சலாம், கலாம் சார், சலாம் ! – 2

தொடர்ச்சி..

ஆசிரியர்-மாணவன், குரு-சிஷ்யன் என்கிற மரபு சார்ந்த உறவுநிலையில், அதன் சிறப்புகளில், உன்னதத்தில் அவர் மனம் லயித்தது. தனது அரசு ஆய்வுப்பணியின் வெவ்வேறு கட்டங்களில் தான் சிறப்பாகப் பணியாற்றியதோடு தனக்குக் கீழ் பணிபுரிந்த டெக்னீஷியன்கள், உதவியாளர்களிடம் தன் சகோதரர்களுடன் நடந்துகொள்வதுபோல் வெகு அன்புடன் நடந்துகொண்டார் கலாம். அவர்களுடன் கூட இருந்து அவர்கள் சிறப்பாகச் செய்து முடித்த பணிகள் பற்றி மனதாரப் பாராட்டியுள்ளார். தனது பிரிவில் தன்னுடன் வேலைபார்த்த ஊழியர்களின் குடும்ப நலம் பற்றி கனிவுடன் விஜாரிப்பார்.

ஒருமுறை கலாமின் உதவியாளர் ஒருவர் மாலை 6 மணிக்குள் வீடு திரும்பி எக்ஸ்பிஷன் ஒன்றுக்கு அழைத்துச் செல்வதாகத் தன் குழந்தைகளிடம் சொல்லியிருந்தார். ஆனால் எக்கச்சக்கமாக வேலை வந்துவிட்டதால் அவரால் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை. வீட்டிலிருந்து வந்த ஃபோனை எடுத்துத் தன்னால் வரமுடியவில்லை என்று கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தார். இருந்தும் அவர் மனம் சரியாகவில்லை. அவர் தன் குழந்தைகளிடம் தன் இயலாமையைச் சொன்னவிதம், அவரின் முகத்தில் தெரிந்த வருத்தம் ஆகியவற்றை கலாம் கவனித்துக்கொண்டிருந்தார். சரியாக 6 மணிக்கு அந்த ஊழியரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார் கலாம். அப்பாதான் வந்துவிட்டாரோ என ஆசையாய்க் கதவைத் திறந்த குழந்தைகளிடம் தான் அவர்களுடைய தந்தையுடன் ஆஃபீஸில் பணிபுரிவதாகச் சொன்னார். அவர்களின் அப்பாவுக்கு முக்கிய வேலை இருக்கிறது அதனால்தான் அவரால் வரமுடியவில்லை, குழந்தைகளை எக்ஸ்பிஷனுக்குக் கூட்டிச்செல்லத் தன்னை அனுப்பியுள்ளார் என்றார் கலாம். குழந்தைகள் தன்னோடு தயங்காமல் எக்ஸ்பிஷனுக்கு வரலாம் என்று சொல்லி, குழந்தைகளை எக்ஸ்பிஷனுக்குக் கூட்டிச்சென்று காண்பித்துவிட்டு, திரும்ப வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றார் கலாம். அன்றிரவு, குழந்தைகளின் அப்பா வெகுதாமதமாக வீடு திரும்பினார். தூங்காமல் இருந்த குழந்தைகளிடம் தான் சொன்னபடி வர முடியவில்லை என்று வருந்தியதோடு, இன்னொரு நாள் அவசியம் அழைத்துச்செல்வதாகவும் உறுதி சொன்னார் அந்த அப்பா. குழந்தைகள் ஆச்சரியப்பட்டன. சிரித்துக்கொண்டே சொல்லின: ’ஒங்க ஆஃபீஸிலிருந்து ஒரு மாமா வந்து எங்கள எக்ஸ்பிஷனுக்குக் கூட்டிட்டுப் போனாரு. ஒங்களோட ஒர்க் பண்றவர்தான் அவரு!’ என்றார்கள். ஆச்சரியத்துடன், அவர் யார், எப்படியிருந்தார் என்று கேட்டுத் தெரிந்துகொண்ட அப்பாவுக்குப் புரிந்தது நமது ’பாஸ்’தான் நம் வீடு தேடி வந்திருக்கிறார்; ’குழந்தைகளுக்கு அப்பா கொடுத்த வாக்குப் பொய்க்கக்கூடாது, அவர்கள் ஏமாறக்கூடாது’ என்கிற நல்ல நோக்கத்துடன் அவர்களைப் பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் நெகிழ்ந்துவிட்டாராம் கலாமின் அந்த உதவியாளர்.

யாரும் கஷ்டப்படுவதைக் காணப் பொறுக்காது அவருக்கு. அவர் தன்னுடைய கடைசிப்பயணமாக, அஸ்ஸாமின் தலைநகர் கௌஹாட்டியிலிருந்து ஷில்லாங் சென்றுகொண்டிருந்தார்-. Indian Institute of Management, Shillong-ல் ஒரு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களோடு பேசுவதற்காக. முன்னாள் ஜனாதிபதி என்பதால் உரிய பாதுகாப்போடு அழைத்துச் சென்றார்கள் அதிகாரிகள். 5 கார்கள் கொண்ட கார்கேடில்(carcade) கலாமின் கார் இரண்டாவதாகச் சென்றுகொண்டிருந்தது. முன்னே ஒரு மிலிட்டரி ஜீப். அதில் இரண்டு ஜவான்கள் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருக்க, ஒரு இளம் ஜவான் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு நாலாபுறமும் பாதுகாப்பு நோக்கில் பார்வையிட்டு வந்துகொண்டிருந்தார். டாக்டர் கலாமிற்கு அந்த ஜவான், நீண்ட அந்தப் பயணத்தில் நின்றுகொண்டே வந்தது மனதை என்னவோ செய்தது. தனக்கு உதவியாக பக்கத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரியிடம் ‘’அந்த ஜவான் எதற்காக நின்றுகொண்டே வருகிறார்? இது ஒரு தண்டனைபோலல்லவா இருக்கிறது? வாக்கி-டாக்கியில் பேசுங்கள். அவரை உட்கார்ந்து வரச்சொல்லுங்கள்’ என்றார் கலாம். மிலிட்டரி டியூட்டியின்படி அவர் நின்றுகொண்டு சுற்றுமுற்றும் பார்த்துத்தான் வரவேண்டும். அவர் உட்காரக்கூடாது என்று அந்த அதிகாரி விளக்கிச் சொல்லியும் சமாதானமடையவில்லை கலாம். ‘கையைக்காட்டி கொஞ்சம் உட்காரச்சொல்லுங்க’; என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டே வந்தாராம். 2 மணி நேரப் பயணத்துக்குப் பின் தான் தங்கியிருக்கும் மாளிகைக்கு வந்துசேர்ந்த கலாம், அந்த அதிகாரியிடம் சொல்லி அந்த ஜவானைக் கூப்பிட்டு அனுப்புங்கள். நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்றிருக்கிறார். அதிகாரியும் செக்யூரிட்டி செட்-அப்பிற்குத் தகவல் சொல்லி, அந்த ஜவானை வரவழைத்திருக்கிறார் கலாமின் மாளிகையில். அந்த அப்பாவி ஜவான் ‘நாம் என்ன தவறு செய்துவிட்டோமோ, எதற்காகாக் கூப்பிட்டிருக்காங்களோ தெரியவில்லையே!’ என்கிற குழப்பத்தில் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்திருக்கிறார். கறுப்புச்சட்டையுடன் ஒல்லியாக வந்து நின்ற அந்த இளம் ஜவானைப் பார்த்தவுடன் கலாம் அவருடைய கை குலுக்கி நன்றி சொல்லிருக்கிறார். ’நீங்கள் களைப்பாக இருக்கிறீர்களே..ஏதேனும் சாப்பிடுகிறீர்களா? என் பாதுகாப்புக்காக 2 மணி நேரம் நின்றுகொண்டே வந்திருக்கிறீர்கள். என்னால் உங்களுக்குச் சிரமம்!’ என்றாராம் டாக்டர் கலாம். நெகிழ்ந்துபோன அந்த ஜவான் பேச முடியாமல் தடுமாறியிருக்கிறார். ‘ஒங்களப்போன்றவங்களுக்காக 2 மணிநேரம் என்ன, 6 மணி நேரம்கூட நான் நின்னுகிட்டே வரலாம் சார்!” என்றிருக்கிறார்.

எங்கும் எதிலும் வன்மம் தெறிக்கும் இவ்வுலகில், அன்புவழி சென்ற அருமையான மனிதர் அப்துல் கலாம். மனிதஇனம் மட்டுமன்றி மற்ற உயிர்களையும் கனிவோடு பார்த்தவர். இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (Defence Research and Development Organization) – தலைவராக இருந்தபோது அந்த நிறுவனத்துக்குப் புதிய கட்டிடம் டெல்லியில் கட்டப்பட்டது. கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவரில் வழக்கமாகச் செய்வதைப்போல கண்ணாடிச்சில்லுகளை, பாதுகாப்பு நோக்கில் பதிக்கவிருந்தார்கள். இதனைப்பற்றிக் கேள்விப்பட்ட கலாம் கண்ணாடிச் சில்லுகளை சுவரின்மீது பதிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அவர் சொன்ன காரணம்: ”இந்த வீதியில் நிறைய மரங்கள் இருக்கின்றன. பறவைகள் அதிகமாக வாழ்கின்றன. அவை காம்பவுண்டு சுவரில் உட்கார நேரும்போது கண்ணாடி குத்திவிடும். பறவைகளுக்குத் தீங்கு ஏற்படும். ஆகவே உடைந்த கண்ணாடி சில்லுகளை வைக்க வேண்டாம்!” தங்கமான தமிழர். (தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s