உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவில் விளையாடப்படும் டி-20 தொடர். ஸ்ரீலங்கா அணி அவ்வளவு ப்ரமாத அணி அல்ல. இரண்டு மாத முன்னர்தான் நியூஸிலாந்திடம் செம்மையாக உதைவாங்கித் திரும்பிய அணி. மாலிங்கா, மேத்யூஸ், தில்ஷன் போன்ற வீரர்கள் ஆடாத நிலையில், புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐயோ, பாவம் இந்த அணி. இப்படித்தான் நமது மீடியா எழுதி ஸ்ரீலங்காவைப் பரிதாபமாகப் பார்த்தது – நேற்று நடந்த போட்டிக்கு முதல் நாள் வரை. ஆனால் நடந்தது என்ன? நேற்றைய (9-2-16) போட்டியில், பூனேயின் க்ரீன் டாப் பிட்ச்சில் முதலில் பந்துவீசிய ஸ்ரீலங்காவின் அனுபவமற்ற இளம் வீரர்கள், இந்திய அணியைப் பந்தாடிவிட்டனர்.
ரோஹித் ஷர்மா ஒரு impetuous player. Tremendously talented but very impulsive. அவர் அடித்து நொறுக்குவதற்கும், ஓரிரண்டு பந்துகளில் விழுவதற்கும் சமவாய்ப்புகள் உண்டு. அவர் வீழ்நதால்தான் என்ன? தவன், ரஹானே, தோனி எல்லாம் உடனே ஊர்வலத்தில் சேர்ந்துகொள்ளவேண்டுமா? இதற்குப் பேர்தான் அனுபவமா? ஆரம்பத்தில் தடுமாற்றம் எனில், நிலைத்து ஆடுவதற்குத்தானே மிடில் ஆர்டர் என்று ஒன்று இருக்கிறது. இந்த மிடில் ஆர்டரில் வரும் இந்திய வீரர்கள் யார்? கர்ஜிக்கும் இந்திய சிங்கங்கள்! ரெய்னா, யுவராஜ் சிங், தோனி, ஜடேஜா ! இவர்கள் அடித்த ரன்கள்? 20, 10, 2, 6. ஸ்ரீலங்காவின் அனுபவமற்ற கத்துக்குட்டிகளிடம் சீறிய சிங்கங்கள் இவை! உலகக்கோப்பையில் என்ன நடக்குமோ! பௌலிங்கில் ஸ்ரீலங்காவின் ரஜிதா, ஷனகா ஆகியோர் ப்ரமாதமாகப் பந்துவீசி இந்தியர்களைச் சுருட்டினார்கள்.
58 ரன்களில் இந்தியாவின் 7 டாப் விக்கெட்டுகள் காலி. 9-ஆம் நம்பரில் ஆட வந்த அஷ்வின்தான் விவேகம், நிதானம் இவற்றின் துணையுடன் கிரிக்கெட் ஆடியவர். அவர் இதே ஸ்ரீலங்க பௌலர்களை அனாயாசமாக ஆடி 31- நாட் அவுட் ஆக இருந்தார். அந்தப் பக்கம் அவருக்குத் துணை நிற்க ஆளில்லை . இந்தியா 19 ஓவர்களிலேயே 101-க்கு ஆல்-அவுட். எப்படி இருக்கு உலகின் முதல் ரேங்க்கில் இருக்கும் அணியின் வீரசாகசக் கதை?
இந்தியத் தரப்பில் பௌலர்கள் நேஹ்ராவும், அஷ்வினும் சிறப்பான பங்களித்தனர். ஆனால் 102 என்கிற இலக்கு எந்த ஒரு அணிக்கும் ஒன்றுமேயில்லை. புதிய கேப்டன் சண்டிமால், கபுகேதரா ஆகியோர் நிதானமாக ஆடி, ஸ்ரீலங்காவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.
உலகக்கோப்பைக்கு முன் இந்தியாவுக்கு இந்த அடி தேவைதான். `நாம் ஆஸ்திரேலியாவையே டி-20-யில் கலக்கியிருக்கிறோம்` என்கிற இறுமாப்பு உலகிலிருந்து இந்திய வீரர்கள் உடனே மீள வேண்டும். இனிவரும் போட்டிகளில் அசடு வழியாமல், பொறுப்புணர்ச்சியுடன் பேட்டிங் செய்தால் உலகக்கோப்பையில் கொஞ்சம் தேறலாம்.
அணியில் ரஹானே 3-ஆம் நம்பரில் வருவது அவ்வளவு உசிதமாகப் படவில்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் மணீஷ் பாண்டே அந்த இடத்தில் ஆடியிருக்க வேண்டும். யுவராஜ் சிங், பழைய ரெப்யுடேஷனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இனி காலம் ஓட்ட முடியாது. ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்து கை, காலைத் தூக்குகிற காலம் மலையேறிவிட்டது என்பதை எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறாரோ அவ்வளவு அவருக்கும், இந்திய அணிக்கும் நல்லது.
**
ஸ்ரீலங்கன் வீரர்கள் நன்கு ஆடினார்கள். நம்மவர்களுக்கு ஓவர் கான்ஃபிடென்ஸ்
LikeLiked by 1 person