மீண்டும் சுஜாதா . .

கொஞ்சம் இடைவெளிவிட்டு இப்போது திரும்பவும் கையில் கிடைத்திருக்கிறார் சுஜாதா. பொதுவாகவே உயிர்ப்பான எழுத்து அவருடையது. அவருடைய எழுத்தின் சாகஸம், அவர் மறைந்த பின்னும் வாசகர்களை அவரைத் தேடி வரவைக்கிறது.
சமீபத்திய சென்னை விசிட்டை முடித்துவிட்டு, பெங்களூர் திரும்ப லால்பாக் எக்ஸ்ப்ரெஸைப் பிடிக்குமுன் கொஞ்சம் நேரம் கிடைத்தது. சென்னை சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடைக்குச் சென்றிருந்தேன். வார, மாத இதழ்களாக முன்வரிசையில் கடை பரப்பியிருந்தார்கள். வழக்கமான பத்திரிக்கைகளைத் தாண்டியும் கேள்விப்பட்டிராத சில பத்திரிக்கைகள். பெங்களூரில் தேடியும் தென்படாத தீராநதியை வாங்கிக்கொண்டு, மேற்கொண்டு நோக்கினேன். கடைக்குள்ளே புத்தகங்களின் வரிசை. உள்ளே போய்ப் பார்க்கலாமா, தமிழ் புத்தகம் தேவை என்று சொன்னேன். சிலவினாடிகள் என்னைப் பார்த்துவிட்டு, பெரியமனசுபண்ணி உள்ளே அனுமதித்தார் கடைக்காரர். புத்தகம் வாங்க வருபவர்களை, புத்தகம் விற்பவர்களே வேற்றுக்கிரக வாசிகள்போல் பார்க்கும் வினோதமான மாநிலம் தமிழ்நாடு! அன்றிருந்த அந்த சூழலில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை.

மிகச்சிறிய கடை அது. ஆங்கிலப் புத்தகங்கள், தமிழ்ப்புத்தகங்கள் மட்டுமே பிரிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தனவே தவிர, தமிழ் எழுத்தாளர்கள் வரிசையாக வகைப்படுத்தப்படவில்லை. பாலகுமாரன், இந்திரா சௌந்திரராஜன், இன்னும் ஏதேதோ பேர்களோடு முண்டியடித்துக்கொண்டு ஒரு மூலையில் சாய்ந்திருந்தார் சுஜாதா. எனக்குப் பழக்கப்பட்ட சில தலைப்புகளோடு மேலும் சில சுஜாதாக்கள். ‘விவாதங்கள் விமர்சனங்கள்’ என்கிற அவருடைய புத்தகம் ஒன்று தென்பட்டது. அதனை எடுத்து உள்ளே வேகமாகக் கண்களை ஓட்டினேன். வெவ்வேறான காலகட்டத்தில் சிறுபத்திரிக்கைகளுக்கு சுஜாதா கொடுத்த நேர்காணல்களும், சில பிரபலங்களுடனான அவரது உரையாடல்களும் கொண்ட ‘விசா’ வெளியிட்டிருக்கும் 250+ பக்கங்களில் ஒரு சிறு புத்தகம். வாங்கிவந்தேன்.

வருகிற வழியிலேயே லால்பாகின் ஏசி சேர்காரின் சுகத்தில் அடிக்கடி பாடாவதி டீ, காஃபியைக் குடித்துக்கொண்டு, கவிதை, கட்டுரை என தீராநதியைத் தீர்த்தேன். வீட்டுக்கு வந்து சில நாட்களுக்குப்பின் சாவகாசமாக சுஜாதாவைக் கையிலெடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறேன். பிரபங்களும், பத்திரிக்கைக்காரர்களும் அவரோடு உரையாடியிருக்கிறார்கள். எழுபது/எண்பதுகளில் அவர் கொடுத்த நேர்காணல்கள். ஏதேதோ பெயர் தெரியாப் பத்திரிக்கைகளுக்கும்கூடப் பேட்டி கொடுத்திருக்கிறார். பத்திரிக்கையா முக்கியம்? சுஜாதா தன் எழுத்தைப்பற்றி, பொதுவாக இலக்கியம், சினிமா போன்ற விஷயங்கள்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதல்லவா நாம் தேடுவது.

வார்த்தைப் பரிமாறலின் நடுவே அங்கங்கே அவர் சுவாரஸ்யமாகத் தொட்டுச்சென்ற சிலவற்றைப் பார்ப்போம். படிகள் என்கிற ஒரு சிற்றிதழோடு தமிழின் சமகால எழுத்துபற்றிக் கலந்துரையாடுகிறார். பேச்சு மரபு எழுத்து, புதிய வகை எழுத்து, மாற்றங்கள் எனச் செல்கிறது. ‘ஏன் அகிலன், நா.பா., சாண்டில்யன், சிவசங்கரி போன்ற ஃபார்முலா எழுத்தாளர்களை உங்களால் ரசிக்க முடியவில்லை?’ என்கிற கேள்விக்கு சுஜாதா சொல்கிறார்: ’புதிய எழுத்தாளர்களில் மிகப் பலரை நான் ரசிக்கிறேன். ஃபார்முலா எழுத்தாளர்களின் ஃபார்முலா ரகசியத்தை மிகவும் தெரிந்தவன் என்கிற ரீதியில் என்னால் அவர்களை ரசிக்கமுடியவில்லை. செயற்கைத்தனமான எழுத்தை என்னால் மிகச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடமுடிகிறது. இதே காரணத்தினால்தான் என்னால் வண்ணநிலவன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்களை ரசிக்கமுடிகிறது. அவர்கள் எழுத்தில் இருக்கும் sincerity-யினால் என்றுகூடச் சொல்லலாம். Good writing is also an exercise in style’ என்கிறார். ’அசோகமித்திரனின் எந்தக்கதைகளை ரொம்ப ரசித்தீர்கள்?’ என்கிற கேள்விக்கு சுஜாதா: ‘வழி’ என்று ஒரு கதை. மற்றும் புலிக்கலைஞன், எலி, விமோசனம் – நிறையக் கதைகள்’.

இலக்கியத்தில் சிறுகதை வகைமைபற்றி, சிறுகதையில் சொல்லப்படும் ‘message’-பற்றிப் பேச்சு தொடர்கிறது. சுஜாதா சொல்கிறார்: ’சிறுகதை என்பது ஓர் முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.. அந்த முரண்பாடு உண்மையானதாக, பிரச்சாரமில்லாமல் செயல்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். நல்லகதைகளில் அந்த முரண்பாடு மிகவும் பொதிந்து மறைந்திருக்கும்’ என்கிறார். மேலும், ’சிறுகதையில் ‘message’ கூடாது என்று சொல்லவில்லை. அது ‘implied’-ஆக, அமுக்கலாய் இருக்கவேண்டும்’ என்றவர், தன்னுடைய ‘கரைகண்ட ராமன்’ ஆரம்ப எழுத்தாளருக்குப் பாடமாகக்கூடிய நல்ல கட்டிட அமைப்புக்கொண்ட கதை என்கிறார். இப்போது ’நிறையப்பேர் நல்ல சிறுகதை எழுதுகிறார்கள் என்றவர் பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், லா.ச.ரா. போன்றோரை உதாரணங்களாகக் குறிப்பிடுகிறார். ’இப்படி 50-60 பேர் இருப்பார்கள். எல்லோருடைய நல்ல கதைகளையும் தொகுத்துப் போடலாம். அப்படிப்போட்டால் என்னுடையது ஒண்ணு, ரெண்டு தேறும்’ என்கிறார் சுஜாதா!

தன்னைக் கவர்ந்த தமிழ் நாவலாசிரியர்கள்/நாவல்கள் என்பதாக அவர் குறிப்பிட்டவை: ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’, சுந்தரராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, நீலபத்மனாபனின் ‘தலைமுறைகள்’ , தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’.

சமகாலத் தமிழ் மொழியில் இலக்கிய விமரிசனம் என்பதாக ஒன்று இருக்கிறதா? அப்படியிருப்பின் அந்த வகைமைபற்றி என்ன சொல்கிறார் சுஜாதா? ’விமரிசனத்தில் நிறையப்பேர் எழுதுகிறார்கள்தான். Deep–ஆக யார் எழுதுகிறார்கள்? Objective-ஆக எழுதுபவர்கள் இருப்பதாகத் தெரியலே.. சிலர் எழுதுவதில் அவர்களுடைய சொந்தக் கோபங்களெல்லாம் நிறைய வந்துடுது..’

இந்தப் புத்தகத்தில் சுஜாதாவழி பல சுவாரஸ்யங்கள் வாசகருக்குக் கிடைக்கின்றன. சோ-வின் துக்ளக் பத்திரிக்கை சுஜாதாவை பேட்டி கண்டிருக்கிறது என்பது ஆச்சரியம். துக்ளக்கின் ஒரு கேள்வி: ’திடீரென்று சுஜாதா என்ற பெண் பெயருக்குள் ஒளிந்துகொண்டது ஏன்? உங்களுக்கு சொந்தப் பெயரிலேயே எழுதும் தைரியம், தன்னம்பிக்கை இல்லையா?’ சுஜாதா பதில் சொல்கிறார்: ’ஒளிந்துகொண்டிருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ‘சாகே’ என்கிற புனைபெயரில் ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் எழுதினார். ‘சாகே’ என்றால் மது ஊற்றித் தருகிற பெண் என்று அர்த்தம். புனை பெயரில் செக்ஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ‘கரிச்சான்குஞ்சு’ என்றுகூடப் புனைப்பெயர் இருக்கிறது..’

சோ மேலும் கேட்கிறார்: ’பெண் பெயரில் எழுதுகிற நீங்கள் பெண்களைப்பற்றி நிறைய வர்ணிப்பதால்தான் உங்களுக்கு மவுசு ஏற்படுகிறது என்கிறேன்?’ அதற்கு சுஜாதா சொல்கிறார்: ’அப்படியில்லை. சுஜாதா என்பவர் பெண் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்…’ ’எழுத்தில் உங்களது சாதனைகள் என்ன?’ எனும் சோவின் கேள்விக்கு சுஜாதாவின் பதில்: ‘நீங்கள் என்னைப் பேட்டி காணுகிற அளவுக்கு நான் வளர்ந்திருப்பதே ஒரு சாதனைதானே?’

’உங்கள் சாதனைகள்பற்றி நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்?’ தொடர்கிறார் சோ.

’சில கதைகளைக்குறித்து நான் பெருமைப்படுகிறேன். ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வில் நான் ஏராளமான உத்திகளைக் கையாண்டிருக்கிறேன். {ஆனந்தவிகடனில் வெளியான தொடர். பின்னர் அதே பெயரில் படமாகவும் வெளிவந்தது (1981)}. அதற்காக நாட்டுப்பாடல்களைப்பற்றி நிறையப் படித்தேன். அவற்றை ஆய்வு செய்து அந்தத் தொடரில் பயன்படுத்தினேன்’ என்று தெளிவாக்குகிறார் சுஜாதா.

(தொடரும்…)

6 thoughts on “மீண்டும் சுஜாதா . .

  1. இந்தப் புத்தகம் என்னிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட சுஜாதாவின் அனைத்துப் புத்தகங்களும் வைத்திருக்கிறேன். நடிகை சுஜாதாவுடனான பேட்டி பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதைப் படியுங்கள்! தனனிக் கவர்ந்த நாவல்கள் லிஸ்ட்டில் ஜி நாகராஜன் அவர்களின் நாளை மற்றுமொரு நாள் மட்டும் படித்ததில்லை.

    Liked by 1 person

  2. ஓ! நீங்கள் ஒரு சுஜாதா ஸ்பெஷலிஸ்ட்! இந்தப்புத்தகமும் உங்களிடம் இருக்கிறது. அப்படியெனில் என்னுடைய இந்தக்கட்டுரை மற்றவர்களுக்கு.

    ஜி.நாகராஜன் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. தேடித்தான் வாங்கவேண்டும். சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’ -விகடன் பிரசுரமென நினைக்கிறேன். அது மூணு பாகமா?

    Like

    1. கற்றதும் பெற்றதும் விகடன் பிரசுரமாக வெளியானபோது இரண்டு பாகம், மூன்று பாகம் என்று வந்தது. கிழக்குப் பதிப்பகத்தில் ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

      Like

      1. கிழக்கு அதை ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளதா? நல்லது. 2003-ல் டோக்கியோவில் இருந்தபோது எனது தமிழ் நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து அதன் முதல் பாகத்தை வாங்கிப் பரிசளித்திருந்தார்.
        சுஜாதாவின் ‘கணையாழி கடைசிப்பக்கம்’ கட்டுரைகளை வாசிக்கவேண்டும். வணிகப்பத்திரிக்கைகளில் எழுத முடியாத பலவிஷயங்களை-இலக்கிய விமர்சனம் உட்பட- அதில் எழுதியிருப்பார் அவர். உங்களிடம் இது இருக்கலாம்.

        Like

  3. சுஜாதாவை நானும் வாசித்திருக்கிறேன் அப்போது ரசித்ததோடு சரி மீண்டும் மீண்டும் தேடிப்பார்த்து வாசிக்கும் பழக்கம் இல்லை

    Like

    1. சுஜாதாவின் ‘சின்னஞ்சிறு கதைகள்’ தொகுப்பினை இரண்டு வருடம் முன்பு சென்னை புத்தகவிழாவில் வாங்கினேன். அவ்வப்போது நெட்டில் அவரது தரமான கதைகளைக் கண்டெடுத்துப்படித்திருக்கிறேன். சமீபத்தில் அவரது கதைகளில் ஆர்வம் காட்டிய உறவினர்கள் இருவருக்கு அவரது சிறுகதைத்தொகுப்புகள் சிலவற்றை வாங்கிப் பரிசாக அனுப்பிவைத்தேன். வாசிக்க விழைவோருக்கு என்னாலானது.

      Like

Leave a reply to Aekaanthan Cancel reply