தமிழ்த் திரைப்பாடலாசிரியராகப் புகழ்பெற்றவர் நா.முத்துக்குமார். 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தள்ளிய பாடல் எக்ஸ்பிரஸ். திரைப்பாடல்கள் என்கிற பெயரில் அபத்தங்களின் பரிமாணங்கள் உலவிவரும் ஒரு மோசமான காலகட்டத்தில், கருத்தாழமும், கவிநயமும் உடைய பாடல்களைத் தமிழ்த் திரை ரசிகர்களுக்குத் தந்தவர் (இயக்குனர்களுக்கு ஏற்ப சிலவற்றை அவர் எழுதியிருக்கிறார் என்றாலும்). இருமுறை சிறந்த திரைப்பாடல்களுக்காக (ஆனந்த யாழை மீட்டுகிறாய், அழகே..அழகே…) தேசிய விருதுகள் அவரை கௌரவித்திருக்கின்றன. தமிழ்நாடு அரசு விருதும், ஃபிலிம்ஃபேர் விருதுகளும் அவரை நாடியிருக்கின்றன.
திரைப்பாடல்களில் தனக்கு முந்தைய சாதனையாளர்களான கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார் அவர். `தி இந்து` நாளிதழின் நேர்காணல் ஒன்றில் நா. முத்துக்குமார், கண்ணதாசன்பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார் :
‘’ எந்த மொழியில் எழுதினாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், படைப்பாளிகளுக்கு மாபெரும் சவாலாக இருப்பது எளிமை. ஜென் (zen) மனநிலையைத் தனதாக்கிக்கொண்டால் மட்டுமே ஒரு படைப்பாளி எளிமையைச் சென்று அடைய முடியும். போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, அழுக்காறு, அகந்தை போன்ற குணங்களைத் தூக்கி எறியும்போது நீங்கள் ஜென் மனநிலையை அடைய முடியும். இதைத்தான் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும்” என பாரதி சொல்லிச் சென்றார். கண்ணதாசன் உள்ளத்தில் உண்மை கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தது. அதனால் அவரது வாக்கினில் ஒளி பிறந்தது. அதனால்தான் அவர் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்“, “நினைக்கத் தெரிந்த மனமே.. உனக்கு மறக்கத் தெரியாதா” என்று எழுத, எளிமை அவரிடம் தலைவணங்கி நின்றது. “
திரை உலகத்திற்கான படைப்புகளைத் தாண்டி, முத்துக்குமார் தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களுள் ஒருவராகவும் இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவினால் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, கணையாழி இலக்கிய இதழின் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர். முத்துக்குமாரின் கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதர நூல்களில் சில: குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன், என்னை சந்திக்க கனவில் வராதே போன்றவை.
41 வயது என்பது நம்மை எல்லாம் விட்டுப் போவதற்கான வயதல்லதான். இருந்தும், வேகமாக இயங்கிய இளங்கவியை, வேகமாகவே அழைத்துக்கொண்டுவிட்டது அவ்வுலகம். அதிர்ந்துபோவதை விடுத்து வேறென்ன செய்யமுடியும் நம்மால்?
அவருடைய கவிதை உலகத்திலிருந்து சிலவற்றை வாசிப்பதன் மூலம் அவரைக் கொஞ்சம் நம்மிடையே மீட்டுவருவோம் இப்போது:
ஸ்தல புராணம்
பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!
தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்
**
முதல் காதல்
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
**
ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில் பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில் சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும் தோன்றி
கடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள் !
**
உயில்
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய் !
**
நெஞ்சொடு கிளத்தல்
சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றிப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்
**
வாழ்க்கை
கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துகொள்கிறார்
..
கூர்வாள்
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்
**
எழுத்தாளர் சுஜாதாவைக் கவர்ந்து, நா.முத்துக்குமாரை மேடையில் அறிமுகப்படுத்தவைத்த நா.முத்துக்குமாரின் கவிதை:
தூர்
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய் நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தேபோனார்
மனசுக்குள் தூரெடுக்க
**
எனக்கும் தூர் வார நினைவு படுத்தியது அருமை !
LikeLiked by 1 person
மிகவும் வேதனையான செய்தி. இத்தனை சின்ன வயதில் இளம் மனைவி, இளம் குழந்தைகளை விட்டுவிட்டு……! ஆண்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது இல்லை என்பதற்கு இவரும் கவிஞர் வைகைறையும் உதாரணங்கள்.
LikeLike
the best one is the one appreciated by sujatha iyyah marvellous
LikeLiked by 1 person