தொடரின் கடைசிப் போட்டிக்கான கும்ப்ளே-தோனியின் சுழல் வியூகம் தீபாவளியன்று (29-10-16), விசாகப்பட்டினத்தில் விஸ்வரூபமெடுத்தது. அமித் மிஷ்ரா & Co.- வின் அசுரத் தாக்குதல்களில் நிலைகுலைந்தது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த இந்தியா 280-க்குக் குறையாமல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டவேளையில், அதனால் முடிந்தது 269. அத்திபூத்தாற்போல் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் ரோஹித் ஷர்மா 65 பந்துகளில் தீபாவளிப் பட்டாசாக வெடித்த 70 ரன்களே இந்தியாவின் டாப்-ஸ்கோர். கோஹ்லி 65, தோனி 41, கேதார் ஜாதவ் 39, அக்ஷர் பட்டேல் 24 ஆகியவை குறிப்பிடத் தகுந்த மற்ற ஸ்கோர்கள். ஸ்பின் எடுக்க ஆரம்பித்த விசாகப்பட்டினம் பிட்ச்சில் நியூஸிலாந்தின் சுழல்வீரர்களான மிட்ச்செல் சாண்ட்னரும், இஷ் சோடியும் நன்றாகத்தான் வீசினர். நியூஸிலாந்தின் ஃபீல்டிங் கூர்மையாக இருந்ததால் இந்திய பேட்டிங் மேலும் சாதிக்கமுடியவில்லை.
மேட்ச் மற்றும் தொடர் வெற்றிக்கான நியூஸிலாந்துக்கான இலக்கு 270. சுழலெடுக்கும் பிட்ச்சில் நியூஸிலாந்துக்கு இரண்டாவது பேட்டிங் செய்யவேண்டியிருந்தது. இதுவரை முதலில் பேட்டிங் செய்து ஓரளவு சமாளித்துவந்த நியூஸிலாந்தைக் கவனிக்க, சனி, அமித் மிஷ்ராவின் வடிவில் மைதானத்தில் வந்து இறங்கியிருந்தது. உமேஷ் யாதவிடம் முதல் ஓவரிலேயே பலியான மார்ட்டின் கப்ட்டிலுக்குப்பின், டாம் லேத்தம் கேப்டன் வில்லியம்சன் இணைந்தனர். நன்றாக விளையாட ஆரம்பித்த இருவரிடமும் இந்திய ஸ்பின் பௌலிங் வருவதற்குமுன் வேகமாக ஸ்கோர் செய்து ரன்னை உயர்த்திவிடவேண்டும் என்கிற பரபரப்பு காணப்பட்டது. ஆனால் 19 ரன்னில் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் வீழ்ந்தார் லேத்தம். இப்போது வில்லியம்சனுடம் சேர்ந்துகொண்டவர் ராஸ் டேலர். ஸ்கோர் சீராக உயர ஆரம்பித்தபோது தோனி அக்ஷர் பட்டேலிடம் பந்துகொடுத்து, ஸ்பின் வித்தையைத் தொடங்கிவைத்தார். 15-ஆவது ஓவரில் திடீரென பொறுமை இழந்த வில்லியம்சன், பட்டேலின் பந்து ஒன்றை அலாக்காகத் தூக்க, அது மைதானத்துக்கு வெளியே போகவேமாட்டேன் என்று அடம்பிடித்து, ஜாதவின் கையில் தஞ்சம் புகுந்தது. வில்லியம்சனின் விக்கெட் நியூஸிலாந்துக்கு சற்றே அதிர்ச்சி கொடுத்தது. ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 63. அவ்வளவு மோசமில்லை.
இந்நிலையில், தன் துருப்புச்சீட்டான லெக்-ஸ்பின்னர் அமித் மிஷ்ராவை இறக்கிவிட்டார் தோனி. வியூகம் உடனே வேலைசெய்ய ஆரம்பித்தது. துல்லியமான சுழல்வீச்சில் மிஷ்ரா, மிடில்-ஆர்டரின் டேய்லர், வாட்லிங் என அடுத்தடுத்துத் தூக்கிக்கடாசினார். கதிகலங்கிய நியூஸிலாந்து அதிரடி கோரி ஆண்டர்சன், ஜேம்ஸ் நீஷம் ஆகியவர்களிடம் அதிகம் எதிர்பார்த்தது. ஆனால் ஆசையோ நிராசையானது. இந்தியாவுக்காக முதல் போட்டியில் ஆடும் ஸ்பின்னர் ஜயந்த் யாதவிடம் எல்பிடபிள்யூ ஆகி சரணடைந்தார் ஆண்டர்சன். அந்தப்பக்கத்தில் நீஷத்தைத் தன் கூர்ச்சுழலில் க்ளீன் –போல்ட் செய்து மிரட்டினார் மிஷ்ரா. ஸ்கோர் 63/3 என்பதிலிருந்து 74/7 எனப் பரிதாபமாகச் சரிய, இனி இந்திய ஸ்பின்னுக்கெதிராக ஆட்டம் சாத்தியம் இல்லை என்கிற நிதர்சனம் நியூஸிலாந்தை பயமாக பீடித்தது. பட்டேலிடம் பதற்றத்திலேயே சாண்ட்னர் விழுந்துவிட, அடுத்தடுத்து சௌதீ, சோடி என அலட்சியமாகச் சுருட்டிவிட்டார் மிஷ்ரா.ஆறே ஓவர்களில் 18 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 24 ஓவரிலேயே 79 ரன்களில் ஆல்-அவுட்டாகித் தோல்வி அடைந்தது நியூஸிலாந்து. 99 நிமிடங்களில் இன்னிங்ஸ் க்ளோஸ்! 190 என்கிற பெரிய ரன்வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியதில், இந்தியா 3-2 எனத் தொடரை வென்றது.
அபார லெக்-ஸ்பின் போட்டு அசத்திய அமித் மிஷ்ரா ஆட்ட நாயகன். இந்தியத் தொடர் வெற்றியில் முக்கிய பங்கிற்காக தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர். இத்தொடரில், அக்ஷர் பட்டேல், கேதார் ஜாதவ் மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகிய சின்னவர்களின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை.
விசாகப்பட்டினம் மேட்ச்சில் இன்னொரு சுவாரஸ்யம். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர் அல்லது குடும்பப்பெயரையே (family/surname) தங்கள் கிரிக்கெட் ஜெர்சியின் பின்பக்கத்தில் காண்பிப்பர். அதாவது தோனி, கோஹ்லி, யாதவ் எனக் குடும்பப்பெயர்கள் அல்லது அஷ்வின், விஜய், ரோஹித் என வீரர்களின் பெயர்களே சட்டையில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நேற்றைய மேட்ச்சின் கதை வித்தியாசமானது. இந்திய வீரர்கள் தங்களது வெற்றிக்கு, பேர்புகழுக்குக் காரணமாகத் தங்களது தந்தைக்கு சமமாகவோ அல்லது அவர்களை விஞ்சியோகூடப் பங்களித்து, ஆனால் தலைகாட்டாது, பின்னணியில் மறைந்திருக்கும் தங்களது அன்னைகளை நினைவுகூர்ந்தனர். தங்களது நீலநிற இந்திய ஜெர்சியில், தங்களது தாயின் பெயருடன் மைதானத்தில் இறங்கி, பெற்றவளுக்கு மரியாதை காட்டினர். மகேந்திர சிங் தோனியின் சட்டையில் அவரது தாயின் பெயரான தேவகி, கோஹ்லியின் சட்டையில் அவரது அன்னையான சரோஜ், ரஹானேயின் சட்டையில் சுஜாதா, ரோஹித்தின் சட்டையில் பூர்ணிமா, பட்டேலின் சட்டையில் ப்ரீத்திபென் என்றும், இதுபோல் ஒவ்வொருவரும் தங்களது தாயின் பெயர்தாங்கி நாட்டிற்காக விளையாடியது பெருமிதமாக இருந்தது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவனது தாயின் எழுதப்படாத, சொல்லவும்படாத தியாகக்கதை ஒன்று நிச்சயம் உள்ளது. அதனை மௌனமாகக் கூற முயற்சித்தது இந்த நிகழ்வு. தங்களது குழந்தைகளுக்காக வாழ்நாளெல்லாம் கடுமையாக உழைக்கும் இந்தியாவின் பாசமிகு அம்மாக்களுக்கு வீரர்களின் வந்தனம். ப்ரமாதம் !
**
நியூஜி லாந்தின் ஆட்டம் ஏமாற்றம் விளைத்தது
LikeLike