பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சர்தார்கள் அல்லது மரியாதையாக சர்தார்ஜிகள் என்றழைக்கப்படும் சீக்கியர்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இவர்கள் வசித்தாலும் பஞ்சாப்தான் இவர்களது தாய்மாநிலம். வீரத்திற்குப் பேர்போனவர்கள். இந்திய ராணுவத்தின் சீக்கியப்படை பிரிட்டிஷ் காலத்திலிருந்தே வீரதீரச் செயல்களுக்குப் புகழ்பெற்றது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கொடியின் கீழே ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்டவர்கள். கடும் உழைப்பாளிகள். பஞ்சாபில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள். சீக்கியர்கள் முரட்டு சுபாவம் உடையவர்களாகத் தோன்றினாலும், பழகினால் ஆழ்ந்த நட்புக்குரியவர்கள். அன்புக்குக் கட்டுப்படுபவர்கள். பொதுவாக உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்கள்.
இவர்களிடம் இன்னொரு சுவாரஸ்யமான குணமும் உண்டும். தங்களைத் தாங்களே கிண்டல் செய்துகொள்ளும் குணம். மற்றவர்கள், குறிப்பாக நன்கு பழகியவர்கள் தங்களை உரிமையோடு நாலுபேருக்கு முன்னே கேலி செய்தாலும் அதை விளையாட்டாக ஏற்றுக்கொள்வார்கள். ஒரு அசட்டுத்தனம் கலந்த நகைச்சுவை உணர்வு, பொதுவாக அவர்களிடம் காணப்படுகிறது. சில சமயங்களில் அசட்டுத்தனமாகவோ, அப்பாவித்தனமாகவோ ஏதாவது இடக்குமுடக்காகப் பேசி வம்புகளில் மாட்டிக்கொள்வதுண்டு. அல்லது பொது இடங்களில் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகி வழிவதுண்டு. இவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் `நார்மல்`. ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதனைக் கடந்துவிடுவார்கள். நாமும் இவர்களை `லைட்`டாக எடுத்துக்கொள்ளப் பழகிவிடுவோம். மொத்தத்தில் சமூகச் சந்திப்புகளில் இவர்கள் lively characters!
இவர்களுடைய அசட்டுத்தனங்களைப்பற்றி, அப்பாவி வழியல்கள்பற்றி வடநாட்டில் கிண்டல் கதைகள்/ஜோக்குகள் நிறைய உலவுகின்றன. அவைகளைப் பிரபலப்படுத்துபவர்களும் சிலசமயங்களில் இவர்களேதான்! இவற்றில் ஒன்றிரண்டை பார்க்கலாமே.
சர்தார்ஜியும் இங்கிலீஷும் !
சர்தார்ஜிகளுக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக்கு! இந்தப் பின்புலத்தில் இந்தக் கதை:
பஞ்சாபில் ஒரு ஆரம்பப்பள்ளிக்கூடத்தை ஆய்வுசெய்ய ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார். பள்ளித் தலைமை ஆசிரியரைச் சந்தித்தபின் பள்ளிக்கூடத்தை ஹெட்மாஸ்டருடன் சேர்ந்து பார்வையிடுகிறார். வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்தாவது வகுப்பில் ஒரு சர்தார்ஜிதான் ஆங்கில ஆசிரியர். பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார். இன்ஸ்பெக்டரும் தலைமை ஆசிரியரும் (அவரும் ஒரு சர்தார்ஜிதான்!) மறைந்திருந்து கவனிக்கின்றனர்.
சர்தார்ஜியான இங்கிலீஷ் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகிறார்: NATURE
`நேச்சர்` என்று இங்கிலீஷில் எழுதிவிட்டு அதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று மாணவர்களுக்கு விளக்குகிறார்:
”Na tu re . ந.. டூ.. ரே ! நட்டூரே.. திருப்பிச் சொல்லுங்கடா பசங்களா..! நட்டூரே !”. மாணவர்கள் திருப்பிச் சொன்னார்கள்: ‘நட்டூரே!`
இன்ஸ்பெக்டருக்கு ஒரே அதிர்ச்சி. என்ன! `நேச்சர்` என்கிற ஆங்கில வார்த்தையை ‘நட்டூரே` என ஆசிரியர் தப்பாக உச்சரிக்கிறார். அப்படியே சொல்லியும் கொடுக்கிறாரே! ஹெட்மாஸ்டரைக் கோபமாக பார்த்து “யோவ்! என்னய்யா இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கறான் இந்த வாத்தியாரு! வாரும் உமது ரூமிற்குப் போகலாம். இந்த ஆசிரியரை அங்கே கூப்பிட்டு ஒரு விடு விடுய்யா!“ என்று சீறிவிட்டு ஹெட்மாஸ்டரின் அறைக்குத் திரும்புகிறார்.
ஹெட்மாஸ்டரின் அறைக்கு அழைக்கப்பட்டார் அந்த சர்தார்ஜி-இங்கிலீஷ் ஆசிரியர். தலைமை ஆசிரியரும் ஒரு சர்தார்ஜிதானே. அவர் இங்கிலீஷ் ஆசிரியரான சர்தார்ஜிக்கு, வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் முன்னால் கடும் எச்சரிக்கை விடுத்தார்: ‘’ஒங்களத் திருத்திக்குங்க! சரியா, முறையா இங்கிலீஷ் பாடம் எடுங்க! இல்லாட்டி ஒங்களுக்கு ’’ஃபுட்டூரே’’-யே இல்லாம செஞ்சிருவேன்..ஜாக்கிரதை !“
இதைக்கேட்ட இன்ஸ்பெக்டருக்குத் தலை சுற்றியது. அந்த சர்தாஜிக்கிட்டே (இங்கிலீஷ் ஆசிரியர்கிட்டே), இந்த சர்தார்ஜி -தலைமை ஆசிரியர்-இப்போ என்ன சொன்னாரு.. யோசித்தார். புரிந்தது! ‘’Future’’ என்கிற இங்கிலீஷ் வார்த்தையை ஃப்யூச்சர்’ என்று உச்சரிப்பதற்கு பதிலாக “ஃபுட்டூரே’’ என்று சொல்கிறார் தலைமை ஆசிரியர்! “ஒங்களுக்கு ஃப்யூச்சரே (எதிர்காலமே) இல்லாம செஞ்சிடுவேன்“ என்பதற்குப் பதிலாக “ ஃபுட்டூரே“-யே இல்லாம செஞ்சிடுவேன்“ என்கிறார். ஹெட்மாஸ்டரோட இங்கிலீஷே இந்த லட்சணத்தில இருந்தா, யாரைச் சொல்லி என்ன புண்ணியம்! ஹே, ராம்! எங்கடா வந்து நம்ம மாட்டிக்கிட்டோம்!’’ என்று தலையில் அடித்துக்கொண்டார் ஆய்வுக்கு வந்திருந்த அந்த இன்ஸ்பெக்டர்.
(இந்தக் கதையை எனக்குச் சொன்னதே டெல்லியில் ஒரு சர்தார்ஜி-நண்பர்தான் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள் !)
மேலும் சில சர்தார்ஜி ஜோக்குகள் அடுத்த பதிவில்…
**