ஆதிசங்கரர்-3: வாடிப்போன மாலையின் தொடர்ச்சி…
ஆதிசங்கர பகவத்பாதர் ஹிந்து மதத்தின் சைவப்பிரிவுக்கு மட்டுமே ஆச்சாரியர் அல்லது குரு என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது. அது உண்மையல்ல. அவர் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதான ஆச்சாரியர்களில் ஒருவர். அவருக்கு `ஷண்மத ஸ்தாபனாச்சாரியர்` என்கிற பெயரும் உண்டு. ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்? அவர்தான் இந்து மதத்தை ஸ்தாபித்தாரா? அதற்குமுன் இந்து மதப்பிரிவுகள் இல்லையா, என்றால் இருந்தன. நிறையவே இருந்தன! அதுதான் அந்தக் காலக்கட்டத்தின் தாங்கமுடியாத பிரச்னை. இந்து மதம் பல பிரிவுகளாக தாறுமாறாகப் பிரிவுபட்டிருந்தது. பிரிவுகளிலும் ஏகப்பட்ட முரண்பாடுகள், வேற்றுமைகள் இருந்தன. மற்றும் வேதங்களின், உபநிஷதங்களின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மக்களிடையே மேலும் குழப்ப சிந்தனைகள் பெருகின. ஆளுக்காள் தன்னை குருவென்றும், ஆச்சாரியன் என்றும் கூறிக்கொண்டு முரண்பாடான மதக் கொள்கைகள், வழிபாட்டு முறைகளை முன்வைத்தனர். கேட்பாரில்லை. சாதாரண மக்களின் ஆன்மீக சிந்தனை நிலைகுலைந்து, அவர்களின் மனஅமைதி தொலைந்துவிட்டிருந்தது. இந்து மதம் பலவீனப்பட்டு நீர்த்துப்போகாது இருக்க, மதத்தின் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகளை நிலைநாட்டி, வேதங்கள், சாஸ்திரங்கள் முன்வைக்கும் பிரும்மம்(பரம்பொருள்) பற்றிய தத்துவார்த்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பவேண்டும். மக்களின் மனதில் குழப்பங்கள் அகன்று ஆன்மீகத் தெளிவு நிலை திரும்பவேண்டும் என ஆதிசங்கரர் முடிவு செய்தார்.
அவருடைய காலத்தில் சுமார் 72 பிரிவுகள் இந்து மதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய கிளைகளின் தலைவர்கள் அல்லது குருக்களை அவர் சந்தித்து அவர்களுக்கு உண்மையான இறைத் தத்துவத்தினை விளக்கி, வழிப்படுத்த முயன்றார். அவர் கூறும் வேதாந்தக் கருத்துக்களை அதன் தத்துவங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வார்களா அவர்கள்? பிறகு அவர்களின் மத ஆதிக்கம் முடிவடைந்துவிடுமே? அத்தகையோரை அந்தக்கால வழக்கப்படி வாதப்போருக்கு அழைத்துத் தன் ஞானத்தினால், புலமையினால், வாதத் திறமையினால் தோற்கடித்தார். இறுதியில் அவர்களில் பலர் சுமுகமாக தோல்வியை ஒத்துக்கொண்டதோடு, ஆதிசங்கரரையே தங்கள் ஆச்சாரியராக ஏற்றுக்கொண்டனர். சமுதாய நல்லொழுக்கம், ஆன்மீக சிந்தனை வளர்ச்சிக்கு ஊறு செய்வதாக இயங்கின சில பிரிவுகள். இவற்றில் சிலவற்றின் பூஜை, யாக முறைகள் நரபலி போன்ற தகாத வழக்கங்களை உட்கொண்டிருந்தன. இத்தகைய குழுக்களை, கிளைகளை அடியோடு ஒழித்துக் கட்டினார் ஆதிசங்கரர். பெரும்பாலானவரின் தெய்வ நம்பிக்கைகள், வழிபாட்டு வழக்கங்களை ஆராய்ந்து, இந்துமதத்தை ஆறு பெரும்பிரிவுகளாக, முறைப்படி பிரித்து சீர்படுத்தினார். சாதாரணர்கள் எளிதாக கடைபிடிக்கக்கூடிய இந்துமத வழிபாட்டு மரபுகளை ஏற்படுத்தினார். ஆன்மீக தத்துவங்கள், நம்பிக்கைகள் சாதாரண மக்களிடையே தாக்கம் இழந்துவரும் நாட்டின் ஒரு இக்கட்டான காலகட்டத்தில், அத்வைத தத்துவத்தை அளித்ததோடு, இந்து சமயத்திற்கு ஆதிசங்கரர் செய்த பெரும் ஆன்மீகப் புனரமைப்புப் பணி இது. ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்பட்ட இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் இவை:
1. சைவம்: சிவபெருமானை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபடுவது. இப்படி வழிபடுபவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டனர்.
2. வைஷ்ணவம்: மகா விஷ்ணுவே(திருமால்) பரப்பிரும்மம் எனும் சித்தாந்தம் உடையது. அவர் ஒருவரே எல்லாம் என மகாவிஷ்ணுவை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள்.
3. காணாபத்தியம் : அதாவது கணங்களுக்கெல்லாம் தலைவரான கணபதியை (வினாயகர்) வழிபடுவது. இத்தகையோர் காணாபத்தியர் எனப்பட்டனர்.
4. கௌமாரம்: முருகப்பெருமானே தெய்வம் என்கிற வழிபாடு – இத்தகையோர் கௌமாரர்கள் என அழைக்கப்பட்டனர்.
5. சௌரம்: ஆதித்யனான சூரியன் – நேருக்குநேராகப் பார்க்கமுடியக்கூடிய தேவன் – அந்த சூரியனையே பகவானாகக் கருதி வழிபடுவது. இப்படி வழிபட்டவர்கள் சௌரர்கள் எனப்பட்டனர்.
6. சாக்தம் : பெண் உருவில் இருக்கும் சக்தியை (அம்மன், அம்பாள்) தெய்வமாக வழிபடுபவர்கள். இவர்களுக்கு சாக்தர்கள் என்று பெயர்.
இவ்வாறு இந்துமதத்தின் முக்கியமான பிரிவுகளை நெறிப்படுத்தி, அந்தந்த தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகளையும் விரிவாக எடுத்துச் சொன்ன ஆதிசங்கரர், அந்தந்த தெய்வங்களைப் போற்றி வணங்கக்கூடிய துதிப்பாடல்களையும் இயற்றினார். ஒவ்வொருவரின் இறைவிருப்பம் வெவ்வேறாக இருக்கலாம். தெய்வங்களில் எவரை வழிபட்டாலும் அவரையே முழுமுதற்கடவுள் என மனதில் கொண்டு போற்றலாம். இவ்வாறு வணங்கப்படும் தெய்வங்கள் அனைத்தும் ஒரே மூலத்தையே (பரம்பொருளையே) குறிக்கின்றன; ஆதலால் இவர்களுக்கு செய்யப்படும் பூஜைகள், ஹோமங்கள் அனைத்தும் ஒன்றேயான அந்தப் பரம்பொருளையே போய்ச் சேரும் என்றும் விளக்கினார்.
அத்வைத சித்தாத்தங்களைப் பரப்புவதற்காக, தனது நான்கு பிரதான சிஷ்யர்களான பத்மபாதர், சுரேஷ்வராச்சாரியார் (மண்டன மிஷ்ரா), தோடகாச்சாரியார், ஹஸ்தாமலகாச்சாரியார் ஆகியோரை பீடாதிபதிகளாகக் கொண்டு இந்தியாவின் நான்கு திசைகளில் சங்கர மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். அவை முறையே கிழக்கில் கோவர்தன பீடம் (பூரி, ஒரிசா), தெற்கில் சிருங்கேரி பீடம் (சிருங்கேரி, கர்நாடகா), மேற்கே துவாரகா பீடம்(குஜராத்), வடக்கில் ஜோதிர்மட் பீடம் (உத்தராகண்ட்).ஆதிசங்கரர் தன் சித்தாந்த, சந்நியாச வழியைப் பின்பற்றிய துறவிகளில், `தசநாமி சந்நியாசிகள்` என்று அழைக்கப்பட்ட பத்து பிரிவுகளை உண்டாக்கினார். இவ்வழியில் வந்த சந்நியாசிகள் தங்களின் ஆசிரமப் பெயருக்குப் பின் `சரஸ்வதி` (உதாரணம்: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி, சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி) `பாரதி`, `தீர்த்தர்`, `கிரி`, `பர்வத்` என்று இணைத்துக்கொண்டனர்; ஆதிசங்கரர் காட்டிய வழியில் தங்களுக்கான ஆஸ்ரமங்களை ஏற்படுத்தி, தெய்வ கைங்கரியங்கள் செய்துவருகின்றனர்.
`பிரும்மம்` எனப்படும் பரம்பொருள்தான் பிரபஞ்சம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. அது ஒன்றேதான் எல்லாம் (non-duality) ; அதன் வெவ்வேறு ரூபங்களே அனைத்தும் எனும் அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் விதமாக ஆத்மபோதம், அபரோக்ஷ அனுபூதி, ஆனந்த லஹரி, பஜகோவிந்தம், உபதேச சஹஸ்ரம், சரீரிக் பாஷ்யா போன்ற சுமார் 150 அருமையான சமஸ்கிருத நூல்களை (பாடல்கள், விளக்க உரைகள் உட்பட) இயற்றினார் பகவத்பாதரான ஆதிசங்கரர். உபநிடதங்கள், பிரும்ம சூத்திரம், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவற்றிற்கு பாஷ்யம் (விளக்க உரை) எழுதியதோடு, சௌந்தர்ய லஹரி, சிவானந்த லஹரி, சுப்ரமணிய புஜங்கம் போன்ற இறை வழிபாட்டுப் பாடல்களையும் இயற்றி, இந்து மதத்தினரின் ஆன்மிக மேம்பாட்டுக்கு வழிவகுத்தார்.
இந்தியா முழுதும் ஆன்மிக யாத்திரை செய்த ஆதிசங்கரர் இறுதியில், இமயமலைப் பகுதியில் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத் எனும் ஊரைச் சென்றடைந்தார். குளிர்மண்டலமான அந்தப் பிரதேசத்தில் அதிசயமாகக் காணப்படும் தப்த் குண்ட் (Tapt Kund) எனப்படும் வெந்நீர் நீரூற்றுக்கு (hot springs) அருகில், பத்ரிநாராயணன் என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவுக்கு அங்கிருந்த பக்தர்கள் உதவியுடன், கோவில் எழுப்பினார். பத்ரிநாத் தரைமட்டத்திலிருந்து 10,279 அடி உயரத்தில் இமயமலைச் சரிவில் உள்ள இறை வழிபாட்டு ஸ்தலம். வைணவர்களின் `108 திவ்யதேசங்கள்` என வழங்கப்படும் விஷ்ணு கோவில்களில் மிகவும் விசேஷமானது. கடும் குளிர் காரணமாக நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை இந்தக் கோவில் பனிமண்டலத்தினால் மறைந்திருக்கும். பக்தர்களுக்கு கோவில் 6 மாதமே திறந்திருக்கும்.(மே முதல் அக்டோபர் வரை). ஆதிசங்கரர் 6 மாதம் பத்ரிநாத்திலும், 6 மாதம் கீழ் தளத்திலுள்ள ஜோதிர்மட்டிலுமாக(Jyothir Mutt) அவரது வாழ்நாளின் கடைசி 2 வருடங்களைக் கழித்ததாகக் கூறப்படுகிறது. தன் 32-ஆவது வயதில் (கி.பி.820-ல்), கேதார்நாத்திலுள்ள (சிவபெருமானுக்கான புனிதஸ்தலம்) ஒரு குகைக்குள் சென்று யோகநிஷ்டையில் (ஆழ்தியான நிலை) அமர்ந்திருந்த ஆதிசங்கரர், அங்கேயே பரமபதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
**
உங்களால் சொல்வனத்திற்காக ( http://solvanam.com/ ) கிரிக்கெட் கட்டுரைகள் எழுத இயலுமா? என் மின்னஞ்சல் bsubra at gmail dot com
LikeLiked by 1 person
வணக்கம் ஐயா, How are you. Hope all in the family doing fine. It has been a long time. ஆதி சங்கரர் பற்றிய தொகுப்பு அருமை. வாழ்த்துக்கள். அன்புடன்ஜெரால்டு
Sent from Yahoo Mail on Android
LikeLiked by 1 person
super.
LikeLiked by 1 person
For M/s Snapjudge, Jerald Muthu and Muthulakshmi R: இனிய வருகைக்கு நன்றி.
LikeLike
good bro very interesting very informative
do you have any record of THE GURU OF PARAMACHARYA CHANDRASEKARA …
if so pl come out ….
LikeLike
Thanks friend. No info on the guru – was there one, actually- of Paramacharyaal.
LikeLike