இந்திய அணி ! இருக்கு இனி !

உலகக்கோப்பை மேட்ச்சில் பாகிஸ்தானை வீழ்த்திவிட்டோம் என்கிற போதை தலைக்குள் இன்னும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். இந்த மிதப்பில் தரையில் கால்படாது அடுத்த மேட்ச்களில் இந்தியா இறங்கினால், சரிந்து விழ வாய்ப்புகள் அதிகம். உஷார் மனநிலை தேவை.

மகத்தான வெற்றியின்போது ஒன்று நிச்சயம் நடந்துவிடுகிறது. அணியின் பலவீனங்கள், குறைகள் பூசி மெழுகப்பட்டுவிடுகின்றன. தொழில்பூர்வ அணுகுமுறையில் பார்த்தால், வெற்றியைத் தாண்டி நாம் எங்கெங்கே சொதப்பி இருக்கிறோம் எனத் தெரியவரும். ஆசியக்கோப்பை போட்டிகளிலிருந்தே நாம் ஆரம்பித்தோம் என்றால், அணியின் ஒவ்வொரு பலமான வெற்றி, சாதனைக்குப் பின்னும் ஒரே ஒருவர் பெரும் அரணாக நின்று இந்தியாவைக் காப்பாற்றிவருவது கண்கூடு. விராட் கோஹ்லி. இந்தியாவுக்காக, கொஞ்சகாலத்துக்குமுன் சச்சின் டெண்டுல்கரும், அதற்கும் முற்பட்ட காலத்தில் சுனில் கவாஸ்கர், விஷ்வனாத் ஆகியோரும் சாகஸமாய்ச் செய்து வந்த வேலை! முன்னணி வீரர்கள் நொறுங்கிவிட்ட நிலையிலும், நிதானம், பொறுமையோடு பெரும் தாக்குதல்திறன் கொண்டு விளையாடும் இந்தியாவின் வைஸ்-கேப்டன் கோஹ்லி. கொண்டாடப்படவேண்டிய மேதமை. சந்தேகமில்லை.

ஆனால் சர்வதேச அளவில் ஒரு முன்னணி கிரிக்கெட் அணி என்கிற நிலையிலிருக்கும் இந்தியா, எப்போதும் ஒருவரையே நம்பி காலம் தள்ள முடியுமா? கிரிக்கெட் ஒரு அணி-விளையாட்டல்லவா? இதர அனுபவ பேட்ஸ்மன்கள் அணியில் என்னதான் செய்கிறார்கள்? நியூஸிலாந்துக்கெதிராக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா எதிர்ப்புத்திறன் காட்டி பொறுப்புடன் ஆடியிருந்தால், இந்தியா 79-ல் ஆல்-அவுட்டாகி அவஸ்தைப்பட்டிருக்குமா? இந்திய பேட்ஸ்மன்கள், சர்வதேச அனுபவமற்ற நியூஸிலாந்து ஸ்பின்னர்களிடம் எப்படியெல்லாம் தடவினார்கள் என்பதை வீடியோ போட்டுப் பார்த்தார்களா? மேற்சொன்ன மூவரும் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் என்ன சாதித்தார்கள்? கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கிறது. இந்த மூவரின் தடுமாற்றம் ஒருபுறமிருக்க, கீழ்வரிசையில் ஆடும் ஆல்ரவுண்டர்களான பாண்ட்யாவும், ஜடேஜாவும் தோனிக்குத் துணைபோகாமல், துவண்டார்கள். இந்த பலவீனங்களை இந்திய அணி ஒருமித்து உட்கார்ந்து ஆராயவேண்டும். பயிற்சி எடுத்து, உடனே சரிசெய்யவேண்டும். செய்யாவிட்டால், உலகக்கோப்பை ஒரு கனவாகிவிடும்.

நாளை (23-3-2016) பெங்களூரில் நடக்கவிருக்கிறது பங்களாதேஷுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த மேட்ச். பெங்களூரில் இதுவரை 120-155 என்கிற ரீதியில்தான் அதிகபட்ச ஸ்கோர் செல்கிறது. பிட்ச்சானவுடன் பந்து வேகமாக திருப்பம் காணும் மைதானத்தில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இதே மைதானத்தில்தான் வெஸ்ட்-இண்டீஸ் ஸ்பின்னர்கள் சாமுவேல் பத்ரீயும்(Samuel Badree), சுலைமான் பென்(Suleiman Benn) –னும் ஸ்ரீலங்காவை 122-ல் சுருட்ட வழிசெய்தார்கள். ஆதலால், நாளை மேட்ச்சில் ஜடேஜா, அஷ்வின், ரெய்னாவுக்கு நிறைய வேலை இருக்கிறது. யுவராஜின் பார்ட்-டைம் ஸ்பின்னையும் தோனி உபயோகப்படுத்தக்கூடும். இந்திய பேட்ஸ்மன்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். பங்களாதேஷின் டாப் பௌலர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் (Mustafizur Rahman) காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டார். அந்த அணியில் ஷகிப்-உல்-ஹசன், முகமதுல்லா, சக்லைன் சஜீப் ஆகிய ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். பெங்களூரில் இவர்கள் இந்திய பேட்ஸ்மன்களை சோதனைக்குள்ளாக்குவார்கள்.

அடுத்துவரும் இரு போட்டிகளில் (எதிராக: பங்களாதேஷ், ஆஸ்திரேலியா), விராட் கோஹ்லியைத் தாண்டியும் இந்தியா என்னென்ன செய்ய முடியும்? ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா, ஹர்தீக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் எத்தகைய பேட்டிங்கை வெளிக்கொணர்வார்கள்? நமது பௌலர்களின் சாகஸங்கள் தொடருமா? இனி வரும் நாட்கள் இனிதே அரங்கேறுமா? இந்தியா ஆர்வமுடன் சீட்-நுனியில் உட்கார்ந்து பார்க்கிறது.

**

2 thoughts on “இந்திய அணி ! இருக்கு இனி !

  1. ரோஹித்தை முதல் இரண்டு ஓவர்களுக்குள் அவுட்டாக வேண்டும் என்று எதிரணியினருக்குத் தெரிந்து விட்டது. அதையும் தாண்டி ரோஹித் விளையாடினால் எடுபடலாம் நீங்களே கூறியது போல் அவர் ஒரு மெர்குரியல் ஆட்டக்காரர் . வெச்சால் குடுமி சரைத்தால் மொட்டை என்னும் ரகம் 20 ஓவர் ஆட்டங்களில் அன்று நன்கு ஆடுபவரே வெல்வர்

    Liked by 1 person

  2. நீங்கள் சொல்வது சரிதான். ஒரு போட்டியின் ஏதோ ஒரு தருணத்தில், சாமி வந்ததுபோல் ஒரு ப்ளேயர் பேட்டைச் சுற்ற ஆரம்பித்தால் போதும் எதிரணி காலி. இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸின் க்ரிஸ் கெய்ல் செய்தது இதைத்தான்! ( century in 47 balls).

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s