தமிழ்ப் பதிவர் சந்திப்பு விழாவுக்கென பெங்களூரிலிருந்து பயணித்து, அக்டோபர் 10-ஆம் தேதி புதுக்கோட்டை போய்ச் சேர்ந்தேன். பகலில் கொஞ்சம் உறங்கிக் கழித்துவிட்டு மாலையில் நகரின் திருக்கோகர்ணம் பகுதிக்குச் சென்றேன். ஆராய்ச்சி நூலகம் `ஞானாலயா` அங்குதான் இருக்கிறது. எனக்கு வழிகாட்டியவர்கள் ஒரு கிளைச்சாலையில் போகச் சொல்ல, மெல்ல நடக்க ஆரம்பித்தேன். திடீரென இருள் சூழ, ஏதோ ஆப்பிரிக்க நகரின் வீதி ஒன்றில் நடந்து செல்வதாய் உணர்ந்தேன். தெருவிளக்கு இல்லாத தெரு! சுற்றிலும் அடர்ந்த மரங்கள். எதிரே நகர்ந்த நிழல்களில் ஒன்றை நிறுத்திக் கேட்டேன். `போய்க்கிட்டே இருங்க சார்..வெளிச்சம் வரும்!` என்றார். அது சரி, போய்க்கிட்டேதான் இருக்குது நாடும், வெளிச்சத்தை நோக்கி. வெளிச்சம் வரும் என்று நம்பி.
`இந்த ரோட்லபோயி, அஞ்சாவது கட்டிங்ல இடது பக்கம் திரும்பிப் போங்க..`, `அதுவா, இப்பிடியே நேரே போயி வலதுபக்கம் திரும்பினா வந்துடும்` என்கிற வழிகாட்டல்களில் அதைர்யம் அடையாமல் முன்னேறினேன். இருண்ட வானில் மின்னல் பிரகாசித்து எச்சரித்தது. ஒருவழியாக ஞானாலயாவின் நிறுவனரான கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுவாசல் அடைந்து பெல்லடித்தேன். அவரின் துணைவி வெளியே வந்து விஜாரித்தார். பின்புறம் திரும்பி `ஒங்களத்தான் பார்க்க வந்திருக்காங்க..` என்றார். ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி வாசலுக்கு வந்து வரவேற்றார். வீட்டின் முகப்புப் பகுதியில் அமர்ந்தோம்.
அவரது அரிய தமிழ்ப் புத்தகச் சேகரித்தல் பணி, நூலகம் பற்றிக் கேள்விப்பட்டு பார்க்க வந்ததாகச் சொன்னேன். திருமதி டோரத்தி(Dorothy) கிருஷ்ணமூர்த்தியும் பேச்சில் சேர்ந்துகொண்டார். அவரது ஆராய்ச்சி நூலகம்பற்றி ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தித் துண்டுகளின் நகல்களைக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி. `நீங்கள் மதியமே வந்திருந்தால் நிறையப் பேசியிருக்கலாமே’ என்றார். `வாருங்கள், நூலகத்தைக் காண்பித்துவிடுகிறேன் ` என அடுத்த கட்டிடத்துக்கு -அதுதான் ஞானாலயா- அழைத்துச் சென்று காண்பித்தார்.
நூலகம் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. நேர்த்தியாக, வகை, வரிசைக்கிரமத்தில், அடுக்கப்பட்டு அமைதியாக அமர்ந்திருந்தன புத்தகங்கள். சுப்ரமணிய பாரதி, மஹாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், இவர்களுக்கென தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதே போன்று, புதுக்கோட்டையின் சரித்திரம், மன்னர் பரம்பரை, திராவிடச் சிந்தனைகள் தொடர்பான எழுத்துகள், தமிழ்ச்சிறுகதைகள், ஆங்கிலப் புத்தகங்கள் என்பனவும் சிறப்புப் பிரிவுகள் கண்டிருந்தன. நூலகத்தின் சிறப்பம்சம் என்னவெனில் பல அரிய தமிழ்நூல்களின் முதற்பதிப்பைத் தேடிக் கண்டுபிடித்து சேர்த்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. பாரதியாலேயே பதிப்பிக்கப்பட்ட பாரதியின் ஆங்கிலக் கவிதைகள், கட்டுரைகள், அவரது கடிதங்கள், அவரது மகளின் கடிதத்தின் அசல் ஆகியவற்றைப் பார்த்தேன். சட்டெனப் பின்னோக்கிப் பயணித்து அவர்களின் காலத்தில் ரகசியமாக நுழைந்துவிட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு உண்டாகியது. `இவற்றை யாருக்காவது இரவல் கொடுத்துவிடாதீர்கள். திரும்பிவராமல் காணாமல் போய்விடப்போகிறது..` என என் அச்சத்தை அவரிடம் சொன்னேன். அந்த விஷயத்தில் ஜாக்ரதையாக இருப்பதாகச் சொன்னார் அவர். மேல்தளத்தில் ஏனைய தமிழ்ப் புத்தகங்களோடு, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்ற தத்துவ சிந்தனையாளர்களின் புத்தகங்களும் இருப்பதைக் காண்பித்தபோது அசந்து போனேன். மேற்கொண்டு ஆவலாய் புத்தகங்களை அவர் காண்பித்துக்கொண்டிருக்கையில் மின்வெட்டு விழுந்து இருட்டை எங்கள்மேல் அடர்த்தியாகப் பூசியது. கூடவே, திடீர் மழைவேறு பெய்து அசத்தியது. அவரது மனைவி குடை, டார்ச் எடுத்து வந்து வழிகாட்ட, நாங்கள் அவரது வீட்டுக்குத் திரும்பினோம்.
திருமதி டோரத்தி கிருஷ்ணமூர்த்தி கொண்டுவந்து கொடுத்த காஃபி, மழையின் பின்னணியில் நன்றாக இருந்தது. அவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கொடுத்த ஞானாலயாவின் `வருகைப் பதிவேட்டில்`, ஞானாலயாவுக்கு விஜயம் செய்த தமிழ்ப் பிரபலங்கள் பலரின் கையெழுத்தைக் கண்டேன். என்னையும் ஒரு புதிய பக்கத்தில் எழுதச் சொல்லிப் பேனாவை நீட்டினார் கிருஷ்ணமூர்த்தி. தமிழின் அரிய, பெரிய புத்தகங்களை, எழுத்துக்களைப் பெருமுயற்சியால் தேடிக் கண்டடைந்து, சொந்த முயற்சியில் புதுக்கோட்டையில் ஆராய்ச்சி நூலகம் நிறுவிய கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் ஐம்பதாண்டுக்காலத் தமிழ்ப்பணியை மெச்சி என் பாராட்டுதல்களைப் பதிவிட்டேன். அவர்களது அன்பிற்கு நன்றி தெரிவித்துத் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினேன்.
அடுத்த நாள் காலை வலைப்பதிவர் சந்திப்பு விழாவிற்குப் போனேன். அரங்கினுள் நுழைந்ததும் சுகமாய் அதிர்ந்தேன். அழகான முகங்கள் நல்ல தமிழில் இனிமையாய்ப் பேசி வரவேற்றன. வருகையைப் பதிவுசெய்தபின், மேலே ஹாலுக்குப்போய் சிற்றுண்டிசாப்பிட அன்பான அழைப்பு. பெங்களூர் ப்ரதிலிபியின் (Pratilipi -Online books, mags) சங்கர நாராயணனைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் online publishing பற்றிக் கொஞ்சம் பேசிவிட்டு, ஹாலில் அழகான ஓவியங்களுடன், சில பதிவர்களின் கவிதைகள் அலங்கரிப்பதைப் பார்வையிட்டேன்.
சிறப்பான ஏற்பாடுகளுடன், பதிவர் சந்திப்பு விழா சரியான நேரத்தில் ஆரம்பித்து நன்றாக நடந்தது. இடையிடையே அலுப்புத் தட்டாமல், இனிய குரலில், பாரதி, எம்.எஸ். பாடல்களைப் பாடி மகிழ்வித்த மாணவி சுபாஷிணி நன்றிக்குரியவர். புதுக்கோட்டைப் பதிவர்களோடு, தஞ்சாவூர், மதுரை, சென்னையிலிருந்து நிறைய பதிவர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சிகளுக்கு நடுவில் பதிவர்கள் அறிமுகமும் நடந்தது. இடையே, அமெரிக்காவிலிருந்து வந்திருந்த பதிவர் ஒருவர் மைக் எடுத்து, ஆச்சி மனோரமா மறைந்த துயரச் செய்தியை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்தினார். அனைவரும் எழுந்து நின்று, தமிழின் நிகரில்லாப் பெண்கலைஞருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினோம்.
மதியம் செட்டிநாட்டுப் பனியாரம், இஞ்சி டீ என அனுபவித்திருக்கையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார். பதிவர்கள் நிறையப் படித்துத் தங்களைத் தயார் செய்துகொண்டு எழுதவேண்டும் என்றார். தான்சார்ந்த நிலம்பற்றி , ஊர்பற்றி அவர்கள் நன்கு அறிந்திருப்பது முக்கியம் என்றார். இறுதியில் பதிவர்களின் கேள்விகளுக்கு எஸ்ரா பதில் சொன்னார். ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், பாரதி, புதுமைப்பித்தன் போன்ற தமிழின் சிறப்புமிகு ஆளுமைகளைத் தமிழ்ச் சமூகம் அவர்களது வாழ்நாளில் அங்கீகரிக்கவில்லை; பாராட்டவில்லை என்றார். அதற்குக் காரணம் மொழியின் மீதான, இலக்கியத்தின் மீதான அக்கறையின்மைதான். `இவன் யாரு? என்ன பெரிசா எழுதிப்பிட்டான்..என்கிற கேலி மனப்பான்மையும், அலட்சியமும்தான் நம் சமூகத்திடம் அப்போது காணப்பட்டது; இப்போதும் அப்படித்தான்!` என்றார் அவர்.
சென்னைப் பதிவரும், இளம் techie-யுமான நீச்சல்காரன் கணிணித்தமிழின் வளர்ச்சிக்கு செய்யவேண்டிய ஒத்துழைப்பு/ஏற்பாடுகள் பற்றி வேகமாகவும், துறைசார்ந்தும் தெளிவாகப் பேசினார். `பிரதிலிபி` சங்கர நாராயணன் பேசுகையில் எழுதுபவர்களையும், வாசகர்களையும் இணைப்பதே பிரதிலிபியின் பணி என்றார். மேலும், எழுத்தாளர்கள், பதிவர்கள் தங்கள் புத்தகங்களை ஆன் -லைனில் எளிதாகப் பதிப்பிக்க பிரதிலிபியில் வகை செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு உதவி வேண்டுவோர் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டால் தகுந்த தொழில்நுட்ப உதவி இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.
முதன்முறையாக. அழகாக அச்சடிக்கப்பட்ட தமிழ் வலைப்பதிவர் கையேடு, பதிவு செய்து வருகை தந்திருந்த பதிவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பிரபல பதிவர்களில் பலர் விழாவுக்கு வரவில்லை என்று தெரிந்தது. இருந்தும் சுவாரசியமான பதிவர்கள் பலர் வருகை தந்திருந்தனர். வெகுகாலத்துக்குப் பின், பிறந்த மண்ணில் நேரில் பலரைச் சந்தித்து அளவளாவியது மகிழ்ச்சி தந்தது.
**
அருமை
LikeLike
“கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்” என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது…
நன்றி…
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
LikeLike
புதுகையில் ப்ரதிலிபி சங்கர நாராயணனை சந்தித்ததாக எழுதி இருக்கிறீர்கள். அவரை நானும் சந்திக்க விரும்பினேன் ஆனால் அவர் வந்ததே தெரியவில்லைதொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் .
LikeLiked by 1 person
வருகைக்கு நன்றி. என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு standard formatted reply வந்தது. அதற்குப்பின் சத்தத்தைக் காணோம்.
LikeLike
மிக்க நன்றி சார் தாமதமாக பார்க்கிறேன்..உங்களை விழாவில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் சார்.
LikeLiked by 1 person
புதுக்கோட்டை எனது மனதில் நிற்கும் ஊர். உலகின் எந்தப்பகுதியில் நான் இருந்தபோதிலும் நினைவின் சுவாசத்தில் இருந்தது, இருப்பது. பதிவர் விழாவில் உங்களுடனும், மற்ற நண்பர்களுடனும் அதிகம் கதைக்க நினைத்தேன். ஆனால் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பிஸி.
பதிவினைப் படித்ததற்கு நன்றி.
LikeLike