புதுக்கோட்டையும் புத்தகங்களும்

புதுக்கோட்டை என்றதும் கல்லூரி நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன. அந்தக் காலம். ஒரு கனவுலகம். (`ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்தே..!` தியாகராஜ பாகவதரின் பாடல் வரிகள்வேறு நினைவில் மோதுகிறது.) அந்த உலகம் குழந்தைத்தனம் மாறாத அப்பாவி மனங்களுக்கானது. மனதில் தடதடக்கும் இதமான உணர்வுகள், நினைவுகள், ஆசைகளுக்கானது. ஹ்ம்..எதற்காகவோ ஆரம்பித்து, நான் எங்கெங்கோ போக ஆரம்பித்துவிடுகிறேன்.

நான் சொல்ல வந்தது இளம் வயதில் மனதில் குதித்துக்கொண்டிருந்த புத்தகங்கள், இலக்கிய இதழ்களைத் தேடிப் படிக்கவேண்டும் என்கிற அடங்காத ஆசைபற்றி. அந்த நாட்களில், புதுக்கோட்டையில் வார இதழ்கள், புத்தகங்கள் – அது பாடப் புத்தகங்களாகட்டும், இல்லை நாவல்கள், சிறுகதைகள் ஆகட்டும்- வாங்குவதற்கு பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலிருந்த மீனாட்சி பதிப்பகத்தைவிட்டால் வேறு கதியில்லை. விக்டோரியா ராணி வளைவுக்கு (சரித்திரச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக, இதுதான் சாக்கென்று இப்போது அகற்றிவிட்டார்களாம் புண்ணியவான்கள்) அருகில் உள்ள மணிக்கூண்டில் தமிழ், ஆங்கில நாளிதழ்களைப் புரட்டிப்போட்டுவிட்டு, மீனாட்சிப் பதிப்பகத்தில் ஏதாவது வார, மாத இதழ் வந்துள்ளதா என்று ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போவது வழக்கம். குமுதம், ஆனந்தவிகடன், தினமணி கதிர் (சாவியை ஆசிரியராகக் கொண்டு பெரிய சைசில் வெளிவந்தது) போன்ற ஜனரஞ்சக வார இதழ்களில் ஜெயகாந்தன், கண்ணதாசன், சுஜாதா, சாண்டில்யன், விந்தன் போன்ற எழுத்தாளர்கள் கோலோச்சிய தமிழின் வசந்த காலம். நான் படித்த மன்னர் கல்லூரியின் நூலகம்- உயர்ந்த கூரை, அரண்மனையைப் போன்ற வண்ணக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட பெரிய ஜன்னல்கள் என்று ராஜாகாலத்துத் தோற்றம். உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்ட, படிக்க, ஆழ்ந்துபோக ஏதுவான இடம். கல்லூரிப் பாடங்களில் படிக்க நேர்ந்த ஆங்கிலக் கவிதைகள், கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டு, ஜான் கீட்ஸ், ஷெல்லி, வில் ட்யூரண்ட் என்று 19, 20-ஆம் நூற்றாண்டுகளின் ஆங்கில இலக்கிய, தத்துவ சிந்தனைகளை அங்கே உட்கார்ந்து அறிந்துகொள்ள முயற்சித்த காலம் அது. அப்போது என் நெருங்கிய நண்பர்கள் என்னை நூலகத்திலிருந்து வெளியே இழுக்க முயற்சிப்பார்கள். `என்னத்தப் படிக்கிறான் இவன்!` என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு, நான் படிக்கும் புத்தகங்களை லேசாக நோட்டம் விட்டார்கள். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு `இவன் ஒரு லூசுடா! தேறமாட்டான்!` என்று தாராளமாக ஆசீர்வதித்தார்கள். நண்பர்களல்லவா..அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

புதுக்கோட்டையில் திரு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி திருமதி டோரத்தியின் முயற்சியால் 1999-ல் புதுக் கட்டிடம் அமைக்கப்பட்டு `ஞானாலயா` நூலகம், சிறப்பாக இயங்கி வருவதாகக் கேள்விப்படுகிறேன். ஒரு லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள், ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்ச் சிற்றிதழ்களைத் தன்னகத்தே கொண்டு தீவிர வாசகர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் நல்ல சிந்தனைத் தீனிபோடும் நூலகமாக இருக்கிறது போலும். மேலும் புதிய புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்களைச் சேர்க்கவும், நூலகம் நாளடைவில் சிறப்பாக விரிவுபட்டு இயங்கவும், ஞானாலயாவுக்குத் தமிழ்நாடு அரசின் நிதி உதவி கிடைத்தால் நலமாக இருக்கும். அல்லது அருகில் இயங்கும் அரசுப் பல்கலைக்கழகங்களோடு, ஆராய்ச்சி நூலகமாக இதனை இணைக்க முயற்சிக்கலாம். நூலகமும் வளரும்; மாணவ, மாணவியரும் பயன் பெறுவர்.

பதிவர் சந்திப்புக்காகப் புதுக்கோட்டை செல்கையில், அதன் நேர்கோட்டுச் சித்திரங்களாகிய ராஜ வீதிகளில், அவை மீட்டுத்தரும் கனவுலகில் சஞ்சரிக்க ஆவலாகிறேன். கூடவே, ஞானாலயா சென்று உட்கார்ந்து, கொஞ்சம் புத்தகங்களைப் புரட்ட முடிந்தால் எப்படி இருக்கும் எனவும் நினைத்துப் பார்க்கிறேன்.

**

3 thoughts on “புதுக்கோட்டையும் புத்தகங்களும்

Leave a comment