பித்தன் மகனுக்குப் பிடித்த பித்துக்குளி – 2

தொடர்ச்சி..

70-வருட பக்தி-இசைவாழ்வில் ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார் பித்துக்குளி முருகதாஸ். 30 கேசட்டுகள் வெளிவந்துள்ளன. முருகன்மீதுதான் பெரும்பாலும், எனினும் அம்பிகையின், கண்ணனின், தன் குருவின் புகழ் பாடும்பாடல்களையும் எழுதி இசை அமைத்துள்ளார். `அலைபாயுதே கண்ணா`, `ஆடாது அசங்காது வா கண்ணா!` ஆகிய பிரபலமான கண்ணன் பாடல்களை, வழக்கமாகப் பாடும் ராகத்திலிருந்து விலகி, வித்தியாசமாக மெட்டமைத்துப் பாடி அசத்தியிருக்கிறார் இவர். `கண்ணா` என்பது நீங்களும் நானும் சொல்லும்போது ஒரு சொல் மட்டுமே. `கண்ணா` என்கிற சப்தம் இவர் வாயிலிருந்து வந்தால், அது தேவகானம். (கேட்கலாம் யூ-ட்யூபில்)

முருக பக்தரான சாண்டோ சின்னப்பத்தேவர் தான் எடுத்த `தெய்வம்` என்கிற பக்திப்படத்தில் பித்துக்குளி முருகதாஸை, முருகதாஸாகவே வரச்செய்து ஒரு பாடலைப் பாடவும் வைத்தார். புகழ்பெற்ற அந்தப் பாடல்: `நாடறியும் நூறு மலை..நானறிவேன் சுவாமிமலை`.

மலேஷியா, நேபாளம், மொரீஷியஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் முருகதாஸ் நடத்திய இசைக்கச்சேரிகள், இந்துமத பக்திக்கலாச்சாரம் ஆங்காங்கே வேரூன்ற காரணமாய் அமைந்தன. இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் தங்கள் தாய்நாட்டோடு தொடர்புபடுத்தின. மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, மலேஷியா போன்ற நாடுகளுக்கு 40-தடவைகளுக்கு மேல் அழைக்கப்பட்டிருக்கிறார். இவரது பக்திப்பாடல் நிகழ்ச்சிகள், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு, வரவேற்புடன் நடத்தப்பட்டுள்ளன. நேபாள ராணி, முருகதாஸின் ஆழ்ந்த முருகபக்திபற்றிக் கேள்வியுற்று, அவரை அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய்வித்தார்.

தென்னாப்பிரிக்க பயணங்களின்போது, பித்துக்குளி முருகதாஸுக்கு, இந்திய வம்சாவளியினரும், தென்னாப்பிரிக்கர்களும் அமோகமான வரவேற்பளித்தனர். முருகதாஸின் கவர்ச்சித் தோற்றம், கம்பீரக் குரல், இவர் தந்த வித்தியாசமான பக்திமழை கண்டு தென்னாப்பிரிக்க நாடே சிலிர்த்தது. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இவரைச் சந்திக்கையில், `எங்கள் நாட்டில் என்னைவிடவும், உங்களை நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கிறது!` என்று முருகதாஸைப் பாராட்டவைத்தது. தென்னாப்பிரிக்காவிற்குப் பலமுறை சென்றிருந்த முருகதாஸ், அங்கு தனக்குக் கிடைத்த பணத்தை வைத்து, கல்வி அறக்கட்டளை ஒன்றைத் துவக்கினார். ஏழை ஆப்பிரிக்கக் குழந்தைகளின் கல்விக்கு அது உதவி தருவதாய் அமைந்தது.

இந்தியாவிலும், சென்னையில் ஸ்ரீ ஜோதிர்மய தேவி அறக்கட்டளை அவர் முயற்சியால் தொடங்கப்பட்டது. தனது கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு அறக்கட்டளையை நடத்தி, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க நினைத்தது இந்தக் கருணை உள்ளம். கச்சேரிகளை ஏற்பாடு செய்பவர்களிடம் `எனக்குக் கொடுக்கவிருக்கும் பணத்தை வைத்து ஏழைகளுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்` என்று அடிக்கடிக் கூறிவந்திருக்கிறார் முருகதாஸ்.

பஜனைக் கச்சேரிகளின்போது இவருடன் தம்புரா வாசித்து, சேர்ந்து பாடிக் குரல் கொடுத்தவர் தேவி சரோஜா என்பவர். இவரை முருகதாஸ் தன் 58-ஆவது வயதில் மணம்புரிந்துகொண்டார். இருவரும் சேர்ந்து பாடிய `ராதாகல்யாணம்` கச்சேரிகள் பிரபலமானவை. இவருடன் பயணம் செய்து, சேர்ந்து கச்சேரி செய்து, உற்றதுணையாக இருந்த அந்தப் பெண்மணி 2011-ல் காலமானார்.

ஸ்ரீரமண மகரிஷி, ராமதாஸ் ஸ்வாமிகள், ஸ்வாமி சிவானந்த சரஸ்வதி ஆகிய மூன்று மகான்களையும் தான் சந்தித்ததே இறைவன் நடத்திய திருவிளையாடல்தான் என்கிறார் பித்துக்குளி முருகதாஸ். தனது 36-ஆவது வயதில் திருவண்ணாமலை சென்றது ரமண மகரிஷியைச் சந்திக்கத்தான். அவரைப் பார்த்தவுடனேயே `இவர்தாண்டா உன் குரு!` என்றது என் மனம்` என்கிறார் முருகதாஸ். திருவண்ணாமலையில் சிலகாலம் வாசம். சிவானந்தரை வடநாட்டில் ஒரு கும்பமேளாவின்போது சந்திக்க நேரிட்டது. `இவர்கள் வாழ்ந்த காலத்தில், நானும் வாழ்ந்தது நான் செய்த பாக்யம்` என்று பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் பித்துக்குளி முருகதாஸ். தன்னைப்பற்றிப் பேச நேரும்போதெல்லாம், `நான்` என்று குறிப்பிடாமல் `இவன்` என்றே தன்னைக் குறிப்பிடுவது இவரது வழக்கம்.

`ஒரு தாசனின் கட்டுரைகள்`, `கந்தர் அனுபூதி அனுபவ விரிவுரை` ஆகிய நூல்களையும் எழுதியிருக்கிறார் முருகதாஸ். இந்திய அரசின் `சங்கீத நாடக அகாடெமி` விருது, தமிழக அரசின் `கலைமாமணி`, தான்சேன் இசைவிழாவின் `தியாகராஜர் விருது`, `சங்கீத சாம்ராட்` எனப் பல விருதுகள் இவரைத் தேடிவந்தன.

நீலமயிலேறி ஞாலம் வலம்வந்த பாலமுருகனின் அடியவர்களில், அவருக்கு மிகவும் இஷ்டமானவரோ இவர்? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. 1920-ல் தைப்பூசத்தன்று பிறந்தார் பாலசுப்ரமணியனாக. 2015-ல் கந்த சஷ்டியன்று, கந்தனின் திருவடி போய்ச்சேர்ந்தார் பித்துக்குளி முருகதாஸாக!

**

2 thoughts on “பித்தன் மகனுக்குப் பிடித்த பித்துக்குளி – 2

  1. பித்துக்குளி முருகதாஸ் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன் ஆனால் அவரைப்பற்றிய செய்திகளை இப்போதுதான் படிக்கிறேன் தமாசாக முத்துக்குளி பிருகதாஸ் என்று பெயர் மாறிச் சொல்லி விடுவேன் நலம்தானே. வாழ்த்துக்கள்

    Liked by 1 person

Leave a comment