நண்பர் ஜிஎம்பி-யின் ‘எங்கள் வீட்டு மாமரம்’ (http://gmbat1649.blogspot.in) படித்தபிறகு, இளம்பிராயம் நோக்கி, இழந்துவிட்ட ஆகாயம் நோக்கி வேகமாகப் பாய்ந்தது மனது. அமைதியான கிராமப்புற வாழ்க்கையின் காட்சிக்கோப்புகளை எடுத்துவைத்துக்கொண்டு, மீள்பார்வை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தெரியும். எதுவுமே நம்மோடு எப்போதும் இருக்கப்போவதில்லை. அல்லது கூட வரப்போவதுமில்லை. ஆதலால் காணொலிக்கோப்புகளை உடனுக்குடன் தயார் செய்து ஆழடுக்குகளில் பதுக்கிவைப்பது அதன் வழக்கம். ஏதோ, அதனால் முடிந்த காரியம்!
இப்போது பேசவந்தது இந்த மனதின் சாதுர்யம், சாகசம் பற்றி அல்ல. நாலாபுறமும் நாம் காணும் நாசகார காரியங்கள் பற்றி; சுற்றுச்சூழல் சிதைவு பற்றி. பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத கூறுகளில் ஒன்றான தொழிற்பெருக்கத்திற்கென, நாட்டின் குளிர்ச்சியான குக்கிராமங்கள் தடயம் தெரியாமல் காணாமல்போகுமாறு செய்யப்பட்டுவிட்டன. அதனிடத்தில், மழைக்காளான்களாய் முளைத்துவருகின்றன தொழிற்பேட்டைகளும், போதிய வசதியில்லாப் புறநகர்ப்பகுதிகளும். அசுரவேகத்தில் பெருநகரங்களாக உருமாறுகின்றன சிறு நகரங்கள். தவிர்க்கவியலாத, சூழல்நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில், சரியான ஆரோக்யமான நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின்றி, கான்க்ரீட் மலைகள் ஆங்காங்கே, தாறுமாறாகப் பொங்கி, கூட்டம் கூட்டமாக எழுந்து நின்று மனிதனின் ஆரோக்கிய வாழ்வையே அச்சுறுத்தும் அவல நிலை உண்டாகிவிட்டிருக்கிறது.
முன்னர், அக்கம்பக்கத்தில் பச்சைப்பசேலென்று வளர்ந்து சூழ்ந்திருந்தருந்த, குளிர்ச்சிதரும் நாட்டு மரங்களான ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை, பூவரசு, பூங்கொன்றை போன்ற பூ, காயெனப் பொழிந்துதள்ளிய மரங்கள், பணம்பண்ணும் முதலைகளின் பேராசைக்கெனக் காவுகொடுக்கப்பட்டுவிட்டன. கொடுக்கப்பட்டும் வருகின்றன. ஒருகாலத்தில் ஏரிகளால், குளம், குட்டைகளால், நீர்நிலைகளால், நிழல்தரும் மரங்களால் நிறைந்திருந்த, மனிதனுக்கான அழகான வாழ்விடங்களாக இருந்த சிறுநகரங்கள், ரியல் எஸ்டேட்காரர்களின் தீக்கண்கள்பட்டு, சிதைந்து சின்னாபின்னமாகி வருவதை நம் கண்முன்னே காண்கிறோம். ‘கார்டன் சிட்டி’ என்று ஆசையாக ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று நாட்டின் மற்றுமொரு ‘கான்க்ரீட் சிட்டி’ என்றாகிவிட்டது. பத்தோடு பதினொன்று. அத்தோடு இது ஒன்று. குறுகிய காலகட்டத்திலேயே, கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்.
நமது கிராமங்கள், நகரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கென, தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள் வரையமுடியாத, செயலாக்கமுடியாத, எதையும் உருப்படியாக செய்ய விரும்பாத அரசியல்வாதிகளால் மனித வாழ்வு சீர்குலைந்துவிட்டது. மனிதனோடு சேர்ந்து வாழநேர்ந்த துர்ப்பாக்கியம் கொண்ட ஜீவன்களான, ஆடு, மாடுகள், பறவைகள் என, இவைகளின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். இவைகளின் வாசம், வாழ்வாதாரத்துக்கு, நீர்நிலைகள், நிழல், காய்கனிதரும் மரங்கள், செடிகொடிகள் முக்கியமல்லவா? சிலருக்குப் பணம் காய்ப்பதற்காக, இவைகள்தானே கொடூரமாகப் பலியாக்கப்பட்டுவிட்டன. அல்லது பலியாகிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக எங்கும் நிறைந்து காணப்படும் சிட்டுக்குருவிகளை, இப்போதெல்லாம் காண்பதே அறிதாக இருக்கிறதே, கவனித்தீர்களா? அதிகாலையிலும், மாலையிலும் இப்போதெல்லாம் கேட்காத பறவைகளின் கீச்கீச்சு சப்தங்களுக்காக மனம் ஏங்குகிறது.
நாட்டை ஆள்வதற்கென நாம் ஓட்டுப்போட்டு அனுப்பிவைத்த அரசியல் வாதிகள், பசப்புவார்த்தைப் பேடிகள் பெரும்பணத்தை லஞ்சமாக ரியல் எஸ்டேட் பேய்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, நம் சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை, சிதைக்க அனுமதித்துக்கொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் சீராக நடக்கிறது சீரழிவு. இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பெங்களூரில், மூன்றாவது அடுக்குமாடிவீட்டின் பால்கனியிலிருந்து சிந்தனையோடு சுற்றுவெளியைப் பார்க்கிறேன். குத்துக்குத்தாக தனிவீடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கிடையே, ஆங்காங்கே கொஞ்சம் பச்சைத் திட்டுகள் இன்னும் தெரிகின்றன. ஒரு இளம் வேப்ப மரம், ஆலமரம், பெயர்தெரியாத சில மரங்கள் – இன்னும் பெரிதாகவில்லை- தூரத்தில் சிறுகூட்டமாக யூகலிப்டஸ் மரங்கள்.. தெரியாத்தனமாக விட்டுவைத்திருக்கிறார்களோ? சந்தோஷம் தலைதூக்குகிறது. கூடவே பயமாகவும் இருக்கிறது.யார் கண்ணாவது பட்டுவிடாமல் இருக்கவேண்டுமே !
**
அரசு இயந்திரத்தைத் திருத்த நம்மாலாகாது. திட்டத்தான் முடியும். ஆட்டோ அனுப்பினால் ஓடி விட வேண்டியதுதான்! யூகலிப்டஸ் மரங்கள் கூட இயற்கைக்குக் கேடுதான் என்று படித்திருக்கிறேன். ஒரு மாணவன் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது அவன் சார்பில் பத்து மரங்களாவது வளர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்றிருக்க வேண்டும்.
LikeLiked by 1 person
மரங்கள் வெட்டப்படும் அவலம் நடந்து கொண்டே இருக்கிறது. புறவழிசாலை, மெட்ரோ , மேம்பாலம் என்று சாலை வசதிக்கு மரங்களை காவு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
LikeLiked by 1 person
bro the indian population needs to be controlled but nowadays no body is siezed of this issue…. the HUGE POPULATION requires more roads more water.. more space…..
LikeLike