Sri Ramanujar யதிகளின் ராஜா ! – 1

தம் யோகசக்தியினால், நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களை நம்மாழ்வார் அருளுமாறு வேண்டிப் பெற்றார் நாதமுனிகள். பிறகு அவரே தன் பிள்ளைகளைக்கொண்டு இந்தப் பாசுரங்களை முறையாக இசைப்படுத்தி, நாடெங்கும் புகழ்பெறப் பரப்பினார். நாதமுனிகளின் பேரன் ஆளவந்தார் எனப்படுபவர். யமுனைத்துறைவன் என்றும் பேருண்டு இவருக்கு. வேத சாஸ்திரங்களில் திளைத்து திருவரங்கப்பெருமானுக்கு பக்திக்கைங்கர்யம் செய்துவந்தார். தர்க்கசாஸ்திர முறைகளிலும் தன்னிகரற்று விளங்கினார் ஆளவந்தார்.

Sri Ramanujacharya

பால்ய வயதில், ராமானுஜர் அப்போது காஞ்சிபுரத்தில் வரதராஜப்பெருமாளுக்குத் திருக்காரியங்கள் செய்துவந்த திருக்கச்சிநம்பி என்பவரை குருவாகக்கொண்டு வேத, சாஸ்திரங்கள், சம்ப்ரதாய முறைக் கல்வி ஆகியவற்றைப் பயின்று வந்தார். அந்த வயதிலேயே ராமானுஜரிடம் காணப்பட்ட, ஒரு ரிஷிக்கே உரித்தான தேஜஸ் மிகுந்த தோற்றம், மேதமை ஆகியவை வேதசாஸ்திரம் படித்தவர்களை வெகுவாக ஈர்த்தது. அவரைப் பார்க்க நேர்ந்த பாமரர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவரது புகழ் மெல்ல, மெல்ல வாய்வழி வார்த்தையாய் பரவ ஆரம்பித்திருந்தது. தனக்குப் பின் வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையை எடுத்து வளர்க்கும் தகுதி வாய்ந்தவர் ராமானுஜரே எனக் கண்டுகொண்டார் ஆளவந்தார். யாருக்கும் தெரியாமலே காஞ்சிபுரம் சென்று, அங்கு இளைஞனாக இருந்தும் வேதசாஸ்திரங்களில் பக்திசிரத்தையுடனும், ஆத்மார்த்தவாகவும் ஈடுபட்டிருக்கும், ராமானுஜரை ரகசியமாகக் கண்டு மகிழ்ந்தார் அவர். பின்னர் காதோடு காதுவைத்தாற்போல் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

தன் அந்திம காலத்தில் நோயுற்றிருந்தார் ஆளவந்தார். தன் காலம் நெருங்கிவிட்டது என்றறிந்த அவர், ராமானுஜரைத் தன்னை வந்து சந்திக்குமாறு தன் சிஷ்யர் பெரிய நம்பி மூலம் செய்தி அனுப்பினார். ராமானுஜரும் ஆளவந்தாரின் சாஸ்திரப் புலமை, அதீத விஷ்ணு பக்தி பற்றி நன்கு அறிந்து, அவர்மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரையே தன் மானசீகக் குருவாகக்கொண்டு வணங்கி வந்த அவர், என்று நாம் ஸ்ரீரங்கம் சென்று இந்த ஆச்சாரியனை சந்திப்போம் என மனதில் ஏக்கம் கொண்டிருந்தார். ஆளவந்தாரின் சீடரே வந்து தன்னை அழைக்கவே, உடனே அவருடன் கிளம்பி, நடந்து ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். ஆனால் ஆளவந்தாரைத் தரிசிக்கும், ஆசிபெற்று மகிழும் பாக்யம் ராமானுஜருக்குக் கிட்டவில்லை. ஏனெனில், அன்று காலையில்தான் உடல் நலமில்லாதிருந்த ஸ்வாமி ஆளவந்தார் பரமபதம் எய்தியிருந்தார்.

ராமானுஜர் எத்தகைய வேதவித்து என்பதுபற்றி, அவருடைய யோக்யதாம்சங்கள் பற்றித் தன் மற்ற சிஷ்யர்களுடன் தன் கடைசிக்காலத்தில் பேசியிருந்தார் ஆளவந்தார். ஆதலால் ராமானுஜர் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருந்த சிஷ்யர்கள், தங்கள் ஆச்சாரியர் காலமான அந்த துக்கமான தருணத்திலும், அவரால் அழைக்கப்பட்டிருந்த இளம் ராமானுஜரை ஆர்வத்துடன் கவனித்தனர். தன் மானசீகக்குருவை நேரில்கண்டு, ஆசி வாங்கமுடியாத துர்பாக்யத்தை எண்ணிக் கண்கலங்கியவாறு ஆளவந்தாரின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்றார் ராமானுஜர். அப்போது அவருடைய கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. ஆளவந்தாரின் வலது கையில் மற்ற விரல்கள் நீண்டிருக்க, மூன்று விரல்கள் மட்டும் குறிப்பாக மடங்கி இருந்தன. துணுக்குற்றார் ராமானுஜர். இவை தனக்கு ஏதோ சமிக்ஞை செய்கின்றனவா என மனக்கிலேசமுற்றார். கிடத்தப்பட்டிருந்த ஆளவந்தாரின் திருவடிகள் இருக்கும் பகுதியில் சென்றமர்ந்தார். தன் ஆச்சார்யனை வணங்கிக் கண்மூடி, தியானம் செய்தார். தனக்கு ஏதாகிலும் செய்தி அல்லது உத்தரவு இருப்பின் அதைத் தெளிவுபடுத்தி அருளுமாறு மனதுக்குள் மன்றாடினார் ராமானுஜர்.

சிறிது நேரத்தில், அவர் மனதில் சாந்தம் நிலவியது. ஒன்றன் பின் ஒன்றாக மூன்று விஷயங்கள் தோன்றின. இந்த மூன்றும் தன் மானசீககுரு தனக்கிடும் கட்டளைகள்- இவற்றை நான் நிறைவேற்றியாக வேண்டும் என உணர்ந்தார். அவற்றை மெல்ல வாய்விட்டுச் சொன்னார் ராமானுஜர்: “ 1) வியாச முனிவர் அருளிய `ப்ரும்ம சூத்திர`த்துக்கு உரை எழுதுவேன் 2) வியாசர், பராசர பட்டர் ஆகிய ரிஷிகளின் பெயர் புகழுற நிலைக்கும்படிச் செய்யப் பாடுபடுவேன் 3) நம்மாழ்வாரும் ஏனைய ஆழ்வார்களும் அருளிய 4000 திவ்யப்பிரபந்தங்களின் வழிப்படி `விசிஷ்டாத்வைதம்` எனும் தத்துவத்தை நிறுவுவேன்” என்றார். இவற்றை அவர் சொல்கையில் ஆளவந்தார் ஸ்வாமியின் மூடியிருந்த விரல்கள் ஒவ்வொன்றாக இயல்பு நிலைக்கு நீண்டன. இதனை நேரில் கண்ட ஆளவந்தாரின் சிஷ்யர்களும், கூடியிருந்த வைஷ்ணவப் பெரியோர்களும் அதிசயித்தனர்; ராமானுஜரே ஸ்ரீவைஷ்ணவப் பரம்பரையின் அடுத்த ஆச்சாரியர் என்பது அவர்கள் மனதில் சந்தேகமறத் தெளிவாயிற்று.

ஆளவந்தாரின் அந்திமச்சடங்குகளில் கலந்துகொண்டுவிட்டு, ஸ்ரீரங்கநாதனையும் சேவிக்காமல், காஞ்சீபுரம் திரும்பினார் ராமானுஜர். ஆளவந்தாருக்குப்பின் ஸ்ரீரங்கத்தின் வைஷ்ணவ மடம் தலைமையின்றித் தவித்தது. பெரியநம்பியும் ஏனைய சிஷ்யர்களும், ஸ்ரீரங்கத்துக்கு வருமாறு ராமானுஜரை அழைத்தார்கள். அவரும் கோரிக்கைக்கு உடன்பட்டு, ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். ஸ்ரீரங்கத்துத்துக் கோவில் வழிபாட்டு முறைகள் ஒரு நேர், சீரின்றி இருப்பதைக்கண்டார். அவற்றை, கோவிலைச் சார்ந்த அந்தணர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஒழுங்குபடுத்தினார். இன்றும் ஸ்ரீரங்கத்துக் கோவிலில் ராமானுஜர் காட்டிய கோயிலொழுகு முறைப்படிதான் உத்சவம், திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல், பூஜை புனஸ்காரங்கள் என அனைத்தும் சீராக நடைபெற்று வருகின்றன .

விஷ்ணுபக்தியில் திளைத்திருந்தும், ராமானுஜருக்கு அஷ்டாட்சரமான (எட்டெழுத்து மந்திரமான) நாராயண மந்திரத்தின் பொருளை ஒரு சிறந்த குருவின் ஆசியுடன், அவர் வாயிலாகத் தெரிந்துகொள்ள ஆவல் அதிகமானது. அதற்குத் தகுதியான குரு ஒருவர் திருக்கோஷ்டியூரில் வசிக்கிறார் என்றும், அவரே வேதமந்திர நுணுக்கங்களில் விற்பன்னர் எனவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரைச் சந்திக்க கால்நடையாகத் திருக்கோஷ்டியூர் சென்றார் ராமானுஜர். இந்த மந்திரப்பொருளின் பொருளை உள்வாங்கிக்கொள்ள ராமானுஜர் யோக்யதையானவர்தானா என சந்தேகப்பட்டவர்போல் இருந்தார் திருக்கோட்டியூர் நம்பி என்கிற அந்த வயதான ஆச்சார்யன். திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு எதிரே விரிந்த அக்ரஹாரத் தெருவில், திருக்கோட்டியூர் நம்பியின் வீடு இருந்தது. அங்கு சென்று வாசற்கதவை பவ்யமாகத்தட்டினார் ராமானுஜர்.

`யாரது?` என்கிற குரல் உள்ளேயிருந்து மெல்லக்கேட்டது.

`ராமானுஜன். ஸ்வாமியை தரிசித்துவிட்டுப் போகலாம் என வந்திருக்கிறேன்` என்றார் ராமானுஜர்.

`போய் இன்னொருமுறை வா!` என்று பதில் வந்தது உள்ளிருந்து.

திரும்பி, ஸ்ரீரங்கம் சென்றார் ராமானுஜர். இவ்வாறு ஒருமுறை, இருமுறை என்றல்ல – 17 தடவை நடந்தே ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பியை சந்திக்க முயன்றார் ராமானுஜர். பலனில்லை. ஆச்சாரிய அனுமதி கிடைத்தபாடில்லை.

தனக்கு மந்திர உட்பொருளை அறியும் யோக்யதை இல்லையோ என்று மாய்ந்துபோனார் ராமானுஜர். இருந்தும், சில கால இடைவேளைக்குப்பின், 18-ஆவது முறையாகக் கால்நடையாகத் திருக்கோஷ்டியூர் சென்றடைந்தார். ஆச்சாரியன் திருக்கோட்டியூர் நம்பியின் வாசற்கதவை மிகுந்த மரியாதையுடன், எதிர்பார்ப்புடன் மெல்லத் தட்டினார்.

`யாரது வாசலில்?`

`அடியேன்.. அடியேன் ராமானுஜன் ….ஸ்வாமியைத் தரிசிக்க…` தயங்கியவாறு ஆரம்பித்தார் ராமானுஜர்.

`உள்ளே வா!` என்று உத்தரவு வந்தது….(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s