சுதந்திரதினக் காலையில்..

சுதந்திர தினத்தன்றுதான் நமது நாட்டினருக்கு திடீர் தேசபக்தி தலைகாட்டும். நமது டிவி சேனல்களிலோ அது பத்திக்கும்.

முதல் முறையாக சுதந்திர தினத்தன்று டெல்லியிலோ, வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் இந்தியர்களுடன் சேர்ந்து ஏற்றப்பட்ட தேசியக்கொடியை கண்ணுயர்த்திப் பார்த்து பெருமையோடு நில்லாமல், பம்பாயில் இருக்க நேர்ந்தது. எண்ணற்ற இந்தியர்களைப்போல இன்று காலையில், வீட்டின் வரவேற்பறையில் காஃபி குடித்துக்கொண்டு டி.வி.யில் பார்த்தேன் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை.

நமது டிவி-வாலாக்கள் திடீரென்று சுதந்திரதின அதிகாலையில், பழைய சிடிக்களை எடுத்துத் தூசிதட்டி, தேசபக்திப்பாடல்களை ரசிகர்களுக்குப் போட்டுக் காண்பித்துப் பரவசம் கொள்வார்கள். ஏதோ அவர்களால் முடிந்த நல்ல காரியம்! ஏதேதோ பழைய பாலிவுட், தமிழ் சினிமாக்களிலிருந்து இந்திய தேசத்தின் பெருமையை நினைவுக்குக்கொண்டுவர முயலும் பாடல்கள். சில பாடல்களைக் கேட்டாலோ, மனம் இன்றும் ஒரு சிலிர்ப்பு கொள்கிறது. அப்படி ஒரு மொழி, உணர்ச்சிப்பீறிடல், மனதை ஆடவைக்கும் இசை.

அந்தக்கால பாலிவுட் ஹீரோக்க்களில் ஒருவரான மனோஜ்குமார் படப்பாடல்கள் பொதுவாக தேசிய நாட்களில்(National Days) டிவி சேனல்களில் கேட்கும். அவர் என்னவோ, மற்ற படங்களையெல்லாம் விட்டுவிட்டு, தேசத்தைப் பேசும் படங்களில் நிறைய நடித்துள்ளார். அவருடைய படங்களில், அவர் பாடுவதாக வரும் ஒன்றிரண்டு பாடல்களாவது நாட்டின் பெருமை பேசும், நாட்டிற்காக உருகும். திலீப்குமார் போன்ற மற்ற நடிகர்களின் படங்களிலும் சிலசமயம் தேசபக்திப்பாடல்கள் வந்ததுண்டு.

அப்படி ஒரு பழைய படப்பாடலொன்றை ஹிந்தி சேனல் ஒன்றில் இன்று கேட்கையில் மனம் என்னவோ செய்தது. என்ன ஒரு மகா தேசம் இந்த தேசம். அதற்காகக் கடமையாற்றி வாழ்வை அர்ப்பணித்த எத்தனை, எத்தனை தியாகிகள், வீரர்கள், இன்னபிற துறைகளில் சிறப்புப் பணியாற்றிய தேசபக்தர்கள். யாரை நினைப்பது, என்ன சொல்வது?

தில் தியா ஹை
ஜான் பி தேங்கே
ஹே வத்தன்…
தேரேலியே…

என்று ஆரம்பித்து நம்மை தேசபக்தியில் கரைக்கிறது இந்தப் பாடல் (ஹிந்தி வார்த்தைகள் பழக்கமில்லாத தமிழ் நண்பர்கள்/நண்பிகளுக்கு சிறு உச்சரிப்பு உதவி: தில்: Dhil, தியா: Dhiyaa, பி :Bhi, தேங்கே: Dhenge, தேரேலியே: Thereliye. இதில் காணப்படும் ‘வத்தன்’(Wathan) என்கிற ஹிந்திச்சொல் ’நிலம்’, ’தாய்நாடு’ என்கிற பொருட்களில் வலம் வரும்.

இந்த அழகான, எளிதான, ஆனால் உணர்ச்சிமிகு பாடலின் ஆரம்ப வரிகளை, வார்த்தைக்கு வார்த்தைப் பொருள் சொல்கிறேன் என்று அதன் மொழிநயத்தைக் கொலைசெய்யாமல், கொஞ்சம் கவிநயத்தோடு (without losing the spirit of the song) மொழிபெயர்த்தால், நான் இப்படித் தருவேன்:

மனதை இழந்துவிட்டேன்
உயிரையும் உடனே
கொடுத்துவிடுவேன்
என் அருமைத் தாய்நாடே
உனக்காகவென்றே…

மேற்சொன்னவாறு ஆரம்பிக்கும் இந்தப் பாடல், பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலிப்குமார், நடிகை நூத்தன் ஆகியோருடன் ஸ்ரீதேவியும் இணைந்த 1986-ல் வெளியான ’கர்மா’ என்கிற ஹிந்திப்படத்தில் வந்தது. தமிழில் கண்ணதாசனைப்போல ஹிந்திப் படங்களுக்கென, காலந்தாண்டி மனதில் ரீங்காரமிடும் பிரமாதமான பாடல்களை எழுதிய கவிஞர் ஆனந்த் பக்ஷி (Anand Bakshi). அவர் எழுதி, கவிதா கிருஷ்ணமூர்த்தி, முகமது அஸீஸ்-உடன் இணைந்து பாடினார் இந்தப்பாடலை. கவிதா கிருஷ்ணமூர்த்தியின் இனிமையான குரலில்தான் இந்தப்பாடலின் ஆரம்பவரிகள் உருக்கமாய் வருகின்றன. இசை தந்தவர்கள் : லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் (இரட்டையர்). இந்தப் பாடல் பிரமாதமாக ஹிட்டாகி ஹிந்தித் திரையுலகை ஒரு கலக்குக் கலக்கியது. திரைப்பட தேசபக்திப்பாடல்களில் சிறந்த ஒன்றாக ரசிகர்களின் மனதை வென்று நிற்கிறது. ஆகஸ்டு 15, ஜனவரி 26-ஆம் தேதிகளில் நமது வீடுகளில் நுழைந்து, நம்மை எல்லா வேலைகளையும் போட்டுவிட்டு, கொஞ்ச நிமிஷங்களுக்காகவாது நாட்டைப்பற்றி எண்ணவைக்கிறது.

**

Advertisement

5 thoughts on “சுதந்திரதினக் காலையில்..

 1. பயணத்திலிருந்ததால் இப்போதுதான் பார்த்தேன் உங்கள் வாழ்த்துக்களை. நன்றி. சிங்கப்பூரில் சிறப்பாகக்கொண்டாடியிருப்பீர்கள்

  Like

 2. என் பதிவில் உங்கள் வருகை பார்த்து வந்தேன் உங்கள் அஞ்சல் முகவரி கிடைத்தால் நான் எழுதி உள்ள சில பதிவுகளின் சுட்டிகளைத் தருகிறேன் பொதுவாக தேசிய தினங்களில் அதுவும் ஜானுவரி 26-ம் நாள் படைகளின் அணிவகுப்பைதொலைக்காட்சியில் பார்ப்பேன் ஹிந்தி திரைப் படங்களை பார்ப்பது கிடையாது. படம் பார்த்துக் கதை புரிந்து கொள்ள வேண்டி இருக்கும். உங்களைப் பற்றிய ப்ரொஃபைல் தளத்தில் இல்லையே. வாழ்த்துக்கள்.

  Like

  1. வருகை, பின்னூட்டத்திற்கு நன்றி. நானும் படங்கள் (ஹிந்தியோ, தமிழோ) அதிகம் பார்ப்பவனல்லன். கடைசியாக எந்தப் படத்தை முழுசாகப் பார்த்தேன் என நினைவிலும் இல்லை! மொழிப்பிரச்சினை அல்ல இங்கு. 90-120 நிமிடங்கள் திரைக்கு முன்னால் இருக்கும் பொறுமை எனக்கில்லை. ஆனால் பாடல்களில் என்னை இழப்பவன். பழைய, இனிய பாடல்களில்-அது தத்துவார்த்தமாக, காதலாக, தேசபக்தியாக எதுவாக இருப்பினும், இசையில் இழைபவன் நான். அதனால்தான் இந்தக்கட்டுரை!
   என் மின்னஞ்சல்: aekaanthan@gmail.com

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s