உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முகத்தில் விழுந்த குத்து!

டி 20 கிரிக்கெட் தன் வேலையை காண்பித்துவிட்டது. முதல் போட்டியிலேயே முன்னணி அணிகளில் ஒன்றான இந்தியாவை, நியூஸிலாந்து ஆச்சரியமாக, அதிரடியாக வீழ்த்தியது. காரணம்? ஸ்பின் !
முந்தைய கட்டுரையிலேயே (கிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்) சொல்லியிருந்தேன். இந்திய பேட்ஸ்மன்கள் நியூஸிலாந்து ஸ்பின்னர்களான இஷ் சோடியையும்(Ish Sodhi), மிட்செல் சாண்ட்னரையும்(Mitchell Santner) அலட்சியம் செய்யாது கவனமாக ஆடவேண்டும். ஆடினார்களா நமது பயில்வான்கள்? இல்லை. திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்ட குருடனைப்போலே, தடவித் தடவி விக்கெட்டுகளை இழந்தார்கள். முடிவு? அவமானகரமான தோல்வி.

முதலில் ஆடிய நியூஸிலாந்து, இந்திய பிட்ச்சில், நமது ஸ்பின்னர்களை ஆடுவது பற்றி நன்றாக ஹோம்-ஒர்க் செய்து வந்திருந்தது. நேஹ்ரா, பும்ரா ஆகியோருடன் இந்திய ஸ்பின்னர்களான அஷ்வின், ரெய்னா, ஜடேஜா திறமையாகப் பந்துவீசினார்கள். நியூஸிலாந்து, அதிரடியும் காண்பிக்க இயலாமல், தடுப்பாட்டமும் ஆடமுடியாமல் தட்டுத்தடுமாறித்தான் முன்னேறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக ரன் சேர்த்து 126 வரை கொண்டு சென்றுவிட்டார்கள். கோரி ஆண்டர்சன்(Corey Anderson) 34 ரன்கள். இறுதியில் இறங்கிய ல்யூக் ரோன்ச்சி(Luke Ronchi) அதிரடியாக 21. 127-க்குள் நியூஸிலாந்தைக் கட்டுப்படுத்தியது இந்திய பௌலர்களின் சாதனைதான். எனினும், திருப்பி ஆட வருகையில் இந்திய பேட்ஸ்மன்கள் திறன் காட்டவேண்டாமா?
விராட் கோஹ்லியையும்(23 ரன்கள்), தோனியையும்(30 ரன்கள்) தவிர மற்ற ஆட்டக்காரர்கள் ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்துவந்ததுபோல் தடவினார்கள். நியூஸிலாந்தின் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோடி ஆகிய ஸ்பின்னர்கள் இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சினார்கள். ஏதோ ஷேன் வார்ன் ஸ்பின் போடுவதுபோல் போட்டார்கள் சாண்ட்னரும், சோடியும். செங்குத்தாக ஸ்பின் ஆன பந்துகளைத் துரத்தி கேட்ச் கொடுப்பது, அல்லது கோட்டுக்கு வெளியே சென்று சுழலைத் தகர்க்க முயன்று ஸ்டம்ப் அவுட் ஆவது என இந்தியர்கள் ஒவ்வொருவராகத் தற்கொலை செய்துகொண்டார்கள். ரோஹித், தவண், ரெய்னா, யுவராஜ், ஜடேஜா, பாண்ட்யா ஆகியோரிடம் இந்தியா இத்தகைய பேட்டிங்கையா எதிர்பார்த்தது? அதுவும் உலகக்கோப்பையில்? தலையில்தான் அடித்துக்கொள்ளவேண்டும். நாக்பூர் ரசிகர்களுக்கு ஏண்டா இவ்வளவு சிரமப்பட்டு இந்த மேட்ச்சுக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.

நாக்பூரின் புதிய பிட்ச்சில், பயிற்சி மேட்ச்சில் ஸ்பின் எடுத்ததும், விக்கெட்டுகள் சரமாரியாக ஸ்பின்னர்களிடம் பறிபோனதையும் நியூஸிலாந்து கவனித்து வைத்திருந்தது. தங்களுடைய மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌதீ(Tim Southee), ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) ஆகியோரை நியூஸிலாந்து ஆட்டத்தில் சேர்க்கவே இல்லை. (இதனை இந்திய வீரர்கள் கவனித்தார்களா?) மாறாக, தங்களுடைய கத்துக்குட்டி ஸ்பின்னர்களான சாண்ட்னர், சோடி ஆகியோரை அணியில் சேர்த்தனர். அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான நேதன் மெக்கல்லமும்(Nathan McCullum) இருந்தார். நியூஸிலாந்தின் gameplan என்ன, நாக்பூரின் ஆடுதளத்தின் நிலை(condition of the pitch) என்ன என்பதைப்பற்றி நமது பேட்ஸ்மன்கள், தொழில்பூர்வமாகச் சிந்திக்கவில்லை. அதற்கான முனைப்பையும் காட்டாது முட்டாள்களைப்போல ஆடினர். அதனால்தான் இந்திய பௌலர்கள் சேம்பியன்களாகப் பந்துவீசியும், இந்திய பேட்ஸ்மன்கள் (தோனி, கோஹ்லி தவிர்த்து), பலி ஆடுகளாக மாறிப்போனார்கள். நியூஸிலாந்தின் 3 ஸ்பின்னர்கள் 9 இந்திய விக்கெட்டுகளைச் சுருட்டி எடுத்தார்கள். சாண்ட்னர் பந்துவீச்சு அதிப்ரமாதம் (4 விக்கெட்டுகள்). 79 ரன்களில், 19-ஆவது ஓவரிலேயே இந்தியா ஆல்-அவுட் ஆனது. எப்படி இருக்கு நம்ப லட்சணம்?

டி-20 மேட்ச்சுகளில் நியூஸிலாந்து இதுவரை இந்தியாவிடம் தோற்றதில்லை என்பது பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்தியா தோற்றது ஒரு அதிர்ச்சியல்ல. ஆனால் எவ்வளவு மோசமாக விளையாடித் தோற்றோம் என்பதை நமது பேட்ஸ்மன்கள் தங்கள் மண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும். இதை எவ்வளவு விரைவில் செய்கிறார்களோ, அவ்வளவு இந்தியாவுக்கு நல்லது. தொழில்ரீதியாக, இந்திய பேட்ஸ்மன்கள் பிட்ச்சுக்கு ஏற்றபடி, எதிரணியின் திட்டங்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள முடியவில்லை எனில், இந்த உலகக்கோப்பையில் நாம் அரையிறுதிக்குக் கூட முன்னேற முடியாது. இந்தியாவின் க்ரூப் மிகவும் வலிமையானது. நமது அடுத்த ஆட்டங்கள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை எதிர்த்து. எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. அதிர்ச்சிகளை அள்ளிக்கொடுக்கும் டி-20 உலகக்கோப்பை !
**

2 thoughts on “உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் முகத்தில் விழுந்த குத்து!

  1. கிரிக்கட் இஸ் அன்ப்ரெடிக்டபிள். இதுவரை வெல்லாத அணியுடன் மோதுகிறோம் என்று கூடப் பார்க்கவில்லை. பத்து தொடர் வெற்றிகள் தந்த மிதப்பில் ஓவர் கான்ஃபிடெண்ட்

    Liked by 1 person

  2. ரொம்பவும் எதிர்பார்ப்புடன் பார்க்க உட்கார்ந்தால் கரி பூசி விட்டார்கள். எப்போது நன்றாக ஆடுவார்கள், எப்போது சடசடவென வீழ்வார்கள் என்றே சொல்ல முடியாத அணியாகிவிட்டது நமது அணி. 120 ரன்ஸ் தான் ஆனா அடிக்கணுமே என்று சொல்லி முடிப்பதற்குள் முதல் அவுட்!
    எத்தனை கோவம் வந்தாலும் விடாமல் பார்க்கிறோமே அந்த தைரியம் தான் இவர்களுக்கு என்று தோன்றுகிறது.

    Liked by 1 person

Leave a comment