தப்பு செய்றீங்க !

காலையில் வேலை நெருக்கடி இல்லாத சமயங்களில், ஸ்ட்ராங்கா ஒரு ப்ளாக் காஃபி குடிக்கக் கொஞ்சம் வெளியில் போய் வருவேன். வெளியில் என்றால் ஆஃபீஸிலிருந்து கொஞ்சம் நடக்கும் தூரத்தில். கூடவே வருவார் அலுவலக நண்பர் ஒருவர். அவரும் ஒரு காஃபி ப்ரியர். ஆர்டர் செய்துவிட்டுப் பேசிக்கொண்டிருப்போம்.

ஒரு நாள் இப்படி அளவளாவிக்கொண்டிருக்கையில் ’ராத்திரி என்ன சார் சாப்பிட்டீங்க?’ என்றார். ’ராத்திரில என்ன, லைட்டாத்தான். கொஞ்சம் தயிர்சாதம்’ என்றேன். காஃபி வந்தது. புதிதாக அரைத்து செய்த காஃபியின் அரோமா ஆளைத் தூக்கியது. உறிஞ்சிக்கொண்டே என்னைக் கூர்மையாகப் பார்த்தார். ’ராத்திரி வேளையில் தயிர் சாப்டுறீங்களா!’ என்றார் குரலில் வியப்பு காட்டி. ‘ஏன் ராத்திரிக்கு என்ன? தயிர்சாதமோ, மோர் சாதமோ, எப்ப சாப்பிட்டாலும் ஒடம்புக்கு நல்லதுதானே’ என்றேன் அலட்சியமாக. மண்டையாட்டி மறுத்தார். ‘தப்பு செய்றீங்க!’ என்றார் எச்சரிக்கும் தொனியுடன். காஃபியின் டேஸ்ட் திடீரெனக் குறைந்தது. ‘இதெலென்ன தப்பு ?’ என்றேன் புரியாமல். ’ஒங்களுக்கு யாரும் சொன்னதில்ல? ராத்திரியில தயிர் சாப்பிடறதை விட்டுருங்க! ஒடம்புக்குக் கெடுதல்’ என்றார். மேற்கொண்டு விளக்கவில்லை. நானும் கேட்கவில்லை. பேச்சு வேறுதிசைக்கு மாறியது.

இன்னொரு நாள் என்னைக் கவனித்தார். குறிப்பாக என் விரல்களை. இப்போது என்ன! ’மோதிரத்த இந்த விரல்லயா போட்றீங்க!’ ‘மோதிர விரல்ல கொஞ்சம் லூஸா இருக்கு. அதான்!’ என்றேன் அப்பாவியாக. என்னை ஊடுருவிப் பார்ப்பதாகத் தெரிந்தது. ‘ஒங்களுக்கு ஹெல்த் ப்ராப்ளம் இருக்குல்ல!’ கேட்டார் ஒரு கேள்வி. நான் பிடிகொடுக்காமல் ’ஹெல்த் ப்ராப்ளம் யாருக்குத்தான் இல்ல? ஒடம்புன்னு ஒன்னு இருந்தா, ப்ராப்ளம்னு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்’ என்று மேட்டரை தத்துவார்த்த லெவலுக்குக் கொண்டுசெல்ல முயன்றேன். அவர் விடுவதாயில்லை. ’அப்படில்லாம் இல்ல சார். மோதிரத்த மொதல்ல மோதிர விரலுக்கு மாத்துங்க. உங்க ப்ரச்னகளுக்கு இதுவே காரணமா இருக்கலாம்!’ என்றார் அசரீரி போல. எனக்கு என்ன ப்ரச்னை? எனக்கே தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இப்படியெல்லாம் நாட்டில் மனிதர்கள் உண்டு.அவ்வப்போது குண்டுவீசிக்கொண்டு. ஒரேயடியாக அதிர்ந்து விடாமல் நாம்தான் பேலன்ஸோட இருக்கவேண்டியிருக்கிறது. அதே சமயம், உடல் ஆரோக்யம் போன்ற விஷயங்களில் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.

வேளாவேளைக்கு சரியாகச் சாப்பிட்டு, சரியாகத் தூங்கினால் போதும் – பொதுவாக ஆரோக்யமாக இருக்கும் உடம்பு என்கிறார்கள். உண்மைதான். இதில் ‘சரியாக’ என்பதைச் சரியாகக் கவனிக்கவேண்டும். சரியாக சாப்பிடுதல் என்பதில் உடம்புக்கு சத்தூட்டும், உடம்புக்குப் பழகிப்போன, குடலுக்கு இதமான பாரம்பர்ய உணவுவகை என்று கொள்ளுதல் நல்லது. சரியான தூக்கம் என்றால் இரவு பத்தரை மணிக்காவது படுக்கையில் விழுந்து, ஒரு ஏழுமணிநேரமாவது – சொப்பனமாப் பிடுங்கித் தின்னாமல் – நன்றாகத் தூங்குவது என்று கொள்ளவேண்டும். பாரம்பரிய உணவும் பதமான தூக்கமும் இருந்தால், உடம்பு இளமையோடு நீண்டகாலம் நம்கூட வரும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுவா நடக்கிறது இப்போது? குறிப்பாக, எல்லாமே வேகம், பரபரப்பு என்று ஒரே monotonous-ஆக ஆகிப்போன இயந்திரமய வாழ்வில் இதெல்லாம் கூடிவருமா? இளைஞர்கள், யுவதிகள் தங்களுக்குத் தாங்களே வைத்துக்கொண்டிருக்கும் சூனியங்கள் – I mean, தொழில்ரீதியான இலக்குகள். கூடிவரும் வேலைப்பளு, மனஅழுத்தங்களோடு அடிக்கடி பயணம் வேறுசெய்யவேண்டியிருக்கிறது. தூக்கத்தைக் கெடுக்கும் விமானப்பயணங்கள். வயிற்றுக்குச் சரியான சாப்பாடின்மை. எல்லாம் சேர்ந்து இளம் உடம்புகளைக் காலப்போக்கில் ஒரு வழிபண்ணிவிடுகின்றன. சின்னவயதில், ஆர்வமிகுதியில் பெரும்பாலானோர்க்கு ஒன்றும் புரிவதில்லை. அவர்களது கண்மண் தெரியாப் பரபரப்பில் நாம் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இல்லை. ஆனால் பெரும்பாலானோர் முப்பதுகளின் மத்தியில் அவர்களின் வயது வரும்போதே, ஏதோ நாற்பதுகளின் இறுதிக்கு வந்துவிட்டவர்களைப்போல் முகம் களையிழந்து ஒரு சோர்வு, அழற்சி என்று பரிதாபமாக காட்சிதர ஆரம்பிக்கிறார்கள். அதாவது முந்தைய தலைமுறை தங்களுடைய வயதின் நாற்பதுகளின் இறுதிகளில் அல்லது ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சந்தித்த ஆரோக்யப் ப்ரச்னைகள் சிலவற்றை, இப்போதைய தலைமுறை முப்பதுகளின் இறுதிகளுக்குள்ளேயே எதிர்கொண்டு மன உளைச்சல் கொள்கிறார்கள். தங்களின் மனதையும், உடம்பையும் சரியாக நிர்வாகம் செய்வதறியாது தவிக்கிறார்கள். தற்போதைய வாழ்வியல் மதிப்பீடுகள், வாழ்வுமுறைகள் சரியான பாதையில் செல்லவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பெரும்பாலும் யாராலும் கவனிக்கப்படாத, ஆனால் இன்றியமையாத விஷயம் ஒன்று இங்கே இருக்கிறது. அது –காலமாறுதலுக்கேற்ற பிஸி வாழ்க்கையினூடே- ஒவ்வொருவருக்கும் கிடைக்கவேண்டிய போதிய ஓய்வு, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் அதற்கான கால அவகாசம். நான் ஸ்விட்ஸர்லாந்தில்(ஜெனீவா) மூன்றாண்டு காலம் பணிபுரிகையில் கவனித்திருக்கிறேன். சனி, ஞாயிறு என்கிற வீக்-எண்ட் அவர்களுக்கு ஒரு கொண்டாட்டம் போன்றது. ஆஃபீஸ் முடிவு நேரம் மாலை 5 மணி. இந்தியர்களாகிய நாங்கள் 5 மணி எப்போது போயிற்று என்பதையே கவனிக்காமல், 6 ½, 7 ½ என்று ஒவ்வொரு மாலையும் ஆஃபீஸில் பழியாய்க்கிடப்போம். (எங்கள் தூதரகம் அங்கிருந்த ஐக்கியநாடுகள் சபையின் ஐரோப்பிய அலுவலகத்தோடு இணைக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணம்). சிலருக்கு இரவு 9 மணிவரை செல்லும். நானும் அதில் ஒரு ப்ரக்ருதி. வீட்டிலிருந்து ஃபோன் வந்தவுடன்தான் ஆஃபீஸ் கந்தாயத்தை வலுக்கட்டாயமாக மூடிவிட்டு வெளியே வருவேன். எங்களோடு வேலை பார்க்கும் ஸ்விஸ் மற்றும் வேறுநாட்டவர் அப்படியில்லை. மாலை 5 மணி ஆஃபீஸ் டயம் எனில், 4 ½ மணிக்கு வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள். குறிப்பாக பெண்மணிகள் ! வாஷ்ரூமிற்கு சென்று, டச்-அப், ஸ்ப்ரே இத்தியாதியுடன் ரிஃப்ரெஷ் ஆகி, ஒரு மாடலைப்போல பளப்பளவென வெளியேவருவார்கள். சரியாக 5 மணிக்கு கப்போர்டையெல்லாம் இழுத்து சாத்திவிட்டு ’ச்சாவ்!’ என்று ரீங்காரமிட்டுவிட்டு வெளியே போய்விடுவார்கள். (நமக்கும் அவர்கள் கூடவே ஓடிவிடலாமா என்றுதான் இருக்கும். ஆனால் நமது ’சிஸ்டம்’ இருக்கிறதே – அந்த சனியன் நம்மை விட்டுவிடுமா என்ன!). ஜெனிவாவில் வசித்தபோது அவர்களிடம் காணப்பட்ட இந்த நல்லவிஷயத்தை கவனித்திருக்கிறேன்: ஸ்விஸ்க்காரர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலைகளில் தங்கள் நண்பர்கள்/நண்பிகளுடன் சேர்ந்து, தாங்கள் வசிக்கும் ஊருக்கு வெளியே பயணம் செய்வார்கள். முன்பே ‘புக்’ செய்திருக்கும் ரெஸார்ட்டுகள், ஹோட்டல்களில் தங்கி புதியஊர் சுற்றி, சனி, ஞாயிறை இனிதே போக்கிவிட்டு ஞாயிறு மாலைதான் ஜெனீவா திரும்புவார்கள். திங்கட்கிழமையிலிருந்து வழக்கம்போல் ஆஃபீஸ். இப்படி மனதும் உடம்பும் வாரந்தோறும் ‘ரெஃப்ரெஷ்’ ஆகிறது அங்கெல்லாம்.

நம்நாட்டின் லட்சணம் என்ன? வாரநாட்களில் அலுவலகக் கரைச்சல்கள்போக, சனி, ஞாயிறுகளில்கூட சில சமயம் ஆஃபீஸ் போகவேண்டியிருக்கிறது. மேலாளர்கள் அல்லது ப்ராஜெக்ட் ஹெட்கள் சனி, ஞாயிறன்றுகூட கம்பெனியில் வேலைசெய்பவர்களைத் தூண்டி கம்ப்யூட்டரைத் திறக்கவைக்கிறார்கள். எதையாவது கேட்டு, குடைந்து, வேலைவாங்குகிறார்கள். வீட்டிலும் நிம்மதியில்லை. சுற்றுலா, ஓய்வு என்பதெல்லாம் வருஷத்துக்கு ஒருமுறை நிகழ்ந்தாலே அதிசயம். அதற்கும் ஒரு முயற்சி வேண்டியிருக்கிறது. Excessive and stressful work. No relaxation. விளைவு? நாற்பதுகளிலேயே கண்ணிற்குக் கீழே கருவளையங்களின் நர்த்தனம், தொப்பை விழுந்த, முதுகு கூனாகிப்போன உருவங்கள், தினம் தினம் எதற்காகவாவது மாத்திரை விழுங்க நேரிடும் ஆரோக்யப் ப்ரச்சினைகள், தீராத மன உளைச்சல்கள்.

இப்படியெல்லாம் வதங்கி, வாடித்தான் பெரும்பாலும் இந்தியாவில் நாலுகாசு சேர்க்கவேண்டியிருக்கிறது. இடையில் பிள்ளைகள்வேறு பிறந்துவிட்டனவே! அவர்களைப் படிக்கவைத்து, கல்யாணம் செய்துவைக்கவேண்டியிருக்கிறது; மேற்கொண்டு வீடு, வாசல் வாங்கும்படலம், சமூகக் கடமைகள், குடும்ப உறவுச்சிக்கல்கள்.. அப்பப்பா, மனுஷனுக்குத்தான் எத்தனைக் கஷ்டங்கள் ! இருந்தும் And quiet flows the Don என்பதுபோல், போய்க்கொண்டேதானிருக்கிறது வாழ்க்கை . .

**

Advertisements

About Aekaanthan

writer, poet , freelancer
This entry was posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to தப்பு செய்றீங்க !

 1. சென்ற வருடம் முக நூலில் இதே நாள் சென்ற வருடம் பகிர்ந்த தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய பகுதியில் பழைய பகிர்வைப் பார்த்து விட்டு வந்தால் வரவேற்கிறது அதையே சொல்லும் உங்கள் இன்றைய பதிவு. என் மகன்களுக்கு நான் இவற்றைச் சொல்லி அலுத்து விட்டேன். ஒருவன் அலுவலகம் விட்டே இரவு பத்தரைக்குத்தான் வருகிறான். இன்னொருவனுடன் சேர்ந்து கொண்டு இரவு இரண்டு மணி வரை கொட்டமடிக்கிறார்கள். வார இறுதி என்றால் வெளியில் கன்னாபின்னா உணவு. சொல்லிச் சொல்லி அலுத்து விட்டது. அவர்கள் கேட்பதாயில்லை.

  அவர்கள் கதை இப்படி என்றால் எங்காவது ரெப்ரெஷ் செய்ய வெளியே சென்று வரலாம் என்றால் என்னால் செல்ல முடியாத நிலை. ஆசை இருக்கு தாசில் பண்ண!….

  Liked by 1 person

  • Aekaanthan says:

   உங்கள் கவலை நன்றாகவே புரிகிறது. இன்றைய இளைஞர்கள் காதில் வாங்கிக்கொள்வதேயில்லை. போதாக்குறைக்கு காதில் ear-phone-வேறே! என்னத்தச் சொல்ல!

   எங்கள் வீட்டிலும் கதை இப்படித்தான். ஞாயிறு வந்தால், ‘அம்மா, கிட்ச்சன் பக்கம் போகாதே! இன்னிக்கு வெளில லஞ்ச். புக் பண்ணிட்ட்டேன்!’ என்பாள் பெண்ணரசி. பின்னாடியே ஓடிக்கொண்டிருக்கிறோம். வெளியே அடிக்கடி போய் சாப்பிடுகிற, டின்னருக்குப்போகிற/டின்னர் கொடுக்கிற ஃபாரின் சர்வீஸ் கல்ச்சர் பழக்கம் உண்டுதான் . ஆனால் பெங்களூரிலும் கதை கிட்டத்தட்ட அதே மாதிரிதான் செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை !

   Like

 2. என்னென்னவோ சொல்கிறார்கள் குழப்புகிறார்கள் குழம்புகிறார்கள் இந்தவிரல் இதுக்கானது இந்தவயிறு இதை ஏற்காது சளிபிடிக்கும் மோர் சாப்பிட்டால் சாப்பிடும் முன் பழம் சாப்பிட்ட பின் பழம் எதுதான்சாமி சரி

  Liked by 1 person

 3. Aekaanthan says:

  வயிறு பசித்து வேளா வேளைக்கு வீட்டுச் சாப்பாடு, பட்சணங்கள், seasonal fruits உண்ணுதல், கொஞ்சம் காற்றாட, காலாற நடத்தல், நேரத்துக்குப் போய்த் தூங்குதல், என Lets stick to basics.. Western ideas based – இந்தப் புது மேதாவிகளின் உணவு பற்றிய அறிவுரைகள் நமக்குத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

  Like

 4. ம்… என்னடா பொல்லாத வாழ்க்கை…?

  Liked by 1 person

 5. Aekaanthan says:

  சரிதான் !

  Like

 6. //தங்களின் மனதையும், உடம்பையும் சரியாக நிர்வாகம் செய்வதறியாது தவிக்கிறார்கள். தற்போதைய வாழ்வியல் மதிப்பீடுகள், வாழ்வுமுறைகள் சரியான பாதையில் செல்லவில்லை என்பதையே இது காட்டுகிறது.//
  உண்மை .
  இப்போது உள்ள குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டிய அருமையான விஷயங்கள்.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s