சில சமயங்களில் மாலை ஆரத்திக்காக காத்திருப்போம் டெல்லியின் அந்தக் கோவிலின் வாசலில். அப்போது, அங்கிருக்கும் பெஞ்சுகளில் உட்கார்ந்து சகபக்தர்களுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். ஒரு மாலைப் பொழுதில் அந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்தேன். பக்கத்தில் செக்யூரிட்டி ஆசாமி ஒரு டெல்லிவாலாவுடன் ஏதோ ஹிந்தியில் சளசளத்துக்கொண்டிருக்க, தெளிவான மெதுவான குரலில் அவரிடமிருந்து வந்தது அந்த தமிழ்த் திரைப்படப்பாடலின் வரிகள்…
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே..
குடியிருக்க நான் வரவேண்டும்!
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தரவேண்டும்?..
வயது 70-ஐ நெருங்கியிருக்கும். சற்றே குள்ளம். வேஷ்டி, சட்டை. நெற்றியில் பளிச்சென வீபூதிப் பட்டை. சிவனடியார் போன்ற சாதுத் தோற்றம். ஆனால், மனதில் ஆடிக்கொண்டிருப்பது எம்.ஜி.ஆரின் ஹீரோயினா? ஹ்ம்… யாரைப்பற்றி என்ன சொல்வது இந்த உலகத்தில்?
பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் இந்த ஜாலிப் பேர்வழியைப்பற்றி நாசூக்காக விஜாரித்தேன். அவர் லேசாக சிரித்துக்கொண்டே `ரொம்ப லைட்டா நெனச்சுராதீங்க! சாஸ்திரமெல்லாம் படிச்சவரு!`
ஓ! அப்படிப் போகுதா சங்கதி? கொஞ்சம் பேசிப் பார்ப்போம் என நினைத்து அருகில் சென்று உட்கார்ந்தேன்.
ஒரு தயக்கமான சிரிப்பு, ஜாக்ரதையான அறிமுகத்துக்குப்பின்
’உங்களக் கோவிலுக்குள்ளே பார்க்கறது அபூர்வமா இருக்கு.. சகஸ்ரநாம பாராயணத்திலும் நீங்க கலந்துக்கறதில்ல போலெருக்கு..` என்று இழுத்தேன்
`நா அங்கல்லாம் போறதில்லே. விஷ்ணு சகஸ்ரநாமமா சொல்றாங்க..! தப்பும் தவறுமா..ம்ஹூம்` என்றார் சலிப்புடன்.
’ஆமாம். வேகமா படிச்சுட்டுப்போயிட்ராங்க’ என்று ஒத்து ஊதிவைத்தேன், அவருடனான ஃப்ரிக்குவென்ஸியைக் கொண்டுவருவதற்காக.
’’முழுசா சரியா சொல்லவராட்டா, சொல்லவேண்டாமே.
`ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகரஸ்நாம தத்துல்யம் ராம நாம வரானனே`
என்கிற வரிகளை நிதானமா மனசுலே வாங்கிண்டு, ரெண்டுதரம் சொன்னாக்கூடப் போறுமே! சகஸ்ரநாமம் பூரா சொன்னதுக்கான பலன் கெடச்சுடும்’’ என்றார் அவர்.
மேற்கொண்டு பேச்சு கடவுள், மந்திரம், வேதம் என நீண்டது.
’’ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஏற்ற மந்திரங்கள், செய்ய வேண்டிய யாகங்களுக்கான வழிமுறைகள் பற்றி வேதங்கள்ல விபரமா சொல்லி இருக்கு. மந்திரத்தை மனப்பாடம் பண்ணிட்டா மட்டும் போறாது. தகுதி உள்ள வேத ஆச்சாரியர்களிடமிருந்து சரியா, முறையா கத்துக்கணும். சமஸ்கிருதத்தில உச்சரிப்பு ரொம்ப முக்யம். மந்திரங்களை மிகச் சரியா உச்சரிக்கத் தெரியணும். உச்சரிப்பு மாறிடுச்சுன்னா, உபத்திரவமாப் போயிடும். அர்த்தம் அனர்த்தமாயிடும். இதப்பற்றி யஜூர் வேதத்தில தெளிவா சொல்லப்பட்டிருக்கு..’’
‘’எந்தக் கடவுளுக்கும் மனைவின்னு ஒன்னு கெடயாது. தெய்வம் ஒன்னுதான். பரப்பிரும்ஹம். அதுக்கு பலவேறு சக்திகள் இருக்கு. அதத்தான் பெண் ரூபமா வரிச்சு, சிவனோட மனைவி பார்வதி, விஷ்ணுவோட மனைவி லக்ஷ்மி என்றெல்லாம் கொண்டாடறோம். வணங்குறோம்…’’
’’வினாயகர் இருக்காரு. அவருக்கு சித்தி, ரித்தின்னு ரெண்டு பொண்டாட்டிகள்-ன்னு சொல்றாங்க. அவரு ஒருத்தருதான். அவருக்கு பொண்டாட்டில்லாம் இல்ல. அது அவரோட தெய்வீக சக்தியின் வடிவம். அதத்தான் மனைவிமாரா வழிபடறாங்க வடநாட்டுல. ’’
சொல்லிக்கொண்டே சென்றார் மனிதர். நான் இடையிடையே `ம்` கொட்டிக்கொண்டிருந்தேன். மடையைத் திறந்து விட்டாயிற்று; இனி வெள்ளம் தான்!
’’ `சுதர்ஷன்` -ங்கிற பெயரில பெருமாளை சேவிக்கிறோம். சுதர்ஷன் –னா என்ன அர்த்தம்? `சு` – `தர்ஷன்`. `சு`-ங்கிறதுக்கு சமஸ்கிருதத்தில விசேஷமான, சிறந்த குணங்களையுடைய–ன்னு பொருள் இருக்கு. (சுகன்யா, சுப்ரியா, சுஹாசினி, சுசித்ரா –ன்னு பொண்களுக்குப் பேரெல்லாம் இருக்கே…) இங்கே அதுக்கு, `மிகவும் விசேஷமான, சிறந்த தரிசனம்-னு அர்த்தம். பெருமாள், மகாவிஷ்ணு தன் அதீத சக்தியையெல்லாம் கொண்டிருக்கிற அவருடய திவ்ய ஆயுதமான சக்கர ரூபத்தில, பக்தர்களுக்குக் கொடுக்கும் `விசேஷக்காட்சி` -ன்னு அர்த்தம். அதுதான் சுதர்ஷன். அதத்தான் நாம `சக்ரத்தாழ்வார்`-னு, சுதர்ஷன் –னு பூஜை செஞ்சிட்டு வர்ரோம்..பகவானோட சக்தி, கீர்த்தி, சிறப்பு பற்றி அவன் சன்னிதிலே பாடறோம். ஸ்வாமி மஹா தேசிகன் அதப்பத்தித்தான் `சுதர்ஷனாஷ்டக`த்திலே ப்ரமாதமா எழுதியிருக்கார்.’’
`சுதர்ஷனை வேண்டிக்கொண்டா எல்லாம் நடக்கும், வேண்டியது வேண்டியபடி கிடைக்கும்னு நம்பறோம்` என்றேன்.
அவர் தொடர்ந்தார்: ‘’கடவுளுக்கென்ன… அவர் நீ வேண்டிக்கொண்டது எதுவா இருந்தாலும் கொடுத்துடுவார். எல்லாத்தயும் கடந்த ஞானம் தான் எனக்கு வேணும்னு யாரும் அவர்ட்டபோய்க் கேட்கப்போறதில்ல! பணம், காசு, சொத்துபத்து வேணும்னுதான் ப்ரார்த்தனை செய்வான் மனுஷன். காசு, பணந்தான் எல்லாம்..எம்ஜிஆர் படத்துல ஒரு பாட்டு வரும். ஞாபகம் இருக்கா? என்று என்னைப் பார்த்தார். நான் யோசிக்க, அவரே எடுத்தார், பாடினார்:
காசேதான்…கடவுளடா – அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா !
கைக்கு கை மாறும் பணமே- உன்னை
கைப்பற்ற நினைக்குது மனமே!- நீ
தேடும்போது வருவதுண்டோ?
விட்டுப்போகும்போது சொல்வதுண்டோ?…
“பகவானுக்குத் தெரியும் ஒன்னயப்பத்தி! ஒன்னயக் கொஞ்சம் அலக்கழிப்பார். அப்புறம்…“இதுதானே வேணும்.. இந்தா!“ன்னு கொடுத்துடுவார்! அதுக்கப்பறம் ஒம் பாடு! பணத்த வச்சுகிட்டு ஆட்டம் போடுவே, நல்லது, கெட்டதுன்னு நிறைய கர்மாக்களப் பண்ணுவே.. அதன் பலனா அடுத்த பிறவி…அதுக்கடுத்த பிறவின்னு சுத்திகிட்டே இருக்க வேண்டியதுதான். விமோசனம் இல்லே..!“
`அப்போ இந்த அவஸ்தையிலிருந்தெல்லாம் ஒரு விடுதலை, விமோசனமே மனுஷனுக்குக் கெடைக்காதா?` என்றேன் அவரைப் பார்த்து.
`மொதல்லே இந்தப் பணம், காசு, போகம்.. இதெல்லாமே, காலப்போக்குல நீடித்த சந்தோஷம், நிம்மதி தரக்கூடிய சங்கதிகள் இல்லன்னு ஒருத்தனுக்குத் தன்னாலே புரியணும். எல்லாத்தையும் விட்டுவிட்டு அவன் சுத்தமா வெளியே வந்துடணும். இதையெல்லாம் தாண்டிய பரமநிம்மதி வேணும்னு அவன் மனம் ஏங்கணும். அதத்தவிர வேற ஒண்ண அவன் மனம் நாடக்கூடாது. அந்த நிலையில அவன் பகவானிடம் சரணடைந்து, “அப்பா! நான் பட்டதெல்லாம் போதும்! இந்த சம்சார சாகரத்தைத் தாண்டின, பழி, பாவம், கர்மாக்களுக்கு அப்பாற்பட்ட பரமகதியைத் தா!“ன்னு கெஞ்சிக் கேட்டு நிக்கணும். பகவானும் பார்ப்பார். உண்மையில இவனுக்கு இதுமட்டும்தான் வேணுமா? இல்ல, சும்மா குழம்பிப்போயி இங்க வந்திருக்கானா-ன்னு ஒன்னய சோதிப்பார். புரட்டிப்புரட்டி எடுப்பார். அவரோட சோதனை எல்லாத்துலயும் நீ பாஸாகிட்டா, நீ கேட்ட அந்தப் பரிபூரண அமைதியை, ஞான நிலையைத் தந்துடுவார். பகவத் கீதையில பகவான் கிருஷ்ணர் சொல்றார்: `மனிதர்களில் ஏகப்பட்டபேர் என்னை நாளெல்லாம் பூஜிப்பார்கள், பாடுவார்கள்..ஆடுவார்கள்..தேடுவார்கள்.. ஆனால், கோடியில் ஓரிருவரே, இறுதியில் என்னை வந்து சேருவார்கள்` என்கிறார். அதனால அது அவ்வளவு எளிதா நடக்கக்கூடிய விஷயம் இல்ல!“ என்று முடித்தார் அவர்.
நல்லதொரு இறை சிந்தனையைக் கிளறிவிட்ட பெரியவருக்கு மானசீகமாக நன்றி சொல்லிக்கொண்டே, கோவிலுக்குள் நுழைந்தேன்.
**
superb.
LikeLike
நல்ல அறிவுபூர்வமான உரையாடல். பலத்த சிந்தனையைக் கிளறி விட்டுவிட்டது.
LikeLike
உரையாடல் வழி உரத்த சிந்தனை நன்று. பாராட்டுகள்.
LikeLike