நவம்பரிலிருந்து மார்ச் வரை செல்லக்கூடியது டெல்லியின் குளிர்காலம். இந்த வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சற்றே மிதமான குளிர் இருந்தது எனலாம். ஜனவரி முதல் வாரத்தில் கூட பகல் பொழுது 20-22 டிகிரியில் சுகமாக இருந்தது. மாலை 4 மணிக்குப்பின் தட்ப-வெப்பநிலை திடீரெனச் சரியும். இரவில் 9-11 டிகிரி என நடுக்கி எடுக்கும்.
இந்த வருடம் அவ்வளவு குளிரில்லை என ஒரு வாரம் முன்புதான் அலட்சியமாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள் டெல்லிவாசிகள். பகலில் சிலர் ஸ்வெட்டர் அணியாமல் தங்களது வீரத்தை இயற்கையின் முன் காண்பித்துப் பெருமைப்பட்டுக்கொண்டிருந்த நேரம். பொங்கல் முடிந்தது. பதுங்கிக்கிடந்த குளிர் பாய்ந்தது. அதிகாலையிலேயே ஆரம்பித்தது குளிர்காற்று. பகலிலே வெட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்தவர்களை வீட்டுக்குள் தள்ளி கதவைச் சாத்தியது. கடந்த சில நாட்களாக நிலைமை மேலும் மோசம். குளிரைப் பொறுக்கமுடியாமல், ஸ்வெட்டர், அதற்கு மேல் ஜாக்கெட், தலைக்குக் குல்லா என அலங்கரித்துக்கொண்டு வெளியே வர வேண்டிய நிலை. மோட்டார் பைக், ஸ்கூட்டர்களில் செல்பவர்களின் நிலையோ பரிதாபம். அவர்கள் கையுறை, மஃப்ளர் சகிதம் முகத்தையும் மூடிக்கொண்டு அலைவது விசித்திரமான தோற்றம். என்ன செய்வது? பிழைப்பு நடத்தியாகவேண்டுமே.
பணவசதி படைத்தவர்களுக்குக் குளிர்காலமோ, கோடைகாலமோ, ஒரு கவலையுமில்லை. அவர்கள் தங்களை , தங்கள் குடும்பத்தினரை நன்றாக வசதிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நகரின் மத்தியதர வகுப்பினரும், பொறுத்தமாக கம்பளி உடைகளை அவரவர் வசதிக்கேற்ப வாங்கிவைத்துக்கொண்டு குளிர்காலத்தை ஓட்டிவிடுவார்கள். மிஞ்சி, மிஞ்சிப்போனால், ஜலதோஷம், ஜுரம், பாராசிட்டமால், ஆண்ட்டிபையாட்டிக்ஸ் என சில நாட்கள் கடுமையாகப் போகும். அவ்வளவுதான். சமாளித்துவிடலாம்.
தலைநகரின் ஒரு பகுதி அழகு, கம்பீரம், படாடோபம், சொகுசு வாழ்க்கை. அதன் அடுத்த பக்கமோ வாழ்வின் வெளிச்சம்படாத இருள்வெளி. அங்கே நிம்மதியற்று உலவும் ஏழை மக்கள். பெரும்பாலானோர் ஒரு சீசன் முழுக்கப் போட்டுக்கொள்ள ஒன்றிரண்டு பழைய ஸ்வெட்டர்களை, பெரும்பாலும் கந்தல்கள் – வைத்துக்கொண்டிருப்பார்கள். அதையே போட்டுக்கொண்டு 3 மாதம் ஓட்டவேண்டும். வேலைக்கும் செல்லவேண்டும். சம்பாதிக்கவும் வேண்டும். அதிலும் பிஹார் , உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்துப் பிழைப்புக்காக டெல்லி வந்து அல்லல்படும் ஜனங்கள் இருக்கிறார்களே. அவர்கள் பாடு சொல்லி மாளாது. பெரும்பாலோனோருக்கு டெல்லியில் வீடில்லை. கிட்டத்தட்ட அகதிகள் போல்தான். அவர்கள் தலைநகரின் மேம்பாலங்களுக்குக் கீழே தங்கி, அடுப்பை மூட்டி, சப்பாத்தி சுட்டு, பருப்பை வேகவைத்து எப்படியோ கதை ஓட்டுகிறார்கள். கோடைகாலத்தில் அவ்வளவு பிரச்னையில்லை. ஆனால் குளிர்காலம்? போட்டுக்கொள்ள கம்பளி ஆடை, சாக்ஸ் போன்றவை இல்லை. இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கும் சிறு குழந்தைகள் ஸ்வெட்டர் இன்றி, கந்தலை உடுத்திக்கொண்டு, வெறுங்காலுடன் பாலங்களுக்கடியில் உலாத்துவதைப் பார்த்தால் யாருக்கும் மனம் உருகும். யாராவது மனமிரங்கி பழைய ஸ்வெட்டர்களைக் கொடுத்தால்தான் உண்டு. அதுவும் எத்தனை பேருக்குக் கொடுக்கமுடியும்? பாலத்துக்கடியில், சமையல் அடுப்பின் கதகதப்பிலேயே குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். அல்லது குப்பைக் காகிதங்களை, விறகுகளைச் சேர்த்து இரவெல்லாம் தீ மூட்டிக் குளிர்காய்ந்து, தூங்கமுடியாமல்..அப்பப்பா!இப்படியும் ஒரு வாழ்க்கை…
டெல்லியிலும் ஆட்சிகள் மாறுகின்றன.ஆனால் பிரயோஜனம் இல்லை. காங்கிரஸ் கடந்த 10 வருடம் ஆண்டது. புதிய மேம்பாலங்கள், ஸ்டேடியங்கள் கட்டியது. காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தியது. கூடவே எதெதெற்கோ கட்டடங்கள் கட்டியது, புதிய சொகுசு பஸ்களை இஷ்டத்துக்கும் வாங்கியது. தனக்குக் காசுபணம் சேர்த்துக்கொண்டது. வேலையாட்கள், கூலிகள் என்கிற பெயரில், வெளிமாநிலங்களிலிருந்து ஏழை, பாழைகள், கணக்கு வழக்கில்லாமல் குடும்பத்தோடு வந்து பாலங்களுக்கடியில் குடியேறுவதைப் 10 வருஷமாகப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தது டெல்லியின் காங்கிரஸ் அரசு (2004-2014). ஆதரவற்ற ஏழைகள், வேலை வெட்டி இன்றி தலைநகர் முழுக்க அலைந்து திரிந்தால் எப்படி இருக்கும்? தடுக்க எந்த முயற்சியும் அரசு செய்யவில்லை. மாறாக, தேர்தல் சமயத்தில் இந்த ஏழைகளின் குடும்பங்களுக்கு வாக்காளர் அட்டையை வழங்கித் தன் கொடியைக் கூரைகளுக்குமேல் நட்டு, தனக்கு ஓட்டு வங்கியாக மாற்றிக்கொண்டது. நகரத்தின் சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், சுற்றுச்சூழல் எப்படி நாசமாகப்போனால் என்ன? அரசியல்வாதிகளுக்கு ஓட்டு முக்கியம். அவர்களின் பேராசை, கதியற்ற மனிதர்களைப்பற்றிய அலட்சியம் ஆகியவை இத்தகைய ஏழை மக்களின் துயர வாழ்க்கையை மேலும் அவலமாக ஆக்கிவருகிறது. இயற்கையும் தன் பங்குக்கு, குளிர்காலத்தில் இந்த ஏழைகளைக் கடுமையாகத் தண்டிக்கிறது. தீராத துன்பத்தின் மாயவலையில் அப்பாவி மக்கள்.
**
sleep mafia, who controls who sleeps where, for how long, and what quality of sleep.”
LikeLike
What do you think of the NYT article
LikeLike
Thanks for the NYT article which I just read. The article is about homeless in over-populated Old Delhi. Interesting to read about the blanket services. Old Delhi, of course, is a different world altogether! When I wrote I was referring to New Delhi and Delhi municipal areas where I move around often and where there are many flyovers and make-shift roadside shelters of these labourers and the homeless.
The problem of urban homeless is global. I have observed conditions of the homeless even in the mid-90s, in European cities like Geneva and Paris. But there the problem is still not alarming, I think. Here it is enormous and hugely challenging. Neither the earlier govt nor the present one seem to care.That’s the tragedy.
LikeLike
வாழ்க்கை பலரும் போராட்டம் தான்…
LikeLiked by 1 person