கிரிக்கெட்-ஜிம்பாப்வே தொடரில் இந்தியா வெற்றி

இன்று(14-07-2015) ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில்(Harare) நடந்த 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்-வாஷ் (white-wash) செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் அஜின்க்யா ரஹானேயும், முரளி விஜய்யும் மந்தமான பிட்ச்சிலும் வேகமாக ரன்னெடுக்க முயன்றனர். ஸ்ட்ரோக் ப்ளேக்கு(stroke play) சாதகமாக அமையாத ஹராரே பிட்ச்சில், ஜிம்பாப்வே பந்துவீச்சாளார்கள் துல்லியமாகப் பந்துவீசி இந்திய வீரர்களைச் சிக்கலில் ஆழ்த்தினார்கள். மேட்ஸிவாவின்(Madziva) வேகப்பந்துவீச்சில் ரஹானே, விஜய் இருவரும் விரைவிலேயே பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். 3-ஆவதாக வந்த ராபின் உத்தப்பா 31 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் சரமாரியாக சரிய இந்தியா தடுமாறிய நிலையில், தன் முதல் மேட்ச்சை இந்தியாவுக்காக விளையாடிய மனிஷ் பாண்டே அருமையாக ஆடி 71 சிறப்பான ரன்களை எடுத்தார். மறுமுனையில் கேதார் ஜாதவ் ஆக்ரோஷமாக ஆடி, தன் முதல் சதத்தை அடித்தார். இருவரின் திறமையினால்தான் இந்திய ஸ்கோர் 276-ஐ எட்ட முடிந்தது.

277 என்கிற சிக்கலான இலக்கை ஜிம்பாப்வே துரத்தியது. ஒரு பக்கத்தில் அவ்வப்போது விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, ஜிம்பாப்வேயின் துவக்க ஆட்டக்காரரான சிபாபா(Chibhabha) மிகவும் பொறுப்பாக ஆடி 82 ரன்கள் விளாசினார். மற்றவர்கள் இந்திய சுழல் மற்றும் வேகத்தில் தடுமாறி விழ, ஜிம்பாப்வே 193 ரன்களில் தன் இன்னிங்ஸை இழந்தது. பின்னி 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், அக்ஷர் பட்டேல், மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், முரளி விஜய் ஒரு-நாள் போட்டியில் தன் முதல் விக்கெட்டையும் வீழ்த்தினர். 105 முக்கிய ரன்னெடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த கேதார் ஜாதவ், இன்றைய ஆட்டநாயகன்.

அனுபவம் அதிகமல்லாத இளம்வீரர்களின் துணையோடு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். தொடர் நாயகனாகத் தேர்வான அம்பத்தி ராயுடு, முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பான பேட்டிங் செய்தார். ஒரு-நாள் போட்டிகளில் தனது 2-ஆவது சதத்தை முதல் மேட்ச்சில் விளாசினார். இன்றைய மேட்ச்சில் அருமையாக சதமடித்த கேதார் ஜாதவுக்கு இது ஒரு-நாள் போட்டிகளில் முதல் சதமாகும். இந்தத் தொடரில் முரளி விஜய்யும், ஸ்டூவர்ட் பின்னியும்(Stuart Binny), தங்கள் முதல் அரைசதங்களை அடித்தனர். பின்னி, தன் மத்தியவேகப் பந்துவீச்சினால் மொத்தம் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தித் தொடரின் தரமான ஆல்ரவுண்டராகத் தன்னை நிறுவினார். முதல் போட்டியில் அம்பத்தி ராயுடு-ஸ்டூவர்ட் பின்னி ஜோடி, 87-க்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் பரிதாப நிலையை தன் திறமையான பேட்டிங்கினால் சீர்செய்தது. முதலில் கவனமாகவும், பின் அதிரடியாகவும் அவர்கள் தாக்கிய 160 ரன்கள், ஒரு-நாள் போட்டிகளில் 6-ஆவது விக்கெட்டிற்கான அதிகபட்ச ரன்கள். இது ஒரு இந்திய சாதனை. புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு துல்லியமாகவும், அதி சிக்கனமாகவும் இருந்தது. ஸ்பின்னர்களான ஹர்பஜன் சிங், அக்ஷர் பட்டேல் மத்திய ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தியதோடு, ஜிம்பாப்வேயின் முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தனர். ராபின் உத்தப்பா முதன்முறையாக இந்தியாவுக்காக விக்கெட்கீப்பராக இந்தத் தொடரில் விளையாடினார். அவர் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்கலாம்.

அஜின்க்யா ரஹானே முதன்முறையாக கேப்டன் என்கிற நிலையில் இளம் இந்திய அணியை வழிநடத்தி, 3-0 என்று வெளிநாட்டில் தொடரை இந்தியாவுக்காக வென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். அவரது பேட்டிங்கும் நன்றாகவே இருந்தது.

இரண்டு டி-20 போட்டிகள் இரு அணிகளுக்கிடையே இனி நடக்கவிருக்கின்றன. It is a bang bang game. இரு அணிகளின் அதிரடி வீரர்கள், பந்துவீச்சாளர்களின் திறமையைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.

**

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s