(தொடர்ச்சி)
நீண்டு வளைந்த காட்கோப்பர் சாலையில் நடந்தேன். தேடிவந்த கோவில், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைதியாய் நின்றிருந்தது. எதிர்பார்த்ததைவிடப் பெரிய கோவில். வாசலில் செக்யூரிட்டி. காலம் அப்படி! முகப்பில், வலது, இடது பக்கங்களில் முறையே, ஆஞ்சனேயர், வினாயகரின் சிறிய சன்னிதிகள். பிரதான கோவிலின் சன்னிதிகளுக்குப் படியேறி உயரச் செல்லவேண்டியிருக்கிறது. மூன்றாவது தளத்தில் முருகப் பெருமான். வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே இடதுபுறத்தில் அண்ணன் வினாயகர். எதிர் வலதுபுறத்தில் சாஸ்தாவின் சன்னிதி. என்னடா, எல்லாம் சிவமயமாக இருக்கிறதே என்று விஷ்ணு பக்தர்கள் கவலை கொள்ளவேண்டியதில்லை! முருகப்பெருமானுக்கு வலதுபுறமாக நின்று அருள்பாலிக்கிறார் அழகான குருவாயூரப்பன். முருகனின் சன்னிதியைச் சுற்றிவருகையில், கந்தனுக்கு இடதுபுறம் நின்றவாறு அருள்பாலிக்கும் அன்னை துர்கா தேவியின் சன்னிதி. முருகன் சன்னிதிக்குப் பின்புறம் நீண்ட ஹால் போன்ற வெளி இருக்கிறது. அங்கே கதா காலட்சேபம் போன்றவை நடக்கின்றன.
அழகாகக் கட்டப்பட்ட கோவில். சன்னிதிகளுக்குமேலே நல்ல உயரத்தில் தகரத் தகட்டினால் கூரை. நல்ல காற்றோட்டமாக உள்ளது. கூட்டமிருந்தாலும் வியர்வை, இறுக்கம் போன்ற அவஸ்தைகளுக்கு வாய்ப்பில்லாது யோசித்துக் கட்டியிருக்கிறார்கள். கோவில் அதிசுத்தம். அர்ச்சகர்களும் அவர்களின் உதவியாளர்களும் ஒரே சுறுசுறுப்பு.
முதல் நாள் சென்றிருந்தபோது, முதலில் முருகன் சன்னிதி முன் வந்து நின்றேன். திரை போட்டிருந்தார்கள். மற்ற சன்னிதிகளுக்குச் சென்று தெய்வங்களை வழிபட்டேன். துர்கா தேவியின் சன்னிதியில் அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது. பெண்களின் சிறிய கூட்டம் ஒன்று பக்திப் பரவசமாக துர்கை அம்மனைப் பார்த்தவாறு நின்றிருந்தது. ஒரு மத்திமவயதுப் பெண்மணி துர்கையின்மீது பாடலொன்றை அழகாக அனுபவித்துப் பாடினார். அடுத்து, அன்னைக்கு எதிரே உள்ள சன்னிதியில் பிள்ளையாருக்கு அர்ச்சனை, தீபாராதனை. திடீரென்று ஆண்கள் கூட்டம். எங்கிருந்து இவ்வளவு பேர் முளைத்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அர்ச்சனை முடிந்து முருகனின் முன் வந்து நின்றால், இன்னும் தொங்கிக்கொண்டிருந்தது திரை. கோவில் பூஜைகளுக்கு உதவியாக, திறமையாக ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு பெரியவரை (கோவில் நிர்வாக முக்கியப் புள்ளியோ?) நெருங்கினேன். தயக்கத்துடன் முருகனின் சன்னிதியைக் காண்பித்துக் கேட்டேன்: ”திரை விலக்க நேரமாகுமோ?” அவர் ”ஆமாம். கொஞ்ச நேரமாகும். நீங்க தேன் வாங்கிட்டீங்களா?” என்று என்னைக் கேட்டார். தேன்? நம் காதில் சரியாகத்தான் விழுந்ததா? குழப்பமான தயக்கத்துடன் “இல்லையே!’’ என்றேன். உடனே போய் ஒரு சிறு வெள்ளிக் கிண்ணத்தை எடுத்து வந்தார். முருகனின் சன்னிதி முன் பவ்யமாய் இடக்கைமேல் வலக்கை வைத்துக் குவித்து பிரசாதத்திற்காக நான் ஏந்தி நிற்க, ஒரு சிறு கரண்டியினால் உள்ளங்கைக் குழியில் தேன் விட்டார் அந்தப் பெரியவர். நான் அசந்துபோனேன். பெருமாள் சன்னிதியில் தீர்த்தம். மற்ற சன்னிதிகளில் குங்குமம், வீபூதி, பிரசாதம். முருகா! இங்கே உன் சன்னிதியிலோ தேன்! காத்திருக்கும் பக்தனுக்கு அமுதம்போல் தேன் தருகிறாய். தேன்கொடுத்த தேவனே! உன்மீது மேலும் பக்தியாகிக் கரைந்துபோவதைத் தவிர அடியேன் வேறு என்ன பெரிதாகச் செய்துவிடமுடியும்?
கொஞ்சநேரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று மேலும் பக்தர்கள் வந்து சேர்ந்தார்கள். பெரும்பாலானோர் தமிழர்கள். ஆவலோடு முருகனின் சன்னிதியை நோக்கி நின்றார்கள். முருகக் கடவுளும் மனம் இளகினார். திரையை விலக்கி, திவ்யமாய் தன் இரு மனைவியருடன் காட்சி தந்தார். தீபாராதனையின் தங்கஒளியில் தெய்வமுகங்கள் ஜொலிக்க, பக்தர்கள் பிரகாசமானார்கள். கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். குருக்களின் கையிலிருந்த தீபத்தட்டில், பொன்னிற ஒளிச்சுடர் ஒயிலாக நடனமாடியது. பக்தர்கள் மெல்ல அதன் மேல் வருடி, கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். வீபூதியை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டார்கள். அருகில் நின்றுகொண்டிருந்த இளந்தமிழர் ஒருவர், முருகனின் மீது பக்திப்பாடல் ஒன்றை மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தார். எதிரே உள்ள ஐயப்பன் சன்னிதியில் பக்தர்கள், உடைத்த தேங்காய் மூடியில் நெய்யிட்டுத் திரிபோட்டு ஏற்றினார்கள். ஏந்திய தீபத்துடன் சாஸ்தாவின் சன்னிதியைச் சுற்றிவந்தார்கள்.
சன்னிதிகளைச் சுற்றிவந்து வணங்கிவிட்டுக் கீழிறங்கினேன். ஒவ்வொரு தளத்திலும் படிகள் அமைக்கப்பட்டவிதம் மனதை ஈர்த்தது. செங்குத்தாக இருந்து முழங்காலைச் சோதிக்காமல், படிகள் 45 டிகிரிக்கோணத்தில் அமைந்து, பக்தர்கள் சோராமல் ஏறிச்செல்லுமாறு அமைக்கப்பட்டிருந்தன. கோவில் கட்டடங்களை ஆழ்ந்து யோசித்துத் திட்டமிட்டவர்களும், நன்றாகப் பார்த்துப் பார்த்துக் கட்டியவர்களும், உழைப்பளித்தவர்களும் சிறப்பான இறைசேவை செய்திருக்கிறார்கள்.
இறங்கிவந்து நிதானமாக கீழ்தளத்தில் நின்று பார்க்கும்போதுதான், நடுவில் வீற்றிருந்து ஆசி வழங்கும் அகஸ்திய முனிவர் தெரிந்தார். முதலில் கோவிலுக்குள் போகும்போது, அவசரத்தில் அவரைப் பார்க்காது இடப்புறப் படிகளில் ஏறி மேலே போய்விட்டேன் என்பது புரிந்தது. முனிவர் பெருமானே, முன்பே வணங்காது முருகனிடம் ஓடிவிட்டேன். இப்போது வணங்குகிறேன்.
கீழ்தளத்து நோட்டீஸ் போர்டில் அடுத்த நாள் காலை 9 மணிக்கு முருகன் சன்னிதியில் ருத்ர மந்திரம், பூஜை என இருந்தது. காலையில் முன்னரே வந்து, முருகனுக்கான ருத்ர பூஜையில், காட்கோப்பர் பக்தர்களுடன் கலந்துகொண்டேன். பெரியவர்களுடன் சேர்ந்து இளைஞர்களில் சிலரும் தெளிவான உச்சரிப்பில் ருத்ரம் சொன்னது சந்தோஷமாக இருந்தது. IT, Communications-என்று தொழில்நுட்பம் கோலோச்சும், கால் தரையில் படாது பரபரக்கும் இந்தக் காலத்தில், இளைஞர்களில் சிலரேனும், இப்படி சிரத்தையாக ருத்ரம் போன்ற ஒப்பற்ற மந்திரங்களிலும் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. காலம் இன்னும் அப்படிக் கெட்டுப்போய்விடவில்லை என்ற ஆசுவாசத்தை அளிக்கிறது.
கார்த்திகேயனின் சன்னிதியில் ருத்ரபூஜைக்குப்பின், அனைவருக்கும் தேன் பிரசாதமாகக் கிடைத்தது. தேவாதிதேவனே ! உன்னருளால்தான் வாய்த்தது இந்தத் தேனான அனுபவம்.
**
தேன் மட்டுமா?தினைமா இல்லையா?
எளிய அழகான நடை
LikeLike