5 போட்டிகளைக்கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், இந்தியா கடைசி போட்டியை சிட்னியில் எதிர்பாராத விதமாக வென்றது. அதற்குக் காரணமானவர்களில் இருவர் முக்கியமானவர்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் மனீஷ் பாண்டே(கர்னாடகா), மற்றும் (குஜராத்-மும்பை இண்டியன்ஸ்) வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah). அதிர்ஷ்டவசமாகக் கடைசி நேரத்தில் விளையாடும் அணியில் சேர்க்கப்பட்ட பும்ரா, அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களைத் தன் வித்தியாசமான பந்துவீச்சு ஆக்ஷனால் திணறவைத்தார். கூடவே 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
அடிலெய்டில் (Adelaide) நேற்று(26-1-2016) நடந்த முதல் டி-20 போட்டியில், முதன் முதலாக 22-வயது பும்ரா இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். விளைவு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. அதிரடி ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் புதுமுக வீரர் பும்ராவிடம் சிக்கித் திணறினர். அவருடைய குழப்பும் ஆக்ஷன் ஒருபுறம். சீறும் வேகம் மற்றொருபுறம். இன்னும் ஒரு முக்கிய அம்சம்-இடையிடையே அவர் வீசும் துல்லிய யார்க்கர்கள்(yorkers). வீழ்த்திய விக்கெட்டுகள் 3. பும்ரா சேர்க்கப்பட்ட கடைசி இரண்டு மேட்ச்சுகளில் (கடைசி ஒரு-நாள் போட்டி, இன்னொன்று நேற்றைய டி-20), வெற்றிமிதப்பில் கொக்கரித்த ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி எறிந்தது என்பது கவனிக்கப்படவேண்டியது.
இந்திய ஸ்பின்னர்கள் அஷ்வின், ஜடேஜா, இன்னுமொரு புதுமுக பௌலரான ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya, age:22)(பரோடா-மும்பை இண்டியன்ஸ்), மற்றும் அணிக்குத் திரும்பியுள்ள சீனியர் வீரர் ஆஷிஷ் நேஹ்ரா ஆகியோர் இந்திய பௌலிங் தாக்குதலைச் சிறப்பாகச்செய்தனர். ஆஸ்திரேலியா இந்த மேட்ச்சில் நிமிர்ந்து நிற்கவே முடியவில்லை. 189 என்கிற வெற்றி இலக்கை எளிதில் அடையலாம் என ஆரம்பித்த ஆஸ்திரேலியா, கேப்டன் ஆரோன் ஃபின்ச்(Aaron Finch)-ன் 44 ரன்கள் என்கிற அதிகபட்ச ஸ்கோரைத்தான் எட்ட முடிந்தது. மற்ற சூரப்புலிகளான ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வாட்சன் (Shane Watson), டேவிட் வார்னர் (David Warner) ஆகியோர், நின்று ஆடுவதற்கு இந்திய பௌலர்களால் அனுமதிக்கப்படவில்லை. இந்தியாவின் துல்லியப் பந்துவீச்சு அணிக்கு உற்சாகம் தந்ததோடு வெற்றியையும் எளிதாக ஈட்டித் தந்தது. இந்திய ரசிகர்களுக்குக் குடியரசு தினப் பரிசு!
இந்தியா முதலில் பேட் செய்கையில் துணைக்கேப்டன் விராட் கோஹ்லியின் அபாரமான 90 நாட்-அவுட் இன்னிங்ஸில் பெருமிதம் கொண்டது. மற்ற பங்களிப்புகள்: சுரேஷ் ரெய்னா 41, ரோஹித் ஷர்மா 31. 188 க்கு 3 விக்கெட் என்கிற இந்திய ஸ்கோர் 15-20 ரன்கள் குறைவோ என ஆரம்பத்தில் தோன்றியது. `எங்களுக்கு இதுவே போதும், பார்த்துக்கொள்கிறோம் ஆஸ்திரேலியாவை` என்ற கம்பீரத்தில் முதன்முதலாகச் செயல்பட்டனர் இந்திய பௌலர்கள். சாதித்தனர். இதுதான் இந்த வெற்றியின் சிறப்பு அம்சம்.
ஆட்டமுடிவில் ஆஸ்திரேலிய மீடியாமுன் பேசுகையில், கேப்டன் தோனி இந்திய பௌலர்களையும், விராட் கோஹ்லியின் பேட்டிங்கையும் புகழ்ந்து தள்ளினார். குறிப்பாக புதிதாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவின் பங்களிப்பு அவருக்கு சந்தோஷத்தைத் தந்தது. பாண்ட்யாவின் முதல் ஓவர் படுமோசமாக இருந்தது. 6 ஒய்டுகள்(wides). ஆனால் அதற்குப்பின் வீசிய ஓவர்களின் துல்லிய யார்க்கர்கள், வேகமாக அடித்தாட முனைந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களைத் தடுமாறச்செய்தன. 2 விக்கெட்டுகளையும் எடுத்தார் பாண்ட்யா. அதனால்தான் இந்தப் புகழாரம்.
அடுத்துவரும் இரண்டு டி-20 போட்டிகளில் இந்தியாவின் புதிய பௌலர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா கூர்மையாகக் கவனிக்கப்படுவர். அவர்களுக்கும் அணியில் நிலைபெற அவகாசம் தேவை. அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள `பெரிசு` யுவராஜ் சிங்குக்கு நேற்றைய மேட்ச்சில் வேலை ஏதும் இருக்கவில்லை. அடுத்த மேட்ச்சுகளில் ஏதாவது செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
**
வெற்றி தொடரட்டும்…
LikeLiked by 1 person