ஓவியா .. ஜூலி .. ரைஸா .. ஐலசா !

காலை எழுந்தவுடன் காஃபி குடித்துக்கொண்டே ரிலிஜியஸாக நெட்டைத்தட்டிவிட்டு தமிழ் மீடியா உலகுக்குள் அலைகிறேன். நாட்ல எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டுருக்கு? நம்ப தமிழ்நாட்ல ஆட்சி என்று ஒன்று நடந்துவருகிறது. சரி. கட்சி? அதைப்பற்றித் தெரிந்துகொள்ள முயன்றால் காலைக் காஃபியின் மணமும் கதறிக்கொண்டு வெளியேறிவிடும். எக்கேடுகெட்டாலும் ஒழியட்டும். பொதுமக்களுக்கே வரவர கட்சிகள்மேல ஈர்ப்பு விட்டுப்போயிடுச்சு. நமக்கெதற்கு காலைல வயித்துவலி?

வேறென்ன விசேஷம்? உருகியும், அணைத்தும், அழுதும், முத்தமிட்டும் ரசிகர்களின் கனவுலகில் ஏகப்பட்ட அளவுக்கு எகிறிக்கொண்டிருந்த ஓவியா, ’பிக் பாஸி’லிருந்து வெளியேறுவார்..வார்…வெளியேறியேவிட்டார். தன் மென்மையான குணநல வெளிப்பாட்டினால் ரசிகர்களின் மனவெளியில் கோலோச்சிய ஓவியா நிகழ்ச்சியிலேயே இல்லையா? செம கடுப்பில்இ ருக்கிறார்கள் ஓவியா ரசிகர்கள். அவரின் சோகக் கதையைக்கேட்டு கமல் ஹாசனும் கண்கலங்கினார் (பெண் என்றாலே நெகிழ்பவராயிற்றே. ஓவியாவுக்காக உருகாவிட்டால் எப்படி?) ஏன், ப்ரொக்ராமை நடத்தும் ஸ்டார் விஜய் சேனலுக்கேகூட ஓவியா வெளியேறியது பிடிக்கவில்லையாமே. ‘’ஆரவ்வை என்னால் மறக்கமுடியாது. அவர் என்னிடம் வருவார்!’’ உணர்ச்சியின் உச்சத்தில்ஓவியா வார்த்தைகளை விட்டுவிட, ’என் மகள் அப்படிப்பட்டவளல்ல. நிஜத்தில் அவளுக்கு நடிக்கத் தெரியாது !’ என்று சாவகாசமாக அறிவிக்கிறார் அவருடைய அப்பா. (இவரைப்போய் யாருய்யா இண்டர்வியூ எடுத்தது?) மேலும் பிக் பாஸ் அறிவிப்புகள்/யூகங்கள். ஜூலியும் வெளியேறிவிட்டார். ஓவியாவை திருப்பிக்கொண்டுவர முயற்சி? ’ஓவியாவைப்பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள்!’ – நடிகர் சித்தார்த் (இவரு இப்ப எங்கேர்ந்து வந்தாரு?) பாரதியின் புதுமைப்பெண் போன்றவர் ஓவியா-ஆதலினால் காதல் செய்தார்! –இயக்குனர் சீனு ராமசாமி. அட! அட! இந்த ஓவியா யாரயும் விட்டுவைக்கல போலருக்கே. க்ரிக்கெட்டில் ’பாரத் ஆர்மி’ மாதிரி, தமிழ்நாட்டில் இப்போது ’ஓவியா ஆர்மி’ ஒன்று உருவாகிவிட்டதாமே. ஓவியா இல்லாத பிக் பாஸ், ஜெயலலிதா இல்லாத அதிமுக, சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் என்றெல்லாம் ஏதேதோ எண்ணித் தூக்கம் வராமல் தவிக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி ஓவியா, ஓவியா என மீடியா அலை அலையாக மேலெழுப்ப, நான் திக்குமுக்காடி, மனதுக்குள் அவராகவே மாறி அவரது எமோஷன்களை, உளைச்சல்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டதாகத் தோன்றியது. சே! இந்த மீடியாக்கள் நம்மை கொன்றுப்போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்வார்கள். இன்னொரு காஃபி கிடைத்தால் பரவாயில்லை. மனமெல்லாம் ஓவியா..மனைவியிடம் போய் காஃபியா? விண்ணப்பிப்பதில் அர்த்தமேதுமில்லை. இதற்குப் பதில் இன்னொரு ஆதார் கார்டிற்கு விண்ணப்பித்துப் பார்க்கலாம். இந்திய அரசு இளகிய அரசு; கொடுத்தாலும் கொடுத்துவிடும்.

மேற்கொண்டு செய்திகளைக் கண் மேய்ந்தது. ஜியோவோடு போட்டிபோடும் ஏர்டெல். ம்ஹும்! ரொம்ப முக்கியம். மோதி-அமித் ஷாவினால் காங்கிரஸுக்கே நெருக்கடி!- பின்ன என்ன செய்யணும்கிறீர் ஜெயராம் ரமேஷ். அரசியல்ல நெருக்கடிகூட இருக்கக்கூடாதா ? நல்லா இருக்குய்யா நீர் சொல்றது! மேல..மேலப் போனதில் தட்டுப்பட்டார் ஒருவர். விஜய்சேதுபதி. ’யாரு?’ என்று என் மனசைக் கேட்டுவைத்தேன். ’’அட நம்ம விஜய் சேதுபதி..சூப்பர் ஆக்டரு! விக்ரம் வேதாவுல கலக்கிருக்கார்ல..தெரியாது? மொதல்ல நீ தமிழ்ப் படங்கள கொஞ்சம் உருப்படியாப் பார்க்கப்பாரு..அப்பறமா சீனா-இந்தியா, வடகொரியா-அமெரிக்கா, சிரியா-ஈராக்னு உலக அமைதியப்பத்தில்லாம் கவலப்படலாம்!’’ – மனசு என்னை வன்மையாகக் கண்டித்தது. காலையிலேயே அர்ச்சனை? கேட்டுக்கொண்டேன்; மனசின் அடக்குமுறை ஆட்சியில்தானே இருக்கிறேன் நான்? இப்ப என்ன விஜய்ரகுபதி..சாரி, விஜய் சேதுபதியா…சரி, அவரப்பத்தி என்ன தெரிஞ்சுக்கணும்? சிந்தனையோடு மேலே கண்களை ஓட்டினேன். ’’புதிதாக பிஎம்டபிள்யூ வாங்கினார் விஜய் சேதுபதி. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்…’’ ஓ..! ’’அவர் வாங்கியிருக்கும் காரின் நிறம் வெள்ளை..அவரது மனதைப்போலவே!’’ மேலும் உருகி எனது செண்டர்-டேபிள் மீதெல்லாம் வழிந்தது தமிழ்மீடியா. எனவே, கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு வாழ்வெல்லாம் புலம்பிப் புண்ணாகிக் கதை ஓட்டுவோரே.. விடாதீர்கள்.
முன்னேறுவதற்குக் கடுமையாக முயலுங்கள். அப்படி ஒருவேளை முன்னேறியேவிட்டால், மறக்காமல் வாங்கிவிடுங்கள் ஒரு பிஎம்டபிள்யூ. ஞாபகம் இருக்கட்டும் கலர் வெள்ளை. உங்கள் வெள்ளந்தி மனசோடு மேட்ச் ஆகணும் இல்லையா?

**

6 thoughts on “ஓவியா .. ஜூலி .. ரைஸா .. ஐலசா !

  1. @திண்டுக்கல் தனபாலன்:
   சும்மா ஒரு ஹாஸ்ய போஸ்ட் போடுவோமே என்கிற நினைப்பில்தான் ஜனரஞ்சகமாக ஆரம்பித்தேன். ஆயினும் பின்னணியில், எத்தனையோ தலைபோகிற விஷயங்கள் நாட்டில் தடதடக்கையில், எதனையெல்லாம் கட்டிக்கொண்டு அழுகிறார்கள் நமது மீடியாவாலாக்கள் என்கிற எரிச்சல் மேற்கொண்டு இழுத்துச்சென்றுவிட்டது.

   Like

 1. நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் சிலருக்கு ஓவியாவின் தெய்வீக காதல் வெற்றி பெறணும் உண்மையிலேயே ஆரவ்வை இனி இவள் ஒதுக்கணும் காரணம் அவன் சந்தர்ப்பத்தை பயன் படுத்தப்பார்த்தான் இதுதான் உண்மை.

  சரி விடுங்க நண்பா…. மொள்ளமாறி பயலும், முடிச்ச வித்த சிரிக்கியும் எப்படிப் போனால் நமக்கு என்ன ?

  ரேஷன் கடையை மூடப் போறாங்களாம் பாவம் அந்த அரிசியை நம்பி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இனி எப்படி ஆகும் ?

  Liked by 1 person

  1. @கில்லர்ஜி தேவகோட்டை:
   நாட்டில் எத்தனையோ விஷயங்கள், மக்களின் தீராப் பிரச்னைகள் நமது கவனத்தை தினம் கோருகின்றன. அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் ஹவுசஸ் ஆகியவைகளிலிருந்து காசு வாங்கி ஏப்பம் விடும் நமது மீடியாவுக்கு அதிலெல்லாம் அக்கறையில்லை.
   பதவி, பணமெனப் பேயாய் தினம் அலையும் அரசியல்வாதிகளுக்கு சாதாரண மனிதனின் வயிற்றுப் பசியைப்பற்றி, தினசரித் தேவைகளைப்பற்றி என்ன கவலை இருக்கமுடியும் ?

   இருந்தும், இது நமது நாடு, இவர்கள் நம்மக்கள். கவலைப்படாதிருக்க நம்மால்
   முடிவதில்லை

   Like

 2. செய்திக்கதம்பம்! ஆதார் அலப்பறைகளை விட்டு அதை ஒரு வரியில் கடந்து விட்டீர்கள். மற்றபடி விஜய் சேதுபதி முதல் ஓவியா வரை மனவோட்டம் அருமை. அரசு நடக்கிறதோ இல்லையோ, நாளும் ஒரு அறிக்கை வெளியாகிறது!

  Liked by 1 person

  1. @ஸ்ரீராம்:
   துன்பம் மேல் துன்பம் வரினும், பொறுமைகாத்து நிற்கும் அப்பாவி மக்கள் ஒருபுறம். அறிக்கை விட்டு, அபார ஊழல் செய்து அலட்சியமாய் வாழும் அரசியல் பெருச்சாளிகள் மறுபக்கம்.
   நடுவிலே நம்மைப்போன்றவரும் மாட்டிக்கொண்டு எதையாவது பேசுகிறோம், சிந்திக்கிறோம், எழுதுகிறோம். நல்ல காலம், ஒருகாலத்திய சோவியத் யூனியன் போன்று நாம் செங்கொடிக்குக் கீழ் வரவில்லை. வந்திருந்தால் வாயைத் திறந்திருக்கமுடியாது. இல்லை, நாடு கடத்தியிருப்பார்கள்! கடவுளின் கருணை.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s