சர்தார்ஜியின் காதல் !

சர்தார்ஜி பஞ்சாபில் யார் யாரையோ பிடித்து, எப்படிஎப்படியோ மேனேஜ் பண்ணி லண்டன் போய்ச் சேர்ந்தார். அங்குக் கடும் முயற்சிக்குப் பிறகு, ஏதோ ஒரு கம்பெனியில் ஒரு துக்கடா வேலை. சர்தார்ஜிக்கு ஒரே சந்தோஷம். இருக்காதா பின்னே.. லண்டன்லேயே வேல கெடச்சுருச்சுல்ல!

நம்ப சர்தாருக்கு அங்க்ரேஸி (ஆங்கில மொழி) கொஞ்சம் ஆட்டந்தான்! இருந்தாலும், தன்னாலும் இங்கிலீஷ் தெரிந்தவர்களோடு சரிக்குச்சரியா பேச முடியும்னு ஒரு பாவ்லா! ஒரு சவடால்! அடிச்சுவிட்றது உண்டு.

அவரோடு வேலைபார்க்கும் ஒரு இளம் இங்கிலீஷ் அழகியின் மீது சர்தார்ஜியின் பார்வை விழுந்து தொலைத்தது ஒரு நாள். அவளின் அழகு, நடை, உடை பாவனைகளைக் கவனிக்க, கவனிக்க சர்தாருக்கு கொஞ்சம் கிறுகிறுப்பு.! காந்தம்போல் ஈர்க்கப்பட்டார் மனுஷன். அதனால் அலுவலகத்தில் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. அவள் வேலை செய்யும் அறைப் பக்கம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தலையைக் காட்டுவதும், அவள் எதிரே வந்தால் மீசையைத் தடவிப் பார்த்துக்கொள்வது, லேசான சிரிப்பு, அசடு வழியல் எனக் காலம் பரபரப்பாக நகர்ந்தது நம்ப ஆளுக்கு.

ஒரு நாள் ..இரவு. தூக்கம் பிடிக்கவில்லை சர்தார்ஜிக்கு. என்னடா இது, ஒரே பேஜாராப் போச்சே ! இந்த சின்னப்பொண்ணு நம்பள இந்தப் பாடுபடுத்தறாளே. இனிமே தாங்காது..நாளைக்கு எப்பிடியும் சொல்லீற வேண்டியதுதான்!

அடுத்த நாள். வழக்கத்தைவிடத் தன்னை டிப்-டாப்பாக அலங்கரித்துக்கொண்டார். ஒரு தடவைக்கு ரெண்டு தடவைக் கண்ணாடியில் தன் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டார். தலைப்பாகையைச் சரிசெய்துகொண்டார். ஒரு மஜாவான பஞ்சாபிப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு உற்சாகமாக ஆஃபீஸுக்குப் போனார் சர்தார்ஜி.

லன்ச் இடைவேளையில் அவளைச் சந்தித்தார். கொஞ்சம் பேசியபின், சரியான நேரத்தில், முகத்தை மலரவைத்துக்கொண்டு, வாயெல்லாம் பல்லாக ‘ஐ லவ் யூ!’ என்று அவளிடம் சொல்லிவிட்டார் சர்தார்ஜி.

அவளோ ஒரு வெள்ளைக்காரி. அவளுடைய லைஃப் ஸ்டைலே வேறு. இந்த ’லவ் யூ’ எல்லாம் பத்துப் பனிரெண்டு வயசிலிருந்தே பழகிப்போன சங்கதி. பெரிய புல்லரிப்பு ஏதுமில்லை இதில்! காதல், கீதல் என்றெல்லாம் எமோஷனலாகிவிட, அவள் இந்தியப் பெண்ணல்ல..

இவனுக்கு நம்மைப் பிடிக்கிறது போலிருக்கிறது ..அதனால் இப்படி வழிகிறான். நாமும் பேருக்கு ’நீயும் கொஞ்சம் பரவாயில்லடா!’-ங்கற மாதிரி ஒரு ஃபார்மாலிட்டிக்குச் சொல்லிவிடுவோம் என நினைத்து,
”ஐ டூ லவ் யூ!” என்றாள் இங்கிலீஷ் அழகி, லேசான சிரிப்புடன். (I TOO LOVE YOU! – நானும் உன்னைக் காதலிக்கிறேன் என்கிற அர்த்தத்தில் அல்ல – எனக்கும் உன்னைப் பிடிக்கிறது என்கிற மாதிரி ஒரு பேச்சுக்கு..)

சர்தார்ஜிக்கு ஒரே சந்தோஷம்! ஆனால், ’லவ் யூ’-க்கு முன்னால் அவள் போட்ட சின்ன இங்கிலீஷ் வார்த்தையால் கொஞ்சம் திகைப்பு, குழப்பம். இங்கிலீஷில் அவருக்குத் தெரிந்த ஒரே ‘டூ-‘ ’’TWO’’தான்! ’’TOO’’ என்கிற இங்கிலீஷ் வார்த்தை ஒன்று இருப்பதோ, அதன் அர்த்தமோ அப்பாவி சர்தார்ஜிக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘’I TWO LOVE YOU’’ என்று அவள் சொன்னதாகப் புரிந்து கொண்டார் நம்ம பிரகஸ்பதி! அட, இவ என்னை ரெண்டு மடங்கு அதிகமா காதலிக்கிறேன்னு சொல்றாளா!

அப்படின்னா இவ காதலுக்கு என் காதல் என்ன மட்டம்னு நெனச்சுட்டாளா? நான் யார்னு இவளுக்குப் புரியவைக்கிறேன் என்று நினைத்து உற்சாகமாக அவளை நெருங்கி,

’’ஐ த்ரீ லவ் யூ !’’ (I THREE LOVE YOU) என்று இளித்தார் சர்தார்ஜி !

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s