நேற்று(24-6-2015) டாக்காவில் முடிந்த 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா பங்களாதேஷை தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, இந்தத் தொடரில் முதன் முறையாக பொறுப்புடன், முனைப்புடன் விளையாடியது. கடைசி மேட்ச்சிலாவது ஜெயிக்க வேண்டுமே என்கிற ஜாக்கிரதை உணர்வு. ஷிகர் தவன் 75 ரன்கள், கேப்டன் தோனி 69 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினர். அம்பத்தி ராயுடு 44, சுரேஷ் ரெய்னா 39 ஆகியோரின் துணையாட்டம் நன்றாக அமைந்தது. இந்தியாவின் ஸ்கோர் முதன்முறையாக இத்தொடரில் 300-ஐத் தாண்டியது. 318 என்கிற இலக்கை துரத்தி, மூன்றாவது மேட்ச்சிலும் இந்தியாவை தோற்கடித்து, முதன்முதலாக இந்தியாவை `ஒயிட்வாஷ்` செய்ய ஆசைப்பட்டது பங்களாதேஷ்! ஆனால் நேற்று இந்திய பௌலர்களிடம் அதன் பாச்சா பலிக்கவில்லை. இந்திய ஸ்பின்னர்கள், ரெய்னா, அஷ்வின், பட்டேல், ராயுடு முறையே 3,2,1,1 விக்கெட்களை ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் வீழ்த்தி, பங்களாதேஷை நிலைகுலைய வைத்தனர். குல்கர்னி 2, ஸ்டூவர்ட் பின்னி 1 என மற்ற விக்கெட்டுகள் பறிபோக, பங்களாதேஷ் 240 ரன்களில் இந்தியாவிடம் சரணடைந்தது. இருந்தும் முதல் இரண்டு போட்டிகளை வென்றிருந்ததால், 2-1 என்கிற நிலையில் இந்தியாவுக்கெதிரான தொடரை பங்களாதேஷ் முதன்முறையாகக் கைப்பற்றியது.
அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்டு, அலங்கோலமாக பங்களாதேஷில் நடத்தப்பட்ட இந்த இந்தியா-பங்களாதேஷ் ஒரு டெஸ்ட் மேட்ச், மற்றும் 3 போட்டிகள் அடங்கிய ஒரு-நாள் தொடர்பற்றி, சில சங்கடமான கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. பங்களாதேஷின் உச்ச பருவமழை காலமான ஜூன் மாதத்தில் எந்த ஒரு வெளிநாட்டு அணியும் கிரிக்கெட் விளையாட அங்கு வருவதில்லை. தினம் தினம் கருமேகங்கள் மிரட்ட, மழைவரும் காலமிது. இதெல்லாம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு தெரியாத விஷயமா? இருந்தும், பங்களாதேஷில் ஜூன் மாதத்தில் இந்த கிரிக்கெட் தொடரை அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன? பங்களாதேஷ் போர்டு கூப்பிட்டால் உடனே ஒடிவிடவேண்டுமா? அதுவும் அனல்பறக்கும் கோடையும், எதனையும் விடாது நாசம் செய்யும் ஒரு கசகசப்பான மழைகாலத்தில்தானா, அந்த நாட்டுக்கு அணியை அனுப்ப வேண்டும்? உலகக்கோப்பைத் தொடருக்குப்பின், நமது அணி இப்போதுதான் இந்தியக் கடும் கோடையில் ஐபிஎல் தொடரை விளையாடி முடித்திருக்கிறது. ஒரு மாத இடைவேளை /ஓய்வுகூட கொடுக்கப்படாமல் இந்தியவீரர்களைத் தங்கள் குடும்பத்தோடு இருக்க அனுமதிக்காமல், ஏன் இப்படி விரட்டி, விரட்டி வேலை வாங்க வேண்டும்? நமது வீரர்களின் ஓய்வு, ஆரோக்கியம், ஆட்டத்தயார்நிலை, இவற்றில் நமது கிரிக்கெட் போர்டுக்கு அக்கறை இல்லையா?
அப்படியே அணியை அனுப்பவேண்டிய சர்வதேச கிரிக்கெட்டின் கமிட்மெண்ட் இருந்தால், இந்தியாவின் இளம் வீரர்களை, ஒரு சில சீனியர் வீரர்களுடன் சேர்த்து பங்களாதேஷுக்கு அனுப்பியிருக்கலாமே? இந்திய அணிக்குள் எப்போதும் நுழையத் தயாராயிருக்கும், தகுதி மிகுந்த வீரர்களான ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி, சர்ஃபராஸ் கான், சௌரவ் திவாரி, சஞ்சு சாம்ஸன், சந்தீப் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா, அனுரீத் சிங், போன்றோரை இந்த டூருக்காகத் தேர்வு செய்திருந்தால், அவர்களுக்கும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இவர்களில் யாராவது சிறப்பான ஆட்டத்தை, இத்தகையக் கடும் சூழலில் வெளிப்படுத்த நேர்ந்தால், அவர்களை இந்திய அணியில் நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கலாம். எதிர்கால இந்தியக் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இத்தகைய இளம் வீரர்களின் பங்களிப்பு ஏதுவாக அமையும்.
இந்தத் தொடரில், இந்திய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களின் ஆட்டம் படுமோசம். காட்டுத்தனமான வேகத்தை மட்டுமே நம்பி இராமல், வேகப்பந்துவீச்சாளர்களின் உண்மை பலமான யார்க்கர், இன்–கட்டர், ஆஃப்- கட்டர், ஸ்விங் எனப் பல்திறமை கொண்ட இளம் பந்துவீச்சாளர்களை இனம்கண்டு இந்திய அணியில் சேர்க்கவேண்டும். வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியா வெற்றி பெற, மிகவும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயமிது.
ஜக்மோகன் டால்மியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் போர்டு, தனது சமீபத்திய முடிவுகளில் அனாவசியப் பதற்றம், அவசரம் காட்டுவதாகத் தெரிகிறது. இது தேவையில்லாத ஒன்று. இந்தியக் கிரிக்கெட்டின் வெற்றி என்கிற இலக்கோடு, வீரர்களுக்குப் போதுமான ஓய்வு, தொழில்ரீதியான பயிற்சி, தயார்நிலை, இந்தியாவில் சிறப்பான ஆடுகளங்கள் ஆகியவற்றைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். காலங்கடத்தாது, சரியான முடிவெடுக்கவேண்டும்.
**