பாம்பேக்கு, அதாவது மும்பைக்குப் புதுசு. ஏற்கனவே பலமுறை அலுவலக நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்கையில், மும்பையை ’ட்ரான்சிட்’ செய்திருக்கிறேன். ஏர்ப்போர்ட்டோடு ஓடிவிடுவது வழக்கம். உள்ளே நுழைந்து பார்த்ததில்லை.
இப்போது வந்தது அந்த வாய்ப்பு. மும்பையின் upmarket locality-களில் ஒன்றான பவையில்(Powai) தங்கியிருக்க நேர்ந்தது. அருகில் ஏற்கனவே கேள்விப்பட்ட காட்கோப்பர்(Ghatkopar). கொஞ்சம் தமிழர்களும் அங்கே வசிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். போயிருந்தேன். என்ன வேலை? சுற்றுவதும், சுற்றுமுற்றும் பார்ப்பதும்தான் நமக்கு வேலை. மும்பையில் மழை பிரசித்தி பெற்றது போலிருக்கிறது. எப்போது வரும்? போகும்? தெரியாது. முன்னறிவிப்பு இல்லாமல் முன்னாலே வந்து பொழியும். முதுகுப் பக்கமிருந்தும் திடீரெனப் படபடக்கும்! (கண்ணதாசன் ஒரு பாடலில்: ”மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழைபோல், சொல்லாமல், கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே !”)
அக்கம்பக்கத்தில் ரவுண்டடித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தெருவில் ‘கிரி’ ஸ்டோர் தென்பட்டது. ஆன்மிகப் புத்தகங்கள், டிவிடி-க்கள், பூஜைப்பொருட்களுக்குப் பேர்போன தமிழ்க்கடை. நுழைந்து புத்தக வரிசைக்குச் சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். அருகில் வந்து ஒருவர், “என்ன சார் வேண்டும் ?” என்றார். “என்ன இருக்கிறது என்று கொஞ்சம் பார்க்கிறேன்; பிறகு சொல்கிறேன்” என்று அவரை அவசரமாகத் தவிர்த்தேன்.
வழக்கமாக அத்தகைய கடையில் எதிர்பார்க்கும் புத்தகங்கள். ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, திருவாசகம், ஹிந்துமத தெய்வங்களைப் பூஜிப்பதற்கான மந்திரங்கள், ஸ்லோகங்கள்-தமிழ் உரையுடன் புத்தகவடிவில் வரிசையாக நின்றன. இடையே இந்திரா சௌந்திரராஜன், பாலகுமாரன் எழுதிய புத்தகங்கள். டெல்லியில் உள்ள கிரி ஸ்டோரிலும் இவர்கள் காட்சி தந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அங்கே ஒரு மூலையில் பார்த்த சுஜாதாவின் சில குறுநாவல்கள். இவர் எங்கே இங்கே வந்தார்? அவற்றினிடையே, அவர் கல்கியில் ஆழ்வார்களைப்பற்றித் தொடராக எழுதி, பின் புத்தகமாக வெளிவந்த ‘வாரம் ஒரு பாசுரம்’ புத்தகமும் இருந்தது. சற்றே ஆர்வம் அதிகமாக, அலசினேன். ஆதிசங்கரரின் அபூர்வமான ஸ்லோகங்களில் சில, ஒரு சிறு புத்தகமாக வடிவமேற்று, மூலையில் உட்கார்ந்திருந்தது. சுஜாதாவையும், சங்கரரையும் தூக்கிக்கொண்டேன்.
கிரி ஸ்டோரில் பணிபுரிபவர்களில் ஒருவரிடம் கேட்டேன்: ”இங்கே பக்கத்தில தமிழ்க்கோவில் ஏதும் இருக்கா?” அவர் சொன்னார்: ”நேரே போங்க. ஒரு மேம்பாலம் வரும். அதனடியில் ’சப்வே’-யில போயி, எதிர்த்திசையில பத்து நிமிடம் நடந்தா, ஒரு முருகன் கோவில் வரும்!” அவருக்கு நன்றி கூறிவிட்டு நடந்தேன். அந்த மேம்பாலம் விரைவிலேயே கண்ணில் பட்டது. ஆனால், அதன்முன், மும்பை போலீஸ்காரர்கள் சிலர் வரிசையாக நின்றிருந்தனர். என்னடா இது.. சகுனம் சரியில்ல போலிருக்கே! ஏதாவது பிரச்னையா இங்கே? ஏன் நமக்கு வந்த இடத்தில் வம்பு? நான் வந்த சாலை நேராகச் சென்றாலும், இடதுபுறமும் கிளையாவேன் எனக் காட்டியது. போலீஸாரைத் தவிர்த்து, முகத்தில் சலனம் காட்டாது, இடது புறம் திரும்பினேன். எல்லாம் தெரிந்தவன்போலக் காட்டிக்கொண்டு, தெரியாத பிரதேசத்தில் எதிர்வரும் கட்டடங்களைப் பார்த்துக்கொண்டு நடந்தேன். கொஞ்சம் சுற்றி நடந்து, தங்குமிடம் வந்தேன். மூடு அவுட். சே! சாமி கும்பிடுவதும் அவ்வளவு எளிதல்ல போல, இந்த நாட்ல!
அடுத்த நாள். அந்தக் கோவில் ஞாபகம் வந்தது. என்ன இது? பக்கத்தில் கோவில் இருந்தும் போகாட்டி எப்படி? மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல் நடக்க ஆரம்பித்தேன். அந்தப் பாலத்தை நெருங்குகையில், தூரத்திலேயே தெரிந்தன காக்கிச்சட்டைகள்! இன்னிக்குமா? இந்த ஆளுங்களுக்கு இங்கயே நிரந்தர டூட்டி போட்டுட்டான்களா? எவனாவது வி.ஐ.பி. குடியிருக்கானா இந்தப்பக்கத்தில! இந்த முறை நான் திரும்புவதாக இல்லை. அந்த முருகன் நம்மப்பத்தி என்ன நெனச்சுக்குவான்? இந்தப் போலீசையே கேட்டுருவோம். கோவில் எங்க இருக்குன்னு!. துணிந்து அணுகினேன். எதிரில் சாலையை மறித்துக்கொண்டு நின்றிருந்த ஐந்தாறு போலீஸ்காரர்களில் ஒருவர் அதிகாரி போல் தோன்றியது. செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்தில் நின்றிருந்த மராட்டி கான்ஸ்டபிளிடம் மெல்ல ஹிந்தியில் கேட்டேன். ‘இந்தப்பக்கம் ஒரு மதராஸிக் கோவில் இருக்காமே? எங்கன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?’ அவர் என்னிடம் ‘கொஞ்சம் பொறுங்க.. (சீனியரை காண்பித்து) ‘அவரு ஃபோனில இருக்காரு! ‘ என்றார். அட, முருகா! ஒனக்குத் தெரியாதா? ஒங்க சீனியரத்தான் கேட்கணுமா! குழம்பியவாறு அவர் அருகில் நின்றேன். ஃபோன் கால் முடிந்தவுடன் கான்ஸ்டபிள் அவரிடம் கேட்க, சீனியர் போலீஸ் (டெல்லி போலீசைப்போல் சிடுசிடுக்காமல்), என்னிடம் நிதானமாகப் பேசினார். கோவிலுக்கு எப்படிப் போகவேண்டும் என வழியும் சரியாகச் சொன்னார். போவதற்கு வழியும் விட்டார். ஆஹா! இதுவல்லவா போலீஸ்! எல்லாம் அந்த முருகன் செயல்!
(தொடரும்)
நல்ல போலீஸ்…!
LikeLike