ஜூலை10-ல் துவங்கவிருக்கும் ஜிம்பாப்வே-க்கு எதிரான ஒரு-நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை 29-06-2015 அன்று அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
மாறுதல் செய்யப்பட்டிருக்கும் இந்திய அணியில் புதியவர்கள் சிலர் இடம் பிடித்திருக்கிறார்கள். சில சீனியர்கள் திரும்பி வந்திருக்கிறார்கள். தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் மத்தியவரிசை ஆட்டக்காரரான மும்பை அணியின் அஜின்க்யா ரஹானே முதன்முறையாக ஒருநாள் மற்றும் டி-20 இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பழைய புலிகளான தோனி, கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா, உமேஷ் யாதவ், அஷ்வின், ஷிகர் தவன் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல காரியத்தை ந்மது கிரிக்கெட் போர்டு, பங்களாதேஷ் டூரின்போதே செய்திருக்கவேண்டும். Better late than never!
நமது முந்தைய பதிவில் (25-6-2015) குறிப்பிட்ட சில இளம் வீரர்களை ஜிம்பாப்வே டூருக்காக இந்திய போர்டு தெரிவு செய்துள்ளது மகிழ்ச்சிதரும் ஆச்சரியமாக உள்ளது! வரவேற்கத் தக்கது. அவர்கள்: ராபின் உத்தப்பா (கர்னாடகா)- விக்கெட் கீப்பர்/துவக்க ஆட்டக்காரர். மனிஷ் பாண்டே (வயது 25,கர்னாடகா), மனோஜ் திவாரி(மேற்கு வங்கம்)-இருவரும் மத்தியவரிசை ஆட்டக்காரர்கள். சந்தீப் ஷர்மா(வயது 22,பஞ்சாப்)-வேகப்பந்துவீச்சாளர். இவர்களன்றி இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம் பெறும் சீனியர் வீரர்கள்: முரளி விஜய்(தமிழ்நாடு)-துவக்க ஆட்டக்காரர், ஹர்பஜன் சிங்(பஞ்சாப்) சுழல்பந்து வீச்சாளர். கேப்டன் அஜின்க்யா ரஹானேயுடன் இடம்பெறும் ஏனைய சீனியர் வீரர்கள்: புவனேஷ்வர் குமார்(உத்திரப்பிரதேசம்), மோஹித் ஷர்மா(ஹரியானா) –இருவரும் வேகப்பந்துவீச்சாளர்கள், அம்பத்தி ராயுடு (ஹைதராபாத்) மத்தியவரிசை ஆட்டக்காரர், கேதார் ஜாதவ்(மஹாராஷ்ட்ரா) -மத்தியவரிசை பேட்ஸ்மன், ஸ்டூவர்ட் பின்னி(Stuart Binny)(கர்னாடகா), அக்ஷர் பட்டேல்(வயது 21, குஜராத்), கரன் ஷர்மா (ரயில்வே கிரிக்கெட் அணி) -மூவரும் ஆல்ரவுண்டர்கள், தவல் குல்கர்னி((Dhawal Kulkarni)மும்பை)- வேகப்பந்துவீச்சாளர்.
இந்திய கிரிக்கெட் போர்டு, 2016-ல் நிகழவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை மனதில் கொண்டு, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் வீரர்களைத் தெரிவு செய்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த ஓரிரண்டு வருடங்களாகவே, தேசத்துக்காக விளையாடும் வாய்ப்புக்காகக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும், திறமை மிளிரும் இளம்வீரர்களைத் தேர்வு செய்தது பாராட்டவேண்டிய விஷயம்.
அஜின்க்யா ரஹானே இந்தியாவின் சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களில் ஒருவர். ஆனால், இதுவரை தற்காலிகமாகக்கூட கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதில்லை என்பதால் அவருடைய அணுகுமுறை வரும் தொடரில் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற இயலாது. தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி, தங்கள் திறமையை வெளிநாட்டு மண்ணிலும் நிரூபிக்க முயல்வார்கள் என நம்பலாம். குறிப்பாக ஐபிஎல் புகழ் சந்தீப் ஷர்மா swing and line & length medium pacer. இவரது பந்து வீச்சு துல்லியமானது, விக்கெட்டுகளை விரைவில் பறிப்பது. ஜிம்பாப்வே பிட்ச்சுகளில் இவரது பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பது குறிப்பாகக் கவனிக்கப்படும். இதைப்போலவே ஐபிஎல், ரஞ்சி டிராஃபி மேட்ச்சுகளில் சிறப்பாக ஆடிவரும் ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி ஆகியோரின் பேட்டிங் ஜிம்பாப்வே மண்ணில் எப்படி இருக்கும் என்பதனையும் கிரிக்கெட் வல்லுனர்களும், ரசிகர்களும் கண்ணில் எண்ணெயைவிட்டுக்கொண்டு கவனிப்பார்கள்!
**