பிரிந்தோம் .. சந்தித்தோம் .. !

இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயக அமைப்பில், அரசியல் எப்போதும் களைகட்டத் தவறுவதில்லை. அதுவும் சமீபகால தமிழக அரசியல் பரபரப்புக் கூடாரமாக ஆகிவிட்டிருக்கிறது. சீன் வேகவேகமாக மாறுகிறது. பாத்ரூம் போய்வருமுன் என்னென்னமோ நடந்துவிடுகிறது மேடையில். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு பொறுமையின் பூஷணங்களாய் மக்கள்.

அதிகாரத்தைத் தன் வசம் வைத்திருக்கும் கட்சியின் இருகூறுகள், இருபாதிகள், தேங்காய்மூடிகள் சேர்ந்துவிட்டன ஒன்றாய். அவருக்கு இந்தப் பதவி. இவருக்கு அந்தப் பதவி. அவருக்கு, இவருக்கு என இன்னும் புதுசு புதுசா சில பதவிகள்/பொறுப்புகள். படபடக்கும் மீடியா ஒரேயடியாகக் கவிகிறது வெள்ளைச்சட்டைகளின் மேல். பரபர காமிராக்களுக்கு முன் வாயெல்லாம் பல்லாகக் கட்சித்தலைகள். அழுத்தமான கைகுலுக்கள். அதிமுக அரசியல்வாதிகளின் பிக்னிக் ஸ்பாட்டான ஜெயலலிதாவின் சமாதியில் நெருக்கம். உருக்கம். வணக்கம். ஒரு தாய் மக்கள். சுபம்.

எதிர்க்கட்சி என்று ஒன்றும் இருக்கிறது இங்கே. அவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஸ்டீரியோ-டைப் கமெண்ட் ஒன்று போட்டுவிடுகிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறும் சில்லரை எதிர்க்குரல்களும் அவர்கள் பங்குக்கு மிர்ச்-மசாலா சேர்க்கத் தவறுவதில்லை: மோதியின் சாகசம்..அமித் ஷாவின் சூழ்ச்சி..டெல்லியின் ஆசீர்வாதம். சுருக்கமாக, பணம், பகட்டு, அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு. தொழில் முனைப்பு மீடியாவுக்கு. காதில் பூவும், தீராத பொழுதுபோக்கும் தமிழனுக்கு.

தொண்டையைக் கனைத்துக்கொண்டு தயாராக இருந்த கமல் ஹாசன் ட்வீட்டிவைத்தார்: காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர் குல்லா! தற்பொழுது கோமாளிக் குல்லா தமிழனின் தலையில்! போதுமா இன்னும் வேண்டுமா? – என்றெல்லாம் உசுப்பிவிட்டுள்ளார் ஹாசன். தமிழ்நாட்டின் ஏகபோக அரசியல் கவிஞரான மனுஷ்யபுத்திரன் ஏதாவது எழுதிவைப்பாரோ முகநூலில்? பதறவேண்டாம். அப்படி அவர் ஏதும் எழுதினால், சாரு நிவேதிதாவின் பக்கத்தில் சாவஹாசமாகப் படித்துக்கொள்ளலாம்.

அடுத்த சீனுக்குக் கொஞ்சம் டயம் ஆகலாம்
காத்திரு தமிழனே காத்திரு
வெயிலில் எப்போதும் வேர்த்திரு
உனக்கும் கிடைக்கலாம் ஒருநாள் ‘தமிழ் திரு’ . .

**

10 thoughts on “பிரிந்தோம் .. சந்தித்தோம் .. !

 1. இந்தக் குழப்பத்தை விலக்கி வல்லவன் ஒருவன் கிளம்பி வருவான் என்று நம்பிக்கை இருக்கிறது. (நல்லவன் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை).

  Liked by 1 person

 2. நாடகங்கள் இன்னும் முடியவில்லை. ஆரம்பக்காட்சிதான் இது. தியானங்கள் தொடர்கின்றன. ஆட்கள்தான் மாறுகிறார்கள். ஒரு முதல்வருக்கு வோட் போட்டு எத்தனை முதல்வர்களைப்பார்ப்பது? தியானம், தர்மம் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் போய்க்கொண்டிருக்கிறது.

  Liked by 1 person

 3. @ஸ்ரீராம்: அரசியலில் தனிமனித நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகவே எஞ்சியிருக்கிறது. இன்னும் என்னென்ன கூத்துகளைப் பார்க்கவேண்டியிருக்குமோ!

  Like

 4. இதைப் படிக்கும்போதே அடுத்த காட்ச்சிக்கான முஸ்தீபுகள் துவங்கி விட்டனவே தினகரன் ஆதரவாளர்கள் 19 பேர் கவர்னரைச் சந்தித்திருக்கிறார்களாம் நம்பிக்கை இல்லையென்று புதுச்சேரிக்கு கூட்டி[ போகப்பட்டிருக்கிறது இந்த கூட்டம்

  Liked by 1 person

 5. அரசு அலுவல்கள் முடங்கி கிடக்கிறது . அது எப்போது செயல்படும் என்று தெரியவில்லை. நிரந்தர தலமை வந்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.
  பிரிந்து சந்தித்து ஓற்றுமையாக மக்களுக்கு நல்லது செய்தால் போதும்.

  Liked by 1 person

 6. @கோமதி அரசு: உண்மைதான். அடுத்த தேர்தல் என்று கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை வாரியிறைக்காமல், நிலையாக அரசொன்று சுமாராக ஆண்டால்கூடப் போதும் மக்களுக்கு..

  Like

 7. நமது மக்களால் வேடிக்கை மட்டுமே காண இயலும் நண்பரே
  இன்னும் வெகுகாலமாகுமோ…. தமிழன் விழிக்க என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறுகிறது….

  Liked by 1 person

 8. @ கில்லர்ஜி தேவகோட்டை: இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..நாட்டிலே.. பழைய பாடல் நினைவுக்குவருகிறது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s