சலாம், கலாம் சார், சலாம் !

பகுதி -1.

டாக்டர் A.P.J. அப்துல் கலாம், அன்புக்குரிய முன்னாள் ஜனாதிபதி. நேற்று மாலை (27-7-2015) நம்மிடமிருந்து விடை பெற்றுக்கொண்டுவிட்டார். இனி இத்தகைய ஒரு மனிதரைப் பார்க்க இயலுமா?

மக்களின் ஜனாதிபதி (People’s President) என அன்புடன் அழைக்கப்பட்டவரும், அப்படி அழைக்கப்பட முற்றிலும் யோக்யதையானவரும் அவர் ஒருவர்தான். அரசாங்கப் பதவி என்பது எத்தனைப் பெரியதாகவும் இருக்கலாம். அதில் காலப்போக்கில் யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து எழுந்திருந்து போகலாம். பார்க் பெஞ்சில் சிலர் காலையிலோ, மாலையிலோ கொஞ்ச நேரம் உட்கார்ந்து எழுந்து போய்விடுவார்களல்லவா. அதைப்போல. அவர்கள் எல்லாம் மனதில் நிலைப்பவரா? நிச்சயமாக இல்லை. நாடெங்கும் மக்களால் ஒருசேர, பிரியத்துடன் மதிக்கப்பட, விரும்பப்பட சில அபூர்வமான தகுதிகளை டாக்டர் கலாம் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் ’மறைந்தார்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கிவாரிப்போடுகிறது நமக்கு.

டாக்டர் கலாம் பற்றி நிறைய எழுதலாம். விஷயம் இருக்கிறது. மீடியாக்கள் வரிந்துகட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டன. எழுதட்டும். பொறுப்பாக, நல்லவிஷயங்களை எழுத எப்போதாவதுதானே நமது மீடியாக்களுக்கு வாய்க்கிறது!

கலாம் என்கிற தனிப்பட்ட மனிதர் அபூர்வமானவர். சீரிய கடமை உணர்வும், மென்மையான குணநலன்களும் உடையவராக இருந்தார். கஷ்டப்படுபவர்களைக் கண்டால் இளகும் மனம், பழகுபவர்களிடம் நேசம், நட்பு, குழந்தைகளிடம், இளைஞர்களிடம் ஒரு அதீதப் பிடிப்பு, அன்பு, வாஞ்சை என இந்தக்காலத்தில் பொதுவாக மனிதரிடம் காணக்கிடைக்காத குணாதிசயங்கள் அவரிடம் காணப்பட்டன. ஆண்டவன் இப்படி ஒரு அதிசயத்தைப் படைத்து இந்தியாவுக்கு அனுப்பிவைத்திருந்தான்! திடீரென்று என்ன தோன்றியதோ அவனுக்கு, என்ன அவசரமோ — ’போதும், திரும்பி வாப்பா!’ என அழைத்துக்கொண்டுவிட்டான்.

எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் மக்களின் ஜனாதிபதி. தன் சிறுவயதிலிருந்தே பெரியோர்களையும் ஆசிரியர்களையும் மதித்தவர். மனதில் வைத்துப் போற்றியவர். இந்திய ஜனாதிபதியாகப் பதவி ஏற்று ராஷ்ட்ரபதி பவனில் வசிக்கையில், ராஷ்ட்ரபதி பவனின் மிகப்பெரிய விசிட்டர் ரூமில், தனக்கு சிறுவயதில் அன்புடன் ஆரம்பப்பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியரின் பெரிய புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார் டாக்டர் கலாம். சிறுவன் அப்துல் கலாமின் குரு பக்தி, பொறுப்புணர்வு, உழைப்பு, நேர்மை என்கிற உயர்குணங்களைக் கூர்ந்து கவனித்திருந்த அவருடைய ஆசிரியர், ‘நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய்!’ என ஆசீர்வதித்திருக்கிறார். சிவசுப்ரமணிய அய்யர் என்கிற அந்த ஆசிரியர் ஒருநாள் கலாமின் 5-ஆவது வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பறவை எவ்வாறு மேலெழுந்து பறக்கிறது என்பது அன்றைய பாடம். அய்யர் கரும்பலகையில் பறவையின் படம் வரைகிறார். அதன் உடல்பகுதி, வால், இறக்கைகள் அதன் மேல்நோக்கிய மூக்கு. அதனுடைய டேக்-ஆஃப் நிலை பற்றி, அது தன்னுடைய உயரநிலையை(altitude) எவ்வாறு நிகழ்த்துகிறது, மாற்றுகிறது, திசை திரும்ப என்ன செய்கிறது என்பதனை விளக்குகிறார். 45 நிமிடம் பாடம் எடுத்தபின்னர் கலாமை நோக்கித் திரும்புகிறார். கலாமைக் குறிப்பிட்டுக்கேட்கிறார். பறவையின் பறத்தல் பற்றி இப்போது புரிகிறதா?

கலாம் தனக்கு அது சரியாக இன்னும் புரியவில்லை என்கிறார். ஆசிரியர் மற்ற மாணவர்களையும் இதையே கேட்க, அவர்களும் தங்களுக்கும் புரிபடவில்லை எனச் சொல்கிறார்கள். இப்போதிருக்கும் (பெரும்பாலான) ஆசிரியர்களாக இருந்தால், பையனை முன்னே வரச்சொல்லி காதைப்பிடித்துத் திருகி, தலை தெறிக்கிறமாதிரி ஒரு குட்டு வைத்து, கைவீச்சில் முதுகிலும் ஓங்கி ஒரு போடுபோட்டு அநத அப்பாவிச் சிறுவனை ஒருவழி செய்திருப்பார்கள். கூடவே, ‘கவனிச்சாத்தானே! காதுகொடுத்துப் பாடத்தைக் கேட்டாத்தானேடா புரியும்! மூதேவிகளா! வந்துட்டாங்க என் பிராணனை வாங்க!’ என்று விஸ்வாமித்திர கோபத்தைக்காட்டி சாபம் போட்டிருப்பார்கள். ஆனால், சிவசுப்ரமணிய அய்யர் இந்தப் பாதகங்கள் எதுவும் செய்யவில்லை. மாறாக ’இன்னிக்கு பள்ளி முடிந்ததும் கடற்கரைப்பக்கம் உங்களெயெல்லாம் கூட்டிப்போகிறேன்’ என்றார். சொன்னபடியே செய்தார்.

கலாமுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஒரே சந்தோஷம். ஆசிரியருடன் கடற்கரையில் உட்காருகிறார்கள். நீலக்கடல். ஆர்ப்பரிக்கும் அலை. பரந்து விரிந்த வானம். ரம்யமான சூழ்நிலை. கடற்கரையில் பறவைகள் பறப்பதும், அமர்வதும், பறப்பதுமாக இருக்கின்றன. ஆசிரியர் சொல்கிறார்: உட்கார்ந்திருக்கும் அந்தப் பறவையைப் பாருங்கள். இப்போது அது எழுந்து பறக்கும். அதன் உடல் அமைப்பு, கால்களை உந்தித்தள்ளல், இறக்கை விசிறல், வாலாட்டம் என அனைத்தையும் கவனியுங்கள் என்கிறார் அய்யர். மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். பறவையின் பறத்தல் அந்த இளம் சிறுவர்களின் முன்னே நிகழ்கிறது. சிறுவன் கலாம் உன்னிப்பாகக் கவனிக்கிறான். ஆசிரியர் மீண்டும் பறத்தலின் வெவ்வேறு நிலைகளை எதிரே நிகழும் நேரடிக் காட்சியோடு பசங்களுக்கு விளக்குகிறார். இப்போது புரிகிறதா? என்று கேட்கிறார். புரிகிறது சார் என்கிறான் சிறுவன் கலாம். மற்ற மாணவர்களும் அப்படியே.

முதலில் வகுப்பறைப் புத்தகப் பாடம். தேற்றம். அதற்குப்பிறகு நேரடிக்காட்சிப் பதிவு, live காட்சிகளுடன் விளக்கம். இதுவே பாடம் கற்பித்தலின் சிறந்த நடைமுறை. ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பிற்காலத்தில் சிவசுப்ரமணிய அய்யரை நினைவுகூர்கிறார் டாக்டர் கலாம். அன்று அந்தப் பறவை தன் மனதுக்குள் வந்து உட்கார்ந்துவிட்டதாகச் சொல்கிறார் கலாம். தான் அதுபற்றியே நினைத்திருந்ததாகவும், ஒருநாள் பறத்தலின் அறிவியலைக் கற்றுத் தேறவேண்டும்; இதுதான் தன்னுடைய வாழ்க்கையின் முக்கிய அறிதல் ஆக, இலக்காக அமையக்கூடும் எனத் தோன்றியது அவருக்கு அந்தப்பருவத்திலேயே. ஒரு நாள் அவர் ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யரிடம் தன் படிப்பாசையைச்சொல்லி, தான் பறத்தலின் அறிவியலை(flight sciences) எவ்வாறு நெருங்குவது, கற்றுத்தேர்வது என்று கேட்டாராம். அதற்கு ஆசிரியர், முதலில் நீ 8-ஆவது வகுப்பை பாஸ் செய்யவேண்டும்! பிறகு ஹைஸ்கூல் செல்லவேண்டும். அதிலும் தேர்வு பெற்றால் கல்லூரிப்படிப்பு. அந்த நிலையை நீ அடைந்தால் உனக்கு பறத்தல் போன்ற பாடங்கள்(flight sciences) படிக்க வாய்ப்பு அமையலாம். கடும் உழைப்பு, முனைப்பு அவசியம் தேவை” என்று கலாமுக்கு அறிவுறுத்தினாராம் அந்த ஆசிரியர். அய்யரின் இந்த புத்திமதிதான் தன் வாழ்நாளின் இலக்குகளை நோக்கித் தன்னை உந்தித் தள்ளியதாக கூறுகிறார் கலாம். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இன்ஜினீயரிங், மெட்ராஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) aeronautical engineering ஆகியவற்றைப் பிற்காலத்தில் படித்துத்தேறி அவர் ஒரு ராக்கெட் மற்றும் aerospace இன்ஜினீயர், Missile Technologist-ஆக உருவெடுக்க இது பெரிதும் துணையாயிருந்தது என்கிறார். அவரையும் தனது படிப்பின் வெவ்வேறு நிலைகளில் சிறப்பாகப் பாடம் புகட்டிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர் முத்து அய்யர், செயிண்ட் ஜோசப் கல்லூரியின் பேராசிரியர் தோத்தாத்ரி அய்யங்கார், எம்.ஐ.டி.யின் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் போன்றோர்களை என்றும் மறந்ததில்லை டாக்டர் கலாம். (தொடரும்)

One thought on “சலாம், கலாம் சார், சலாம் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s