ஹ்ம்..! ஒங்க பேரு ?

நாடு ரொம்பத்தான் வேகமா முன்னேறிகிட்டிருக்கு. எதத்தான் ஆன்–லைனில் ஆர்டர் செய்வது என்கிற விவஸ்தையே ஜனங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஏகப்பட்ட ஆன்–லைன் சேல்ஸ் கம்பெனிகள், மழைக்குப்பின் முளைவிட்டு மண்டும் காளான்கள் போலப் புறப்பட்டிருக்கின்றன. போட்டிபோட்டுக்கொண்டு தூசி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடுக்கும் ராமதூதர்களாய், டூ-வீலரில் அலைந்து திரிந்து, நம் வீட்டுக் கதவுகளில் மோதி, தலையைக் கோதி நிற்கும் இளைஞர்கள். ஒரு தேசம் என்பதற்கான மரபுவழி அடையாளமான, மக்கள், இனம், சமூகம், மொழி, கலாச்சாரம் என்கிற சிந்தனை வடிவமெல்லாம் கலைந்துக் காலவதியாகி நாளாகிவிட்டது. நாடே ஒரு மாபெரும் இயந்திரமாக இரவு, பகலாக எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், டெல்லி போன்ற மெகாநகரத்தில் இப்பவெல்லாம் நம் வீட்டிலேயேகூட, சும்மா அமைதியாகக் கொஞ்ச நேரம் விழுந்து கிடப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றவில்லை. அரைமணி-முக்கால் மணிக்கு ஒருமுறை காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்து பார்த்தால் தமிழ்ப் படத்தில் புதுசா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வில்லன் போல் ஒருவன் நின்றிருப்பான் கையில் கடுதாசோ, கவரோ, பாக்கெட்டோ, ரெஜிஸ்டரோ- என்ன கன்ராவியோ? ஒருமுறையான பயிற்சி இல்லாத, வீட்டிலுள்ள பெண்களை, பெரியவர்களை எப்படி அணுகவேண்டும், பேச வேண்டும் என்கிற இங்கிதம் தெரியாத ஜன்மங்கள். தினம்தினம் ஏதோ ஒரு வகையில், இந்த பேஜார்ப் பயல்களை tackle செய்துதான் ஆகணும்!

குறிப்பாக, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தர்மபத்தினி வெளியே சென்றிருக்கும் நேரத்தில், வீட்டில் தனியாகக் கொஞ்சநேரம் இருக்கலாம், பிடித்தமான பழைய பாடல்களை அசைபோடலாம் என்றெல்லாம் கற்பனைப் படகில் சவாரி செய்துகொண்டிருப்பவர்தான் நீங்கள் என்றால், உங்களைப்போன்ற வடிகட்டின அசடு வேறு யாருமில்லை. இப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் காலை நேரம். ஒரு Black Coffee-ஐப் போட்டு கப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, தனியாக இருப்பதின் அலாதியான சுதந்திரத்தை அனுபவிப்பதாக பாவித்துக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்திருந்தேன். நெட்டில், ஆழ்வார்கள், ஞானிகள், ஆண்டவன் என ஆனந்தமாயிருந்தேன். பொறுக்குமா அவனுக்கு? அடித்தான் பெல்லை. போய்க் கதவைத் திறந்து பார்த்தால், `என்ன இது! சங்கு, சக்ர, கதாதாரியான மஹாவிஷ்ணு இந்த எரிக்கும் வெயிலில், என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியெல்லாம் காட்சிதர ஆரம்பித்துவிட்டாரா? பாண்ட்டு, ஷர்ட்டு, ஒரு கையில் பாட்டில், இன்னொரு கையில் ஏதோ ஒரு ரெஜிஸ்தர்!

கதவைத் திறந்த என்னைப் பார்வையால் அளவிட்டான். `வீட்ல கூலர் எங்க இருக்கு?’ என்றான்
என்னமோ என் வீட்டில் கூலரை வைத்துக்கொண்டு, இவன் பாட்டிலோடு பாட்டுப் பாடிக்கொண்டு எப்ப வருவான்னு ஏங்கிகிட்டு நான் இருக்கிற மாதிரி!

`எதுக்கு`? கேட்டேன்.

பாட்டிலை (உள்ளே வெண்மையான திரவம்) ரஜினிகாந்த் ஸ்டைலை ஞாபகப்படுத்தும் வகையில் சுழற்றிக்கொண்டே, வேறெங்கோ பார்த்துக்கொண்டு `கொசு அதிகமாயிருச்சு. மருந்து அடிக்கணும்!`

நம்ம ஆரோக்யத்திலதான் இவன்களுக்கு என்ன அக்கறை…அடடா! கேஜ்ரிவால் சர்க்காரா நடக்குது.. ஹ்ம், பரவாயில்ல!

`கூலர் இந்த வீட்ல இல்லப்பா!` என்றேன்.

`நெனச்சேன் அப்பவே! ஒங்கிட்ட இதல்லாம் எங்க இருக்கப்போகுது?` என்பது மாதிரி என்னை அலட்சியம் செய்து, எதிர்வீட்டில் கொசுவடிக்க ஆயத்தமாகி பெல்லடித்தான்.

ஹூம்..! வந்துர்ரானுங்க கால வேலைல காரணத்தோட! உள்ளே திரும்பி நெட்டில் மீள்ஆழ்ந்தேன். ஒரு அரைமணி, முக்கால்மணி ஆகியிருக்குமா? மறுபடியும் இந்த பாழாய்ப்போன காலிங் பெல்.
கதவைத் திறந்தவுடன் முகத்தில் கடுகடுப்புடன் ஒரு பார்வை. அவனைச் சொல்லியும் குற்றமில்லை. நகரத்தையே கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கும் இந்த வெயில் யாரையும் எளிதாகச் சூடேற்றிவிடும்.

அவனிடமிருந்து பாய்கிறது கேள்வி: ”ஹ்ம்! ஆப் கா நாம்?” (ஒங்க பேரு?). அவன் கேட்ட விதமும் தொனியும் `ஏதோ, எனக்குப் பெயர் வைத்ததின் மூலம் எங்கப்பா பெரிய தவறு செய்துவிட்டார்` என்று சுட்டிக்காட்ட வந்தவன்போல் இருந்தது. என் வீட்டு வாசலில் நின்று என்னையே உருட்டிப் பார்க்கிறான்..இவனையெல்லாம்…! பதில் ஏதும் சொல்லாமல் கையை நீட்டினேன். ஒரு கவரை அலட்சியமாக அதில் திணித்தான். அப்போலோ ஹாஸ்பிடல் க்ரூப்-பிலிருந்து வந்திருக்கிறது. ஏதோ மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பேப்பர் போலும்.

இது எதற்கு என்னிடம் வந்திருக்கிறது? நமக்கெல்லாம் ஆண்டவன் அல்லவா இன்ஷூரன்ஸு? அவர் இப்படி கூரியர், கீரியர் அனுப்புகிற ஆசாமி அல்லவே? அவருடைய ஸ்டைலே வேறதானே? வழியே தனி வழியல்லவா! நான் சிந்தனைவண்டியை நகர்த்திக்கொண்டிருக்க, அவன் பொறுமையில்லாமல் `பேரச்சொல்லுங்க!` என்று சிடுசிடுத்தான். அந்தக் கவரில் சின்னப்பிரிண்ட்டில் கொசுமொய்த்ததுபோல் எழுதியிருந்ததைப் படித்தேன். `கேதார் நாத் பாண்டே` என்றது விலாசம். என்னது! நான் எப்போது கேதார் நாத் பாண்டே ஆனேன்? எனது கோபம் டெல்லி மதியத்தின் 45 டிகிரியை நேரடியாக வம்புக்கு இழுத்தது.

”இத எடுத்துக்குட்டு இங்க வந்து பெல்லடிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றேன் அதிசூடாக.

என் சீற்றத்தை எதிர்பார்க்காதவனாய் சற்றுத் தடுமாறி, `இது ஒங்களுக்குத்தான் சார்!` என்று மேலும் கடுப்பேத்தினான். ஒண்ணு-ரெண்டு பத்துக்குமேல கத்துக்காமலேயே வேலக்கு வந்துட்டானா?

தலைக்குமேல் காண்பித்துக்கேட்டேன் (நிலைப்படிமேலே “70-B” என்று என் வீட்டு எண் கம்பீரமாக நின்றது) : “இது என்ன நம்பர்-னு புரியுதா? “

அவன் செம்மறி ஆடுபோலே தலையாட்டி “70-B சார்!” என்றான்.

“இந்தக் கவர் 70-B -க்குத்தான் வந்திருக்கா?” முகத்தில் இடிக்காத குறையாக அவன் முன்னே நீட்டி நாகப்பாம்பாய்ச் சீறினேன்.

பதறிப்போய் வாங்கிப் பார்த்தான். “கேதார் நாத் பாண்டே, 71-B” … என்றிருந்ததை அப்போதுதான் பார்த்திருக்கிறான்.
“சாரி சார்!” என்று வழிந்துவிட்டு, ஒன்றும் ஆகாததுபோல திரும்பி, எதிர்த்த வீட்டு பெல்லை அமுக்கினான்.

நான் கோபம் தணியாமல், ”இந்தமாதிரி வீட்டு நம்பரைக்கூடப் பார்க்காமல் யார் வீட்டுக் கதவையாவது தட்டி, ஒருத்தரோட முக்கியமான டாக்குமெண்ட்டை வேறு ஒருத்தர்ட்ட கொடுத்துட்டுப் போறதுதான் கூரியர் டூட்டியா? இப்படியா வேல பாக்குறீங்க நீங்கல்லாம்?” என்று மீண்டும் குரலில் அனல் பறக்கவிட்டேன். அதற்குள் எதிர்த்தவீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் டென்ஷனாகி, குரலைத் தாழ்த்தி, ”தவறு செய்யறவந்தானே சார், மனுஷன்!” என்று தன் தத்துப்பித்துவத்தைக் கேஷுவலாக எடுத்துவிட்டான். முகபாவனையில் ‘சாரி! உள்ள போயிருங்க சார்.` என்பது போன்ற கெஞ்சல்!

சரி, ஒழி! என்று அவனை எதிர்த்தவீட்டுக்காரரிடம் ஒப்படைத்து உள்ளே வந்தேன். டேய், பசங்களா! இன்னிக்கு இது போதும்டா. வீட்ல கொஞ்சம் நிம்மதியா மனுஷன இருக்கவிடுங்க..ஒங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தேன். ஆறிப்போயிருந்த கொசுறுக் காஃபியை எடுத்து ஆயாசத்துடன் வாயில்
விட்டுக்கொண்டேன்.

**

Advertisement

2 thoughts on “ஹ்ம்..! ஒங்க பேரு ?

 1. எங்களுக்கும் இந்த அனுபவம் உண்டு. ஆனால் வாசலில் செக்யூரிட்டி இருப்பதால் தான தர்மம் கேட்டு வருபவர்களின் தொல்லை இல்லை. அடுத்த வீட்டுக்காரர் ஆர்டர் செய்த பீட்ஸா வந்திருக்கிறதோ?
  எங்கள் வீட்டில் இன்னொரு விதமான தொல்லையும் உண்டு. தொலைபேசி அழைப்பு வரும். எடுத்துப் பேசினால் ‘நீங்க ரத்னமாலா பிரகாஷ் தானே?’ என்று கேட்பார்கள். இல்லையென்றால் ‘ஏன் மேடம் இல்லைன்னு சொல்றீங்க, நீங்க தானே அவங்க?’ என்பார்கள். கன்னட பிரபலப் பாடகி அவர். முடிவில் அவரது தொலைபேசி எண்ணை நான் கண்டுபிடித்து வரும் அழைப்புகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன்! இது எப்படி இருக்கு? அந்தம்மாதான் தொலைபேசி எண் மாறியதை சொல்ல மாட்டாரோ?
  எப்படியோ வீட்டில் நம் வீட்டில் நாம் நிம்மதியாக இருக்க முடியாது!

  Like

  1. செக்யூரிட்டி ஆசாமிகள் எங்களுக்கும் உண்டு. அவர்களைத் தாண்டியும் வரும் அவஸ்தைகள் இவை. சுருக்கமாகச் சொன்னால், தனிமை, நிம்மதி போன்றவை சரித்திரகாலம் சம்பந்தப்பட்டவை!

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s