கபீர்தாஸ்: டெல்லி சுல்தானோடு மோதல்

முந்தைய பதிவுகள் ‘’காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?’, ’கபீர்தாஸ்-ஆன்மீகத் தேடல்’-ஆகியவற்றைத் தொடர்ந்து:

மனதினில் உண்மை அன்பின்றி, உத்வேகமான ஆன்மீகத் தேடுதல் இல்லாமல், வெறுமனே சாஸ்திரம் அறிந்த பண்டிதர் என்றும், மௌல்வி, முல்லா, காஜி என்றெல்லாம் தினம் பேசித் திரிவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? இதைவிட படிக்காத, ஒன்றும் தெரியாத, ஆனால் தன் கடமையை ஒழுங்காக செய்பவன், அவன் ஒரு வண்ணானோ, தச்சனோ, தொழிலாளியோ, சாதாரண குடும்பஸ்தனோ யாராக இருப்பினும், அவன் இறைவனின் அருகில் இருப்பவன் என்றார். இவ்வாறான சர்ச்சைக் கருத்துக்களால் மௌல்விகளும், காஜிகளும், ஹிந்து பண்டிதர்களில் சிலரும் இவர்மீது கடும் எரிச்சல் கொண்டனர். மதவாத முஸ்லிம்கள் இவரை ’காஃபிர்’ (மத நம்பிக்கையற்றவன்/ கோழை) எனத் தாக்கினர். இதற்கு கபீர், வாயில்லா ஜீவன்களைக் கொல்பவனும், அடுத்தவர் சொத்தை அபகரிப்பவனும், வெளிவேஷம்போட்டு,ஏய்த்து வாழ்பவனே காஃபிர் என்றுத் திருப்பித் தாக்கினார்.

கபீரின் புகழ் பாமரர்களிடையும், மெய்யறிவு தேடுபவர்களிடமும் பரவப் பரவ, அவருக்கு எதிரிகள் அதிகமானார்கள். கண்மூடித்தனமான சம்பிரதாயங்கள், சடங்குகளைத் தாக்கியதும், மதப்பிரசாரகர்களின் போக்கிலிருந்து விலகி, முரண்பட்டு, நேரிடையாகக் கடவுள்பற்றிய, தத்துவ உண்மைகளை சாதாரணர்களுக்கு போதித்ததும் இதற்குக் காரணம். ஒரு ஹிந்து குருவின் சிஷ்யர் கபீர் என்கிற உண்மையும், தன் கவிதைகளில் அல்லா எனக் குறிப்பிடாமல், அங்கங்கே ராம் என்றும் ஹரி என்று குறிப்பிடுவதும் இவர்களின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கியது. இதனால் இஸ்லாமிய மௌல்விகளும், காஜிக்களும், அப்போது ஆண்டு வந்த டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் அவன் காசி வருகைதந்தபோது முறையிட்டனர்.

சிக்கந்தர் லோடி ஆஃப்கானிஸ்தானின் புஷ்தூன் இனத்தைச்சேர்ந்தவன். கொடுங்கோலன். எதிரிகளை இம்சிப்பது, அவமானப்படுத்துவது என ஆனந்தம் கொள்பவன். இவனிடம் காஜிக்களும் மௌல்விகளும், “அல்லாவுக்கும், இஸ்லாமுக்கும் எதிராகச் செயல்படுவதாக” கபீருக்கு எதிராகக் கொளுத்திப்போட்டனர். சிக்கந்தர் லோடி-கபீர் சந்திப்பு இவ்வாறு செல்கிறது:

கபீரை இழுத்துவர ஆணையிடுகிறான் சுல்தான் சிக்கந்தர் லோடி. தன்னைக் கூட்டிச்செல்ல வந்த சுல்தானின் ஆட்களிடம் கபீர் கூறுகிறார்: ‘நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என் பிழைப்பிற்காக நெய்கிறேன் துணிமணி,. நான் எதற்கு உங்கள் சுல்தானின் தர்பாருக்கு வரவேண்டும்? ” அதற்கு வந்த காவலர்கள் சொல்கிறார்கள்: “எல்லோரும் உனக்கு எதிராகக் குற்றம் சொல்லியிருக்கிறார்கள். உன் அம்மாகூட சுல்தானிடம் உனக்கெதிராகக் கூறியிருக்கிறாள். நீ வந்துதான் ஆகவேண்டும். இல்லை என்றால் கட்டி இழுத்துப்போவோம்”. கபீர் பதிலாக “ உங்கள் பாதுஷாவைக்கண்டு எனக்கு பயமில்லை. அரசனும் பிச்சைக்காரனும் எனக்கு ஒன்றுதான். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், உங்களுடன் வருகிறேன்” என்று சொல்லி ஆயத்தமாகிறார். சாதாரணமாக ஒரு முஸ்லிம் பெரியவரைப்போல் முகத்தில் சிறுதாடி, தலையில் ஒரு சிறுதொப்பியுடன் வீட்டு வாசலில் உட்கார்ந்து நெய்து கொண்டிருக்கும் அவர், இன்று கொஞ்சம் விசேஷமாக மாறுகிறார்: தலையில் ஒரு நீலநிற டர்பன் -அதில் ஒரு மயிலிறகு வைத்துக்கொள்கிறார். கழுத்தில் ஒரு துளசிமாலை. நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டு!” வாருங்கள் போகலாம்! ” எனக் கிளம்பினார் கபீர்.சுல்தானின் ஆட்கள் அவரைக்கூட்டிப் போவதைப் பார்த்த, விஷயம் கேள்விப்பட்டவர்களும் கலவரமாகி, அவர் பின்னே செல்கின்றனர்.

காசியின் பொது இடம் ஒன்றில் தன் தர்பாரோடு உட்கார்ந்திருக்கிறான் சுல்தான். அவன் முன் நிறுத்தப்படுகிறார் கபீர். கூட வந்திருக்கும் சிறு கூட்டம் கண்டு குழம்பி சுல்தான் கேட்கிறான் காஜியிடம்: ”யார் இவர்கள் எல்லாம்?”. காஜி சொன்னான் :”அவர்கள் கபீரின் பேச்சை தினம் கேட்பவர்கள். அவருடைய ஆதரவாளர்கள் போல் தெரிகிறது.”. சுல்தான் அலட்சியமாக வேறெங்கோ பார்த்துக்கொண்டு கை காட்ட, காஜி கபீரிடம் சொல்கிறான்: ”ஓ! மஸ்தானா! இது நம் பாதுஷா ! உன் தவறுக்கு பாதுஷா முன் மண்டியிட்டு மன்னிப்புக்கேள். கருணை உள்ளம் கொண்ட பாதுஷா உன்னை மன்னித்துவிடுவார்!”

கபீர் கேட்கிறார்: ‘பாதுஷாவா? எந்தமாதிரி பாதுஷா ! ஒரே ஒரு பாதுஷாவைத்தான் எனக்குத் தெரியும். அவன் என்னுள்ளே இருக்கும் ராம். அவனே கருணை உள்ளவன். பாதுஷாவைப் பிச்சைக்காரனாக்கவும், பிச்சைக்காரனை பாதுஷாவாக்கவும் தெரிந்தவன். எல்லாம் வல்லவன். அவனையே பணிபவன் நான்!”.

சுல்தான் சிக்கந்தர் லோடி மேலும் குழப்பமடைந்து காஜியிடம் கேட்கிறான்: “ இங்கே என்ன நடக்கிறது? எந்தவிதமான பேச்சுவார்த்தை இது?” கபீரின் பதிலால் எரிச்சலுற்றிருந்த காஜி மன்னனுக்கு பதில் சொல்கிறான்: “ பாதுஷா ! இவன் உங்களைப் பணிய மறுக்கிறான். யாரோ ’ராம்’ என்கிறான். அவனைத்தான் பணிவானாம்! “ சுல்தானுக்குக் கோபம் வெறியாய் மாறுகிறது. முதல்தடவையாகக் கபீரை நேருக்கு நேர் பார்க்கிறான்; உறுமுகிறான்:

”டேய் ! நீ இனி உயிரோடு இருக்கமாட்டாய் ! எந்த ராம் வந்து உன்னைக் காப்பாற்றுவான் என்று பார்த்துவிடுவோம்”. கபீர் பதிலாக சில வார்த்தைகளை இறைவனை நினைத்துச் சொல்கிறார். சுல்தான் வெறியுடன், ”ஏய்! நீ நரகத்துக்குத்தான் செல்வாய்!” தன் படைவீரர்களைப் பார்த்து “ இவனை மரக்கட்டைகளோடு சேர்த்துக்கட்டுங்கள். இந்த நதியில் வீசுங்கள்!” என்று கர்ஜிக்கிறான். அருகில் கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீரர்கள் சுல்தானின் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள். சுல்தானும், காஜியும், கோழிச்சொன்ன அடிப்பொடிகளும் குஷியாகப் பார்த்திருக்க, கபீரோடு வந்தவர்கள் அரண்டு போயிருந்திருந்தார்கள், மரக்கட்டைகளுடன் கபீர் சங்கிலிகளால் கட்டப்பட்டு கங்கையில் வீசப்படுகிறார். பார்க்கிறார்கள் எல்லோரும். கட்டை சடக்கென அமிழ்ந்து பின் நீர்மட்டத்தில் மெல்ல எழுகிறது. கொஞ்ச நேரத்தில் மேலே ஏதோ அசைவு… சங்கிலிகள் பிரிந்துகொள்ள, கபீர் எழுந்து உட்கார்ந்து கொள்வது தெரிகிறது! படகு போல் கட்டை மிதக்கிறது. ஜலாசனம் தெரிந்தவர் கபீர்!

சுல்தான் பதற்றத்தோடு பார்த்திருக்க, காஜி அலருகிறான்: ”பாதுஷா! இவன் ஒரு மஹா மாயாவி! சித்து வேலைகளில் கெட்டிக்காரன். இவனை இப்படியெல்லாம் கொல்ல முடியாது. நெருப்பில் போட்டால்தான் சாவான்” என்கிறான். கபீர் கரைக்குக் கொண்டுவரப்படுகிறார். மீண்டும் கட்டப்பட்டு, கட்டைகள் எரிய, அதில் கிடத்தப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் கட்டைகள் எரிந்து முடிந்தன. நெருப்பு அணைந்தது. புகைமண்டலம். ஆனால் கபீருக்கு ஒன்றும் ஆகவில்லை. சுல்தான் அரண்டு போய் காஜியைப் பார்த்து சீறுகிறான். காஜி ஒரு உபாயம் சொன்னான் இப்போது: ”நம் படையில் ஒரு வெறிபிடித்த யானை இருக்கிறது. அதனை உபயோகித்து சிலரை நாம் கொன்றிருக்கிறோம். இவனைக் கீழே கிடத்தி யானையை மிதிக்கவிட்டுத் தீர்த்துவிடுவோம்!” . சுல்தான் சம்மதிக்க, போதைபானம் கொடுத்து வெறியேற்றப்பட்ட யானை கொண்டுவரப்படுகிறது அங்கே. கட்டப்பட்டிருக்கும் கபீர் தரையில் கிடத்தப்பட்டிருக்க, வெறிபிடித்த யானையை ஏவுகிறான் யானைப்பாகன் சுல்தானின் உத்தரவுப்படி. யானை பயங்கரமாகப் பிளிறுகிறது. கபீரை உற்றுப் பார்க்கிறது. அதன் கண்களில் ஒரு மிரட்சி. ஏதோ கொடிய சிங்கம் ஒன்றைக் கண்டதாய் யானை மிரண்டு பின்னோக்கி நகர்கிறது. எத்தனைதான் பாகனால் ஏவப்பட்டும், பயந்து பிளிறியது. வேகமாகப் பின்வாங்கியது.

சுல்தானின் குருவான ஷேக் டாகி என்பவன் நடந்தவற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தான். விஷயம் தெரிந்தவன். சித்து, யோகநிலைகளைப்பற்றி ஓரளவு அறிந்தவன். குனிந்து சுல்தானின் காதுகளில் சொல்கிறான். “ கபீர் உண்மையில் சக்தி வாய்ந்த ஒரு ஃபகீர். அல்லாவின் கருணை அவருக்கு நிறையவே இருப்பதாகத் தெரிகிறது பாதுஷா! அவரைக் கொல்ல உங்களால் முடியாது. அவரைப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்வதே நல்லது. இல்லையெனில் கபீரைப்போன்ற ஃபகீரினால் பெரும் ஆபத்து உங்கள் ராஜ்யத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. உங்கள் உயிருக்கேகூட ஆபத்து வரலாம்!”.ஷேக் டாகி இப்படியெல்லாம் பேசுபவனில்லை. ஒரேயடியாக மிரண்டான் சுல்தான் சிக்கந்தர் லோடி. தன்னை சுற்றித் தலை குனிந்து நின்றிருந்த காஜியையும், மௌல்விகளையும் திட்டி விரட்டிவிட்டான். கபீரை உடனே கட்டிலிருந்து விடுவிக்கச் சொன்னான். தன் இருக்கையில் இருந்து பயந்துகொண்டே எழுந்தான். கபீரின் முன்னே அடியெடுத்து வைத்து அவரைப் பணிந்து, “இந்தக் காஜியும் , மௌல்விகளும் முட்டாள்கள்! தங்களைப்போன்ற சாது, சன்த்துக்களை(sants) அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்களுக்கு வேண்டிய பொற்காசுகள், இருக்க இடம் தருகிறேன். தவறுக்கு என்னை மன்னித்தருளுங்கள்!” என்று பயந்துகொண்டே நைச்சியமாகச் சொன்னான். கபீர் நிதானமாக அவனைப் பார்த்தார். சொன்னார்: ”நீ சொன்னபடி இவற்றையெல்லாம் உன்னால் தரமுடியும். இருந்தும் இவை எதுவும் எனக்கு அவசியமில்லை. நீ உன்பாட்டுக்குப் போ. நான் என்வழியில் செல்கிறேன்!” என்றார். தன்கூடவந்தவர்கள் மகிழ, அவர்களுடன் வீடு திரும்பினார்.
(தொடரும்)

4 thoughts on “கபீர்தாஸ்: டெல்லி சுல்தானோடு மோதல்

  1. திருவாளர்கள் ஸ்ரீராம், ஸ்ரீமலையப்பன், திருமதி கோமதி அரசு,
    வருகை, பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.

    Like

Leave a comment