அச்சுபிச்சு வாட்ஸப் மெசேஜுகளுக்கிடையில் ஒருநாள் அதிசயமாக ஓஷோ. என்னவாம் அவருக்கு. . அதாவது என்ன சொல்லிவைத்திருக்கிறார் ? இதுதான்: அனாவசியமாகக் கடந்தகாலத்தைச் சுமந்து கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழையதுகளை மூடிவிடுங்கள்.
ரொம்பச்சரி. ஆனால் அவ்வளவு எளிதான காரியமா அது? நம்ம கடையா என்ன, இஷ்டம்போல் இழுத்து மூடிவிட? அப்படி எல்லாம் மனம் நம் பேச்சைக் கேட்டுவிட்டால் அப்புறம் என்னதான் இருக்கிறது. மனிதன் இன்னேரம் எங்கேயோ போயிருப்பானே ஐயா! இதை எழுதும்போதுகூட என்னை இடையிலே அம்போ என்றுவிட்டுவிட்டு மனம் வேறெங்கோ ரவுண்டுக்குப் போயிருப்பது தெரிகிறதே! அதைத் தற்காலிகமாகவாவது இழுத்து அல்லவா ஸ்க்ரீனுக்குக் கொண்டுவரவேண்டியுள்ளது? ஒரு இடத்தில் நில்லாது எங்கெங்கோ இஷ்டத்துக்கு ரவுண்டு சுற்றிவரும் மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதுபற்றி, அமைதிப்படுத்துதல்பற்றி என்னென்னவோ எல்லாம் காலங்காலமாய் சொல்லப்பட்டுவருகிறதே. பொல்லாக் குணமுடைய மனதை சொல்லாலோ, செயலாலோ அவ்வளவு சுலபமாக நிறுத்திவிடமுடியுமா? எத்தனை பேர் அதை சாதித்திருக்கிறார்கள் இதுவரை?
’ஆயிரம் வாசல் இதயம். . அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். .’ அதில் எந்த வாசலை மூடுவது? அப்படியே மூடினாலும் இன்னொன்று தன்னால் திறக்கும் தன்மையதாயிற்றே. மனிதன் என்னதான் செய்வான் பாவம்? ’மனம் ஒரு குரங்கு . . ! ’ என்று இன்னொரு இடத்தில் ஆரம்பித்த கண்ணதாசன் தொடர்ந்து ‘. . நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும் . . நிம்மதி இல்லாமல் அலைபோல மோதும்!’ என்றெல்லாம்வேறு நொந்துபோய் எழுதியிருக்கிறாரே. சித்தர்களையே சித்தம் கலங்கவைத்த விஷயமாயிற்றே. . அத்தகைய குணவான் ஆன மனதிடம்போய் ’அந்தக்காலத்துக்கெல்லாம் திரும்பித் திரும்பிப் போகாதே . . பழைய குப்பையைக் கிளறித் தொலைக்காதே! கொஞ்சம் சும்மா மூடிகிட்டுக் கிட!’ என்றால் கேட்டுவிடுமா?
’மனமே முருகனின் மயில்வாகனம் . . ‘ என்று ஆரம்பித்து நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறது ஒரு பக்திப்பாடல். முருகபக்தர்களுக்கு கேட்கப் படுசுகமானது. மனமென்பது முருகன் அமரும் வாகனமாகவே ஆகிவிட்டால், அதாவது எப்போதுமே முருகன்தான். வேறு சிந்தனையில்லை என்றாகிவிட்டால், கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் போன்ற கஷ்டகாலங்கள் ஏதுமில்லை என்றாகிவிடும்தான். ஆனால் அது தித்திக்கும் விஷயம்போல் தோன்றினாலும், எல்லோருக்கும் சித்திக்கும் விஷயம் அல்லவே? அதற்கும், இறைத்தேடல் உள்ள ஒருவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏகப்பட்ட சாதனாக்களை வாழ்நாள் முழுதும் செய்யவேண்டியிருக்குமே? அப்படியும் அந்நிலை சாத்தியமாகுமா என்பதே பெரும் கேள்விக்குறிதானே! சாதாரணர்கள் அண்டக்கூடிய சங்கதியா அது? நீங்கள்மாட்டுக்கு ‘.. கொஞ்சம் கொஞ்சமாக பழையதுகளை மூடிவிடுங்கள்’-னு சும்மா சல்லீஸா சொல்லிட்டு அந்தப்பக்கமா போயிட்டீங்களே ஆச்சார்ய ரஜ்னீஷ் – அதாவது ஓஷோ ஜி !
**
சொல்வது எளிதுசெய்வது கடினம் நான் சொல்வதைச் செய் செய்வதைச் செய்யாதே என்று படித்த்நினைவு
LikeLiked by 1 person
ஆம். பழசை நினைக்காமலிருப்பது எளிதில்லை. மனசை சும்மா வைத்திருப்பதுதான் ரொம்பக் கடினமான செயலாம்.
அதுசரி, நீங்கள் எங்கள் கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு ஒரு கதை எழுதிக் கொடுங்களேன். என் மெயில் முகவரி..
sri.esi89@gmil.com
LikeLiked by 1 person
அன்பிற்குநன்றி. . உங்கள் ப்ளாகுக்கு ஒரு சிறுகதையை அனுப்புகிறேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
LikeLike