க்ரிக்கெட்: தோனி ஆடாத ஆட்டம்

அவருடைய சொந்த மைதானமான ராஞ்சியில் நேற்று (26-10-16), தோனியின் ஆட்டத்தைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம் வந்து ஆவலோடு காத்திருந்தது. ஆனால், கோஹ்லி அவுட்டானபின் மைதானத்தில் இறங்கிய தோனியின் ஆட்டம், ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது. அபாரமாகப் பந்துவீசி, கேட்ச்சுகளையும் விரட்டிப் பிடித்த நியூஸிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்து ஒரு-நாள் க்ரிக்கெட் தொடரை 2—2 என சமன் செய்தது.

டாஸை வென்று முதலில் பேட் செய்தது நியூஸிலாந்து. துவக்கவீரர்கள் மார்ட்டின் கப்ட்டில்(Martin Guptill), டாம் லேத்தம்(Tom Latham) இருவரும் சக்கைபோடுபோட்டனர். இந்த மேட்ச்சில் கப்ட்டில் ஃப்ரீயாக, அவருடைய ஸ்டைலில் அடித்து விளையாடியது மனதுக்குப் பிடித்திருந்தது. ரன்களும் வேகமாக வந்தன. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் தவல் குல்கர்னியை கப்ட்டில் விரட்டி விரட்டித் தாக்கினார். தொடரில் முதன்முறையாக சிறப்பான துவக்கத்தை கப்ட்டிலும், லேத்தமும் தந்தனர். 16-ஆவது ஓவரில் லேத்தம் 39-ல் அவுட்டானபோது, நியூஸிலாந்தின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 96. அடுத்தாற்போல் வந்த கேப்டன் வில்லியம்சனும் நன்றாக ஆட, ஸ்கோர் 300-ஐத் தொட்டுவிடுமோ என சிலர் நினைக்க ஆரம்பித்தனர். ஆனால் கப்ட்டில் 72 எடுத்து அவுட்டானபின், வில்லியம்சன் 41, ராஸ் டேய்லர் 35 எடுத்ததே முக்கிய ஸ்கோர்கள். அமித் மிஷ்ரா, அக்ஷர் பட்டேல், கேதார் ஜாதவ் நன்றாக சுழல்வீசினர். நியூஸிலாந்து தட்டுத்தடுமாறி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது.

261 என்கிற இலக்கு இந்தியாவுக்கு எட்டமுடியாதது அல்ல. ஆனால் இன்னிங்ஸின் துவக்கத்தில் ரோஹித் ஷர்மா ரன் சரியாக எடுக்காமல் வீட்டுக்குத்திரும்புவது என்பது இந்தத் தொடரின் தொடர்காட்சியாக அமைந்துவிட்டது. இந்த மேட்ச்சிலும் அதே கதி. அஜின்க்யா ரஹானே சிறப்பாக ஆடி 57 ரன்களும், விராட் கோஹ்லி 45 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் தோனி ரசிகர்களின் ஆரவாரப் பின்னணியில் மைதானத்தில் இறங்கினார். அதிநிதானமாக ஆடப்பார்த்தார். அது அவரின் இயற்கையல்ல. ஏற்கனவே ரஹானேயின் விக்கெட்டை வீழ்த்தியிருந்த நியூஸிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் நீஷம் அப்போது ப்ரமாதமாக வீசிக்கொண்டிருந்தார். 31 பந்துகளில் 11 ரன்னெடுத்துத் திணறிய இந்தியக் கேப்டனை வெகுவாகச் சோதித்து, 30 ஆவது ஓவரில் ஒரு நேர்ப்பந்தில்(straight delivery) தோனியின் ஸ்டம்ப்பை எகிறவைத்தார் நீஷம். இருண்ட பாதையில் ஒளிக்கீற்று தெரிந்தது நியூஸிலாந்துக்கு. அனுபவமற்ற இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்களே பாக்கி. நியூஸிலாந்து மேலும் பௌலிங், ஃபீல்டிங்கைத் தீவிரப்படுத்தியது.

மணீஷ் பாண்டேவுக்கு முன்னால் இறக்கப்பட்டிருந்த அக்ஷர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்தார். அபாரமாக வீசிய நீஷத்தின் வேகப்பந்தை, அவர் தலைக்குமேலேயே அனாயாசமாகத் தூக்கி சிக்ஸர் அடித்து, சோர்ந்துபோயிருந்த ரசிகர்களை சரியாக உட்காரவைத்தார் பட்டேல். 38 ரன் எடுத்துப் போராடிய பட்டேலுக்கு யாரும் துணைகொடுக்கவில்லை. டிம் சௌதீயின் ஒரு ஓவரில் பாண்டேயும், ஜாதவும் அடுத்தடுத்த பந்துகளில் காலியாகினர். பாண்டே பிரமாதமாகத் தூக்கிய ஒரு பந்தை, லேத்தம் ஒரேயடியாக உயரத் தவ்வி லாவிவிட்டார். எல்லோரையும் திடுக்கிடவைத்த சூப்பர் கேட்ச். பாண்ட்யாவும் நிலைக்காமல்போக, 10-ஆம் நம்பரில் ஆடிய குல்கர்னி 25 ரன் எடுத்தார். ஆனால் கடைசி ஆட்டக்காரரான உமேஷ் யாதவ் கேட்ச்சில் அவுட் ஆனார். 19 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூஸிலாந்து.

மேட்ச் ஃபினிஷர் (இலக்கைத் துரத்தி முடிப்பவர்) என்கிற காரியம்/ பொறுப்பு இப்போது தோனியிடமிருந்து கைமாறி, கோஹ்லியிடம் போய்ச்சேர்ந்துவிட்டதா? 3-ஆம் நம்பரில் இறங்கும் கோஹ்லி, கடைசிவரை நின்று எப்போதும் பேட் செய்யமுடியுமா? எழுதலும், வீழ்தலும் கிரிக்கெட்வீரர்களின் இயல்பாயிற்றே. எல்லா வெற்றிக்கும் கோஹ்லியையே நம்பி இருப்பது நல்லதுதானா? என்கிற கேள்விகள் வரிசையாக எழுகின்றன. தொடரின் முடிவைத் தரவிருக்கும் கடைசி மேட்ச் விசாகப்பட்டினத்தில் 29-ல் நடக்கவிருக்கிறது. அடுத்த மாதமே இந்தியா டூரில் வருகிறது வலிமையான இங்கிலாந்து அணி. கும்ப்ளே-கோஹ்லி-தோனி கூட்டணியின் ஆட்ட வியூகங்கள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாகிறது இந்தியா.

**

2 thoughts on “க்ரிக்கெட்: தோனி ஆடாத ஆட்டம்

  1. இந்த லட்சணத்தில் கடைசிப் போட்டியையும் ஆடினால், தொடர் கையைவிட்டுப்போய்விடும்!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s