மித்தாலி ராஜ் !

’எந்த ஒரு ஆண் கிரிக்கெட்டரையாவது பார்த்து ’உங்களுக்கு பிடித்தமான பெண் க்ரிக்கெட்டர் யார்’ என்று நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா?’ என்று லண்டனில் ஒரு நிருபரை எதிர்க்கேள்வி கேட்டு திணறவைத்திருக்கிறார் மித்தாலி ராஜ் (Mithali Raj), உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் க்ரிக்கெட் அணியின் கேப்டன். ‘ஆஹா! அந்த மனுஷனின் கேள்வியை அங்கேயே கொன்றுவிட்டீர்கள், மித்தாலி! சபாஷ்!’ என ட்வீட்டியிருக்கிறார் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸா. என்ன கேள்வி, எப்போது நடந்தது இது? இங்கிலாந்தில் மகளிர்க்கான உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக ஆரம்பித்துள்ளன. உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்னான கேப்டன்களுக்கான நேர்காணலில், இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜைப் பார்த்து ஒரு பாகிஸ்தானி நிருபர் அசடு வழிந்திருக்கிறார்: ‘உங்களுக்கு பிடித்த இந்திய ஆண் க்ரிக்கெட்டர் யார் என்று சொல்லமுடியுமா?’ இந்த நோண்டலுக்குத்தான் அப்படிப் போட்டுத்தாக்கினார் மித்தாலி !

மித்தாலி இந்தியாவின் மகளிர் க்ரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர். பல பதின்மவயதுப் பெண்களின் க்ரிக்கெட் ஆதர்ஷம். 2002-ல், தன் 19-ஆவது வயதில் வலிமையான இங்கிலாந்து அணிக்கெதிராக இங்கிலாந்தின் டாண்ட்டன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 214 ரன்னெடுத்து க்ரிக்கெட் உலகை கிடுகிடுக்கவைத்த இந்தியப்பெண். ஒரு-நாள் க்ரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஐந்து சதம் விளாசியுள்ளார். ஒரு அதிசயம்: இந்த ஐந்து சதத்திலும் அவர் நாட்-அவுட்டாக நின்றார்! பெண்கள் க்ரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த இரண்டாவது க்ரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையும் உண்டு. வருடக்கணக்கில் இந்தியாவுக்காக மித்தாலி ராஜ் ஆடிய ஆட்டம் ‘லேடி சச்சின்’ என்கிற செல்லப்பெயரைப் பெற்றுத்தந்திருக்கிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்கிற பெண்ணில்லை அவர். ‘கருமமே கண்ணாயினார்’ என்பதாக, தான் உண்டு, தன் க்ரிக்கெட் உண்டு என்று கடும் பயிற்சி, விளையாட்டு என்று இருக்கிறார் எப்போதும். மகளிர் க்ரிக்கெட்டில் அவரது பேரெழுச்சியைக்கண்டு, 2003-ல் இந்திய அரசு ’அர்ஜுனா அவார்ட்’ வழங்கி கௌரவித்தது.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்து, ஹைதராபாதில் வளர்ந்தவர் மித்தாலி. பெற்றோர் தமிழர். அப்பா துரை ராஜ் இந்திய வான்படை அதிகாரி/க்ரிக்கெட் ஆர்வலர். அம்மா லீலா தன்காலத்தில் க்ரிக்கெட் விளையாடியவர். க்ளாசிக்கல் டான்ஸ் வகுப்புகளை எட்டு வயதில் துறந்துவிட்டு, க்ரிக்கெட் மட்டையைக் கையிலெடுத்தார் மித்தாலி. No looking back, afterwards! அவருடைய விளாசல் இன்னும் தொடர்வது இந்தியாவின் அதிர்ஷ்டம். 2015-ல் இந்திய தேசியவிருதான ‘பத்மஸ்ரீ’, எங்கே மித்தாலி என அவரைத் தேடி வந்தது. அதே வருடம் அவருக்கு ‘விஸ்டன் க்ரிக்கெட்டர்’(Wisden Cricketer of the Year) என்கிற சர்வதேச க்ரிக்கெட் விருதும் கிடைத்தது. இந்தப் பெருமையைப்பெற்ற உலகின் ஒரே பெண் க்ரிக்கெட் வீரர் மித்தாலிதான். இப்போது நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் மதிப்புமிக்க கேப்டன்.

நேற்று(24/6/2017) டெர்பி (Derby)-இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 35 ரன் வித்தியாசத்தில் விரட்டியடித்தது. இந்திய ஸ்கோரான 281-ல் கேப்டன் மித்தாலி ராஜ் 73 பந்துகளில் 71 ரன்னெடுத்து கடைசி பந்தில்தான் அவுட்டானார். இந்த அரைசதம் அவர் தொடர்ச்சியாக ஒரு-நாள் போட்டிகளில் அடித்த 7-ஆவது அரைசதம் – மகளிர் க்ரிக்கெட்டில் ஒரு உலக சாதனை. துவக்க ஆட்டக்காரர்களான பூனம் ரௌத் (Poonam Raut), ஸ்ம்ரிதி மந்தனா, மற்றும் ஆல்ரவுண்டர் தீபிகா ஷர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர், பூனம் யாதவ் (Poonam Yadav), ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்த் (Ekta Bisht), ஜூலன் கோஸ்வாமி (Julan Goswami), வேதா க்ருஷ்ணமூர்த்தி என நீளுகிறது இந்திய வீராங்கனைகளின் அணி.

விராட் கோஹ்லி-அனில் கும்ப்ளே விவகாரத்தைக் கொஞ்சம் மறந்துவிட்டு, இந்தியப் பெண்கள் க்ரிக்கெட் அணியின் வெற்றிநடையில் கவனம் வைப்போமா. தகுதிமிக்க நமது வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவோம், தேசத்தின் பெருமைக்காக அவர்களது கடும் உழைப்பைப் பாராட்டுவோம், வாங்க!

**

5 thoughts on “மித்தாலி ராஜ் !

  1. செய்திகளில் நானும் படித்தேன். ஆனால் பெண்கள் கிரிக்கெட் பார்க்கும் பொறுமை இருந்ததில்லை. மித்தாலி கேட்ட அந்தக் கேள்வி என்னையும் கவர்ந்திருந்தது!

    Liked by 1 person

  2. மித்தாலியின் பதில் ரசிக்க வைத்தது யாரும் யாரிடமும் எதை வேண்டுமானால் கேட்கலாமா

    Liked by 1 person

  3. @திண்டுக்கல் தனபாலன் : இந்த மகளிர் உலகக்கோப்பை விறுவிறுப்பானது. நமது பெண்டிர் எதுவரை செல்கிறார்கள் எனப்பார்ப்போம்

    @ ஜி.எம்.பாலசுப்ரமணியம்: பெண் என்பதால் கொஞ்சம் சீண்டிப்பார்ப்போமே என்கிற ஆண்வம்புக் குணம்!

    @ஸ்ரீராம்: பொதுவாக பெண்கள் க்ரிக்கெட் நிதானமாக, மந்தமாகச் செல்லும்தான். ஆனால் க்ரீஸில் யார் இருக்கிறார் என்பதைப் பொறுத்தது. ஸ்ம்ரிதி மந்தனா – young Indian opener – ஆடுவதை ஒரு நாள் பார்க்கமுயலுங்கள். உங்கள் எண்ணம் மாறிவிடும் .

    Like

Leave a comment