர்ச்சி

  Liked by 1 person

  1. ஸ்ரீராம் சூப்பர். இதை எல்லாம் எங்கள் ப்ளாகிலேயே போடலாம் ல….நான் முகநூலில் எல்லாம் இல்லையே அங்கு வந்து வாசிக்க….

   அப்படியே கவிதை எழுத சொல்லியும் கொடுக்கலாமல்…லிமெரிக், ஹைக்கு…எல்லாம்…எனக்கெல்லாம் சுத்தமா வராது….கல்லூரியில் சந்தக் கவிதை, வெண்பா எல்லாம் எழுதியிருக்கிறேன் பரிசும் பெற்றிருக்கிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்!! ஹாஹாஹாஹா….விவேக்கின் ஸ்டைலில் சொல்லிக்க வேண்டியய்துதான் எப்படி இருந்த நான் இப்படியாகிப் போனேன்னு…ஹாஹாஹா

   கீதா

   Liked by 1 person

 5. @ ஸ்ரீராம்:

  உங்கள் அப்பாவின் சிறுகதைத் தொகுப்பு, இன்னொரு புத்தகம் பற்றி இவ்வளவு பேர் பகிர்ந்திருக்கிறார்கள். என் கவனத்தில் வரவில்லை. I am a poor reader myself.

  ஹைக்கூ அல்லது லிமரிக்கு
  இருக்கு உங்களிடம் சரக்கு!
  போடுங்கள் அவ்வப்போது எங்கள் ப்ளாகில்
  படித்து மகிழட்டும் போகிற போக்கில்

  Like

 6. @ Balasubramaniam G.M. :

  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என இரண்டு முறை சொல்லியிருக்கலாமே!
  {கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ்ப்படம் (2000)}

  Like

 7. தலைவர் தலைவர்தான் ஏகாந்தன் சகோ! என்னதான் சொல்லுங்கள் இனி அவரைப் போன்ற ஓர் எழுத்தாளர் வருவாரா என்பது சந்தேகம் தான் அல்லது அவரே கற்றதும் பெற்றதுமில் தன் 70 வயதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் சில உடல் உபாதைகள் குறித்துப் பேசி வரும் போது இப்படிச் சொல்லியிருப்பார்… // மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல… வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.//

  அதே சுஜாதா வேறொரு பகுதியில் ஒரு இயற்பியல் புத்தகம் குறித்து அதன் ஆசிரியர் குறித்தும் சொல்லிவிட்டு, அணுவிற்கு அழிவும் இல்லை பிறப்பும் இல்லை, ஒருவர் இறந்ததும் அவர் உடலில் உள்ள அணுக்கள் காற்றில் பறந்து கொண்டிருக்கும் அது ஏதேனும் ஒன்றில் செட்டில் ஆவதற்கு 300 வருடங்கள் கூட ஆகலாம் அப்படி என்றால் பாரதியாரின் அம்சம் பிறக்க இன்னும் நாம் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூட குறிப்பிட்டதாக நினைவு இதைத்தான் மறுபிறவு என்று சொல்ல்கின்றனரோ எனறும் கேட்டிருப்பார். அதே வரிகளை வைத்துப் பார்க்க ஒரு வேளை சுஜாதாவின் ஏதேஉம் ஒரு அம்சம் 300 வருடங்களுக்குப் பிறகு வர சான்ஸ் இருக்கோ…ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் நம்ப ஆரம்பித்தார் அதையும் குறிப்பிட்டிருப்பார்…

  கவிதைகள் குறித்து க பெ வில் ஆங்காங்கே சொல்லியிருப்பார். அவரது சிலதும் வந்திருக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்டிருப்பவை இதுதான் முதல் முறை வாசிக்கிறேன். மிக்க நன்றி இங்கு பகிர்ந்தமைக்கு..

  குழந்தைகள் பற்றிய கவிதை வரிகள் சுடுகின்றந்து….நீங்கள் சொல்லுவது போல் அவரைப் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்…

  கீதா

  Liked by 1 person

 8. @ துளசிதரன், கீதா :

  உங்கள் பின்னூட்டமே ’கற்றதும் பெற்றதும்’ இன்னொரு வால்யூம் படித்த சுகத்தைத் தருகிறது.

  நாம் பாரதியின் அம்சம், சுஜாதாவின் அம்சம் என்று காத்திருக்கையில், ஹிட்லரின் அம்சம், போல் போட்-டின் அம்சம் என்று
  திரும்பிவந்துவிடப்போகிறது. இயற்கையை எந்தக் கட்சியிலும் சேர்த்துக்கொள்ளமுடியாது.

  //..உடலில் உள்ள அணுக்கள் காற்றில் பறந்துகொண்டிருக்கும்//
  காற்றில் என்பதைவிடவும் வெளியில் என்று அவர் சொல்லியிருக்கவேண்டும். காற்றுப்பகுதி என்பது பூமியிலிருந்து சில கி.மீ.க்கள் தானே(மேலும் வேறு சில கிரஹங்களுக்கும் இந்தக் காற்றுப்பகுதி கொஞ்சம் இருக்கக்கூடும்). மிச்சமெல்லாம் வெளி. ப்ரும்மாண்ட வெளி.

  உடனே, ‘அந்தக் காற்றுவெளியிடைக் கண்ணம்மா..’ என்று இந்தப்பாழாய்ப்போன மனம் ஆரம்பித்தால் ஏதும் செய்வதற்கில்லை!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s