சலாம், கலாம் சார், சலாம் ! – 3

தொடர்ச்சி..

உழைப்பு, நேர்மை, கடமை உணர்வு, ஆசிரியர்கள்-பெரியோர்களின் ஆசியுடன் வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர் டாக்டர் அப்துல் கலாம். DRDO-ல் பணியாற்றியபோது இந்திய ராணுவத்திற்கான ஹெலிகாப்டர்களை வடிவமைத்தார். 1980-களில் ISRO (Indian Space Research Organization)-என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார். இந்தியாவின் SLV (Satelite Lauch Vehicle) ப்ராஜெக்ட்டில் Project Director-ஆகப் பணிபுரிந்து முக்கியப் பங்காற்றினார். அவரது தலைமையில் வடிவமைக்கப்பட்ட ’ரோஹிணி’ செயற்கைக்கோள் 1983-ல் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது. 17 மாதங்கள் விண்ணில் பறந்த அந்த செயற்கைக்கோள் 2500-க்கும் அதிகமான படங்களை எடுத்து அனுப்பியது. அவரது தலைமையில், ஆலோசனையின் பேரில், இந்தியா விதம்விதமான ஏவுகணைகளை உற்பத்தி செய்து விண்ணில் பாய்ச்சி உலக வல்லரசுகளை அதிரச் செய்தது. உலகின் முக்கியமான ஏவுகணை வல்லரசாக இந்தியா அங்கீகாரம் பெற்றது. டாக்டர் கலாம் ‘India’s Missile Man’ எனப் பாராட்டப்பட்டார். வாஜ்பாயியைப் பிரதமராகக்கொண்ட பாரதிய ஜனதா அரசு 1998-ல் ராஜஸ்தானின் போக்ரானில் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை பூமிக்கடியில் நிகழ்த்தி உலகைக் கிடுகிடுக்கவைத்தது. இந்த ரகசிய ப்ராஜெக்டை டாக்டர் கலாம் தம் தலைமையில் வழிநடத்தி வெற்றிபெறச் செய்தார். பிரதமர் வாஜ்பாயியால் வெகுவாகப் புகழப்பட்டார் கலாம். இந்தியா ஒரு அணுஆயுத வல்லரசாக உலக அரங்கில் அரங்கேற்றம் நிகழ்த்தியது. கம்பீரமாக வலம் வருகிறது.

தன் வாழ்நாளில் பல இந்திய, சர்வதேச விருதுகளைப் பெற்றார் டாக்டர் கலாம். பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளுக்குப்பின், 1997-ல் இந்தியாவின் உயர் விருதான ‘பாரத ரத்னா’ அவருக்கு வழங்கப்பட்டது. இவை தவிர, லண்டன் ராயல் சொசைட்டியின் King Charles II Medal, அமெரிக்க கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் International von Karman Wings Award, Hoover Medal, USA ஆகிய சர்வதேச விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன. 40 இந்திய, சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கித் தங்களுக்கு கௌரவம் தேடிக்கொண்டன.

ஐக்கிய நாடுகள் சபை (UN) டாக்டர் கலாமின் 79-ஆவது பிறந்தநாளை ‘சர்வதேச மாணவர் தின’மாக அறிவித்தது. 2005-ல் ஜனாதிபதி அப்துல் கலாம் அரசுப் பயணமாக ஸ்விட்சர்லாந்து சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ‘CERN’ என்கிற உலகப்புகழ்பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்தார். இந்திய ஜனாதிபதி என்பதோடு, அவர் ஒரு அணு விஞ்ஞானி, Missile Technologist என்கிற சிறப்பிற்காகவும், அவரை மிகவும் மதித்து அவர்களுடைய ப்ராஜெக்ட்டுகளை சுற்றிக் காண்பித்தார்கள் அங்குள்ள விஞ்ஞானிகளும் அதிகாரிகளும். ஸ்விட்ஸர்லாந்து அரசு அவர் வருகைதந்த தினமான மே-25-ஐ ‘விஞ்ஞான தினம்’-ஆக அறிவித்து அவரைக் கௌரவித்தது.

தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார் கலாம். இந்திய ஜனாதிபதியாக அவர் பதவி வகித்த காலத்தில், குடியரசு தினத்தன்று ஜனாதிபதியின் தேசத்திற்கான ஆங்கில, ஹிந்தி உரையில் அவர் திருக்குறளிலிருந்தும் மகாகவி பாரதியின் கவிதைகளிலிருந்தும் அடிக்கடி மேற்கோள் காட்டியிருந்தார். டெல்லியில் தமிழ்ச்சங்கத்தின் விழாவிற்கு வந்து உரையாற்றியிருக்கிறார். இலக்கிய விழாக்களுக்கும் சென்று பேசி இருக்கிறார் கலாம்.

ஐரோப்பிய கூட்டமைப்பின் பார்லிமெண்டிற்கு (European Union Parliament)அதன் 50-வருட நிறைவு விழாவுக்கு இந்தியப் பிரதிநிதியாக ஜனாதிபதி கலாம் 2005-ல் வருகை தந்தார். ஐரோப்பிய பார்லிமெண்ட்டின் தலைவரால், அங்குள்ள பிரதிநிதிகள் முன் பேச அழைக்கப்பட்டார் கலாம். அங்கு ஒரு உயிர்த்துடிப்பான உரையை வழங்கி ஐரோப்பியர்களை அசரவைத்தார். அவர் பேசுகையில் தமிழ்க்கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் புறநாநூறிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: ‘யாதும் ஊரே..யாவரும் கேளிர்!’ 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு இந்தியக் கவிஞர்- கணியர் பூங்குன்றனார் – இவ்வாறு சொன்னார்.அதன் பொருள்: ’இந்த உலகே என் ஊர்தான். உலக மக்கள் யாவரும் என் உறவினர்கள்!’ கூடவே கலாம் பேசுகிறார்: ”இந்தியாவில் நாங்கள் தனிமனிதனின் மனதில் அன்பும் நேர்மையும் குடிகொண்டிருக்கவேண்டும் என வலியுறுத்துவோம். அவனிடம் அன்பிருந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் அமைதி எனில் நாடு அமைதி பெறும். நாடு அமைதியாக இருக்குமானால் அது உலக அமைதிக்கு வழிவகுக்கும்..” கலாம் இவ்வாறு பேசுகையில் ஐரோப்பிய பார்லிமெண்ட் உறுப்பினர்கள், விருந்தினரிடமிருந்து தொடர்ச்சியான கைதட்டல். அவர் பேசி முடிக்கையில் ஐரோப்பியப் பார்லிமெண்ட் தலைவர் எழுந்திருந்து டாக்டர் கலாமைக் கட்டிக்கொள்கிறார். நன்றி உரையில் ஐரோப்பியத் தலைவர் சொல்கிறார்: இந்தியாவின் ஜனாதிபதி என்கிற நிலையிலும், ஒரு அற்புதமான தலைவர், விஞ்ஞானி என்கிற வகையிலும், ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, தாங்கள் நிகழ்த்திய இந்த உரை, மிகுந்த உற்சாக உணர்ச்சி ஊட்டும் உரை. ஐரோப்பியப் பார்லிமெண்ட்டில் இதுவரைக் கேட்டிராத அற்புதமான உரை! (Most inspirational speech. Most extraordinary speech ever heard in European Parliament..) இந்தியா என்கிற அருமையான நாட்டிற்கு எங்கள் வாழ்த்துக்கள். இந்திய-ஐரோப்பிய உறவு மேம்படட்டும்!’

சென்ற இடமெல்லாம் உலக நாடுகளில் இந்தியாவின் புகழ்பரப்பினார் ஜனாதிபதி அப்துல் கலாம். ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் விலகியபின்னும் அடிக்கடி மாணவர்களுடன் தொடர்பிலிருந்தார். Visiting Professor-ஆகப் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள், IITs, IIMs-களுக்குச் சென்று பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளைச் சந்தித்திருக்கிறார். மறைவுக்குச் சற்றுமுன், அப்படி ஒரு விழாவில்தான் ஷில்லாங்கில் கலந்துகொண்டு பேசினார் கலாம்.

பொதுவாழ்வில் அரசுப் பணத்தைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருந்தார் அவர். ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்கும் விழாவிற்கு அவருடைய உறவினர்கள் ராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்தனர். அவர்களது பயணச்செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் ஜனாதிபதி கலாம் அதை மறுத்துவிட்டார். ’அவர்கள் என்னுடைய சொந்தக்காரர்கள். அவர்களது செலவு என் செலவு’ எனக் கூறியதோடு நில்லாமல் அவர்களின் பயணச்செலவிற்கானப் பணத்தை அரசாங்கத்திற்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார் ஜனாதிபதி கலாம். ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் எப்போது தமிழ்நாட்டுக்குச் சொந்த அலுவல் நிமித்தமாகச் சென்றாலும், அதற்கான பயணச்செலவைத் தானே ஏற்றுக்கொண்டார் அவர். பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும், மக்களின் பணத்தை எப்படி மரியாதையோடு கையாளவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் டாக்டர் கலாம்.

வாழ்வில் அவ்வப்போது தனக்கு உதவியாக இருந்த சாதாரண மனிதர்களை மறந்தவரில்லை கலாம். 2002-ல் ஜனாதிபதி கலாம் திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு ஏற்கனவே இளம்பிராயத்தில், பணிபுரிந்திருந்தார் அவர். அந்தக் காலகட்டத்தில் தன் செருப்புகளை சீர்செய்து கொடுத்த ஜார்ஜ் என்கிற செருப்புத் தைக்கும் தொழிலாளியை நினைவுகூர்ந்து அவருடைய கடைக்குச் சென்றார் கலாம். ஜனாதிபதியைத் தன் கடைவாசலில் பார்த்து ஜார்ஜ் அரண்டுபோய் நிற்க, “என்ன ஜார்ஜ்? எப்பிடி இருக்கீங்க? சௌக்யமா?’ என்று விஜாரித்தாராம் ஜனாதிபதி கலாம். ’இந்தியா டுடே’ இதழில் ஜார்ஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று தான் அப்போது உணவருந்திய குருவாயூரப்பன் லாட்ஜின் சொந்தக்காரரான பரமேஸ்வரன் நாயரையும் சந்தித்துள்ளார் கலாம்.

இந்தியா என்கிற மாபெரும் தேசத்தின்மீது மாளாத பக்தி கொண்டிருந்தார் கலாம். இளைஞர்கள் மீது, குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் படிப்பு, வளர்ச்சிவாய்ப்புகள் குறித்துக் கவலைப்பட்டார். ஆர்வத்துடன் ஏதாவது செய்ய முயன்றார். கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக PURA (Providing Urban amenities to Rural Areas) என்கிற ஒரு தொண்டுநிறுவனத்தை நிறுவினார். தனது வாழ்நாள் சேமிப்புகளை அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார் கலாம்.

இந்திய இளைஞர்களை வழிநடத்தி, ஊக்குவிக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் கலாம். Wings of Fire, India 2020, Ignited Minds are the best sellers among them. இந்திய நாட்டிற்கு, குறிப்பாக இளைஞர் சமுதாயத்துக்குக் கிடைத்த கலங்கரை விளக்கம் கலாம்.

இத்தகைய அபூர்வமான மனிதரை இழந்துவிட்ட நிலையில்தான் கலங்கி நிற்கிறது இந்திய நாடு இன்று.

**

2 thoughts on “சலாம், கலாம் சார், சலாம் ! – 3

 1. விஜை சான்

  கலாம் பற்றிய தங்களது மூன்று பதிவுகளும் அருமை.
  இன்னும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது. இப்படிப்பட்ட தலைவன் இந்த காலத்தில் இருந்தானா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு வாழ்த்திருக்கிறார்…

  வாழ்கையில் பெரும்பாலும் பலர் பிழைக்கிறார்கள் … சிலர் இருக்கிரார்கள். இவரைப்போன்று மிகச்சிலரே ஒவ்வொரு நொடியும் வாழ்கிறார்கள்… இவர் வாழ்த்த காலத்தில் வாழ்த்து, இவர் பிறந்த பிரதேசத்தில் பிறந்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்…

  தங்களது இந்த கட்டுரையை எந்த திருத்தமும் செய்யாமல் பாட புத்தகத்தில் இணைக்கவேண்டும். எப்படி என்று தெரியவில்லை… ஆனால் இணைக்க வேண்டும் …

  நாமும் இப்படி வாழவேண்டுமென்று மற்றவரை உற்சாகப்படுத்தி தூண்ட வேண்டும்…

  நன்றி

  முரளி

  Like

  1. முரளி,

   Pleased to hear the most encouraging comments from you. முதலில் ஒரு 2-பக்கம் எழுதலாம் எனத்தான் நினைத்தேன். எங்கே ஆரம்பிப்பது, எங்கே நிறுத்துவதென்றே தெரியவில்லை. பயணம் மேற்கொள்ளவிருந்ததால் நேர நெருக்கடி வேறு. 3-ஆவது பகுதியை பதிவேற்றியபின்னும், அடடா, அந்த விஷயத்தை விட்டுவிட்டோமே என்றது மனம். சின்னதும், பெரிதுமாய் நினைவிலாடும் எத்தனையோ விஷயங்கள்.

   நிறைவான மனிதர். கர்மயோகி. நிறையவே செய்திருக்கிறார் நாட்டுக்காக. செய்துகொண்டே இருந்தார் கடைசி மூச்சு வரையிலும்.

   இதைத்தான் இப்படிச் சொன்னான் கவிஞன் வாலி:
   ”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்.
   இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்..”

   ஏகாந்தன்

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s